-அசுரா-

எம்மத்தியில்
நிலவும் சாதியம் பற்றிய கருத்தியலானது பல்வேறுவகையான புரிதலுக்குட்பட்ட
நிலையில் இயங்கி வருகின்றது. அந்தவகையில் எம்மத்தியில் சாதியம் குறித்து
மூன்றுவகையான சிந்தனைப்போக்கு நிலவுகின்றதை என்னால் காணக்கூடியதாக உள்ளது.
மானுட தோற்ற வரலாற்று நிகழ்வின் ஓர் அம்சமாக சாதியத்தை பார்க்கின்ற ஓரு
பார்வை. அதாவது மார்க்சியச் சிந்தனை வெளிச்சத்தின் ஊடாக எம்மத்தியில்
நிலவும் சாதிய சிந்தனைப்போக்கை வரையறுப்பது ஓர்நிலை. அடுத்ததாக தமிழ்மொழி
பேசும் எம்மத்தியல் நிலவும் சாதியம் போலவே எல்லா சமூகத்தவர்களிடமும்
பிரிவினைகள் வேறுபாடுகள் இருக்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் சாதியம்
இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் மத்தியில் சாதியம் இருக்கிறது. அதுபோல்
பல்வேறு நாடுகளில் வாழும் வெவ்வேறு இன மக்களிடமும் பிரிவினைகளும்,
வேறுபாடுகளும் இருக்கின்றது. இவ்வாறான வேறுபாடுகள் காலப்போக்கில் பல்வேறு
மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. எனவே சாதியமும் எதிர்காலங்களில்
மறைந்து தொலைந்துவிடும் என்பதாக ஒரு சாரார். அடுத்ததாக எம்மத்தியில்
நிலவும் சாதியமானது உலகத்தில் வாழும் அனைத்து இன மக்களிடமும் காணப்படும்
பிரிவினை வேறுபாடுகளை விட மிகக் கொடூரமான மானிட விரோதப்போக்கை
கடைப்பிடிக்கும் ஒரு சிந்தனை முறையாக இச் சாதியக் கருத்தியலை இனம்
காண்பது.இதற்கு ஆதாரமாக உள்ள வடஇந்தியாவில் தோற்றம் பெற்ற இந்துத்துவ
வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படைக் கோட்பாடாக கொண்டு இயங்கி வரும் சமூக
சிந்தனை மரபின் பின்னணியை கேள்விக்குள்ளாக்குவது.

இவ்வாறாக
சாதியம் குறித்த மூன்றுவகை சிந்தனைகள் எம்மத்தியில் நிலவுகின்றது. இதில்
குறிப்பாக மார்க்சிய சிந்தனை வெளிச்சத்தில் எமது மத்தியில் நிலவும் சாதியம்
குறித்த பார்வையும், சாதியத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பணிகளும்
மிகக் காத்திரமானது. இலங்கையில் நடைபெற்ற சாதிய எதிர்புப் போராட்ட
வரலாறுகளில்அவற்றை நாம் காணலாம். இருந்தபோதிலும் வர்க்க விடுதலைபெறுவதன்
ஊடாகவே நிரந்தரமான சாதிய ஒழிப்பு சாத்தியம் என நம்பிக்கை கொண்டுள்ளர்கள்.
இடதுசாரி சிந்தனை கொண்ட இவர்கள் வர்ணாச்சிரம கோட்பாடானது எவ்வாறு சாதியத்தை
தக்கவைத்துப் பேணிவருகின்றது எனும் உண்மையைக் கண்டு கொண்டவர்களாகவும்
அதற்கெதிராக குரல்கொடுப்பவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். ஆனபோதிலும்
நிரந்தரமான சாதிய ஒழிப்பிற்கு வர்க்கமற்ற சமூகத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இந்து சாதிய சமூகம் குறித்து அம்பேத்கர்
அவர்கள் பேசும்போது. இந்தியாவில் ஐந்துவகையான பிரிவினர்கள் குறித்து அவர்
பேசுகின்றார். முதலாவதாக வைதீக இந்துக்கள் எனப்படுவோர்; அவர்கள் இந்துக்
கலாச்சாரத்தில் எந்த மாற்றம் நிகழ்வதையும் அனுமதிக்க விரும்பாதவர்கள்.
ஏதும் மாற்றம் நிகழ்வதை வைதீக இந்துக்கள் காண்பார்களேயாயின் அதற்கெதிராக
கிளர்ந்தெழுந்துவிடுவார்கள். இரண்டாவதாக ஆரிய சமாயவாதிகள் இவர்கள் வைதீக
இந்துக்களுக்கு எதிரானவர்கள். வேதகாலத்தை விரும்பிப் பேணுபவர்கள். இந்துக்
கலாச்சாரத்தை மீண்டும் வேதகாலத்தை நோக்கி நகர்த்துவதே இவர்களது நோக்கமாக
உள்ளது.
மூன்றவதாக இருப்பவர்கள் இந்துக்கலாச்சார
முறைகளின் குறைகளைப் பேசுபவர் களாக இருந்தபோதிலும் அதற்கெதிரான
செயல்பாடுகள் அவசியமற்றவை என்கிறார்கள். இந்துக்கலாச்சாரமானது எவ்வாறு
வளர்ந்து வருகின்றதோ அவ்வாறே அழிந்து கொண்டும் இருக்கின்றது எனவே நாம்
அதற்கெதிராக எதுவும் செய்யத்தேவையில்லை என்கின்றார்கள். நான்கவதாக
உள்ளவர்கள் அரசியல் சுதந்திரம் குறித்து வலியுறுத்தி வரும் அரசியல்
வாதிகள். இவர்கள் கலாச்சாரப் பண்பாட்டுத்தளங்களில் மாற்றம் ஏற்படுவது
குறித்து அக்கறைகொள்ளாதவர்கள். அனைத்து சமூக மேம்பாட்டிற்கும் அரசியல்
சுதந்திரமே சர்வயோக நிவாரணி என்பார்கள்.
ஐந்தாவதாக உள்ளவர்கள் அரசியல்
சுதந்திரத்திற்கான முன்னுருமையைக் காட்டிலும் சமூக பண்பாட்டுக் காலாச்சார
மாற்றங்களுக்குப் பிரதான முன்னுரிமை கொடுத்து இயங்கி வரும் பகுத்தறிவு
வாதிகள்.
அம்பேத்கரின் இப்பார்வையை ஏன் இங்கு நான்
குறிப்பிடுகின்றேன் எனில் எம்மத்தியிலுள்ள சமூகவியலாளர்களையும்,
இந்தியாவிலுள்ள சமூகவியலாளர்களையும் பிரித்தறியும் நோக்கத்திற்காகவே.
எம்மத்தியில் சமூகவியல் பேராசிரியர்கள் எனப் பலர் இருந்தும் சாதியம் பற்றிய
அறிதலில் காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனரா என்பது கேள்விக்குறியாகவே
உள்ளது.
இந்தியாவில் அம்பேத்கர், பெரியார்,
பிரேம்நாத் பஸாத்,ராகுல் சாங்கிருத்தியாயன், கோசாம்பி, போன்ற பலர்
இந்துத்துவ சாதிய அமைப்பு முறையின் கருத்தியல் குறித்து காத்திரமான
ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். எம்மத்தியில் அவ்வாறு நிகழவில்லை. இந்து சமூகக்
கலாச்சாரம் குறித்து மேற்குறிப்பிட்ட அம்பேத்கரின் ஐந்து வகைப்பட்ட
பிரிவினர்களை ஒத்த வகையினரை எம்மத்தியில் இனம் கண்டு கொள்ள முடியுமாயின்.
ஒரே ஒரு வகையினரைத்தான் நாம் இனம் கண்டு கொள்ள முடியும். வைதீக இந்துக்கள்
எனப்படுவோரையோ, ஆரிய சமாஜவாதிகளையோ எம்மத்தியில் தேடமுடியாதென்பது உணமையே.
இந்தியாபோன்று பார்ப்பனிய ஆழுமை என்பது இலங்கையில் இல்லை. எனவே வைதீகச்
சிந்தனை மரபும், ஆரிய சமாஜவாதக் கோட்பாடுகளும் இலங்கையில் தோன்றவில்லை.
இந்தியாபோன்ற மக்கள் தொகையினராகவும், பல்வேறு மொழி பேசும் மக்கள்
பிரிவினரைக்கொண்ட சமூகமாகவும் இலங்கையில்லை என்பதையும் நாம் அறிவோம். எனவே
அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்திய சமூகப் பிரிவினர்கள் அனைவரையும்
எம்மத்தியில் தேட முடியாது. ஒரே ஒரு வகையினரைத்தவிர. சமூக வளர்ச்சிக்கும்,
மேம்பாட்டிற்கும் அரசியல் சுதந்திரமே அவசியமானது எனக் கருதுபவர்கள்தான்
எம்மத்தியில் உள்ளவர்கள். எமது சமூகம் குறித்தும், சாதியம் குறித்தும்
ஆய்வு செய்த பல்வேறு தரப்பினரும் இறுதியில் தீர்வாக முன்வைப்பது அரசியல்
சுதந்திரத்தையே. அரசியலைப் பேசிப் பேசி அரசை உதிர்த்தி வர்க்கம் அற்ற
சமூகமாக மாற்றுவது. இதுவே எமது சாதிய சமூகம் குறித்த அவர்களது தீர்வாகவும்
உள்ளது.

