ஒருவர் நோர்வேயில் வாழும் என்.சரவணன் மற்றயவர் தமிழ்நாட்டில் வாழும் பேராசிரியர். அ.ராமசாமி.
சரவணனுடைய “புகலிட இலக்கிய சந்திப்பு : இருப்பின் இரகசியம்” என்ற கட்டுரை “நமது மலையகம்” என்ற அவரது இணையத் தளத்திலும் அ.ராமசாமி அவர்களது “இமிழ் சிறுகதைகள் உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள்” என்ற கட்டுரை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “நீலம்” என்கிற கலை இலக்கிய அரசியல் இணையத் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டியவர்கள் அங்கே சென்று முழுமையான கட்டுரையைக் கவனியுங்கள்.
51வது இலக்கியச் சந்திப்பு நிகழ்வு குறித்தும் அங்கே வெளியிடப்ட்ட இமிழ் தொகுப்புக் குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் எதையுமே கவனியாததுபோல் எழுதப்பட்டதோடு மட்டுமல்லாது அந்தத் தொகுப்புக் கொண்டுவரப்பட்டவிதம் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்கிய நெருக்கடியை மெல்லக் கழுவிவிடும்படியாகவும் எழுதப்பட்டிருக்கின்றன இந்தக் கட்டுரைகள் என்பதனை இலகுவில் யாரும் அடையாளம் காணமுடியும்.
சரவணன் அவர்கள் இந்தக் கட்டுரையை எதற்காக எழுதினார்? இலக்கியச் சந்திப்பு எங்கெல்லாம் நடைபெற்றது என்ற விளக்கத்துடன், தான் முதலில் கலந்து கொண்ட ஸ்ருட்காட் இலக்கியச் சந்திப்பு என்பதை எழுதி அடையாளம் காட்டியதுடன் இலக்கியச் சந்திப்பபுச் செயற்பாடு எவ்வாறானது என்றவாறாகச் சொல்லிச் செல்லும் போது
“இம்முறை பாரிசில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் குழப்புவதற்காகவே சிலர் கலந்து கொண்டிருந்தனர். இல்லாத சாதியப் பிரச்சினையை ஊதிப்பெருப்பிக்கிறார்கள் என்பதே அவர்களின் சாரம்சம். ஒருவர் கருத்து கூறி, அடுத்தடுத்து கருத்து கூறுபவர்களுக்கு வழிவிட்டு தமது அடுத்த கருத்தை வரிசையில் தெரிவிப்பதற்குப் பதிலாக; கூட்ட ஒழுங்கை மீறி அவர்கள் தொடர்ச்சியாக குறுக்கிட்டுக் கொண்டிருந்ததை கட்டுபடுத்த இயலாமல் போனதைத் தொடர்ந்து அங்கே சர்ச்சை எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பரஸ்பரம் உடன்படாத கருத்தாக இருந்த போதும் அவர்களுக்கு அங்கே கருத்தைக் கூறும் உரிமையை இலக்கிய சந்திப்பு மறுக்காது. ஆனால் அவர்கள் அந்த உரிமை துஷ்பிரயோகம் செய்வதற்காகவே வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனநாயக ஒழுங்குக்கு கட்டுப்பட முடியாத, அராஜக பாணியிலான அணுகுமுறையாளர்களாக அங்கே இருந்தார்கள். எனவே கலந்துனர்கள் அவர்களின் கருத்து சுதந்திரத்தை அல்ல அவர்களின் அற மீறலை எதிர்த்து கூட்டத்தை கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானார்கள். ஆனால் இலக்கிய சந்திப்பின் முடிவில் இந்த சம்பவம் இலக்கிய சந்திப்பின் அராஜகமாக வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.”
என்கிறார்.
இதுதான் அவருடைய கட்டுரையின் மையப் புள்ளி. மற்றும்படியான தகவல்கள் எல்லாமே அவ்வப்போதைய காலங்களிலர் இலக்கியச்சந்திப்புக் குறித்து பலரும் சொல்லி வந்த விடயங்கள்தான். அதன் செயற்பாட்டுவிதம்- ஒரு சந்திப்பிலிருந்து இன்னொரு சந்திப்புக் கைமாறும் விதம்- அங்கே இதுவரை பேசப்பட்ட விடயங்கள்- அது கைக்கொண்டு நகரும் ஜனநாயகத் தன்மை என்று பலர் அடையாளம் காட்டிய விடயங்களைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அத்தனை விடயங்களையும் அவ்வப்போதான காலங்களில் சிலர் தமது தற்குறித்தனத்திற்குள் இழுத்துச் சிதைத்துக் கொண்டதில் பலர் அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். சிலர் ஒதுக்கப்பட்டார்கள் என்ற கதையை ஒரு விபரிப்பாகத்தன்னும் சொல்லிவிட அவரால் முடியவில்லை.
