Saturday 7 February 2015

நாலாவது பிசாசு



சிறுகதை
கற்சுறா 
பிசாசின் புனைவு அல்லது பிசாசின் வரலாறு.



மாசீலன் வழமைக்கு மாறாக எனக்குப் போன் அடித்துக் கொண்டிருந்தான். 
வழமையாக மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுபவன், 

இன்று நித்திரை வருகுது இல்லை என்றான். 

எனது வீடும் அவனின் வீடும் பக்கத்தில் இல்லை என்றாலும் பெரிய தூரமில்லை. நடந்து போகலாம்.

வெளிக்கிட்டு வீட்டிற்கு வாறியா என்று கேட்டேன். இல்லை என்றான்.

நான் அவனின் வீட்டிற்குப் போனது இல்லை. அவனின் மனைவிக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்காது.அல்லது அவனின் மனைவியை எனக்குப் பார்த்தாலே பிடிக்காது என்றும் சொல்லலாம்.

அவனின் இந்தப் பதட்டத்தை கொஞ்சமும் அவனின் மனைவி பொருட்படுத்துவதில்லை. அப்படிச் சொல்வதை விட இவனை அவள் எல்லாவிடையத்திலும் அப்படித்தான் வைத்திருக்கிறாள். பிள்ளைகள் இரண்டு இருந்தாலும் அது பேருக்குத்தான். அதுகளும் மாசீலனை ஏனென்று கேட்பதில்லை.

வீட்டில் இப்படி சீலன் இருந்தாலும் வெளியில் அவன் பெரியாள்.

மாஸ்டர் நான் சொல்லுற கதையை ஒரு எழுத்தும் விடாமல் தனது டயறியில் குறித்துக் கொண்டிருந்தார். 

மற்றப்பக்கம் அவர் கொண்டுவந்த ரேப் ரெக்கோடர் பதிவு செய்து கொண்டிருந்தது.

ரேப் ரெக்கோடரில் எரிந்து கொண்டிருந்த சிவப்பு லைற் எரிச்சலைத் தந்தாலும் மாஸ்டர் பெரிய எழுத்தாளன். நான் சொல்லுகின்ற கதையை எப்படியும் சிறுகதையாக்கி காலச்சுவட்டில் பிரசுரிப்பார் எண்டு நினைக்க சிவப்பு லைட் சொர்க்க வாசல்  சிவப்பு லைட்டாகத் தெரிந்தது.

மாஸ்டர் தலையை ஆட்டிவிட்டு,

பிறகு…? என்று விழித்தார் அவருக்கும் கதை கேக்கிற அவசரம்.

பிறகென்ன மாஸ்டர்  நான் சாதுவா எழும்பி…

என்னடா வேலைக்கு வெளிக்கிடுவமா? என்று கேட்டேன்

இண்டைக்கு வரேல்ல. ஆள்மாற்றி விட்டுட்டன் என்றான்.

ஏன்ரா இப்ப பிஸியான நேரம் லீவு எடுக்கிறாய். அவங்கள் கத்தப் போறாங்கள் என்று கேட்க…

அவங்களுக்குச் சொல்லீட்டன்
நீயும் ஒரு மாதிரிச் சமாளி. எனக்கொரு முக்கியமான வேலை இருக்கிறது. எண்டான்.

அந்த முக்கியமான வேலை என்னென்று கேட்கயில்ல நான் போனைவைத்து விட்டு வேலைக்குப் போட்டன்.

அண்டைக்கு ‘மதர்ஸ்டே’ சரியான பிஸி நாள்.

வேலைக்குள்ள போகயில்ல வாசலிலே வைத்தே முதலாளி கேட்டான் எங்கய்யா உம்மட பிரெண்ட்?

ஏதோ முக்கியமான வேலையாம் இண்டைக்கு வர ஏலாதாம் எண்டு சொன்னவன் என்றேன்.

என்னய்யா லூசுக்கதை கதைக்கிறீர். உம்மட ஆள் அங்க ரீவில போய் இருந்து அந்தச் சுத்துமாத்துக்காரனோட  சேர்ந்து அரசியல் ஆய்வு செய்கிறார்.
என்ன நீரும் சேர்ந்து சுத்துறீரோ என்று ரீவியைக் கொண்டு போய்க் காட்டினான்.

