Monday, 3 March 2025

“கருங்குயில்”

“கருங்குயில்” தமிழ்நாட்டு அரசியல்வாதி போலவும் ஈழத்து இயக்கக்காரன் போலவும் இலக்கியத்தைக் கையாள முனையும் சோபாசக்தி… கற்சுறா
சோபாசக்தியினது இந்தச் சிறுகதைத் தொகுப்பினை நான் வாசிக்கத் தொடங்கும் போது, அவருடைய “கொரில்லா” (அடையாளம் வெளியீடு)நாவலையோ அல்லது அவரது தேசத் துரோகி (கருப்புப் பிரதிகள் வெளியீடு )என்ற சிறுகதைத் தொகுப்பினையோ வாசிக்கத் தொடங்கும் போது இருந்த மனநிலை எனக்கு இருக்கவில்லை. அவரை அருகிருந்து அறிந்தவன் என்ற அடிப்படையில் அவருடைய திறமைகளையும் அதற்கான உழைப்பினையும் அறிந்து கொள்ள முடிந்த போதிலும், “கொரில்லா” என்ற அவருடைய முதல் நாவல் என்னைக் கவர்ந்ததில்லை. அதன் செய்நேர்த்தி பற்றிப் பலர் வியாபித்திருந்தாலும் அதற்குள் ஒரு சிறிய “நஞ்சு” ஒன்று, வார்த்தைகள் எங்கிலும் இழையோடிக் கொண்டேயிருந்தது. அதனால்த் தான் அதனை ஒரு “ஹேராம்” திரைப்படத்தினை ஒத்த கருத்தியல் என்று அப்போதே சொன்னேன். அந்தக் காலத்தில் ஹேராம் ஒரு பேசு பொருளாயிருந்ததினை வைத்து அப்படிச் சொன்னேன். இன்று வேறு வேறு வடிவங்களுக்கும் ஒப்பிடலாம். அனால் அதனை இன்னொருதடவை வாசிக்கும் எண்ணம் எனக்கில்லை. அதன் பின் “தேசத்துரோகி” என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்த காலத்தில் அவர் தமிழ் நாட்டில் அறியப்பட்ட ஒரு ஈழ எழுத்தாளராக இருந்தார்.அதற்காகவே, அவ்வாறு அறியப்படவும், தமிழ் நாட்டவர்கள் ஈழம் சார்ந்து ஏற்கனவே விரும்புகின்ற விடயங்களையும், புகலிடம் சார்ந்து புல்லரிக்கின்ற விடயங்களையும் சொல்லி எழுதிவிடும் போக்கு அவரிடம் குடிகொள்ளத் தொடங்கிக் கனகாலமாக இருந்தது. அவரது தேசத்துரோகி என்று தொகுத்த சிறுகதைகளில் இருந்தவையில் பின்பாதிக்காக எழுதப்பட்டு சேர்க்கப்பட்ட கதைகள் அவைதான் என்பதனைச் சொல்லி, அவருடனான ஒரு “கணக்குத் தீர்ப்பு” ஒன்றினை 2003 காலத்தில் எழுதியிருக்கிறேன்(எக்ஸில் 2003). அதில் காணப்பட்ட பெரும்பாலான கதைகள் போல ஒன்றை எழுதியும் காட்டி அதனை விமர்சித்திருந்தேன். தமிழ்நாட்டிலிருக்கும் பல ஏமாளிகளுக்கும் கோமாளிகளுக்கும் கம்பு சுத்திக் காட்டிய கதைகள் அவை. இன்று இந்தக் “கருங்குயில்” என்ற கதைத் தொகுப்பினை வாசிக்கும் போது, முன்னரான அவரது இரண்டு நூல்களை வாசிக்கத் தொடங்குமுன் இருந்த எண்ணம் என் மனதிற்குள் இருந்ததேயில்லை. ஒரு இலக்கியத் தேடலுக்கான தெரிவாகவும், அதற்குள் நம் காலத்தின் இருளும் ஒளியும் கலந்த சனத்தின் கதைகளை ஒரு புள்ளியிலேனும் கண்டடையும் நோக்குடனும் அவருடைய இந்தக் கருங்குயிலின் தொகுப்புக் கதைகளில் நான் எந்த வார்த்தைகளையும் தேடவில்லை. இந்தக் கதைத் தொகுப்புக் குறித்து வாசிக்கத் தொடங்குமுன் எனக்குள் ஒரு முடிவு இருந்தது. அந்த முடிவிற்கு இந்தத் தொகுப்பு எந்தளவில் ஒத்துச் செல்கிறது என்ற வாசிப்பு மட்டுமே அதுவாக இருந்தது. இன்றைய சோபாசக்தி என்ற எழுத்தாளரின் செயற்பாடுகளில் நான் அக்கறை