இன்று சாதியில்லை என்று சொல்லி இலக்கியச் சந்திப்பிற்குள் வந்தவர்களைப் போல் யுத்தகாலத்தில் புலிகள் செய்வதெல்லாம் சமூகத்திற்குத் தீங்கானதேயில்லை என்றுதான் சொல்லிவந்தார்கள். அதற்கெதிராகப் பல இலக்கியச் சந்திப்புக்கள் தர்க்கரீதியில் செயற்பட்டு அவர்களை எதிர் கொண்டிருந்தது. நான் ஏற்கனவே பல இடத்தில் சொல்லி அடையாளம் காட்டிய 1992ம் ஆண்டின் பாரீஸ் இலக்கியச் சந்திப்பு அந்த வகைமாதிரிகளில் ஒன்று. ஆக இன்று சாதியப்பிரச்சனையே இல்லையென்று சொல்பவர்கள் சமூகத்தில் ஏராளம் பேர் இருக்கிறார்கள். அதனையும் விட சாதி என்பது பிரச்சனையேயில்லை . அது சமூகத்திற்குத் தேவையான ஒன்று. காட்டாயம் சாதி தேவை என்று சொல்பவர்களும் சமூகத்தில் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இன்னொருபுறம் சாதியில்லை. சாதியில்லை என்றுசொல்லிக் கொண்டு தன்னுடைய இலக்கியத்திலும் அரசியலிலும் மூச்சுக்கு முன்நூறு தடவை பேசிவரும் நமது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாதிப் புத்தியைக் காட்டிவிட்டான் என்று சாதி பேசிவரும் நிலையும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இலக்கியத்திலும் எழுத்திலும் சாதி அடையாளத்தை மிகக் கவனமாகக் கையாளும் சாதி மான்களையும் கொண்டுதான் இந்த சமூகம் இருக்கிறது. குழப்பவாதிகள் என்பவர்கள் எப்பொழுதும் எல்லாவடிவிலும் நுழைவார்கள். அது தனியே 51வது இலக்கியச் சந்திப்பில் மட்டும் நிகழ்ந்ததல்ல. நானறிய1992இலேயே நடந்தது. ஆனால் 51வது இலக்கியச் சந்திப்பின் செயற்பாடு அந்தக் குழப்பவாதிகளால் மட்டும் நாசமாகவில்லை. அதன் செயற்பாட்டாளர்களாலேயே முதலில் நாசமாகியது. அது 50வது இலக்கியச் சந்திப்பின் நடைமுறை குறித்த அவர்களது மவுனத்தினோடே தொடங்கியது. இதுகுறித்தெல்லாம் என். சரவணன் மவுனம் காப்பதும் கதை மாற்றுவதும் நல்லதொரு செயற்பாடல்ல.
இதைவிட இன்னும் ஒரு தடைதாண்டி அவர் எழுதுகிறார்,
“சகல விதமான பன்முகப்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்குமான ஜனநாயகக் களமாகவும் பேணப்படும் இலக்கிய சந்திப்பின் மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்கள் அதை ஒட்டு மொத்த இலக்கிய சந்திப்பின் மீதும் வைக்கும் போது; அவ்வாறு வைப்பதே ஒரு சுத்த அபத்தம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. இவ்வாறு விமர்சிப்பவர்களில் சிலர் ஏற்கெனவே இலக்கிய சந்திப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் இலக்கிய சந்திப்பின் மரபையும், இயல்பையும் அறிந்தவர்கள் என்பது தான் வேடிக்கை. எவரெவரெல்லாம் இலக்கிய சந்திப்புடன் தொடர்பறுந்து போனார்களோ அவர்கள் வசதியாக இத்தகைய விமர்சனங்களை வைப்பதன் உள்நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. தனி நபர்கள் மீது வைக்க வேண்டிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் இல்லாத “அமைப்பின்” மீது வைப்பது பகுத்தறிவற்ற அபத்தமே.
ஒரு முன்மாதிரியான சுதந்திர கருத்துக் களமாக தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலக்கிய சந்திப்பை பாதுகாப்பதும், பேணுவதும் தமிழ் சமுதாயத்தின் கடமையாகும்.”
