Wednesday, 27 April 2016

"இன்னொரு இடத்தில் பேசுதல்..."


உலோகத்தின் எழுத்துக்கள்

கற்சுறா







இடங்களில் காவிழாய்ச் செடிகள் முளைத்திருந்த
இடங்களில் தகரைப்பற்றைகள் முளைத்திருந்த
இடங்களில் குப்பைமேனிகள் முளைத்திருந்த
இடங்களில்தான் உன்னைக் காலாற நடாத்திப் போனேன்.

காண்டாவன வெக்கையில் கருகிப்போகாத காலத்தில்தானே உனது கால்களை ஊன்றினாய்?

பருவத்தின் கால்கள் இடங்களை அளையாதிருந்ததா?

மரணத்தின் வெக்கையில் கருகியதா உன்பாதம்?

மரணங்கள் உடலில் நிகழ்வதல்ல.

நாட்காட்டிகளால் நினைவுறுத்தும் ஒவ்வொரு நாட்களிலும் மரணத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது. நினைவுகளால் மரணம் வேறு வேறு நிறங்கள் பூசப்பட்டிருக்கிறது. நாட்களைத் தாண்டுதல் என்பதே நடைபெற்று முடிந்த ஏதோவொரு மரணத்தைத் தாண்டுதலாக இருக்கும் பொழுது வடிவங்களால் தெரிவுசெய்யப்பட்ட மரணங்களை காவித்திரிய இருப்பதோ இன்னும் நீண்டகாலமில்லை.

ஆனாலும் இந்த இடத்தில் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டு இன்னொரு இடத்தில் பேசுதல் என்பதே ஒரு காலத்தினைக் கடக்க எண்ணும் நாட்களை திரும்பத்திரும்ப நீ விளங்கிக் கொள்ள மறுப்பதாகிறது.

அதுவே உனது தப்பித்தலுக்கான முதல் வழி.

உனக்குத் தெரியும் ஆனந்தத்தால் பூசப்பட்டு விரிந்து கிடக்கும் பெருத்த உடலுக்குள் துக்கங்கள் நிரந்தரமாய் அடைபடுவதில்லை.

ஆனாலும்  நீ பேசவேண்டிய தருணத்திற்குள்ளால் மறைந்து நகருகிறாய்.
ஆனந்தத்தின் தருணங்களை அச்சங்கள்ளால் மூடுகிறாய்.

சாட்சியங்களால் மட்டும் நியாயப்படுத்திவிடமுடியாத தருணங்களால் கடந்துவிட்டிருக்கும் பொழுதில் பருவத்தை எழுதுவதற்கு எண்ணற்ற சொற்களை வரிசைப்படுத்துவதில் கைதேர்ந்தவனாக என்னாலும் இருக்கமுடியாதிருக்கிறது.

மனதில் ஏற்கனவே ரசிக்கப்பட்ட ஒரு வார்த்தையே  எப்போதும் முன்வந்து துருத்துகிறது.

சாட்சியங்களால் மட்டுமல்ல துருவலில் தேய்ந்து பல்லில் சிக்கிய வார்த்தைகளாக இருப்பதாலும் பருவத்தை வடிவமாக எழுதமுடிவதில்லை.


பருவங்களில் மீந்து கிடப்பதோ காலத்தின் வாசனை.

வாசனையைப் பூசி நிற்கிறது வர்ணத்தின் வடிவு.


கேள்...

உனது தருணங்களின் எல்லாப் பொழுதுகளிலும்  நான் பேசியதை.

மொழிகளற்றுப் போன, மொழியை மறந்து போன, உடல்களின் வாழ்தலுக்குள் இருக்கமுடியாத ஒரு நகர்வின் சாயலாகவே இருக்கும் அது.


கேள்...


அது ஒரு மழைக்காலத்தின் முடிவு.

வெறும் நீர் முள்ளிகளால்  மட்டுமே நிறைந்து போய், சேறு அடைத்திருந்தன குளங்கள்.

தார் வீதிகளைக் கடந்து வந்த ஓசைகளால் அர்த்தங்களை நாம் தெளிவாகப் பெற்றுக் கொண்டோம்.

அது  தொடர் வாகனங்களின் இரைச்சல் என்பதனை உணர்ந்து கொள்ள வெகு நேரமாகவில்லை. ஓசையின் அதிகரிப்பினை வைத்து எங்களால் அதன் வேகத்தையும் கணிப்பிட முடிந்தது.

அடுத்த சில நிமிடங்கள் மட்டுமே எமக்கு இருக்கின்றன என்பதனைத் தீர்மானித்தோம். வீட்டின் பின்புறமாகவோ அல்லது முன்புறமாகவோ ஓட வேண்டும். அந்த சில நிமிடங்கள்  முன்புறத்தையும் பின்புறத்தையும்  பிரித்தறியப் எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது.

அப்போது அதிகாலை ஏழுமணி என்பதால் நாம் வீட்டின் முன்பக்கத்தையே தெரிவு செய்தோம். பின்பக்கம் குளத்தோடு சேர்ந்திருந்ததோ மிகப்பெரிய காடு.

தொடர் வண்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை முகில்களில் தெறித்தனுப்பிய ஓசைகள் உணர்த்தியது. வண்டிகளின் எண்ணிக்கை குறைந்தது பன்னிரண்டு என்றும் எங்களால் எண்ணக் கூடியதாக இருந்தது.

சத்தங்களில் இருந்து வாகனங்களின் எண்ணிக்கையைக்  கணக்கிடுவதில் நாங்கள் மிக அதிகமாகவே எமது திறமையை வளர்த்திருந்தோம்.

அப்போது ஒரு கட்டுத்துவக்கை வடிவமைக்கத் தெரிந்திருந்த திறமையை ஒத்திருந்தது அது.

வாகனச்சத்தம் இன்னும் ஓயவில்லை.

ஒரேமாதிரி திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது.

அலுத்துப்போன வார்த்தைகளை கவிதை என்று சொல்லி சோகமான ஓசை நயத்துடன் திரும்பத்திரும்ப வாசிக்கும் ஒருவனது இத்துப்போன குரல் போல இருந்தது அந்த ஓசை.

அது  கிறிஸ்தவ தேவாலயத்தில் எமது தமிழ்ச் சுவாமிமாரின் ஞாயிற்றுக்கிழமையின் இரக்கமுள்ள பிரசங்கம் போலவும் இருந்தது.

ஆனால் இப்போது நாங்கள் ஓசைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம்.

வாசனைகளாலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம்.

நிறங்கள் மட்டும் எப்போதும் போல எங்களது கண்ணை மறைத்தது.

நிறங்களைப் பிரித்தறியப் போதுமானதாக எமக்கு எந்த அறிவும் மேலதிகமாகத் தெரியவில்லை.

நிறக்குருடர்களாக இருந்தோமா?

அல்லது,

நிறங்களின் செயல்கள் எல்லாமே எங்களால் பிரித்தறியமுடியாதபடி ஒரேமாதிரியானதாக இருந்ததா?

நீ இல்லை என்கிறாய்.

சுற்றிவளைப்புக்களின் எல்லாக்காலங்களிலும் நாங்கள் நிறக்குருடர்களாக மாறிவிட்டிருந்த கதையை நீ நம்ம மறுக்கிறாய்.

இன்னொரு இடத்தில் பேசுதல் என்ற உனது மவுனங்களால் நிறங்களை நீ பிரித்துக் காட்டுகிறாய்.

எனது கண்களை என்னால் மறுதலிக்கமுடியவில்லை.

ஓசைகளைப் போலவும் வாசனைகளைப் போலவும் நிறங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டோம்.

