கற்சுறா
Tuesday, 28 April 2015
Thursday, 23 April 2015
கவிதை- கற்சுறா
கிலிசு கெட்டழிகிறது ஒரு தேசம்
பலத்த புலன்கள் பரவ விட்டு
அகத்தின் விகாசிப்பு
மனப்பிராந்தியத்தின்
கரைமுழுதும் ஈரலிக்க
அண்ணாக்கில் உருளும்
வன்னிப் புழுதியின் வரட்சி
போரையும் கூடவே சாதியையும்
கொண்டுருளும் கூட்டத்தில்
அம்மணமாய் உலாவந்தேன்.
இப்போ;
எவனுக்கோ கிலிசு தட்டிப் பினாத்துகிறான்
ஊரெல்லாம் கூடிநிற்க
பிடிமண்ணில் நிறைகிறது
மீசைமுளைக்காத புதைகுழிகள்.
அள்ளி எடுக்கும் பிடிமண்ணில்
அவர்கள் தேசம் குறைகிறது
தேசமொன்றும் இல்லாத
வெறுமையின் தரிப்பிடத்தில்
அம்மணமாய் உறங்கி
அம்மணமாய் உயிர் கொள்வேன்.
03/09/1999
கவிதை கற்சுறா
வேலிகளாய் நிமிர்ந்தெழுந்தது
ஆமணக்கு.
வெட்ட, பால் வடியும்.
மீளத்துளிர்த்து பெருத்த காடாகும்
வெட்டிய அடிக்கட்டை.
ஊரின் தரை முட்ட
ஆமணக்கங் குஞ்சுகள்.
ஊருக்குத் தாய்த்திமிர்.
எல்லாம் பொய்யாக்கி,
புழுக்களை விதைத்தது,
இரவொன்றில் நுழைந்த
மரநாய்.
ராட்சதக் கவலை.
அரிப்பெடுத்த புழுக்கள்.
பிய்த்துக் கொடுத்த கம்புகளால்
எங்கள் தசைகளை சிதைத்து
எச்சரித்தது மரநாய்;.
கற்சுவர் எழுப்பிய புழுக்கள்
ஆமணக்கு
அழிந்து கருகிய
இருப்பை மறைக்க
மகிழ்ச்சி- மரநாய்க்கு.
மரநாயின் ஆர்ப்பரிப்பில்
ஆமணக்கின் நினைவைக்கூட
வைத்திருக்க முடியவில்லை
எம்மால்.
காய்ந்து,
போன சாக்கில் அள்ளிக் கொட்டும்
மண் தூவிய காற்று.
நாட்சரிவில் ஒரு முறை
வழி தவறியதாய்த்; திரும்பும் பஸ்.
நாட்டிலா? எங்கே?
எனக் கேட்கும் பெயருடன்
இன்னும் என்
பன்னாடை ஊர்.
இருள்வெளி
1998
கவிதை- கற்சுறா
பலமுறை தடவிப்பார்த்து
சலித்து விட்டது.
இடங்களை மாற்றி வைத்தல் முடியாது.
தனியே நான் மட்டும்
உருவி
குறிகளை அழிக்க,
கால்களுக்கிடையில்
நீண்டு கிடந்தது
பூணூல் சுத்திய ஆண்குறி தனித்து.
எல்லோர் செயல்களையும் பார்த்து
வாய் பிளந்து போகும் எனக்கு,
வெட்கம் பட்டது
ஆச்சரியக்குறி அகற்றிய வசதி.
குறிகள் ஒழிந்து
முண்டத்தில் வெளிச்சம் பட
எல்லோருக்கும் வியப்பு.
கவட்டினுள் குறி
யாருக்குத்தெரியும்?
எக்ஸில் 8
1998
கவிதை- கற்சுறா
கொலையும்
கொலைச்சிரிப்பில் கும்மாளமும்.
ஆணுறுப்பு அறுந்த வலி எனக்கு.
ஒவ்வொரு வெடித் தீர்விலும்
இறந்து கொண்டிருக்கிறேன்.
மௌனம் பொத்த
எனக்குள் சித்திரவதை
காயம் பட்டு,
உடல்
சீழ்வடிய நாறுகிறது
சாவு மணம்.