என்கிறார். 50வதும் 51வதும் இலக்கியச் சந்திப்பின் செயற்பாட்டு நடைமுறை குறித்து விமர்சனங்களை முன்வைப்பது எப்படி ஒட்டுமொத்த இலக்கியச் சந்திப்பின் மீதான விமர்சனமாகும்? ஏற்கனவே இலக்கியச்சந்திப்புடன் தொடர்பிலிருந்தவர்கள் இலக்கியச் சந்திப்பின் இயல்பை அறிந்தவர்கள் 50மற்றும் 51வது இலக்கியச் சந்திப்பின் தற்குறித்தனத்தை அடையாளம் காட்டி நின்றால் அது எப்படி வேடிக்கையாகிறது இவருக்கு? இலக்கியச் சந்திப்புடன் தொடர்பறுந்து போனவர்கள் வசதியாக விமர்சனம் வைக்கிறார்கள் என்று விசனம் கொள்ளும் என். சரவணன் என்கிற இந்தப் பயல், யாருக்கு ஏன் தொடர்பறுந்தது என்றாவது சொல்ல வேண்டாமா? அவ்வாறு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பகுத்தறிவற்ற அபத்தம் என்று சொல்லும் அவர் அது எங்கே முன்வைக்கப்பட்டது என்ற பதிவை இடுவதுடன்,எப்படி அது பகுத்தறிவான அபத்தமாக இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டாமா? என். சரவணனின் உளறலுக்கும் ஒரு அளவிருக்க வேண்டாமா?
இலக்கியச்சந்திப்பின் மீது யார் என்ன விமர்சனம் வைத்திருக்கிறார்கள் என்று கோடு காட்டி அதற்கான எதிர்வினையை ஆற்றுவதுதானே சரியானது. நீங்கள் சொல்வதுபோல் இலக்கியச் சந்திப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் சொல்லுகின்ற பகுத்தறிவற்ற அபத்தமுடையோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். நோர்வேயில் நடத்தமுடியாது என்றுசொன்னதுடன் அதுகுறித்த எந்தவொரு உரையாடலையும் செய்ய மறுத்து தனியாக அனைலைதீவில் 50 இலக்கியச் சந்திப்பினை நடத்திய தமயந்தியும் அப்படித்தான் சொல்கிறார். பொது அடையாளத்துடன் கூட்டு உழைப்பாக இருக்க வேண்டிய இலக்கியச் சந்திப்பு மலரைத் தன்னுடைய தனித்த முடிவோடும் தன்னுடைய தடித்தனத்தோடும் கொண்டுவந்து காட்டி நின்ற சோபாசக்தியும் இலக்கியச் சந்திப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறார். ஆக, இலக்கியச் சந்திப்பின் இன்றை நிலைதான் என்ன?
இன்று இருக்கும் இலக்கியச் சந்திப்பின் நிலை குறித்துத் தேவையான ஒரு தீரமான உரையாடலைத் தவிர்த்து - மடை மாற்றிக் கதை சொல்ல வந்த தேவை குறித்து அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது. சரவணனின் இந்தக் கட்டுரை ஒன்றும் ஆபத்தானதில்லை என்று நினைத்துக் கடந்து போக முடியாதுள்ளது.கையில் சிராம்பு ஒன்றுதானே ஏறியது. அது ஒன்றும் செய்யது என்று கவலையீனமாகக் கடந்து போகக் கூடாது என்றே நினைக்கிறேன். சிராம்பு ஒரு சிறிய வலியை மட்டும் தருவதில்லை.
அடுத்தது, தமிழநாட்டிலிருந்து பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் நீலம் இதழில் எழுதுகிறார்.
என்கிறார்.
நம்மத்தியில் உருப்பெற்ற புகலிட இலக்கியம் - புலம்பெயர்ந்த இலக்கியம் என்ற வகைமாதிரிகளுக்கு இடையிலான வேறுபாட்டு உரையாடல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரால் அதனையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டினதும் அடையளம் காட்டலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. புலம்பெயர்ந்த இலக்கியம் என்பதனை புலம்பெயர்தோரின் எனக் குறுக்கிப் பார்க்கும் நிலை இருக்கிறது. என்கிறார். இதில் என்ன குறுகிப் பார்க்கும் நிலை? என்ன குழப்பம் இவருக்கு? புலம்பெயர்ந்தவர்களது இலக்கியந்தானே புலம்பெயர் இலக்கியம். இங்கே புகலிட இலக்கியம் என ஒரு வகை மாதிரியை அடையாளம் காட்டப்பட்டது. அவை இரண்டும் வேறு வேறு என்று சொல்லப்பட்டது. அது ஒரு பெரு உரையாடல். அந்த உரையாடலின் பெறுமதியைப் பேராசிரியரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கட்டுரையின் தொடக்கமே அவருக்குச் சறுக்கிவிட்டது.