அண்மையில்
இலங்கையில் நிலவும் சாதியம் குறித்த ஆய்வுத் தொகுப்பொன்று நூலாக
வெளிவந்திருக்கிறது. ‘சாதியின்மையா சாதிமறைப்பா’ என்பது அந்நூலின் தலைப்பாக
உள்ளது. எனது தேடலுக்குட்பட்ட வகையில் இலங்கையில் நிலவும் சாதியம் குறித்த
ஆய்வுகளில் இந்த ‘சாதியின்மையா சாதிமறைப்பா’ எனும் நூலானது முக்கியத்துவம்
கொண்டது என்றே கருதுகின்றேன். நான் இங்கு இந்த நூல் பற்றிய ஒரு முழுமையான
விமர்சனத்தை முன்வைக்க முனையவில்லை. இந்நூலானது சிங்கள மக்கள் மத்தியில்
நிலவும் சாதியம் பற்றிய எனது தேடலுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது.
சிங்கள சமூகத்தினரிடம் சாதியம் இன்றுவரை நீடித்து நிலைகொண்டு வருவதற்கான
அடிப்படைக் காரணம் என்ன என்பதை நான் உங்கள் முன் உரையாற்றுவதற்காக
இந்நூலிலுள்ள சில அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனக்
கருதுகின்றேன்.
இந்த நூலிலுள்ள அம்சங்கள் குறித்துப்
பேசுவதற்கு முன்பாக இந்நூல் வெளிவருவதற்கான பின்னணி என்ன என்பதையும் நாம்
கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நூல் வெளிவருவதற்கான அனைத்துத்
தேவைகளையும் (பொருளாதாரம் உட்பட) ஆலோசனைகளையும் வழங்கியது
வெளிநாடுகிளிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள். INTERNATIONAL DALIT
SOLIDARITY NETWORK (COPENHAGEN), INDIAN INSTITUTE OF DALIT STUDIES
(NEWDELHI) எனும் நிறுவனங்களே அவைகள். இந்த நூலுக்கான அணிந்துரையில்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘’இவ்வெளியீடு தென்னாசியாவில்
சாதியடிப்படையிலான பாகுபாடுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரதேச
ஆய்வத்திட்டத்தின் ஒரு பகுதி விளைபயனாகும். முதற்தடவையாக பங்களாதேஷ்,
நேபாளம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய தென்னாசிய நாடுகளிலிருந்து
ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து சாதியடிப்படையிலான பாகுபாடு பற்றி விளக்கமானதொரு
பார்வையுடன் இப்பணியினை மேற்கொண்டுள்ளனர். இவ்வொப்பீட்டாய்வு
தென்னாசியாவிலுள்ள சாதியடிப்படையிலான பாகுபாடுபற்றிக் கட்டமைப்புரீதியிலான
அடிப்படைகளை அடையாளம் காண உதவியதோடு இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் ஏனைய
சமயங்களினால் செல்வாக்குக் குட்பட்டுள்ள வேறுபட்ட சமூகச் சூழல்களில்
காணப்படும் முக்கிய வேறுபாடுகளை அடையாளப்படுத்துவதற்கும்
துணைபுரிந்துள்ளது. இக்கற்கையின் தொகுதிகள் மனித உரிமைகளுக்காக
அர்ப்பணிக்கும் மனித மற்றும் பண்புநயமுடையதொரு ஜனநாயகப் பிராந்தியமாக
தெற்காசியாவை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் அரச கொள்கை, அரசியல்
செயற்பாட்டுமுறை மற்றும் உள்ளுர்ச் சமூகங்களின் தலையீடுகள்
போன்றவற்றுக்குப் புதியதொரு திறவுகோலை ஏற்படுத்திக் கொடுக்கும் என நாம்
நம்புகின்றோம்
இக்குறிப்பிட்ட வெளியீட்டில், இலங்கையின்
ஆய்வாளர்கள்குழு ஒன்று சிங்கள, இலங்கைத் தமிழ், மற்றும் இந்தியத்
தமிழரிடையே நிலவும் சதியடிப்படையிலான பாகுபாட்டு விவகாரம் பற்றி
ஆய்ந்தறிவதில் தலைமைதாங்கியது. தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின்
சார்பில் கலாநிதி சித்தறஞ்சன் சேனாபதி இப்பாரிய ஆய்வுச்செயன்
முறைத்திட்டத்தின் இணைப்பாளராகச் செயலாற்றினார். தலித் கற்கைகளுக்கான
இந்திய நிறுவனத்தின் ஆலோசனைக்குழு ஒன்று பேராசிரியர் ஹனஷியம் ஷா,
சுக்ஹாடேயோ தோறாற், மற்றும் திரு மாடின் மக்வன் ஆகியோருடன் இணைந்து
இப்பாரிய திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்து நான்கு நாடுகளிலும் இடம்
பெற்ற ஆய்வுச் செயல்முறையினை ஒழுங்குபடுத்தியது, வழிநடத்தியது.
இத்திட்டத்திற்கு பொருளாதார உதவி வழங்கிய டென்மார்க் அரசு மற்றும் சர்வதேச
தலித் கூட்டொருமைப்பாட்டு வலைப்பின்னல் ஆகியவற்றிற்கு எமது நன்றியைத்
தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்….‘’ என தலித் கற்கைகளுக்கான இந்திய
நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சுரிண்டர் எஸ் ஜொட்கா என்பவர்
முன்னோக்கு வழங்கியுள்ளார்.
ஆகவே இந்த ஆய்வு நூலை
ஒழுங்குபடுத்தியதும், இதன் ஆய்வாளர்களை வழிநடத்தியதும் தாமே என்பதை
அழுத்தமாக தெரிவித்திருக்கின்றார், டெல்லியிலுள்ள தலித் கற்கைகளுக்கான
இந்திய நிறுவனத்தின் இயக்குனர். இங்கே ஒன்றை நாம் ஊன்றிக் கவனிக்க
வேண்டியுள்ளது.
முதலில் இந்த நூல் வெளிவரக்காரணமான
அரசசார்பற்ற நிறுவனங்களின் நோக்கத்தை இனம் காட்டவேண்டியுள்ளது. தலித்
கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலானது சாதிப் பாகுபாடுகளின் கட்டமைப்புகளை அடையாளம் காண உதவியதாகவும்.
மற்றும் இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் ஏனைய சமயங்களினால்
செல்வாக்கக்குட்பட்டுள்ள வேறுபட்ட சமூகச் சூழல்களில் காணப்படும் முக்கிய
வேறுபாடுகளை அடையாளப்படுத்துவதற்கும் துணைபுரிந்துள்ளது என்பதாக.
இந்த நூலை வாசித்தவர்கள் அறிந்துகொள்ளலாம்
இதில் சாதிப்பாகுபாடுகளின் கட்டமைப்பின் தோற்றம் குறித்து எதுவும்
பேசப்படவில்லை என்பதை. அவர்கள் இதை ஏன் வலியுறுத்தவேண்டியுள்ளது என்பதை
நாம் சற்று ஆழமாகச் சிந்திக்கவேண்டும். ஏனெனில் சாதியத்தின் தோற்றுவாய்
குறித்து ஆய்வுசெய்யும் வெளிநாட்டு அறிஞர்கள் கூட இனம்கண்டுகொண்ட விடயம்
இந்துமதமே எம்மத்தியில் நிலவும் (தெற்காசிய நாடுகள் உட்பட)
சாதியப்பிரிவினைக்குப் அடிப்படைக் காரணியாக விளங்குகிறது என்பதை.
இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக
இருந்துவருகிறது. எனவேதான் இந்து மதத்தில் மட்டுமல்லாது இஸ்லாம், பௌத்தம்
போன்ற மதங்களிலும் சாதியப் பிரிவினைகள் இருக்கின்றது என்பதை அவர்கள்
நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
ஆகவேதான் இந்த நூலில் சிங்கள மக்கள்
மத்தியில் நிலவும் சாதியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வெளிநாட்டு
அறிஞர்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் சாதியம் இருக்கிறதா என்பது
தெரியாமல் இருக்கலாம், ஆனால் பௌத்த சிந்தனையில் சாதியம் இல்லை என்பது
உலகத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அதெப்படி சிங்களவர்களையும் நாம்
பௌத்தர்கள் என்கின்றோமே அப்படி இருக்கும்போது சிங்களவர்களிடம் எப்படி
சாதிப்பாகுபாடுகள் இருக்க முடியும்? சிங்களவர்களிடம் சாதியம்
பேணப்படுகின்றது என்பதற்கான ஆதாரம் குறித்த தகவல்களை இந்தநூலில்
காணக்கூடியதாக உள்ளது. பௌத்த சிந்தனை சாதியத்திற்கு எதிரானது ஆனால் பௌத்த
சிங்களவர்களிடம் சாதியம் எப்படி தோன்றியது, எவ்வாறு பேணப்படுகின்றது
என்பதையும் நாம் ஆராயவேண்டியுள்ளது. முதலில் சிங்களச் சமூகத்தினரிடம்
நிலவும் சாதியம் பற்றி இந்த நூல் என்ன பேசுகிறதென்பதைப் பார்ப்போம்.

இந்த
நூலில் கட்டுரைகள் எழுதியவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாதியம் குறித்து
ஏற்கனவே எழுதப்பட்ட படைப்புகளை கற்று அறிந்து கொண்ட பல தகவல்களையே தமது
ஆய்வுக்கு துணைசேர்த்துள்ளார்கள். இதன் தொகுப்பாசிரியர்களாக காலிங்கர்
டியூட்டர் சில்வா, பரஞ்சோதி தங்கேஸ், பி.சிவப்பிரகாசம் ஆகியோர்
இருந்துள்ளனர். சிங்களச் சமூகத்தில் நிலவும் சாதி முறைகளை இந்நூலில்
எழுதுவதற்கு சிங்கள எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து
மேற்கோள் காட்டுகின்றனர். வடக்கில் நிலவும் சாதியம் பற்றிய இவர்களது
ஆய்விற்கு தோழர்களான செந்தில்வேல் ரவீந்திரன் எழுதிய நூலான ‘இலங்கையில்
சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ இவர்களது
தேடலுக்குள்ளாகியிருக்கின்றது. அத்துடன் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில்
இருப்பவர்கள் மேற்கொள்ளும் சாதிப்பாகுபாடுகளையும் அறிந்து
எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இவர்கள் இந்த நூலுக்கான ஆய்வுகளை
மேற்கொண்ட காலமானது 2007 என அறியக்கூடியதாக உள்ளது. அக்காலகட்டத்தில்
வட-கிழக்கில் யுத்தம் மிக மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் தம்மால்
அங்கு முழுமையான சாதிப்பாகுபாட்டு முறைகளை தொகுக்க முடியாது போனது எனக்
கூறுகின்றனர். இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி மக்களிடமுள்ள
சாதிப்பாகுபாடுகளை ஓரளவு விரிவாக ஆய்வு செய்துள்ளனர் என்பதை அறிய
முடிகின்றது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியம் பற்றிய
தகவல்களே மிக ஆழமாகவும் அக்கறையுடனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதை
உணரக்கூடியதாக உள்ளது.
சிங்கள் சமூகத்திடம் 15 வகை
சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. அதில் மிக உயர்ந்த சாதியினராக ‘றதல’ எனும்
சாதி இருந்தது. இச்சாதியினரே அரச வம்சத்தினராக இருந்துவந்துள்ளனர். கண்டி
இராச்சியத்தின்போது சிங்களச்சமூகத்தில் முன்னணியில் உள்ள அரச
சமூகத்தவர்களாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இரண்டாவதாக
‘கொய்கம’ எனும் சாதிப்பிரிவினர் இவர்கள் சிங்களச் சமூகத்தில் 50
வீதமானவர்களாக இருந்து வருகின்றார்கள்
அரசனுக்கு சேவகம் செய்து வந்தவர்களாகவும்
பிற்பாடு அதன் செல்வாக்கின் பயனாகவே விவசாய ஆதிக்கம் இவர்களிடமே
இருந்துவந்துள்ளது. ‘கரவா’(கரையோரப் பகுதிமக்கள்) ‘பத்கம’ (கொய்கம
சாதியினருக்க சேவகம் செய்பவர்கள்) ‘வகும்புற’(சக்கரைத்தொழில்) எனும்
சாதிப்பிரிவினர் இடைப்பட்ட சமூக அந்தஸ்துடையவர்களாக இருக்கும்
சாதியினராகும்.
சிங்களச் சமூகத்தின் விளிம்பு
நிலைச்சமூகமாக இருப்பவர்கள் ‘கின்னற’ (காட்டிலுள்ள மூலப்பொருட்களை
பயன்படுத்தி பாய்போன்ற கைப்பணிப் பொருட்களை செய்பவர்கள்) ‘கஹல’
(குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பவர்கள்) ‘றொடி’ (துப்பரவுப்பணி
புரிபவர்கள்.) மற்றும் ‘நவன்தன்ன’ (கொல்லர்) ‘கும்பல்’ (குயவர்) ‘படு’
(சலவைத்தொழில்) ‘துறாவ’ (சீவல்தொழில்) ‘சலாகம’ ( (கறுவாத்தொழில்) ‘பெறவா’
(மேளம் அடிப்பவர்கள்) இவ்வாறாக 15 வகை சாதியினர் இருந்து வருகின்றார்கள்.
மே 27 2007 இல் முதல் முதலாக இலங்கையில்
சாதியடிப்படையிலான பாகுபாடு பற்றிய தேசிய ஆலோசனைப் பயிற்சிப் பட்டறை ஒன்றை
பேராதனைப் பல்கலைக்ழகத்தில் நடத்தியள்ளனர். அதுவும் நான் முன்பு
குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்புலத்தில்தான் நடைபெற்றும்
இருக்கின்றது.
கண்டியிலுள்ள மகியாவை எனும்
கிராமத்திலுள்ள மலையகத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகம் பற்றியும், மலையக
சமூகத்தில் நிலவும் சாதியம் குறித்தும் இந்த நூல் பேசுகின்றது.
சிங்களச் சமூகத்தில் நிலவும் சாதியம்
குறித்து பேசுகின்றபோது வடக்கில் நிலவும் சாதியத்தின் தீண்டாமைக் கொடுமைகள்
சிங்களச் சாதியத்தில் இல்லை என்பதாகக் கூறுகின்றார்கள். அதற்கு இவர்கள்
கூறும் காரணம் இந்து மதத்தின் பாரம் பரியத்தில் தீண்டாமை பேணப்பட்டு
வந்ததால் அங்கு அவை நிலைத்து நிற்கின்றது. சிங்கள மக்கள் பௌத்த பண்பாட்டுக்
கலாச்சாரத்துடன் இணைந்துள்ளதால் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும்
சாதியத்தில் தீண்டாமை பேணப்படவில்லை என்பதாக. அத்தோடு பௌத்தப்
பண்பாட்டுச் சடங்கு சம்பிரதாயங்களுடன் சாதியம் இணைக்கப்படாத காரணத்தால்
சாதியம் குலைந்து போவதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்நூல்
பேசுகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் நிலவிவரும்
சாதியமானது உலக மானிட மாற்றத்துடன் தொடர்புள்ளதாக சில சிங்கள ஆய்வாளர்கள்
தெரிவித்த கருத்துக்களையும் பதிவுசெய்துள்ளார்கள்.இருந்தபோதிலும் தேர்தல் காலங்களில் சாதியப்பாகுபாடுகளில் வாக்குச்சேகரிப்பு நிகழ்வதையும் பதிவு செய்துள்ளது இந்த நூல்.
வடக்கில் தீண்டாமைச் செயல்பாடுகளான
சிரட்டையில் தேனீர் கொடுப்பது வீட்டுக்குள் குறைந்த சாதியினரை வரவேற்பது
தவிர்க்கப்படுவது, கோவில் நுழைவு மறுப்பு போன்ற நடைமுறைகளும்
இருந்துவருகின்றது. சமூக புறக்கணிப்பும் கௌரவமான தொழில் வாய்ப்பும் அற்ற
காரணத்தாலேயே சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் அரபு
நாடுகளுக்கு வீட்டுவேலைப் பணிகளுக்குச் செல்வதாகவும் அதன் காரணமாக அவர்களது
சமூக அந்தஸ்து மேலோங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பி யின் தோற்றத்திற்கு ‘கறவா’ ‘வகும்புற’ ‘பத்கம’ போன்ற சாதிப் பிரிவினரே பிரதான பங்களிப்பாளர்களாக இருந்துள்ளனர்.