நுண்ணிய உணர்வுக் கனதி.
நிச்சயம்,
நாலு நாளாய் புழுத்தெறிக்க
மணத்த சாவு எனக்கு.
ஒரு இரவில்
அறுதலிகளாய்ப் போன
எனது பயல்களுடன் போய்ச் சேர,
எதாவதொரு தெருவில்
சாவு வரின் சுகம்
இந்த மண்ணை விட.
23/12/1997
சரிநிகர்
கவிதை - கற்சுறா
கற்சுறா
கதவின் சாயலில் திறந்து
மூடியபடி இருந்த ஞாபகங்களை விட்டுவிட்டு
மறைத்துக் கொண்டிருந்தது உள்ளே புகுந்து மறையும் வெளிச்சம்.
கறுப்பின் திரள் இறுகிய சுவரில் குந்தியிருந்த
எனதுருவத்தின் உடலில்
மெல்லிய கீறலாய் மாறி மாறி மோதியபடி இருந்தது ஒளிக்கற்று.
இருளைக் குலைக்கும் கதவின் அசைவில் நினைவுகள் தடம்புரள
ஏதாவது ஒரு நிமிடம் என் ஞாபகங்கள் என்னைக் கொன்றிருக்க
வேண்டும். எப்பொழுதும் இரத்த வெறியுடன் கொலைக்கருவியாய்
என்னுடனே உயிர்வாழும் ஞாபகம்
ஒரு குழந்தையைப் போலவே அருகில் வந்தது.
யாருக்கும் துன்பமில்லாத செல்லத்தனமான ஞாபகம்
கதவினை விலக்கி விலத்திய விரல்களோடு
ஒளிக்கற்றை இழுத்து
என்முதுகில் விட்டு சவாரியே செய்தது.
ஆனந்தம் பொங்க ஞாபகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென
எல்லோரும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
காற்றிடை புகாத நெரிசலோடு
பற்றைக் காடென வளர்ந்த ஞபகம்
சிலிர்ப்பூட்டும் மேனியை அவ்வப்போது இடைநிறுத்தி
தன்னுடைய இராட்சதப்பற்களால் கீறிக்கொண்டிருந்தது.
நினைத்த பொழுதில் மோகித்தெழும் மேனிக்கு
இருளையும் ஒளியையும் இடைஞ்சலாக்கியது.
நிர்வாணத்தின் ஓட்டைகளை நிரப்பி
சிதைவற்ற மேனியாக்கி பூசிக்கத் தொடங்கியது.
...
இப்போது சித்திரவதைக்குத் தயார்.
Wednesday, 22 April 2015
கவிதை - கற்சுறா
நீயும் ; எனக்குள் நீயும்.
கருந்திரள் செறிவும்
திரை மறைவில் ஒளிரும் இருளும்
சிதறிப் படிகிறது கால்களின் இடுக்கு.
நீர்ச்சருகை வலிந்து வலிந்து
கால் விரல்களில் உருவ
ஓடி வழிகிறது
குருவியின் கண் நீர்.
விரல்நுனி தீண்டும்
நீரில் நனைந்து
காய்கிறது உடற்தவிப்பு.
அலையோடு மோதும் மூச்சின் உரசலில்
பீறிடும் தீ நீர்.
கருந்திரளலை விலத்தி
படிகிறது உடற்பசை.
கால்களின் நடையிடுக்கில் தவழும் மோகக் குழியில்
வெப்பக் காற்றை உள்ளும் வெளியுமென ஊதுவதில் நிறைகிறது
சரீரத்தின் பெரு மூச்சு.
படங்கள்: நன்றி தமயந்தி
Subscribe to:
Posts (Atom)
Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா
அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...
-
ஒன்றின் சுயத்தை தெரிந்தே இல்லாது செய்யும் கூட்டாளிகள். சோபாசக்தியும் நீலகண்டனும். இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டில் அடையாளம் காட்டிப் பேசஇர...
-
அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...
-
இலக்கியப் பித்தலாட்டத்தின் தொடர் வளையங்கள். கற்சுறா 8 நவம்பர் 2025 அன்று ரொரன்ரோவில் நடைபெற்ற “சோபாசக்தியின் இரண்டு புத்தக வெளியீடுகள்” இல் ...