அந்தச் சுற்றிவளைப்புகளுக்குள் அகப்பட்ட நாங்கள் எமது உதடுகளை மெல்லிதாகவேனும் அசைக்காமல் இறுகிய உதடுகளோடு பற்களைக் கிட்டியபடி உள்ளார்ந்த அர்த்தங்களோடு ஒரே சத்தத்தில் நாம் புதிய புதிய சொற்களால் பேசிக் கொண்டிருந்த  அந்தக் காலங்களில் வரிசையில் இருந்த எமக்கு முன்னால் இராணுவத்தினரும் நின்றார்கள்.

உண்மையில்,
யுத்தத்தை யுத்தகாலத்தில் எழுதுவதிலும் விடப் பயங்கரமானது  யுத்தமற்ற காலத்தில் யுத்தத்தை எழுதுவது.



விளங்கிக் கொள்ளலுக்காக கதைகளையும் கூடவே கட்டுக்கதைகளையும்  கொண்டே ஓடவேண்டியிருக்கிறது.

கட்டிமுடிக்கப்பட்ட தாகச் சொல்லப்படும் கதைகளிருந்துதான் அவிழ்ந்து விழுகின்றன முடிச்சுக்கள்.

தொடர்பறுந்த காலத்திலிருந்தே வளர்ந்திருக்கவேண்டும்  என நினைத்த வரிசையை இடையில் காணவில்லை.

எட்டிப்பார்த்த தலை, வரிசையை அறுத்தது.

வரிசையாய் இருப்பதற்கும் வரிசையில் இருப்பதற்கும்

இடையில்,

நினைவுவெளி உறைவு.

"இன்னொரு இடத்தில் பேசுதல்."

தப்பித்தலுக்கான நுழைவாயில் மட்டுமே.

கதைகளைத் தவறவிட்டு நகரும் வார்த்தை எத்தனை மறிப்புக்களைத் தாண்டியிருக்கவேண்டும்?

குலைந்த அடுக்கிலிருந்து  தடுமாறிய சொல் என்னுடன் நகர்ந்து

இன்னொரு இடத்தை நிரப்பியது.

அங்கேயும் நீ இல்லை.

உனக்குத் தெரியுமா என் தரிப்பிடம்?

வரிசையில் இருந்து தப்பிய வார்த்தையைக் குலைத்தது

வரிசையாய் இருந்தது.

ஒரு தலையாட்டியின் முன்னால் நடந்துவரும் தருணத்தைக் கடப்பதற்கு தடையாய் இருப்பது பின்னால் வரிசையாய் நிற்கின்ற இராணுவத்தின் கால்களல்ல.

உள்ளே சாக்கினால் மூடியிருக்கும் தலையின் கண்களே.

இராணுவத்தின் காலடியில் இருத்தி வைக்கப்பட்ட ஒரு தலையாட்டியின் முன்னால் நகரும் வரிசையில் ஒருமுறையேனும் நீ நின்றிருக்கிறாயா?

சாக்கினால் போர்த்தியிருக்கும் தலையை நெருங்க கண்களால் முடியாது.

உயிர் அறுந்து கால்களில் உறையும்.

தலையாட்டியின் கால்களிற்குள்ளால் நெளிந்த கால்களை அடையாளம் கண்ட தருணம் என்முன்னால் மெல்லிதாகவேனும் ஆடாதிருந்த தலை யாருடையதாய் இருந்திருக்கும்?

உனக்குத் தெரியுமா என் தரிப்பிடம்?

தலையாட்டிகளால் மட்டும் நிறைந்திருக்கும்  நமது இலக்கியக் கலந்துரையாடல்களில் அதனை நீ இப்போதும் இனம்காணமுடியாது.

அந்தத் தலையாட்டி போல் இல்லாது, ஆனாலும் யாரையேனும் காட்டிக் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இல்லாது இருக்கும் இந்தத் தலையாட்டிகள் ஒவ்வொரு தருணமும் தமது தலையை ஆட்டும் போது தம்மையே காட்டிக் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு தலையாட்டியாய் சாக்கினால் மூடிய தலையுடன் எந்த இராணுவத்தின் கால்களினூடேனும் ஒற்றைச் சந்தியில் குந்தியிருந்திருக்கிறாயா?

இன்னொரு இடத்தில் பேசுதலில் மறையும் உனது சொற்களை நீதான் கண்டுபிடிக்கவேண்டும். நானல்ல.

அவை ஒற்றை நாளில் அர்த்தமிழந்து போகக் கூடியவை என்பதையும் நீ இன்னமும் அறியவில்லை.

மிகவும் சிக்கலான தருணங்களில் மனது கடந்து போகிறது.

ஒரு அழுங்குப்பிடியானவனின் கைகளில் கிடைத்துவிட்ட சொற்கள் ஒருபோதும் நெகிழ்வடைவதில்லை.

நீரில் இருந்து நழுவும் இன்னொரு நீர்போல வார்த்தைகளை நழுவவிடும் ஆசைமட்டுமே தினமும் துருத்திக் கொண்டு நிற்கிறது.

முப்பது வருடகாலமாக யுத்தமற்ற ஒரு நாளுக்கு ஏங்கிய மனது அர்த்தமிழந்த சொற்கள் பாவனைக்கு இல்லாது போகும் ஒரு தருணத்திற்காக இன்று ஏங்குகிறது.

இழப்புக்கள் எப்போதும் சாவீடுகளாக மட்டுமே பழக்கப்பட்ட மனதிற்கு அர்த்த இழப்பு யாருடைய வீட்டுக்கதவினைத் தட்டுமோ என்று பயம் ஏற்பட்டுவிடுகிறதா?

மரணத்தின் அர்த்தம் எப்போதும் போலத்தானே இன்றும் இருக்கிறது.

மரணத்தைக் காவிக் காவி இதற்குமேலும் குடிபெயர முடியவில்லை என்றானபோதும் மரணம் அதன் கட்டித்தன்மையிலிருந்து கொஞ்சமும் கரைந்துவிடவில்லை.

பாஸ்போட்டை கிழித்து கொமட்டிற்குள் ஓட்டிவிட்டு விமான நிலையத்தில் கையைத்தூக்கிக்காட்டி நின்று பெயரை மாற்றியது போல்,
எழுத்தின் அர்த்தங்களை கொமட்டிற்குள் ஓட்டிவிட வசதியில்லை.

அதனால்தான் எனது எழுத்துக்களை  ஒரு வாசகனாக  மலக்கூடத்தின் கதவை அடைத்துவிட்டு உள்ளேயிருந்து வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது உனக்கு.

கக்கூசின் அடைப்புக்குள்ளிருந்து கதைகளை அறியநினைக்கும் கதைகளாக உனக்கு அவை தடம்பிடியா.

உள்ளேயும் வெளியேயும் மணம் ஒன்றே.

ஆனாலும்,

நீ பேசவேண்டிய காலத்தை  இப்போதாவது உனக்கு  எடுத்துக்கொள்.

ஆனாலும் நீ பேசமுடியாதிருந்த காலமும் நீ மாற முடியாதிருந்த காலமும் யாருடையது என்பதை மட்டுமேனும் சொல்லு.

உனது காலங்களாகவே அவை இருந்தன என்பதை இப்போது மட்டும் ஏன் மறைத்துக் கொள்கிறாய்.

அப்போது நீ மொழிகளை பழகிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் போல் வீணிகளில் ஒழுகிய வார்த்தைகளோடு மட்டும் பேசிக் கொண்டிருந்தாயா?