இந்தநூலின் 7ஆம் அத்தியாயமானது
முடிவுரையும் சிபாரிசுகளும் எனும் தலைப்பில் அமைந்திருக்கின்றது. இதில்
பதிப்பாசிரியர்களில் ஒருவரான காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் பல
ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்
இலங்கைச் சமூகத்திலுள்ள சமூக நீதி,
சமூகப்பாகுபாடு அல்லது சமூக நகர்வுகளைப் புரிந்துகொள்வதில் சாதியமானது
முக்கியத்துவமற்றதாகவும் சாதி என்ற விடயத்தைக் காட்டிலும் சமூக வர்க்கம்,
இனத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே சமூக வேறுபாடுகளைப் புரிந்து
கொள்ளப்படவேண்டும் என்ற அபிப்பிராயங்கள் கலந்துரையாடலில்
முன்வைக்கப்பட்டது. அவ் அபிப்பிராயத்திற்கு மாறாக ‘’சாதிரீதியாக
ஒடுக்கப்படும் மக்களை சமூக வர்க்கம் என்ற அடிப்படையில் மட்டும் வைத்து
விளங்கிக்கொள்ள முடியாது. இந்தியாவிலுள்ளது போல் தீண்டாமைக் கொடுமைகள்
சமகலா இலங்கையில் இல்லாது போனாலும் சாதியடிப்படையிலான பாகுபாடுகள்
இலங்கையில் இல்லை என கருதமுடியாது.‘’ என காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள்
தனது கருத்தை வலியுறுத்துவதையும் காணமுடிகின்றது.
இலங்கையில் தலித்தியம் எனும் கருத்தியல்
பிரயோகிக்க முடியாத சூழலையும் இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது. இந்தியாவில்
தலித்தியம் எனும் பெயரில் ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை இணைத்துக் கொள்வதற்கான
சூழலிற்கு இட ஒதுக்கீட்டுக்கொள்கை மிக முக்கிய காரணமாகும். அந்தவகை இட
ஒதுக்கீட்டுச் சட்டங்கள் இலங்கையில் இல்லாததால் தமது சாதியை இனம்
காட்டிக்கொள்ள விரும்பாத நிலமையே இலங்கையில் உள்ளது. இருந்தபோதிலும் உணர்பு
பூர்வமான சாதியப் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றது. இலங்கைச் சமுதாயமானது
சாதி அந்தஸ்து தொடர்பான உணர்வு நிலையை தொடர்ந்து உயர்வாகவே
கருதிவருகின்றது.
தேசிய விடுதலைப் போராட்டத்தின்
முயற்சிக்கு தடையாக இருக்கும் என்பதாலேயே புலிகள் சாதிப்பாகுபாட்டிற்கு
எதிரான தண்டனைகளை வழங்கி வந்துள்ளனர். சாதியப்பிரச்சனை குறித்துப் பேசுவதை
தமிழ்தேசியவாதிகளும் விரும்பவில்லை. அது தமது தேசியப்போராட்த்திற்கு மிகப்
பலவீனமானதாகவும் கருதினார்கள். என காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள்
கருத்துத் தெரிவிக்கின்றார்.
இறுதியாக சிங்கள சமூகத்தில் நிலவும்
சாதிபற்றி காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் குறிப்பிடும்பொழுது. சிங்கள
சாதியமைப்பானது. இந்துச் சாதியமைப்பைப்போல் மதச்சார்புடையதல்ல. சிங்களச்
சாதியமைப்பில் உயர் சாதியனராயிருக்கும் ‘றதல’ எனும் சாதிப் பிரிவினர்
இந்துச் சாதி அமைப்பிலுள்ள பிராமணர்போல் எவ்வித குருக்கள் அந்தஸ்தினையும்
கொண்டிருக்கவில்லை. அதேபோல் மிகவும் பின் தங்கிய சாதியினர்களான ‘றொடி’
சாதியினரும் இந்துச்சாதி அமைப்பு முறையில் தீண்டப்படாதவர்களாக
கணிக்கப்படுவதில்லை. அவர்கள் பிச்சை எடுத்து வாழ்வதால் அவர்கள் சமூக
ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுகின்றார்கள்.
அச்சமூகமானது சிங்கள மக்கள் தொகையில் 1வீதமானவர்களே என்பதையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.‘றொடி சமூகத்தினர் பிச்சை எடுத்து வாழ்வது குறித்து புராதனக் கதையொன்றும் சிங்களச் சமூகத்தின் மத்தியில் நிலவுகின்றது.
இருந்தாலும் பேராசிரியர் திரு காலிங்க
டியூட்டர் சில்வாவின் கருத்து வலுவற்றதாகவே நான் கருதுகின்றேன். சிங்கள
மக்களிடம் தோன்றிய சாதியமைப்பு பற்றிய அடிப்படை அம்சமானது நியாயமான
முறையில் பகுத்தாய்வு செய்யப்படவில்லை என்பதாகவே நான் கருதுகின்றேன்.
பலவிடயங்களில் காலிங்க டியூட்டர் சில்வா
அவர்கள் நியாயமான கருத்துக்களைக் கூறிவந்திருக்கின்றார். அவர் சிங்கள
மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் சாதியத்தின் அடிப்படைத் தோற்றம்
குறித்த புரிதல் அற்றவராக இருக்கமுடியாது. இவர் ஒருவகையில் தமிழ்த்
தேசியத்தை கேள்விக்குட்படுத்துவதாகத் தோன்றினாலும். இந்துத்துவ தேசியத்தை
மறைமுகமாக ஆதரிப்பதற்கு பயன்படுத்தப்ட்டுள்ளார் என ஊகிக்க முடிகின்றது..
இந்த ஆய்வினை மேற்கொள்ள பின்பலமாக
விளங்கிய அரசசார்பற்ற நிறுவனங்களின் திருத்தங்களின் பிற்பாடே இந்த நூல்
வெளிவந்திருக்கவேண்டும். இந்த நூலுக்கான பொருளாதார உதவிகள் வழங்கியதை
நேரடியாகவே அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில்
ஒழுங்கு செய்த கருத்தரங்குகளுக்கும் இந்நூலுக்காக கட்டுரைகள்
எழுதியவர்களுக்கெல்லாம் ஊக்கத்தொகைகளும் வழங்கியிருப்பார்கள். (அரசசார்பற்ற
நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் மாநாடுகளுக்கு சமூகமளிப்பவர்களுக்கான
பிரயாணச் செலவுகள் உட்பட பல வசதி வாய்ப்புகள் வழங்கப்படுவதை நாம் அறிவோம்)
இறுதியாக தலித் கற்கைகளுக்கான இந்திய
நிறவனத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறே திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும்
என நம்பலாம். இந்து மதத்தின் விளைபொருளே சாதியம் எனும் கருத்து நிலையையும்
நிராகரிக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கின்றது. எனவேதான் பௌத்த,
இஸ்லாம் மதங்களின் செல்வாக்குக்குட்பட்ட சமூகங்களிலும் சாதியம்
நிலவுகின்றது எனும் கருத்தை தூண்டும் விதத்தில் தலித் கற்கைகளுக்கான இந்திய
நிறுவனம் இந்நூலின் முன்னுரையில் பதிவும் செய்துள்ளது.
சிங்கள சமூகத்திலுள்ள உயிர் சாதியினரான
‘றதல’ எனும் சதியினர் இந்தியாவிலுள்ளது போல் பிராமண அந்தஸ்துள்ளவர்கள் அல்ல
என இந்நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் காலிங் டியூட்டர்
சில்வா அவர்கள் வலியுறுத்துகின்றார். இதேபோன்று எம்மத்தியிலும்
கருதப்படுகின்றது. அதாவது எம்மத்தியிலும் பிராமணர்கள் உயர்சாதியினராக
இல்லை. வெள்ளாளர்களே எம்மத்தியில் உயர்சாதியினராக இருக்கின்றார்கள் ஆகவே
இந்தியாவிலுள்ள சாதிய படிமுறைக்கும் எம்மத்தியில் நிலவும் சாதியத்திற்கும்
பலவேறுபாடுகள் உள்ளது என்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாது இலங்கையில் வாழும் பிராமணர்களை தலித்துக்களின் வகைக்குள் உட்படுத்தலாம் என்று கூறுபவர்களும் எம் மத்தியில் உள்ளனர்.
இலங்கையில் வாழும் பிராமணர்கள் பொருளாதார
ரீதியாக கோயில் நிர்வாகிகள் போன்றோர்களின் பொருளாதாரத் தயவில்
வாழுகின்றார்களே அல்லாது சமூகப்பண்பாட்டு சடங்குக் கலாச்சாரத்தில் இந்தியப்
பிராமணர்களின் மன உணர்வு நிலையில் ஒருமைப்பாடுடையவர்களே ஆகும்.
தலித்துக்களின் பொருளாதாரத் தயவில் வாழும்
வெள்ளாள உயர்சாதியினர் பலரை நாம் அறிவோம் அதற்காக வெள்ளாளரை விட
தலித்துக்கள் சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டனர் என நாம் கருதிவிட முடியுமா
என்ன? அனைத்துக்கும்மேலாக சமூகச் சடங்கு பண்பாட்டுத் தேவைகளுக்கு நாம்
ஐயர்களைத்தானே மேலானவர்களாகக் கருதுகின்றோம் வெள்ளாளர் உட்பட.