நான் விறைத்துப் போனன் மாஸ்டர் என்றேன்.

மாஸ்டர் என்ர தொடையில தட்டிச்சிரித்தார்.

கதை சூடு பிடிக்குது என்று நினைக்கிறார் போலும்.

அப்ப அவர்கள் செய்த ஆய்வில் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள். என்று மாஸ்டர் குறுக்குக் கேள்வி ஒன்றைக் கேட்டார்.

மாஸ்டருக்கு நான் சொல்லுகிற கதையை விட அவருக்குத் தேவையான கதையைத்தானே அவர் கேட்பார் என்று நினைத்து பதில் சொன்னேன்.

அப்ப என்ன ஆய்வு மாஸ்டர்...
இலங்கைப்பிரச்சனை பற்றித்தானே…

கிளிநொச்சியில் ஒரு கதவிருக்கிறது. அது இராணுவத்திற்காகத் திறந்திருக்கிறது. இராணுவம் உள்ளுக்குள் வந்தவுடன் பூட்டுப்பட்டுவிடும். வந்த இராணுவத்திற்கு அங்குதான் சமாதி. அதுவரையும்தான் போராளிகள் பின்வாங்கி பின்வாங்கி இராணுவத்தைக் கூட்டிவருகிறார்கள் என்று அந்தத் தேவாங்கு சொல்ல...
 மாஸ்டர்...
இவன் சிரிக்கிறான்.
இவன் கெட்டிக்காரன் மாஸ்டர்.
அந்தச் சிரிப்பில நீங்கள்,
 அது உண்மை என்று சிரிக்கிறானா? அல்லது உது புலுடா என்று சிரிக்கிறானா என்று பிடிக்க மாட்டீர்கள்.

மாஸ்டர் ஒரு பெருமூச்சைவிட்டு நிமிர்ந்திருந்தார்.

எனக்கும் கதை சூடாப்போறது மாதிரித்தான் இருந்தது.

முதலாளி வந்து முதுகில தட்டிவிட்டு ‘ஐசே’ ரீவி பார்த்தது காணும் வேலையைத் தொடங்கும்’ என்று விட்டுப் போனான்.

கொஞ்ச நேரத்தில மாஸ்டர் வேலை செய்யுற பெட்டையள் எல்லாம் கத்திக்கொண்டு ஓடி வருகிறாளவை.
‘பிறேக்கிங் நீயூஸ்’
கார்டினர் எக்ஸ்பிரஸ் என்ற பெருந்தெருவை விடுதலைப்புலிகளின் கொடி சகிதம் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் முற்றுகை செய்து வழியை மறித்து வைத்து இருக்கிறார்கள்.
வரவர எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.  

மாஸ்டர்...
 அப்ப நீங்கள் எங்க இருந்தனீங்கள்?
நான் நைஜீரியாவில் வேலை செய்து கொண்டிருந்தனான்.
நீங்கள் இதைக்கேள்விப்படேல்லையோ.
கேள்விப்பட்டனான். 
ஆனா உண்மைக்கதை தெரியாதுதானே. என்றார் அப்பாவியாக.

தெரியாதாக்களுக்கு கதை சொல்லத்தானே வேண்டும்.

கனடிய வெள்ளை இனத்தவர்கள் எல்லோரின் முகங்களும் வெளிறிப் போய் இருந்தன.  
வழிமறித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் கூடிக் கொண்டே இருந்தது. சிற்றிரிவி அதனை மாறி மாறி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. 

தமிழ் ரிவியில் மாசீலனும் அந்த மூதேவியும் நாம் அனைத்தையும் அறிவோம் என்பது போல் இன்னும் அரசியல் விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள். 

மதர்ஸ்டேயிற்கு வீட்டிற்கு அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்த பலர் பெருந்தெருவில் தடைப்பட்டு நின்று கோபம் கொண்டனர். அவர்களைப் பேட்டி எடுத்து கனடிய மக்களுக்கு மேலும்கோபத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது சிற்றிரிவி. 