முள்ளுக்கம்பியை மட்டும் மெழுகுதிரியைச் சுற்றி கொழுத்திஉனது கதைகளை மேசையில் பரவமுடிந்தது போல் இல்லை இப்போதைய காலம் எனபதை நீ நன்றாகவே அறிந்திருக்கிறாய்.

அறிதலில் தளைத்த ஒருவார்த்தையாய் உன்னால் கைக்கொள்ளப்படாதிருப்பது இடர்களின் காலுக்குள் நசிப்பட்ட குரல் என்பதனை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

இராணுவத்தின் அசைவு மட்டுமல்ல சொற்களின் அர்த்தமும் ஓசைகளால் மட்டும் தீர்மானிக்கப்படும்போது உன்னுடைய சொற்கள் பலமிழந்துவிடும்.

சத்தங்களால்  நிரம்பப்படப் போதுமானதாக இருக்காது அதனுடைய அர்த்தங்கள்.

"ன்" ககும் "ள்"க்கும்  இடையில் ஓசைகளால் தடுமாறும் நீ அர்த்தங்களை வரிசைப்படுத்துகிறாய்.



அது அர்த்தங்களால் வரிசைப்படுத்த முடியாத எழுத்துக்கள்.

வெறுமனே கோடுகளாலும் அர்த்தமிழந்த நெளிவுகளாலும் சுற்றிவளைத்துக் கொள்ளப்பட்ட உடல்களை "ர்"ஆலும் "ன்" ஆலும் பிரிக்கத் துடிப்பதில் தோல்வியையே நீ தொடர்ந்தும் காணுவாய்.

இருந்தும்,
இத்தனை காலமாய் வெளிகளில் அலைந்த  கேள்விகளில் ஒழிந்து போய் இருந்து விட்டு மெல்ல நகர்ந்து வருகிறாய் நீ.

ஒருபக்கம் மெல்லிதாகவும் மறுபக்கம் அகன்றும் ஒரு வார்த்தையை இடம்மாறிப் பாவிக்கத் தொடங்கும் போதே நீயாரென்று தெரிந்து விடுகிறது எனக்கு.

பயணத்தின் முடிவில்  உனது கையில் எஞ்சியிருக்கும் புகைப்படங்கள் போல அவை மினுங்கத் தொடங்கிவிடும்.

ஒளிபூசப்பட்ட உனது புகைப்படங்கள் போல இருப்பதில்லை  நமது வார்த்தைகள்.

இருப்பிடங்களில் ஊன்றிய திண்மத்தின் தன்மை அது.

ரசிக்க வைக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் நீ மறைந்துகொள்ளும் போது  யாரும் காட்டிக்கொடுத்துவிடத் தேவையில்லை.

உன்னுடைய அர்த்தங்கள் தானாகவே பிடிபட்டுவிடும்.

ஒற்றைக் கேள்விக்கு உடனே தெற்கே கண்ணைச் செருகுபவன் ஒருபோதும் நெஞ்சாங்க கற்களை  எனக்குள் எறிவதற்கு தயாரற்றவன்.

தற்காப்பு வார்த்தைகளைக் கூட தனக்காக உருவாக்கத் தெரியாத அவனை நோக்கியதல்ல இது.

வெற்று ஆபாசவார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட  ஒரு அலுமினீயப் பாத்திரத்தின் சாயல் கொண்ட எழுத்தாக இருக்கும்  இதனை நீ வாசிக்கும் பொழுது  மிக அதிகமானோர் வீடுகளை நீங்கள் தட்டித் திறக்க வேண்டியிருக்கும்.

உலோகத்தின் எழுத்துக்கள் வெறும் சத்தங்களால் ஆனவை மட்டுமல்ல.

மன்னிப்பேயற்ற பாவங்களால் திரண்டுபோய்க் கிடக்கிறது மொழி. மொழியின் பிரத்தியேகமான வன்முறையின் பாடுகளால் ஆனந்தத்தின் உடல்களை கூறுபோடுதல் என்பதே சாபத்திற்கான முதல் வழி என்பதை நீ தெரிந்து கொள்.

நன்றி
புதியசொல்
இதழ்2


Saturday, 9 April 2016

"சும்மா இருப்பது என்பது சும்மா இருத்தல் அல்ல.


தோழர் சண் நினைவுப் பகிர்வு...
கற்சுறா


                                                       



"இலக்கியம் ரசனை சார்ந்தது. ரசிகரோ வாசகரோ, அவர் தானே உய்த்துணர்வது. அவரது ரசனையினூடாக அவருக்கான செய்தியை எடுத்துக் கொள்வது.அவற்றிற்கூடாக மனித வாழ்வின் அவலங்களைத் துடைத்தெறிய ஆவேசம் கொள்வது."

இவ்வாறிருக்க நமது எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டும் இலக்கியம் ஏன் சமர்க்களமாக இருக்கிறது? இது தொழில்சார் போட்டியாகவோ இருக்கலாம். இதனால் வாசகர்களுக்குக் கிடைப்பது பொறுமை சேர்க்கும் போட்டி மட்டுமே. அது வெறுப்பையும் வெறுமையையும் அவர்களிடம் வளர்த்து விடுகிறது.வாசகர்களை நோக்கி எழுதுபவர்களுக்கு இந்தச் சமர்க்களம் உதவுவதில்லை.எழுத்தாளர்களை நோக்கி எழுதுபவர்களுக்கே இந்த இலக்கியச் சமர்க்களம் தேவைப்படுகிறது. ஏனெனில் எழுதுபவர்களும் படிப்பவர்களும் அவர்களாகவே மாத்திரம் இருப்பதால்.

தோழர்
சண்முகநாதன்



ஒரு சிரிப்பு. அல்லது ஒரு சிறிய தலையசைப்புடன் மாத்திரம் இலக்கியக் கூட்டங்களுக்கு வந்துபோகும் சண் அண்ணா அண்மையில் எனக்கு எழுதித்தந்த  பதிவில் வருகின்ற சிறிய பகுதி இது.

கடந்த காலங்களில் மிகுந்த சலிப்புற்று அவற்றிலிருந்து எதையும் எழுதுவதற்கு விருப்பமற்று ஆனாலும் சமூகத்தின் அசைவியக்கங்களினை தவறாது உற்று நோக்கிவந்த ஒருவர் அவர்.

இடதுசாரி சிந்தனைகளின் வழி நின்று அவர் செயற்பட்ட காலத்தை அவர் வாயிலாகப் பெற்றுவிடவேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கிருந்தது. நாம் அறியாத பல கதைகைளை அவர் அவ்வப்போது சொல்லியிருக்கிறார்.

"நீங்கள் அதனை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அல்ல கட்டாயம் இருக்கிறது" என்பதனைச் சொல்லி அவருடன் இறுக்கமாகத் தர்க்கம் செய்திருக்கிறேன்.  அதற்கும்  ஒரு சிறிய சிரிப்புடன் என்னைக் கடந்து போவார்.
இப்படியே நீங்கள் சும்மா இருக்கமுடியாது என்று சீண்டும் போது...

"சும்மா இருப்பது என்பது சும்மா இருத்தல் அல்ல" என்ற மறுமொழி ஒன்றை பதிலாகச் சொல்லி சும்மா இருத்தல் என்பது குறித்த கவிதை ஒன்றை ஒரு கூட்டத்தில் வைத்து என்னிடம் தந்திருந்தார்.



ஆனாலும் தனது கடந்த காலத்தை பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் அவர் தனது வரலாற்றைப் பதிவு செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

மானசீகமான இடதுசாரியாக சமூக சிந்தனையாளனாக செயற்பாட்டாளனாக இருந்த தோழர் சண் அவர்களின் திடீர் மரணம் மனதளவில் பலரை உருக்குலைய வைத்துவிட்டது.