எனவே ‘றதல’ எனும் சிங்கள உயர்சாதியினர்
இந்தியப் பிராமணர்களின் அந்தஸ்திலுள்ளவர்கள் இல்லை எனும் காரணத்தால்
இந்திய சாதியத் தோற்றத்திற்கும் சிங்கள் சமூகத்தின் நிலவிய-நிலவி வரும்
சாதியத்திற்கும் தொடர்பு இல்லை எனும் பேராசிரியர் காலிங்க டியூட்டர் சில்லா
அவர்களின் நியாயத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
சிங்களச் சமூகத்தில் சாதியம்
இறுக்கமானதற்கு பிரதானமான காரணமாக விளங்கியது வட-தென் இந்தியப் பண்பாட்டுக்
கலாச்சாரத் தொடர்புகளேயாகும். இவ்வாறான மரபு பல நூற்றாண்டுகாலமாக தொடந்து
பேணப்பட்டும் வந்துள்ளது. சிங்களச் சமூகமானது இந்துத்துவ மரபுகளுடன் மோதிப்
புரண்டெழுந்து தெளிந்த ஒரு சமூகமாக உள்ளது. இதற்கான ஆதாரங்களை
எழுதப்பட்டுள்ள இலங்கை வரலாற்று இலக்கியங்களுடாக நாம் காணலாம்.
இருந்தாலும் எழுதப்பட்டுள்ள வரலாறுகளின்
நம்பகத்தன்மை பற்றிய கேள்வியொன்றும் எழுவதற்கு வாய்ப்புண்டு. வரலாறு
எழுதும் படைப்பாளியானவர் தனது விருப்பம், இலட்சியம், கோட்பாடுகள் காரணமாக
தனது சொந்த அபிப்பிராயங்களை வரலாற்றில் புகுத்திவிடும் சந்தர்ப்பங்கள்
உண்டு என்பதையும் நாம் உணரவேண்டும்.
இருந்தபோதிலும் மொழியியல் ஆய்வுகளும்,
அகழ்வாராய்ச்சிச் சாசனங்களுடாக பெறப்படும் ஆய்வுகளுமே எழுதப்பட்ட
வரலாற்றின் நம்பகத்தன்மைக்கு அதிகபட்ச ஆதராரமாக விளங்குகின்றது.
இலங்கை வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதற்கு
சிங்கள இலக்கியங்கள் தாம் எமத்தியில் உள்ளது. இலங்கைவாழ் தமிழ்பேசும்
சமூகத்தவர்கள் தரப்பில் இருந்து இலங்கை வரலாறு எழுதப்படவில்லை. (அவர்களால்
எழுதப்பட்டது யாழ்ப்பாண வரலாறு மட்டுமே)
எழுதப்பட்ட இலங்கை வரலாறுகளை புதைபொருள்
அகழ்வாராய்ச்சிச் சாசனங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்கள் மிகக்
குறைவானவர்களே எம்மத்தியில் உள்ளனர். இருந்தபோதிலும் அண்மையில் (1999 இல்)
வரலாற்றுத்துறைப் பேராசிரியரான எஸ். கிருஸ்ணராஜா அவர்கள் எழுதப்பட்டுள்ள
இலங்கை வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். இவர் அகழ்வாய்வுகளிலும்
ஈடுபாடடையவர். இவர் எழுதிய இலங்கை வரலாறானது அகழ்வராய்ச்சியினூடாகப்
பெறப்பட்டுள்ள சாசனங்களுடன் ஒப்பிட்டுக் கணிக்கப்பட்ட ஆய்வாக உள்ளது.
இவர் எழுதிய இலங்கை வரலாற்று நூலானது
’சாதியன்மையா சாதிமறைப்பா’ எனும் நூலில் விபரிக்கப்பட்டுள்ள சிங்கள மக்கள்
மத்தியில் நிலவும் சாதியத்தின் தோற்றம் குறித்த எனது தேடலுக்கு மிக உதவியாக
இருந்துள்ளது.
ஆகவே இலங்கை வரலாறறுச் சம்பவங்களை இங்கு
ஆதாரமாகக் கொண்டே சிங்கள சமூகத்தில் படிந்துள்ள சாதியத்தின் பின்னணியை நாம்
தேடவேண்டியுள்ளது..
பாளி
மொழியில் இலங்கை வரலாற்றை எழுதிய இலக்கிய நூல்களாக தீபவம்ஸம், மகாவம்சம்,
சூளவம்சம் போன்ற நூல்களே பிரதான படைப்புகளாக உள்ளதை நாம் காணலாம். இதில்
தீபவம்சம் மானது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகவும், மகாவம்சமானது
கி.பி 5ஆம்,6ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகவும் அவைகளுக்குப் பிற்பாடே
சூளவம்சம் எழுதப்பட்டதாகவும் நாம் அறியக்கூடியதாக உள்ளது. வட
இந்தியாவிலிருந்து ஆரிய வம்சத்தைச்சேர்ந் விஜயன் என்பவன் தனது நண்பர்களுடன்
இலங்கை வந்ததாகவும், ஆரிய வம்சத்தவனான விஜயன் இலங்கை வரும் காலத்தில்
இலங்கையின் பழங்குடி மக்களான இயக்கர், நாகர் எனும் ‘பண்பாடுடைய’ மக்கள்
இலங்கையில் வாழ்ந்து வந்ததையும் நாம் அறிகின்றோம். இயக்கர் குலப் பெண்ணான
குவேனியை விஜயன் மணம் புரிந்து கொண்டதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.
மகிந்ததேரரால் பௌத்தம் இலங்கையில்
அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக இலங்கையில் இருந்த அரசுகளுக்கும் இந்திய
அரசுகளுக்கும் பண்பாட்டுக் கலாச்சர ரீதியாக மிக நெருக்கமான உறவுகள் நிலவி
வந்துள்ளது.
பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன்
பிற்பாடும் அவ்வுறவுகளில் பாரிய வேறுபாடுகள் தோன்றவில்லை.
தேவநம்பியதீசனுக்கு முந்திய அநுராதபுர ஆட்சியானது பந்துகாபய மன்னனின்
அதிகாரத்தில் இருந்துவந்துள்ளது. பந்துகாபய மன்னன் காலத்தில் நகரத்திய,
ஆஜீவக, பிராமண, சமண, நிக்கிரகம் போன்ற இந்து மதப்பிரிவினரின் செல்வாக்கு
இலங்கையில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது.
இந்தியாவில் மௌரியப்பேரரசின் தோற்றமே
பௌத்த சிந்தனை அங்கு மேலோங்கக் காரணமாக இருந்தது. அசோகர் காலத்தில்
இந்தியாவில் பார்ப்பன மதம் அழிந்துபோகும் தறுவாயில் இருந்தது. அசோகச்
சக்கரவர்த்தியின் மகனான மகிந்ததேரரின் தலைமையிலேயே பௌத்ததூதுக்குழு வொன்று
இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்டுவந்தவன்
தேவநம்பியதீசனாகும். தேவநம்பியதீசன் காலத்திலேயே பௌத்தம் இலங்கையில்
தோற்றம் பெற்றதையும் நாம் காணலாம்.
வடஇந்தியாவில் அசோகச்சக்கர வர்த்தியின்
ஆட்சிக்குப் பின்னான குப்பதர் காலமே மீண்டும் பார்ப்பனிய அதிகாரம்
மேலோங்கக் காரணமாகியது. இதனது தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டது.
துட்டகாமினியின் எதிராளியான எல்லாளன் எனும் அரசன் சோழவம்சத்ததைச்
சேர்ந்தவர். 1017இல் இருந்து 1077 வரை இலங்கை முழுவதும் சோழப்பேரரசின்
ஆதிக்கத்திலேயே இருந்து வந்ததையும் நாம் அறியக்கூடியதாக உள்ளது.
தென் இந்தியாவில் சோழப்பேரரசின்
காலத்தில்தான் வடஇந்தியப் பார்ப்பனிய ஆதிக்கம் அங்கு இறுக்கமாக
வேர்கொள்ளத்தொடங்கியது. அக்காலங்களிலேயே நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும்
பௌத்த சிந்தனைக்கும், சைனமத கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டார்கள்.
சைன மதத்தினரை கழுவில் ஏற்றும் சம்பவங்களும் சோழர் சாம்பிராட்சியத்திலேயே
நிகழ்ந்தது. சைவம் இந்துமதத்தோடு கலந்துபோனதற்கும் சோழர் காலமே
வழிவகுத்தது.