குழந்தை ஒன்றின் கையில் விடுதலைப் புலிகளின் கொடியைக் கொடுத்து பெருந்தெருவில் விட்டிருந்ததைக் கெட்டவார்த்தையால் திட்டிக் கொண்டு போனால் நமது மனேச்சர்.

இருள் சூழ்ந்து கொண்டது. 

பெருந்தெருவிலிருந்து அவர்கள் விலகவில்லை.

நாங்களும் ரீவியைப் பார்ப்பதா வேலையைப்பார்ப்பதா என்று பதறிக்கொண்டே திரிந்தோம் .

இரவு 8மணி இருக்கும் எனது செல்போன் றிங்க் பண்ணியது.
எடுத்தால் மாசீலன்.


எங்கடா இருக்கிறாய் என்றேன்.
கார்டினர் எக்ஸ்பிரசில் நிற்கிறானாக்கும் என நினைத்து

எங்கடா இருக்கிறாய்  திரும்பவும் உறுக்கிக் கேட்டேன்.

சத்தம் போடாத மெதுவாக்கதை என்றான்.

தனது தாய் மனைவி பிள்ளைகளுடன் மதர்ஸ் டேக்கு frankie tomato restaurant க்கு வந்தேன் என்றான்.

நான் ஒன்றும் பேசவில்லை. போனைக் கட் பண்ணிவிட்டேன்.

மாஸ்டர் ரெக்கோடரை ஓவ்ப் பண்ணினார்.

மாஸ்டர் கதையின் ஆணியைப் பிடித்துவிட்டார் என்று தெரிந்தது.

ஆனால் எழுதுவதை நிப்பாட்டவில்லை.

எனது செல்போன் அடிக்க பொறுங்கோ மாஸ்டர் என்று விட்டு போனை எடுத்தேன்.

மாசீலன்தான்.

டேய் புண்டை...
 என்ன வாத்தி கதை எழுதுறத்துக்கு கதை சொல்லப் போறியாம். 

அந்தாள் தம்பிச் சித்தப்பா சொன்ன கதையைச் சொதப்பினது தெரியாதா உனக்கு? 

உனக்கேன்ரா உந்த வேலை என்று கத்தினான்.

அவன்ர மனிசியும் சேர்ந்து கத்துது.

உது பொறுக்கி… உந்தப் பொறுக்கியோட நீதான் இன்னும் ஒட்டிக்கொண்டு திரியிறாய். ஊரே அவன விட்டுட்டுது. நீ சேர்த்து வைச்சிரு என்று மாசீலனுக்கு மனிசி கத்த நான் போனை வைத்து விட்டு,

ஓடிவந்து மாஸ்டரின் காலைில் விழுந்தேன்.

மாஸ்டர் இதையாவது சொதப்பாமல் செய்யுங்கள்.

மாஸ்டர் சிரிச்சார்.

டேய் தம்பி. உலகம் இப்பிடித்தாண்டா.
கதை எழுதுதுறது என்டா எல்லாம் புனைவாக இருக்கோணும் எண்டது இல்லையடா.

வரலாற்று ஆவணங்களிலிருந்துதான், அவற்றின் மூலத்திலிருந்துதான் புனைவுகளை உருவாக்க முடியும் என்றார்.

எல்லா வரலாறுகளிலும் நான் வாழ்ந்திருக்க முடியாதுதானேடா. என்று இறுக்கிச் சொன்னார்.

அது சரிதான் மாஸ்டர்

கதையைச் சரியாகக் கதைமாதிரி எழுதலாம் தானே என்றேன்.

அதற்கும் ஒரு சிரிப்பு.

என்ன?
கதையைப் பிழையா எழுதினால் சிறையிலா அடைக்கப் போகிறார்கள்.

கேக்கிறவனுக்கு மாஸ்டர் சந்திரமண்டலத்தில் இருக்கிறார் என்று நினைக்கச் சொல்லு.
என்றார்.

கதை எப்ப மாஸ்டர் வரும் என்றேன்.

எழுதி அனுப்ப முதல் உனக்குக் கட்டாயம் காட்டுறன் என்று விட்டு மாஸ்டர் போய்விட்டார்.

அடுத்த காலச்சுவட்டையாவது கட்டாயம் வாங்கவேண்டும்.





No comments:

Post a Comment