ஒரு காலத்தின் கதைகள் கைகளில் இருந்து நழுவிவிட்டது.

மரணம் பல கதைகளை எழுதவிடுவதில்லை.

Wednesday, 16 December 2015

பக்கத்தின் பக்கம்.- அசிங்கம்


வீணான பக்கம்....

கற்சுறா

அண்மையில் எனது பெயரைப் பயன்படுத்தி மாமூலன் என்ற வின்சனாலும் நடராஜா முரளிதரனாலும் முன்வைக்கப்பட்ட கொச்சைப்படுத்தல்கள் முகநூலில் கடந்த இரண்டுநாட்களாக எழுதப்பட்டிருக்கிறது. 




அந்தக்காலத்தில் இதைத் தேனீயில் எழுதியது யார்? கனடாவில் இருந்து வந்த அந்த மின்னஞ்சலைத் தகவல் அறியும் சட்டத்தில் தரமாட்டேன் என்கிறது தேனீ!

இதுதான் அது.

( விபரம் தேவையானவர்கள் - இடப்பட்ட பின்னூட்டம் வாசிக்கவேண்டியவர்கள் மாமூலன் வாடி என்ற அவனது பக்கத்தில் போய்ப்பார்க்கவும்)


ஆரம்பத்தில் பெரியமீன் கனடாக் கடல்மீன் என்று ஜாடைகாட்டி என்னை அடையாளப்படுத்தினாலும் அவை இறுதிவரை எங்கு செல்கின்றது என்றே நான் வேடிக்கைப் பார்த்தேன்.

இது வெறும் ஊகங்களால் கொண்ட ஒருவகை ஐயப்பாடு என்று அதனை விட்டுவிடமுடியவில்லை. இல்லை எனது “அல்லது இயேசுவில் அறையப்பட்ட சிலுவை” என்ற நூல் வந்ததின் வெளிப்பாடு என்றும் விட்டுவிடமுடியவில்லை.

எனது நூலையும் சேனனது லண்டன்காரரையும் காலம்  செல்வம் எப்படி செய்யமுடிந்தது என்பது இவர்களுக்கு ஒருபக்கக் கேள்வியாக இருந்தாலும் இரண்டு பக்கத்தால் இவர்கள் தனித்தனியே ஓட்டிய வண்டியின் பாதை அண்மையில் மூடுப்பட்டுவிட்டது என்பது பெரிய மன உழைச்சலுக்கு அவர்களை உள்ளாக்கிவிட்டிருக்கிறது என்பதனையே என்னால் தெளிவாக உணரமுடிகிறது.( பாதை மூடப்பட்ட காரணம் பின்னர் விரிவாக எழுதுவேன்)

தற்போதைய இந்தப் பதிவிற்கு முன்னரான இவர்கள் இருவரது பதிவுகளையும் நோக்குபவர்களுக்கு  அவர்களின் ஆழ்மன உளைச்சல்களையும் அந்த உளைச்சல்களால் இவர்கள் அவதிப்பட்டுத் திரிவதையும் இலகுவில் ஒருவர் இனம்கண்டு கொள்ளமுடியும்.


ஏதாவது ஒரு விடையம் குறித்த தமது சந்தேகங்களை ஒருவர் எழுப்புவது நியாயமானதே. ஆனால் இவர்களோ அந்தச் சந்தேகங்களுக்கு பலருடைய பெயர்களை எந்தவித சிறிய ஆதாரங்கள் கூட இல்லாமல் பதிவுசெய்கிறார்கள். பின்னர் அப்படி இல்லை என்றானபோது அதற்குரிய வெட்கமோ கவலையோ படாமல் ஒரு சிறிய வருத்தம் ஒருசின்ன மன்னிப்புக் கோருதல் எதுவுமற்று தமது ஓட்டப்பந்தயம்(சவாரி) முடிந்தது என்று ஒரு அயோக்கியனின் குரலில் அறிவிக்கிறார்கள். 

ஒரு சமூக நோக்கம் கொண்டவனது செயல் ஒருபோதும் இப்படியிருக்க முடியாது.

போதியளவு ஆதாரம் இல்லாதபோது இலக்கியத்திலும் அரசியலிலும் இப்படி சிலேடைகள் பாவிப்பது வழமை என்று நடராஜா முரளிதரன் எழுதுவது எதனது வழித்தொடர்ச்சி?

பல்லாயிரம் மனிதர்களை தவறான  ஐயங்களுடனும் தவறான தடயங்களுடனும் கொலைசெய்த தொடர்ச்சியல்லாமல் வேறென்ன இது?
அந்தக்கொலைகளுக்கு ஒருசிறு வருத்தம் கூடப்படாத வக்கிரக் குணத்தின் தொடர்ச்சி இலக்கியம் என்ற பெயரில் இப்போது தொடருவது அயோக்கித்தனமானது.

புலிகள் கோலோச்சிய காலங்களிலும் ஏன் அவர்களின் கடைசிக் காலங்களிலும் கூட நடராஜா முரளிதரன் என்பவனை நான் என் அருகில் விட்டதும் இல்லை. கண்டுஒரு சிறு புன்னகை செய்தது கூட இல்லை. மனித வதையின் தொடர்ச்சி ஒன்று அவன் முகம்மீது எனக்கு இருந்தது. ஆனால் பாரீசிலிருந்து என்னுடன் மிக நெருக்கமாக இருந்த வின்சன்ட் என்ற மாமூலனின் தொடர்பினால் அவன் என்னிடம் நெருங்கினான். அது அவனுக்கு மிகச் சாதகமாக இருந்தது. சிவதாசனின் காரியாலயத்தின் வெளிவாசலில் வைத்து அவனை முதலில் சந்தித்தபோதே சொன்னேன் சபாலிங்கம் கொலை குறித்து உன்மீது இருக்கும் சந்தேகம் எனக்கு இலகுவில் போய்விடாது என்று. ஆனாலும் எனது சந்தேகத்திற்கு அப்பால் அதனை உறுதி செய்வது கனடியப் பொலிசாரது கடமை என்றே இப்போதும் கருதுகிறேன்.

வின்சன்ட என்ற மாமூலன் எனக்கருகில் இருந்து  என்னையே அவதூறு செய்த சம்பவங்கள் மிக அதிகமுண்டு.

நான் கனடா வந்து எனது எழுத்திற்காக நான் எதிர் கொண்ட மிரட்டல்கள் மிக அதிகமானது. எனது குடும்பத்தின் நிலை காரணமாக நான் அதனை இன்றுவரை பேசாதே இருந்தேன்.

அவை இப்போது எழுதப்படவேண்டும் என்றே நினைக்கின்றேன். இவ்வளவு கெதியாக எழுதப்படத் தேவையானது என்று உண்மையில் நான் நினைத்திருக்கவில்லை. 

காலம் பத்திரிகை குறித்தும் செல்வண்ணை குறித்தும் அல்லது இயல்விருது குறித்தும் நான் எழுதியவை அதிகம். அண்மையில் 105.9 F.M  ரமணன் என்னையும் காலம் செல்வத்தையும் உரையாடலுக்காக அழைத்தபோது கூட காலம் பத்திரிகையை நான் என்னளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே சொன்னேன். அது கடந்த காலத்தைப் பதிவு செய்யவில்லை என்பதே எனது கருத்து. அந்தக் குற்றச்சாட்டை தனது இதழ்மீது நான் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்கு நன்கு தெரியும். 