இவ்வாறான சோழப்பேரரிசின் ஆட்சியில் இலங்கை
இருந்தபோது இலங்கையில் இந்துக் கோவில்களும் இந்துப் பார்ப்பனிய
வர்ணாச்சிரமப் பாகுபாடும் இலங்கை வாழ் சமூகத்தில் பரவலாகவே பேணப்பட்டு
வந்திருக்கும். சோழர்காலத்தில்தான் நிலங்கள் மானியங்களாக உயர்சாதியனருக்கு
வழங்கப்பட்டும் வந்தது. அந்த உயர்சாதியினரே மணியகாரர்கள் என
அழைக்கப்படுபவர்கள்.
பௌத்தம் இலங்கையில் தோன்றிய பிற்பாடும்
சோழப்பேரரசு இலங்கையில் மேற்கொண்ட அரசியல் சமூகப்பண்பாட்டு அம்சங்களில்
இந்துத்துவ சாதியப்பாகுபாடுகள் இலங்கை பூராகவும் வியாபித்து செழித்துச்
சடைத்து நின்றது. தென்இந்தியா உட்பட தெற்காசிய பிரதேசங்களிலும்
சோழப்பேரரசின் ஆதிக்கமும், சமஸ்கிருத அறிமுகங்களும் நிகழ்ந்தது.
சோழப்பேரரசின் ஒரு மாகாணமாகவே இலங்கை இருந்து வந்துள்ளதாகவும் வரலாறுகள்
கூறுகின்றது.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால
சோழராட்சியினால் இலங்கையின் சமய,பண்பாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க
மாற்றமும், செல்வாக்கும் ஏற்பட்டமையினை காணமுடிகிறது. இந்துசமயமானது
பௌத்தமதப் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டிருந்த இலங்கைத்தீவில்
வேர்விட்டு வளர்ச்சிபெற்றது. அரச மதமாக இந்துசமயம் அமைந்ததன் பின்னணியில்
பிராமணீய செல்வாக்கு நிலைகள் பல துறைகளிலும் ஏற்பட்டமையைக் காணமுடிந்தது.
அரண்மனை நடவடிக்கைகளிலும் கிரிகை முறைகளிலும் இந்துமதமும் பிராமணியமும்
முதலிடம் பெற்றிருந்தன. இலங்கையின் பௌத்த மத கட்டிட, சிற்ப ஓவியக்கலை
மரபுகளில் இந்துமதமானது பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியது.‘’ என்பதாக தனது
‘இலங்கை வரலாறு’ எனும் நூலில் எஸ் கிருஸ்ணராசா அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிற்பாடு சோழப்பேரரசை வெற்றிகொண்ட
விஜயபாகு மன்னனின் காலத்தை நாம் பார்போமாயின் இந்துத்துவப்
பண்பாட்டுத்தொடர்புகளின் நீட்சியை நாம் காணலாம். விஜயபாகு தனது சகோதரியான
மித்தாவை பாண்டிய மன்னன் ஒருவனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளான் விஜயபாகு
மன்னனும் கலிங்க இளவரசியான திருலோகசுந்தரியை திருமணம் செய்து கொண்டதாகவும்
அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறான இந்தியக் கலாச்சாரத் தொடர்புகளின்
தொடர்ச்சியின் காரணமாக சாதியமும் சிங்கள சமூகத்தில் தொடர்ந்து
வலுப்பெற்றதாக இருந்துவந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதில் பெரும்
சிரமம் இருக்கும் என்று கருதமுடியாது. விஜயபாகு மன்னனுக்குப் பிற்பாடான
மன்னர்களாக ஜயபாகு, விக்கிரமபாகு, வீரபாகு போன்றவர்கள் இருந்துவந்த
காலங்கள் கடந்த பிற்பாடும் கூட கஜபாகு எனும் மன்னின் ஆட்சிக்காலத்தில்
வடஇந்தியத் தொடர்புகள் மேலும் வலுவாக உள்ளதை நாம் காணலாம்.
இந்து மதத்தோடு தொடர்புடைய விருதுகளும்
ஆட்சிமுறைகளும் பண்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட ஒரு
காலப்பகுதியாக இக் கஜபாகு மன்னனின் ஆட்சிக்காலம் அமைந்தது என்றால் அது
மிகையாகாது.‘’ என்பதாக எஸ்.கிருஸ்ணராசா அவர்கள் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில்
தோன்றிய பௌத்தம் என்பது இந்துத்துவப் பண்பாட்டு வேர்களிலிருந்து
துளிர்த்ததே. இன்று கூட அதன் மரபுவழி தொடர்ச்சியாக சிங்கள மக்களின்
பெயர்கள் அமைந்துள்ளதை நாம் காணலாம். ‘மித்திர ஆரியசிங்க’ எனும் பெயர்
எப்படி சிங்களவர்களின் பெயராக இன்றும் நிலைத்து நிற்கிறது? மித்ர,புத்ர,
இந்ர, அநுர போன்ற பெயர்கள் இருக்குவேதத்தில் வரும் பெயர்கள் ஆகும்.
எனவேதான் நான் கூறுகின்றேன் சிங்கள மக்களில் சாதியம் தோன்றுவதற்கும்
இந்துமத பண்பாடுகளே பிரதான காரணமாக இருந்துவந்துள்ளது. இருப்பினும்
தொடர்ந்து அவர்கள் பேணிவரும் பண்பாடு காலாச்சாரங்கள் பௌத்தம் சார்ந்து
நிலவுவதால் அங்கு சாதிரீயான பாகுபாடுகள் எதிர்காலங்களில் அற்றுப்போவதற்கான
வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்துத்துவ சாதியத்தின் தோற்றமும் அது
எவ்வகையில் உலகிலுள்ள பல்வேறு பண்பாட்டு நடைமுறைகளுடன் வேறுபாடுடையது
என்பதையும் நான் மிகச் சுருக்கமாகவேனும் கூறவேண்டியுள்ளது.
இலங்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு
எமக்குரிய சாதனமாக இருப்பது பாளிமொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களான
‘தீபவம்சம், ‘மகாவம்சம்’, ‘சூளவம்சம்’ போன்ற நூல்களாகும். அதேபோன்றுதான்
இந்தியவரலாற்றையும் அதுனுடன் இணைந்த இந்துமத வரலாற்றையும் தெரிந்து
கொள்வதற்கு சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களையே நாம் துணையாகக்
கொள்ளவேண்டியுள்ளது.
கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்குமேலான
இந்திய வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான சான்றாக எம்மிடம் இருப்பது வட
இந்தியாவிலே இயற்றப்பட்ட வேதகால இலக்கியமாகும். அந்தவகையில் நாம்
பார்ப்பனர்களுக்க நன்றி சொல்லியே ஆகவேண்டும்‘’ என்று பிரேம்நாத் பஸாத்
கூறுகின்றார். (இந்தியவரலாற்றில் பகவத்கீதை)
இந்த வேதகால இலக்கியங்களான ‘இருக்கு’
‘யசூர்’ ‘சாமம்’ ‘அதர்வம்’ போன்ற படைப்புகளுடாகவே இந்திய வரலாற்றையும்
அதனது இந்துத்துவக் கலாசார பண்பாட்டு தொடர்புகளையும் நாம் அறியக்கூடியதாக
இருக்கின்றது.
வட இந்தியாவிலே தோன்றிய பழைமைவாய்ந்த ஒரு
நாகரீகமாக சிந்துவெளிநாகரீகம் விளங்கியது. இந்நாகரீகத்தில் ’ஹரப்பா’
‘மொகஞ்சதாரோ’ என இரண்டு பண்பாடுகள் பேணப்பட்டுவந்ததாகவும் கூறப்படுகின்றது.
சிந்துவெளிநாகரீக மக்களால் பேசப்பட்ட மொழியானது இன்றுவரை
புரிதலுக்குட்படாத வகையிலேயே இருந்து வருகின்றது. அம்மக்களால் பேசப்பட்ட
மொழிகளைப் புரிந்து கொள்வதன் ஊடாகவே அம்மக்களால் பேணப்பட்டுவந்த கலாசாரப்
பண்பாடுகளை புரிந்து கொள்ளமுடியும். சிந்துவெளிநாகரீகம் மறைந்து 1500
ஆண்டுகளுக்குப் பிற்பாடே வெளிநாட்டவர்களின் வருகை இந்தியாவிற்குள்
நடைபெற்றதாக அறியக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு இந்தியாவிற்குள்
குடியேறியவர்களையே ஆரியர்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவிற்குள்
ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறும் மேற்கு நாட்டு அறிஞரான மார்க்ஸ்
முல்லரின் கூற்றை அம்பேத்கர் மறுக்கின்றார். தொடர்ச்சியான ஒரு
குடியேற்றமாகவே அவை நிகழ்ந்ததற்கான ஆதாரங்களையும் அம்பேத்கர்
முன்வைத்துள்ளார். ஆரியர்கள் எனப்படுபவர்கள் குறித்து பல்வேறு
அபிப்பிராயங்கள் நிலவுகின்றது. இவ்வாறு குடியேறியவர்கள் கால்நடைகளின்
உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இந்தியாவின் பூர்வகுடிகள் என்று
சொல்லப்படுபவர்கள் விவசாய உற்பத்தியும் அதற்குரிய நிலங்களையும் சார்ந்து
வாழ்ந்து வந்தவர்களாகவும் அறிய முடிகின்றது.