பேராசிரியரின் இந்த வகைக் கூற்றுக்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது இமிழ் என்ற சிறுகதைத் தொகுப்பின் வெளியிடுதலுக்கான எதிர்க் கருத்துக்களே. ஆனாலும் பேராசிரியர் அதற்கான விளக்கங்களை எந்த இடத்திலும் சொல்லாது. இமிழ் சிறுகதைகள் உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள் என்கிறார். ஆனால் அது எப்படி என்று எந்த ஒரு இடத்திலும் அவர் சொல்லவேயில்லை. கிட்டத்தட்ட ஈழத்திலிருந்து கருணாகரன் அவர்கள் எழுதும் ஒரு எழுத்தைப் போன்றே பேராசிரியரும் எழுதிவிட முனைந்துள்ளார். தமிழ்நாட்டில் கருணாகரன் இல்லாத இடத்தை ஏன் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் நிரப்ப வேண்டும்? அதற்கு வேறு ஆட்கள் இல்லையா?
என்கிறார். இறுதிவரை எப்படி உலக இலக்கியத்திற்குள் நுழைகிறது எனச் சொல்லவேயில்லை. இப்படியொரு சிராம்பை ஈழத் தமிழிலக்கியத்திற்குள் செருகிவிட பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் முயன்றிருக்கவே கூடாது. இந்தமாதிரியான எழுத்துக்களுக்குப் பின்னால் வெளிப்படையாக எதுவும் இருந்துவிடாது என்றுதான் நம்பிக் கொண்டிருப்பார்கள் பலர் . ஆனால் உள்ளே சிராம்பேறி சிதள் கட்டி ஏர்ப்பாக்கும் எழுத்துக்கள் இவை. மன்னிக்க வேண்டும் எங்களுக்கு ஒரு கருணாகரன் போதும் பேராசிரியரே!
கல்விப்புல வாசிப்பு என்ற அடையாளப்படுத்தலுக்கூடாகவே எப்பொழுதும் தான் அனைத்தையும் பார்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அ.ராமசாமி அவர்கள், எப்பொழுதும் ஒரு அடிப்படையான கருத்துரைப்பை மேற்கொண்டு அதனை ஒரு அடையாளமாகக் காட்ட முனைகிறார். தமிழ்நாட்டில் தொகுக்கப்பட்ட தொகை நூல்களில் எவ்வித மரபும் பின்பற்றப்படாமல் தொகுப்பாசிரியர்களின் மனச்சாயலோடு மட்டும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்றதுதான் இமிழும் என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ஈழப்படைப்புக்களைத் தொகுக்கிறோம் என்ற பெயரில் ப. திருநாவுக்கரசு அவர்கள் தொகுத்த புலம்பெயர் கவிதைகள் என்ற தொகுப்புக்குறித்தும் அ.மங்கை அவர்கள் தொகுத்த பெண்கள் கவிதைகளான “பெயல்மணக்கும் பொழுது” என்பது குறித்தும் பலதடவைகள் எழுதியாகிவிட்டது. இரண்டுமே எவ்வித பொறுப்புணர்வும் இல்லாது கவிதையின் தேவை குறித்தோ அல்லது அந்தக் காலத்தின் அரசியல் குறித்தோ வெளிப்படையாகப் பேசாத தன்முனைப்புச் சார்ந்த தொகுப்புக்கள் அவை. அங்கே ப.திருநாவுக்கரசு அவர்களும் அ.மங்கை அவர்களுக்கும் இருந்த மட்டமான அறிவும் தேடலுமே அவற்றை வெளிப்படுத்தி நின்றன. இங்கே இமிழும் அப்படியானதொன்றாகத்தான் அடையாளம் கொள்கிறது. இது தனியே சோபாசக்தியினதும் அவர் வளர்க்கும் செம்மறிகளதும் செயற்பாட்டுக்கு உட்பட்ட அறிவுடன் மட்டும் வெளிவந்ததே.. ஆனால் உலக இலக்கியத்திற்குள் நுழைய முனையும் கதைகள் என்று அ. ராமசாமி அவர்களைக் கொண்டு சொல்லவைக்கப்பட்டிருக்கிறது. இதனை இன்றைய ஈழ- புலம்பெயர் சிறுகதைகள் என அடையாம் காட்டுவது பற்றித்தான் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கருப்புப்பிரதிகள் என்ற பதிப்பகம் பேசும் அரசியலுக்கு ஒப்ப சோபாசக்தி தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அடையாளம் காட்டத் தொகுக்கப்பட்ட தொகுப்பு மட்டுமே இது. இதற்கு அப்பால் பேச வேறு எதுவுமில்லை. தமிழ்நாட்டில் எம். கண்ணனது இமிழ் குறித்த உரைக்குள் விழுந்த இடிக்கு மஞ்சள் எண்ணை தடவ அ. ராமசாமி அவர்களைப் பாியாரியாக்கியிருக்கிறார்கள். அதனைவிட இந்தக் கட்டுரையில் வேறெதுவுமில்லை.
No comments:
Post a Comment