நானும் அதீதாவும் சேர்ந்து வெளியிட்ட சிற்றிதழான “மற்றது” இதழ் 1 மற்றும் 2இலும் எல்லாவற்றையும் மிக வெளிப்படையாகவே பேசியிருப்போம். இந்த முரண்பாட்டுடனும் அதன் பின்னான ஒரு இலக்கிய மானசீக உறவுடனும் அவரை நான் எப்போதும் நெருங்கியே இருந்திருக்கிறேன்.

எமது இலக்கிய மோதலும் சரி அரசியல் மோதலும் சரி மிகவும் வெளிப்படையானது. நாம் புலிகளின் காலத்தில் அவர்களின் அரசியலை மொத்தமாக எதிர்த்து நின்று எழுதிய போது மட்டுமே கொஞ்சம் அவதானமாக இருந்தோம். ஆனால் எதையும் எழுதுவதற்குப் பயப்பட்டது கிடையாது. சபாலிங்கம் கொலைக்குப் பின் பாரீசில் அத்தனை இதழ்களும் நின்றபோது, வெளிப்படையாக புலிகளின் அராஜகத்தை எதிர்த்துத் எழுதத் தொடங்கியது எக்ஸில்.இதழ்

நாம் கொலைக்கருவிகள் சூழ்ந்திருக்க எழுதத் தொடங்கியவர்கள். பாரீசில் நாம் வெளியிட்ட எக்ஸில் பத்திரிகை எதிர் கொண்ட சவால்கள் மிகப் பெரிது.

இவை அத்தனையும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இத்தகை வெளிப்படையான செயற்பாடுகளை நோக்கி அசிங்கப்படுத்துகின்ற அயோக்கியத்தனத்தின் பக்கங்களை இனிவருங்காலங்களில் என்னால் வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளமுடியாது.

அனைத்தையும் எழுதத் தொடங்குகிறேன். இது உண்மையில் ஒரு அசிங்கத்தனமான பக்கம் தான் என்ன செய்வது? நண்பர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.  இவற்றைத் தலையில் கொண்டு திரிந்தபடி மறுபக்கம் புனைவு எழுதமுடிவதில்லை.

தயவு செய்து தேவையானவர்கள் மட்டும் வாசியுங்கள் மற்றவர்கள் தூக்கி எறிந்து விட்டு என்னைப் பொறுத்து மன்னியுங்கள்.

இப்போது டிசம்பர் மாதம் எனது வேலை கொஞ்சம் கடுமையானது. ஜனவரிமாதம்  இதனை விரிவாக எழுதத் தொடங்குவேன்.
வீணான பக்கமெனினும் இது எனது பக்கம் என்பதால் நான் அடுத்தவனுக்குக் கரைச்சல் கொடுக்கவில்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.

நன்றி



Sunday, 29 November 2015

"SPECIAL CAMP" இல் தமிழர்கள்


பாலன் தோழரின் நூல் குறித்த நிகழ்வு

கனடா- ரொரன்ரோ

கற்சுறா

எதையும் இலகுவாகக் கடந்து போய்விடலாம் என்பது இனிவருங்காலங்களில் பெருத்த சாத்தியமாகாது என்றே எண்ணுகிறேன். எங்களது பழி எங்களை ஒருபொழுதும் நிம்மதியாகப் படுத்துறங்க வைக்கப்போவதில்லை. நாங்கள் இறைதூதர்கள் என்ற கனவும் விடுதலையின் புதல்வர்கள் என்ற கனவும் மட்டும் சமூகத்தின் அடுத்த நகர்வுக்குப் போதுமானதாக ஒருபோதும் இருந்துவிடாது.
நமது சமூகத்தின் பெயரில் நமது தேசத்தின் பெயரில் நாங்கள் செய்த அநியாயங்களை எங்களுக்குள் நினைத்து, அதற்காக ஒருதுளியும் வெட்கப்படாமல் அந்தக் குற்ற உணர்வில் நாங்கள் குறிகிப் போகாமல் அதன் காரணத்தினை மிக விசாலமாக எங்களுக்குள் விவாதிக்காமல் எதிர்காலத்தில் நாம் ஒரு அங்குலமும் நகரமுடியாது என்றே எண்ணுகிறேன்.
இன்று கனடாவில் நடைபெற்ற பாலன் தோழர் அவர்களது சிறப்புமுகாம் நூல் அறிமுகக் கூட்டத்திற்குச் சென்றேன். நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை நடாத்திய நண்பர்களுக்கு நன்றிகள். நாம் நமது இலக்கியக் கூட்டங்களில் நமது அரசியற்கூட்டங்களில் காணாத முகங்கள் நிறையவே வந்திருந்தனர். மிகச் சந்தோசமாக இருந்தது.
நிகழ்வில் பாலன் தோழர் தனது நூலில் குறிப்பிட்ட அந்த சிறப்பு வதைமுகாமில் இருந்து வந்த நண்பர் மார்க் அன்ரனி,  உசா( நாடுகடந்த தமிழீழம் பிரதிநிதி) ஜோன் ஆர்கியூ(அம்னெஸ்டி இன்னடர் நசனல் கனடா), பேராசிரியர் சேரன், இந்திய அகதி முகாமில் நீண்டகாலம் இருந்த நண்பர் கணன் சுவாமி, அதே முகாம்களில் சிலகாலம் இருந்த நண்பர் த. அகிலன் என்போர் சிறப்புரை ஆற்றினார்கள். மிக அதிகமான தகவல்கள், இந்திய சிறப்பு முகாம்களின் கொடுமைகள் என்பன அவர்கள் பேச்சின் மூலம் வெளிக் கொண்டுவந்தார்கள்.



உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாமில் மட்டுமல்ல எந்த நாட்டுச் சிறப்பு முகாமில் யார் இ\ருந்தாலும் அவர்களை விடுதலை செய்யக் கோருவது மட்டுமல்ல நமது தேசத்துஅரச சிறைகளில், உலக வதைமுகாம்களில் உள்ள கைதிகளையும் விடுதலை செய்யக் கோருவது நமக்கு முன்னுள்ள முக்கிய பணி.
இந்த விடையத்தில்  அதே சிறப்பு முகாமில் எட்டுவருடங்களாக தனது வாழ்க்கையைக் கழித்து சித்திரவதைகளை அனுபவித்த பாலன் தோழரது மனம் அதன் முற்றுகையை அதனது முடிவைக் கோருகிறது. இது மிகவும் வரவேற்கப்படவேண்டியது. பாலன் தோழர் தனக்குள்ளால் அந்த முகாமின் தடயங்களை நமக்குத் தெரிவிக்கிறார்.
இன்றைய பேச்சாளர்களது பேச்சிலிருந்து எனக்கென்னவோ இந்த முகாமில் இருப்பவர்கள் பெரிய பாக்கியவான்கள் என்றே என்னால் நினைக்க முடிந்தது. அந்தச் சிறப்புமுகாமில் எவ்வித வன்முறைகள் நிகழ்கின்றன இந்திய அரசு அவர்களுக்கு என்ன செய்கிறது என்ன செய்யவில்லை என்ற தகவல்களோடு அங்கே எத்தனை பேர் வாழ்கிறார்கள் அவர்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை அறியும் மிக அதிகமான புகைப்படங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அங்கே வாழ்பவர்களுடன் வெளியிலிருந்து மற்றவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய வசதிகளும் இருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.
ஆனால் பாருங்கள் நண்பர்களே உலகில் உள்ள எந்த வதைமுகாம்களையும் விட, மிக மோசமானதாகச் சுட்டப்படும் குவான்டநாமோ வதைமுகாமையும் விட மோசமான ஒரு வதைமுகாமை நமது ஈழத்தமிழினம்( ஆம் ஈழத்தமிழினமே) துணுக்காயில் வைத்திருந்தது. இது ஈழத்தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.
உலகில் உள்ள வதைமுகாம்கள் எல்லாம் நிலத்திற்கு மேலே வைத்திருக்க நமது தேசமோ நிலத்திற்குக் கீழே வைத்திருந்தது. இன்றைய நிகழ்வில் பேசிய நண்பன் அகிலன் தமிழகத்தில் தன்னை வைத்திருந்த முகாமின் கூரையில் ஒரு  ஓட்டை இருந்தது என்றார். ஆனால் அவர் முன்னர் வாழ்ந்த வன்னியில் ஓட்டையே அற்ற வதை முகாம் ஒன்று இருந்தது. (மன்னிக்கவேண்டும் அகிலன்)அது துணுக்காயில் இருந்தது. அது பதின்மூன்று நிலக்கீழ் அகழிகளைக் கொண்டது. அங்கே மூன்று ஆண்டுகளாக ஒரு நாளுக்குமுன்நூறுபேருக்கக் குறையாமல் அவை எப்போதும் நிறைந்திருந்தன என்பது வரலாறு. அங்கே இருந்து தப்பியவர்கள் ஒரு சிலரே. அந்த வதைமுகாம் குறித்த படங்கள் யார் கையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தன என்பது யாருக்கும் தெரியாதவை. வெறும் கதைகளாக மட்டுமே அவை எம்மிடம் உள்ளன. இறுதிவரை அது மர்ம வதைமுகாமாகவே இருந்தது. அதுகுறித்து அங்கிருந்த கைதிகளும் அந்த ஊர் மக்களுமே அறிவார்கள்.
ஈழத்துக் கவிஞர் செல்வி உட்பட பல முக்கியமானவர்கள் அங்குதான் இருந்து கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்கள் தப்பியவர்கள் மூலம் மட்டும் நமது இனத்திற்குக் கிடைத்த எஞ்சிய தகவல்கள். மூன்றாண்டு காலத்தில் ஏறக்குறை ஐயாயிரம் பேர் அங்கு வைத்து காவுகொள்ளப்பட்டவர்கள் என்பது ஒருகணிப்பாக இருக்கிறது.

இன்னும் தன்னைப்பற்றிய கணிப்பீட்டினை தன்னளவில் கூட செய்யமுடியாத ஒரு இனமாக நமது இனம் இருப்பதால் உண்மைகள் இலகுவில் கண்டடையமுடியாதவைதான்.

எனினும் நாம் இழைத்த அதே குற்றங்களை இன்னொரு பகுதி இன்று நமக்கு வேறு ஒரு தளத்தில் செய்கிறது. ஆனால் நாம் அவர்களை இலகுவாகக் குற்றம் சாட்டுகிறோம். அவர்களை நோக்கிக் கையை நீட்டுகிறோம் எந்த வெட்கமும் இன்றி.
நாம் செய்த குற்றங்களை நாம் மறந்து விட்டோமா? நமது இனம் துணுக்காயில் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை ஓடியபோதும் விசுவமடு வட்டுவாகல் ( நன்றி அகிலன்) வரை அதீத வதைமுகாம்களை வைத்திருந்தனர். அங்கே அடைக்கப்பட்டவர்கள் யாருமே மீண்டதாக வரலாறு இல்லை.
தான் செய்த குற்றத்திற்குரிய பாவமன்னிப்பினை தனக்குள் நிகழ்த்தாதவன் மற்றவனுடைய பாவத்தைப் பற்றிப் பேச தகுதியற்றவனாகிறான் என்று நான் தெரிவித்தபோது. தயவு செய்து இந்த நிகழ்வு குறித்து உரையாடுவது முக்கியம் நாம் அதற்குள் இருந்தே நமது கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுவோம் என்று தலைவர் தொடக்கம் அங்கிருந்தவர்கள் பலர் கருத்துக்களைத் தெரிவித்த்தார்கள்.
பலர் பழயதைப் பற்றி ஏன் பேசவேண்டும். அவை முடிந்து போனவை. அதுபற்றி ஏன் இன்று பேசவேண்டும் என்றும் கருத்து வெளியிட்டார்கள். எனக்கு இதுவே மிக மிக ஆபத்தானது எனத் தோன்றுகிறது. ஒரு ஈழத்தமிழனாய் குவான்டநாமோ சிறை குறித்து பேசமுன் நாசிகளின் வதைமுகாம்கள் குறித்துப் பேசமுன் எனக்கு ஈழத்தமிழன் வைத்திருந்த துணுக்காய் வதைமுகாம் பற்றி பேசவேண்டும் என்றே கருதுகிறேன். அப்படியொரு வதைமுகாமை வைத்திருந்ததற்காக முதலில் தன்னளவில் அவன் வருந்தவேண்டும் என்றே விரும்புகிறேன். 

தான் இழைத்த தவறில் இருந்து தன்னை விடுவிக்க இந்த சமூகம் தயாராக இல்லாத போது எந்த சமூகத்திற்கான விடுதலையையும் அதனால் ஒருபோதும் பூரணமாக விளங்கிக் கொள்ளவே முடியாது. அது போலியானது . அது ஆபத்து நிறைந்தது. தன்னுடைய வரலாற்றிலிருந்து தன்னுடைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இனமாகப் போய்விட்டது நமது இனம். 

இது தனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்குள் அசிங்கமான சித்திரவதை முகாம்களையும் கொடூரமான சிறைச்சாலைகளையும் திரும்பவும் உருவாக்கக் காத்திருக்கும் என்ற சந்தேகம் வந்துகொண்டேயிருக்கிறது. 

தமிழகத்துச் சிறப்பு முகாம் முடிவு அல்லது மூடு என்ற பாலன் தோழரது  வேண்டுகோளை அழுகிய தமிழ்த்தேசியம்  தன்கையில் எடுத்தால் அது தோற்றே போகும். அப்படியே தொடரும்போது அது அங்கு வதைபடும் மக்கள் மீதான கருணையற்ற செயலாகவே அமையும். அதை மட்டுமாவது விளங்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே.

நிகழ்வு முடிந்து வெளியில் வரும் போது என்னுடன் சிலர் பேசினார்கள். ஆனால் அங்கு என்னுடன் பேசிய உசா அவர்கள் தனக்குத் துணுக்காய் வதைமுகாம் பற்றி தெரியாது. நான் அறியவேயில்லை தம்பி எனச் சொன்னதே இன்னும் பயமாக இருந்தது.
இந்த நூலை எழுதிப் பதிவுசெய்த பாலன் தோழருக்கும் நிகழ்வை நடாத்தியவர்களுக்கும் உரையாற்றிய நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்
.

Tuesday, 17 November 2015

பக்கத்தின் பக்கம் - பாரீசில் சாரு

கற்சுறா

சாரு என்ற அயோக்கியனைப்பற்றி என்வாழ்நாளில்  ஒருபோதும் எழுதக்கூடாது என்றே எண்ணுவேன். அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.  

அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்காக எ\ழுதுகிறான் என்று எப்போதோ அவனுக்கு அருகில் இருந்தவர்கள் சிலர் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கும் அது வெட்கமாய் இருக்கும். 