அதனூடாக குடியேறியவர்களுக்கும் பூர்வீக
குடியினருக்கும் இடையிலேயான உற்பத்தி உடமை முறைகளில் முரண்பாடுகள்
நிலவுகின்றது. அதன்பிரதிபலிப்பாக அவர்களுக்கிடையிலே பகைமையும், யுத்தமும்
தோன்றுகின்றது. இந்த நிகழவானது சர்வதேச மானிட வரலாற்று நிகழ்வுகளுடன்
ஒத்ததாகவே அமைந்துள்ளது. குடியேறிய ஆரியர்கள் என்று சொல்லப்படுபவர்கள்
அனைவரும் ஒரே இனக்குழுக்களாகவும் இருந்ததில்லை அவர்களுக்கிடையிலேயும்
பல்வேறு பிரிவுகள் இருந்துள்ளது.
குடியேறிய ஆரியர்கள் நாடோடிகளாக அலைந்து
திரிந்த பிற்பாடு அவர்கள் நிரந்தரமான இடங்களில் வசித்ததன் பிற்பாடே
வாய்மொழி இலக்கியங்கள் தோன்றியுள்ளது.அதுவே வேத இலக்கியங்களான ‘இருக்கு’
‘யசூர்’ ‘சாமம்’ ‘அதர்வம்’ என நான்கு வகை இலக்கியங்களாகும். இதில்
அதர்வவேதம் என்பது தனித்துவமாக ஒரு தனி இனக்குழுவினரால் இயற்றப்பட்டு
பின்பு நான்கும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வேதகால இலக்கியமானது ஒரு வரலாற்றைக்
கூறும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. தாம் வணங்கும் கடவுள்
அக்கடவுள்களுக்கான பூஜைகள், தமது எதிரி, பில்லி சூனியம், போன்ற விடயங்கள்
பற்றியே கூறப்பட்டுள்ளன. அதர்வ வேதத்தை ஆய்வு செய்த ஜேர்மன் நாட்டு
மொழியிலாளரான WINTERNITZ என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.
‘’அதர்வவேதத்திலுள்ள பெரும்பாலான மாய மந்திரப்பாடல்கள் யாவும் கற்பனையில்
உதித்தவை. இதுபோன்ற மாய மந்திரச் சடங்குகள் உலகம் முழுவதும் உள்ளது.
பல்வேறு நாட்டிலுள்ள பல்வேறு இன மக்களிடையே வழக்கத்தில் உள்ளதோடு அவை
வியப்பூட்டும் விதத்தில் ஒரே மாதிரி நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றது.
வடஇந்தியர்கள், செவ்இந்தியர்கள், ஆபிரிக்கர்கள், மங்கோலியர்கள்,
கிரேக்கர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள் என அனைத்து நாட்டு மக்களும்
பின்பற்றி வந்த நடைமுறைகளோடு ஒத்ததாகவே இருந்துவந்துள்ளது‘’.
காற்று, நீர், நெருப்பு போன்ற இயற்கை
நிகழ்வுகளால் ஆதிகால மனிதன் அச்சுறுத்தப்பட்டான் அவைகளைக்கண்டு அஞ்சினான்.
அவற்றை வணங்குவதன் ஊடாகவே அதன் அழிவுகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்
கொள்ளமுடியும் எனக்கருதினான். ஆகவேதான் அவைகளைக் கடவுள்களாக கருதி வழிபடத்
தொடங்கினான். மனிதனின் இயற்கை வழிபாடுகளின் தோற்றத்தை நாம் இன்றைய
காலகட்டத்தில் இருந்து, இன்றைய அறிவுப் பின்புலத்தில் நின்று
சிந்திக்கும்போது அவை யாவும் முட்டாள்தனமாகவும் பிற்போக்கான செயல்பாடாகவும்
நினைக்கத் தோன்றும். ஆனால் இதுவே மனிதனின் அறிவியல் செயல்பாட்டின் முதல்
அம்சம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இவ்வாறு உலகிலுள்ள அனைத்து
மானிடப் பிரிவினர்களிடமும் மாற்றங்களானது ஒரே தன்மையுடையதாகவே
இருந்துவந்துள்ளது. வட இந்தியாவிலும் இதுபோன்ற தன்மையையே நாம்
காணக்கூடியதாக உள்ளது. இந்தக்காலகட்டத்திலும் சாதியம் அங்கு
வேர்கொள்ளவில்லை.
இந்தியாவில் குடியேறிய ஆரியர்
எனக்குறிப்பிடப்படும் மக்கள் குழுவினர் ஆரம்பத்தில் பல்வேறு இனக்குழுக்களாக
இருந்து வந்துள்ளனர். அவர்களுக்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள்
தோன்றியதையும் நாம் அறிக்கூடியதாக உள்ளது. இவ்வாறான
இனக்குழுக்களுக்கிடையிலேயான மாற்றங்களும் சர்வதேச மாற்றங்களோடு ஒத்ததாகவே
அமைந்துள்ளது. விலிமையான இனத்துடன் பிற இனக்குழுக்களைச் சார்ந்த சமூகங்கள்
ஒன்றாய் கலந்துவிடும் போக்கும் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்ட மக்கள்
பிற்பாடு இனக்குழுக்களின் தலைவர்களை வழிபடும் நிலைக்கு மாற்றம்
பெறுகின்றனர். இவ்வாறு இருக்குவேத நாயகனாக இந்திரன் இருப்பதைக் காணலாம்.
இந்திரனையும், அக்கினியையுமே இருக்குவேத சமூகத்தினர் தமது பிரதான
கடவுள்களாக வழிபட்டும் வந்துள்ளனர்.
இந்திரன் குறித்த ஒரு பாடல்
வகைமுறை தப்பிய வன்மப் பகைவனின்
படைத்திறன் கண்டு பணிந்ததுமில்லை.
ஓங்குயர் மலையும் வீழ்ந்திடும் இந்திரன் முன்னால்
ஆழ்நீர் நிலையிலும் அமுந்துண்டு வாழ்பவன்.
அக்கினி குறித்த பாடல்
எரிதழல் மூட்டி எருவிட்டு கொள்ளிவைத்து
விறகால் நெருப்பிட்டு விண்ணெல்லாம் புகைகூற
சருகாய்ச் சடலமும் வெந்துபொடி சாம்பலாக
நெருப்புக்கடவுளே நீறாக்கி விடுவாயோ.
ஆரம்பகால இருக்குவேதத்தை இயற்றியவர்களில்
பிரதான ரிஷிகளாக உள்ளவர்கள் பரித்வாஜர், வசிட்டர், விசுவாமித்திரர்
களாகும். இராமாயணத்தில் வரும் வஷிட்டருக்கும், விசுவாமித்திரருக்கும் இதில்
எவ்வித தொடர்பும் இல்லை.
இவர்களது
மன்னர்களாக திவோதாச என்பவனும், அவனுடைய மகனானன சுதாச என்பவனும்
இருந்துள்ளனர். வடஇந்திய மக்களின் பூர்வீக குடிகளை தஸ்யூக்கள் தாசர்கள்
என்று இருக்குவேதம் கூறுகின்றது. இவர்களையே பின்பு அசுரர்களாக இந்துமதம்
கற்பித்தது. இவர்கள்தான் திராவிடர்கள் என்று சிலர் கூறுவதை அம்பேத்கர்
மறுக்கின்றார். தாசர்கள், தஸ்யூக்கள் எனப்படுவோர் மங்கோலிய
இனத்தைச்சேர்ந்தவர்கள். சம்பரன் எனும் அசுரனை வெற்றிகொள்வதற்கு ஆரிய
மன்னர்களான திவோதாசவும், சுதாசவும் நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக கடும்
போர்புரிந்துள்ளனர்.
இவ்வாறு போர்புரிவதும் கொல்லப்படுவதும்
சத்ரியர்களாகவும் யுத்தத்திலும், உழைப்பிலும் எவ்விததொடர்புகள் அற்று
வாழ்பவர்களாக புரோகிதர்களும் இருந்துவந்துள்ளனர். புரோகிதர்களின் கடமைகளாக
சடங்குகள், யாகங்கள் கடவுளைவேண்டிப் பிராத்தனைகள் புரிவது என்பவையாகவே
இருந்து வந்துள்ளது.
இதன்தொடர்ச்சியே சத்திரியர்களுக்கும்
புரோகிதர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றக்காரணமாகியது. இக்காலகட்டத்தில்
வடஇந்தியாவில் புரோகிதர்கள், சத்திரியர்கள்,வைசியர்கள், அடிமைகள் எனும்
சமூகப்பிரிவுகளே இருந்துவந்துள்ளது. இவைகூட உலக மாற்றத்திற்கு ஏற்றவகையாகவே
அமைந்து வந்துள்ளதை நாம் காணலாம். அப்போதும் சாதியம் தோன்றவில்லை.
தொடர்ச்சியான புரோகிதர்களுக்கும்,
சத்திரியர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சநிலை அடையும்போதுதான் இன்று
நிலவும் சாதியமுறையின் தோற்றம் ஆரம்பமாகியது.
வேதகாலம் உபநிடதகாலமாக மாற்றம்
பெறுகின்றது. வேதகால இலக்கியங்களான இருக்கு, யசூர், சாமம்,அதர்வம் போன்ற
இலக்கியங்களிலும் மாற்றங்கள் நிலவுகின்றது. பிராமணங்களை
இயற்றத்தொடங்கினார்கள். பிராமணங்கள் என்பது யாகங்கள், வேள்விகள்
புரிவதற்கான மந்திரங்களை உள்ளடக்கிய பார்ப்பன இலக்கியமாகும். இவர்களது
வேள்வியில் பலியிடப்பட்டவன்தான் புருசசுக்தா எனும் ‘மீ’ (அதீதசக்திவாய்ந்த)
மனிதன். இவன் நான்கு துண்டுகளாக வெட்டப்படுகின்றான். இச்சம்பவத்தினூடாகவே
நான்கு வர்ணங்கள் தோற்றம் பெறுகின்றது. வேதகாலத்தில் இருந்துவந்த பிரதான
கடவுளான இந்திரனுக்கு மாற்றாக பிரம்மா முழுமுதல் கடவுளாகின்றார். இவரே
படைப்புக்கடவுளாகவும் மாறுகின்றார். இவரது முகத்திலிருந்து தோன்றியவர்களே
பிராமணர்கள். இவரது தோள்களிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்,
தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து
படைக்கப்பட்டவர்கள் சூத்திரர்கள் என்பதாக பிரம்மாவே மனிதர்களைப்
படைத்தார். இவ்வாறே வர்ணாச்சிரமா கோட்பாடு தோற்றம்பெற்றது. கடவுள்
மனிதர்களை தனது உடலின் வெவ்வேறு பாகங்கள் ஊடாக மனிதர்களைப் படைத்ததோடு
ஒவ்வொரு பிறப்பினருக்கும் உரிய கடமைகளையும் கடவுளே அருளியும் உள்ளார்.
வர்ணாச்சிரமக்கோட்பாட்டு விதிகளே
பிராமணர்கள் மீதான சத்திரியர்களின் கோபத்தையும் தணித்தது. சத்திரியர்கள்
ஒடுக்குவதற்கு வைசியர்களையும், பிராமணர்கள்,சத்திரியர்கள் வைசியர்கள் என
அனைவரும் ஒடுக்குவதற்கு சூத்திரர்களையும் எமது பரம்பொருள் படைத்தார்.
இவ்வாறான ஒடுக்குமுறை விதிகளே பிராமணர்கள் மீதான சத்திரியர்களின் கோபம்
தணிக்கப்பட்டதற்கும் காரணமாகியது.
உலகில் பிரயோகிக்கப்படும் கோட்பாடுகளானது
எதிர்ப்புணர்வையும், ஒடுக்கப்படுவதற்கு எதிரான போராடும் உணர்வையும்
ஏற்படுத்தும் தன்மைகளைக் கொண்டது. ஆனால் வர்ணாச்சிரமக் கோட்பாடு மட்டுமே
எதிர்ப்புகளுக்கு அடங்கிப்போகும் உணர்வை ஏற்படுத்தும் சக்தியாக
விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது சமூக மேன் நிலையாக்க உணர்வுக்கு ஏங்கும்
தன்மையைக் கொண்டதாகவும் இயங்கிவருகின்றது.
அனைத்துக்கும் மேலாக இந்த வர்ணாச்சிரமக்
கோட்பாட்டு விதிகளானது எம்மைப் படைத்த கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட
ஒன்றாகும். கடவுளே எம்மை பல்வேறு சாதிப்பிரிவினை கொண்டவர்களாகவும்
படைத்துள்ளார். எனவே எமது சாதிய அமைப்பு முறையானது தெய்வீக அம்சம் கொண்டது.
இதுவே உலகிலுள்ள வேறுபாடுகளிலிருந்து
தனித்துவமான கோட்பாடாகவும், விதிமுறைகளாகவும் இருந்து வருகின்றது. எந்தவோரு
செயலிலும் எந்தவோரு கோட்பாட்டிலும், எந்தவொரு மனிதர்களிலும்
தெய்வீகத்தன்மை ஏற்றப்படுமாயின் அவைகள் எவ்வித மதிப்பீடுகளுக்கும்,
விமர்சனங்களுக்கும் உட்படுத்தும் தன்மையை இழந்துவிடுகின்றது. அவை
புனிதமானதாக கட்டமைக்கப்பட்டுவிடுகின்றது.
உதாரணத்திற்கு இன்றைய சூழலைப்பாருங்கள்
நடிகர் ரஜனிகாந் அவர்களை எவ்வித விமர்சனத்திற்கும் உட்படுத்திவிட முடியாது.
அவர்மீது தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டுவிட்டது. கற்பூரங்கொழுத்தி,
பால்அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து வழிபடும் அளவிற்கு தெய்வீக அம்சம்
கொண்டவராக ரஜனிகாந் வழிபடப்பட்டு வருகின்றார். நாம் தெய்வீகத்தன்மைகளை
அனைத்து அம்சங்களிலும் ஏற்றிவிடுகின்றோம். நாம் கற்றுக்கொண்ட
சித்தாந்தங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைக் கூட தெய்வீக
அம்சத்திற்குள்ளாக்கி விடுகின்றோம். அவற்றை மீள் மதிப்பீடு செய்வதை எம்மால்
அங்கீகரிக்க முடியாது போவதற்கு காரணமும் அதுவேயாகும்.
அதுமட்டுமா சூரியக் கடவுளென பிரபாகரன் இன்று தெய்விகத்தன்மைக் குள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.
இந்தியத் தலித் சமூகத்தை அவர்களது சமூக
விடுதலைப் போராட்ட அம்சத்தை மழுங்கடித்ததில் பெரும் பங்கையாற்றியவராக நாம்
காந்தியை இனம் காணக் கூடியதாக இருக்கின்றது. தீண்டாமைக் கருத்தியலுக்
குள்ளாக்கப்பட்ட சமூகத்தை ஹரிஜனர்கள் என பெயர்சூட்டினார் காந்தி அவர்கள்.
நீங்களெல்லாம் ஹரிஹரனின் புதல்வர்கள் உங்களது பிறப்பானது கருமவினைகளால்
விளைந்தது. எனவே உங்களுக்குரிய கருமங்களை மட்டுமே நீங்கள் புரியவேண்டும்.
அவை உங்களைப் படைத்த இறைவனால் தீர்மானிக்கப்பட்டது. என்றார் காந்தி
அவர்கள்.
ஆயிரங்காலம் அடிமைவாழ்க்கை வாழ்ந்த
எமக்கு ஹரிஜனர் என பெயர் வைக்க நீ யாரடா நாயே.‘’ என இன்று காந்தியைப்
பார்த்து கேட்கின்றார்கள் தலித்துக்கள்.
இதுதான் எம்மத்தியில் நிலவும்
சாதியத்திற்கும் பிறசமூகத்திற்குள் நிலவும் வேறுபாடுகளுக்கும் உள்ள
வித்தியாசமாகும். எமது மத்தியில் நிலவும் சாதியமானது எமது பிறப்போடும்
தெய்வீக அம்சம் பொருந்தியதாகவும், புனிதமானதாகவும் பேணப்பட்டுவருகின்றது.
அவை எமது இந்துத்துவப் பண்பாட்டுச் சடங்கு சம்பிரதாயங்களுடன்
தொடர்ச்சியாகவும் நிலைத்தும் வருகின்றது.எமது பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏன் இறப்பிற்குப் பிற்பாடுகூட எமது சாதியம் நிலைத்து நிற்கின்றது.
எனவேதான் இந்துத்துவ சாதிய அமைப்பு முறைகளை மிக நுணுக்கமாக ஆய்வு செய்த தந்தை பெரியார் சொன்னார்.
எமது மொழி சாதி காப்பாற்றும் மொழி
எமது பண்பாடு சாதி காப்பாற்றும் பண்பாடு
எமது மதம் சாதி காப்பாற்றும் மதம்
எமது கடவுள்கள் சாதி காப்பாற்றும் கடவுள்கள்.