அந்த அயோக்கியனால் இலக்கியம் என்ற மிகப்பெரிய சுத்துமாத்தினால் மிக இலகுவாக ஏமாற்றப்பட்டவர்களாக அவர்கள் இருந்தவர்கள். அப்படியானவர்களில் நானும் எனது பாரீஸ் நண்பர்கள் சிலரும் அடக்கம். அந்த ஏமாற்றத்துடனும் வெட்கத்துடனும்தான் அவன் குறித்து எழுதவே வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதை கட்டாயம் எழுத வேண்டும் என எண்ணி எழுதவில்லை. இப்படியே விட்டால் பிற்காலத்தில் சிலவற்றை சம்பவங்களை மறந்து போவேன் என்ற காரணத்தால் நேரம் வரும் வேளைகளில் பதிந்து வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அவ்வளவுதான்
இதனை எழுது என்று கரைச்சல் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.


கதை 1

கதையின் தொடக்கத்தில் நான் முடிவை எழுதுகிறேன்.

பாரீசில் அவன் எங்களுடன் சில காலங்கள் இருந்துவிட்டு அன்று தமிழ்நாடு திரும்புகிறான்.

பாரிசில் இருந்த காலங்களில் அதிகமான நாட்களை அதிகமான நாட்கள் என்ன அவ்வளவு காலமும் எனது வீட்டிலேயே தங்கி நின்றான். அவன் வந்த ஆரம்ப காலங்களில் ஒரு இலக்கிய சேவகனுக்கு எழுத்தாளனுக்கு அப்படியிருக்கின்ற எமது நண்பனுக்கு தோழனுக்கு என்று நாம் என்னவெல்லாம் செய்வோமோ அவற்றையெல்லாம் மனசாரச் செய்தோம். ஆள்மாறி ஆள் மாறி அவனைத் தாங்கினோம். நண்பன் சோபா,  சுகன், ஸ்ராலின்  தேவதாஸ் என்று பாரீஸில் அவனைத் தாங்கிப் பிடிக்காத நண்பர்கள் இல்லை. போகும் வரும் இடங்களில் படம் எடுக்க வேண்டும் என்று நண்பன் சுகன் ஒரு கமராவைக்கூட  யாரோ ஒருவரிடம் கடன் வாங்கி அவன் கையில் கொடுத்தான். சில வேளைகளில் அருகில் நாம் இல்லாது இருந்தால் தனியே அந்தரிக்கப்படாது என்று அவனது கையில் நானும் சோபாவும் 200பிராங்கும் கொடுத்தோம். அதிகமான இடங்களை மறைந்த தோழர் புஸ்பராசாவின் காரிலும் எனது காரிலும் அவனை ஏற்றித் திரிந்து காண்பித்தோம். அற்புதமான பாரீஸ் நகரின் அத்தனை அழகையும் அவ|னுக்கு இவ்வாறுதான் காட்டினோம் என்றே நினைக்கிறேன்.

அன்று அவன் தமிழ்நாடு திரும்பும் நாள். முதல் நாள் நண்பர் அரவிந் அப்பாத்துரை வீட்டில் நிகழ்ந்த பார்ட்டியில் பங்கு கொள்கிறோம்.  அதிகாலை வரை அப்பாத்துரையின் வீட்டிலிருந்து அவனை கிளப்பிக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில தினங்களாக அவன் தந்த துன்பம் எம்மை சந்தேகம் கொள்ள வைத்தது. அவனை எப்படியாவது  அனுப்பித்தொலைக்க வேண்டும் என்பதே எல்லோரது நோக்கமும். நண்பர் அரவிந் அப்பாத்துரையும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் தனது தந்தை சுகவீனமாக இருக்கிறார் அவருக்கு கொடுத்து விடும்படி அன்றிரவு 2000பிராங் பணத்தையும் அன்று அவனிடம் கொடுத்திருந்தார்.
அதிகாலை எனது வீட்டிற்கு வந்து படுத்தவன் எழுந்திருக்கவேயில்லை ஒரு கிழமையாக செய்த சொப்பிங் பொருட்கள் ஹோல் எங்கும் பரவியிருக்கிறது. எதையும் சூட்கேசுக்குள் அடுக்கவில்லை. மதியம் விமான நிலையத்தில் நிற்க வேண்டும். நான் உடனேயே சோபாவுக்கு போன் பண்ணினேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே நீ வா என்றேன். அரை மணி நேரத்தில் சோபா வந்தான். தன்னை ஒரு மணி நேரத்திற்குள் 1000 பக்கங்களை  எழுதச் சொல்லுங்கள் எழுதித் தருகிறேன் என்னால் இவற்றை அடுக்க முடியாது என்றான் சாரு. நாம் மனதிற்குள் சிரித்தோம். இங்கேயே நின்று விடுவானோ என்று எமக்கு மேலதிகமாகப் பயம் பிடித்தது. இல்லை சாரு எப்படியும் பைகளை அடுக்க வேண்டும் என வற்புறுத்தி சோபா சொல்லி அடுக்கினான். நான் பிறேம் ரமேசுக்கும் மாலதி தாபிதாவுக்கும் கொஞ்ச பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். வாங்கும் போது இவன் மீது வந்த சந்தேகத்தில் எதையெல்லாம் அவர்களுக்கு வாங்கினேனோ அதையெல்லாத்தையும் இவனுக்கும் வாங்கினேன். எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டுவிமான நிலையம் புறப்பட்டோம். சுகன் தான் கடன் வாங்கிய கமரா எங்கே என்றான் அதனை எனது வீட்டில் வைத்துவிட்டதாகச் சொன்னான். விமான நிலையத்தில் சூட்கேசுகளைக் கொடுத்ததும் ஓவர் லக்கேஜ் என்றார்கள். உடனேயே நாங்கள் பைகளில் வெயிட்டின் அளவைக் குறைப்பதற்காக பைகளைப்பிரித்து பொருட்களைக் குறைத்தோம். சந்தையில் வாங்கிய பச்சைமிளகாய் உட்பட அதற்குள் இருந்தது.  அப்படியான பல பொருட்களை எடுக்க வேண்டிவந்தது. அதற்குள் ஒளித்து மறைத்த சுகனது கமராவையும் எடுத்துவிட்டு அனுப்பினோம்.
இமிக்கிறேசன் அதிகாரிகளைக் கடந்து அவன் கையைக் காட்டிச் சென்றதும் இந்தமுறை ஆள்மாறி வந்திட்டுது அடுத்தமுறை எப்படியாவது ஸீரோ டிகிரி எழுதியவனைக் கூப்பிட வேண்டும் என்றான் சோபாசக்தி.
தமிழ்நாடு சென்று பிரேம் றமேசினது பொருட்களையோ அல்லது அரவிந் அப்பாத்துரையின் பணத்தையோ அவன் கொடுக்கவேயில்லை.
அவன் தொடர்ந்தும் எங்களைப்பற்றி தவறாகவே எண்ணிவைத்திருக்கிறான். 

கதை2 
நேரம் கிடைக்கும் போது



Saturday, 7 November 2015

தராசில் கவிதை.



அப்பா…
என்னப்பா – எங்கேயப்பா?

காணும் பொத்தும்.

உமது மூளையை தராசிலிட்டால்
மறுதட்டில் எது?
நிறுத்தமுடியாது
மேலும் கீழும்.

சீசோ அப்- பன் சோ.

இல்லை-யப்பா
விரலால் நாக்கைப் பொத்தி
முன்னால் நிற்பவனது
கண்ணையும் பொத்தும்.

தராசில் வைத்தால் ஆடவேணாமா கவிதை?

கற்சுறா



Tuesday, 29 September 2015

என்.கே ரகுநாதனுடன் இருத்தலும் உரைத்தலும்.

 நிகழ்வு குறித்த சிறு பதிவு:

கற்சுறா



ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற ரகுநாதன் அவர்களது தன்வரலாற்று நூலை முன்வைத்து அவருடன் இருந்து ஒரு உரையாடலை தேடகம் அமைப்பினர் 27 செப்டம்பர்2015இல் 
நாடாத்தினார்கள். 


நிகழ்வினை தோழர் சீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். ரகுநாதன் ஐயா அவர்கள் தனது உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கூட்டம் முடியும்வரை அமர்ந்திருந்தார்.

தொடர்ந்து எம்.சியின் மகன் சந்திரபோஸ், க.நவம், பாக்கியநாதன், பேராதரன், யோகராஜா ஆகியோர் உரையாற்றினார்கள்.







அவர் தும்பளை சிவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற போதுதான் ஒரு போராளியாக மாறினார் என்றும் மற்றப் பிள்ளைகளுடன் சேர்க்காமல் பின்வாங்கிலில் அதுவும் தனிவாங்கிலில் இருந்து கல்வி பயில வைக்கப்பட்டவர் அந்தப்பாடசாலையில் அதிவிசேட சித்தி எய்தி எல்லாப் பிள்ளைகளைவிடவும் சிறந்த மாணவன் என்ற தகமையைப் பெற்றார் என்று தனக்குத் தெரிந்த ரகுநாதன் குறித்து ஞாபகக்குறிப்புக்களை சந்திரபோஸ் அவர்கள் சொல்லிச் சென்றார்.


ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின்கருக்கு,’  கே.. குணசேகரனின்வடு,’  ராஜ்கௌதமனின்சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.



ஈழத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் எழுதியசூரன் சுயசரிதை,’  2001இல் டொமினிக் ஜீவா எழுதியஎழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்,’  2004இல் என்.கே. ரகுநாதன் எழுதியஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி,’  2005இல் இலங்கையன் செல்வரத்தினம் எழுதியவாழ்வும் வடுவும்,’  2011இல் தெணியான் எழுதியஇன்னும் சொல்லாதவை,’  அதேயாண்டில் யோகரட்ணம் எழுதியதீண்டாமைக் கொடுமைகளும் தீமூட்டிய நாட்களும்,’  2013இல் தெணியான் எழுதிய இன்னொன்றானபூச்சியம் பூச்சியமல்லஎன்பன ஒடுக்கப்பட்டோரது தன்வரலாற்று நூல்கள் என்ற தகவலோடு
சாதி என்பது இன்னும் அழிந்து விடவில்லை ஈழயுத்தகாலத்தில் எப்படி ஈழத்தில் சாதி காப்பாற்றப்பட்டது. வெளிநாடுகளில் இன்னமும் எப்படி சாதி காப்பாற்றப்படுகிறது  என்று அதிகமான சப்பவங்களைப் பட்டியலிட்டு க.நவம் அவர்கள் பேசினார்.




கையைக் காலை அடித்து முறிக்கும் கூட்டத்திற்குள் இருந்து மிகத் துணிவாக கந்தன் கருணை என்ற நாடகத்தை எழுதியவர். தாய் நாவலில் வந்த பெலகேயாவின் பாத்திரத்தோடு தனது தாய் வள்ளியை ஒப்பிடும் ரகுநாதன் அவர்களின் மனம் மிக அற்புதமானது என்றும் இந்த நாவல் மற்றய இலக்கிய நயம் கொண்ட கதைகளைப் போல் வாசிக்க முடியாது. இது எங்களது வலிகளைச் சொன்னகதை. எங்களது அசிங்கங்களைச் சொன்ன கதை என்றும் பேராதரன் குறிப்பிட்டு ஆசியாவின் முதல்தரமான நூலகம் எங்களிடம் இருந்தது. அங்கு தான் அதன் கோடியில்தான் இடுப்பில் காவோலை கட்டிக் கொண்டு ஒரு சமூகம் தனது சமூகத்தையே தெருவில் நடக்கவைத்து அவமானப்படுத்தியது. இந்த அசிங்கங்களைக் கொண்ட சமூகத்திற்கு ஆசியாவின் முதற்தரமான நூலகம் இருந்தாலென்ன எரித்தலென்ன என்று தார்மீகக் கோபத்துடன் பேசினார்.





ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை என்ற அருமையான பெயர் கொண்ட நாவல் என்று தனது பேச்சைத் தொடங்கிய பாக்கியநாதன் அவர்கள்.கிழக்குக் கடற்கரையிலிருந்து தொண்டமானாறுவரையான பகுதியில் வராத்துப்பளை தொடங்கி சந்தாதோட்டம், மாயக்கை,சுளகுகட்டி,அல்லாய் வடக்கு, அல்வாய் தெற்கு, வேர்குத்தி, வதிரி, கொற்றாவத்தை, நவிண்டில், சமரபாகு, இலந்தைக்காடு தொண்டைமானாறு வரையான 3மைல் அகலமும் 10மைல் நீளமும் உள்ள வரண்ட எதுவுித பயிர்களும் வளர்கமுடியாத கட்டாந்தரைப்பிரதேசங்களில் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வாழத் திணிக்கப்பட்டார்கள். இங்குள்ள மக்களின் கதைகளைச் சொன்ன ரகுநாதன் அவர்கள். தனியே இரண்டு மூன்று கிராமங்களை மட்டும் தனது நாவலில் முன்நிறுத்தி கதையை முடித்துள்ளார். என்று குறிப்பிட்டார்.




ரகுநாதன் என்ற ஒரு போராளி இந்த நாவலில் தவறிப் போனார் என்று தனது உரையைத் தொடங்கிய யோகராஜா நாவல் முழுவதும் வாசிக்கும் போது ரகுநாதன் என்ற போராளி தொலைந்து விட்டான் என்றும் அவருடைய வாழ்வில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது அவருடைய கலப்புத் திருமணம். அதைச் செய்யத் துணிந்த ரகுநாதன் தன்னுடைய தன் வரலாற்று நூலில் அதுகுறித்து மொனமாகக் கடந்து போயிருப்பது மிகவும் கவலைக்குரியது. ரகுநாதன் அவருடைய சாதிக்காரர்களால் திருமணத்தின் பின் ஒதுக்கிவைக்கப்பட்டார். அதிலிருந்து தன்னை மீட்பதற்காக அதனைக் குறிப்பிடாது இந்த நாவலை எழுதியிருக்கிறாரோ என்று என்னைச் சந்தேகப்படவைக்கின்றது. என்றும் குறிப்பிட்டு ரகுநாதனின் மைத்துனர் பசுபதியின் கவிதைகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.




நிகழ்வின் இறுதியில் ரகுநாதனின் மகன் ஜெயா இந்த நிகழ்வு, உடல்நலம் குன்றியிருக்கும் தன்னுடைய தந்தைக்கு கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுக்கும் அவரைத் திரும்பவும் எழுதத் தூண்டும் என்று குறிப்பிட்டு நிகழ்வை நடாத்திய தேடகம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.








கலந்துரையாடலின் பின்னர் ஓவியர் றஸ்மியினால் வரையப்பட்ட ரகுநாதன் அவர்களது ஓவியத்தை ரகுநாதன் அவர்களிடம்  தேடகம் அமைப்பினர் சார்பில் தோழர் மாற்கு அவர்கள் கையளித்தார்.


ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி
வெளியீடு: உயிர்மெய்/ கருப்புப் பிரதிகள்.
Kaptein Linges 9a
6006 Aalesund
Norway
email: banu.nor@gmail.com

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...