கொள்ளும் இடம் அதுதான். ஒரு தமிழ் நாட்டு அரசியல்வாதி போல், ஒரு தமிழீழ இயக்கக்காரனைப் போல் என்ன அநியாயமும் செய்து தன்னை ஒரு இலக்கியப் பிதாவாகக் கொண்டாடி நிறுவ சோபாசக்தி செய்து வரும் கூத்துக்களைக் கடந்தகாலமாக நான் நன்றாக உணர்ந்து வருகிறேன். ஆரம்பத்தில் இந்தமாதிரியாக, அவர் வந்தடைந்த வழிக்குத் தெரியாமல் நாமும் ஒருவகையில் காரணமாயிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி எனக்கிருக்கிறது. என்னோடிருந்த மற்றய நண்பர்களுக்கும் அவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களால் வெளிப்படையாக அவைகுறித்துப் பேச முடியாத நிலை இருக்கும். ஆனால் நான் அந்தக் காலங்கள் குறித்து வெட்கப்படவில்லை. அவற்றை வெளிப்படையாகப் பேசவேண்டும் என நினைக்கிறேன். அந்தப் பேச்சும் ஒரு பொறுப்புக் கூறலின் வெளிப்பாடுதான். ஒரு தற்குறியாளன், தன்மீது மோகம் கொண்டு அலையும் ஒரு எழுத்தாளன் என்பவனிடம் எந்த சமூகப் பெறுப்பும் பெறுமதியும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. ஒரு இயக்கக்காரனுக்குத் தன்னுடைய இயக்கத்திற்காகக் குண்டு ஒன்றை வைக்கத் துணிச்சல் இருப்பதுபோல், ஒரு அரசியல்வாதிக்குத் தன்னுடைய கதிரைக்காக ஒருவரைக் கொலை செய்யவும் தயங்காத மனநிலை இருப்பதுபோல் நீண்ட காலமாக தன்னுடைய இலக்கிய இருப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துடிக்கும் ஒரு தற்குறியாக மாறியிருக்கிறார் சோபாசக்தி என்ற அவதானம் எனக்கிருக்கிறது. இவ்வாறான மனநிலையிலிருந்தே இந்தக் “கருங்குயில்” என்ற தொகுப்பினை நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னுடைய மிக நெருங்கிய நண்பரும் என்னுடனும் எனது நண்பர்களுடனும் இணைந்து பலவேலைகளைச் செய்து வருபவர் என்ற ஒரு ஆதரவு நிலையிலிருந்தே அவரின் பல எழுத்துக்ளை வாசிக்கத் தொடங்கியவன். ஆனால் அவை எனக்கு ஏமாற்றம் அளித்தன. வாசிக்கும் போது இருக்கும் அந்த சுவாரிசியத் தகவலுக்குள் சிறிய சிறிய நஞ்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருந்தது. இலக்கியத்தின் பக்கம் இருந்து செயற்படும் ஒரு கதை சொல்லிக்கு இருக்க வேண்டிய தர்மம் அங்கே சிதைந்திருந்தது. ஆனாலும் அவரை என்னுடைய நண்பராகவே நான் அணுகினேன். அக்காலத்தில் அவருடன் முரண்பட்ட அல்லது கொடுமுரண்பட்ட பல பல சந்தர்ப்பங்கள் உண்டு. அவருடைய எழுத்து மீது நான் வைத்த முரண்களை விட அவரது நடைமுறை பற்றியும் அதிகம் முரண்பட்டிருக்கிறேன். ( அவைபற்றி இன்னொரு இடத்தில் பேசலாம். இங்கே அது அவசியமில்லாதவை. ) ஆனால் அவை அவரைத் தொலைத்துவிடும் அளவிற்கு இருந்ததில்லை என அப்பொழுது நினைத்திருந்தேன். ஆனால் இன்றைய எனது மனநிலை அதுவல்ல. மெல்ல ஊறிய நஞ்சை இனியும் பரவ விடமுடியாது என்ற நிலை இன்று எனக்குள் தோன்றியிருக்கிறது. இந்த முரண் எல்லாம் தாண்டி அவர் சினிமாவிற்குள் அறியப்பட்டபோது நான் அடைந்த சந்தோசம் அளவற்றது. சினிமா என்பது வியாபாரம்- பணம் சார்ந்த ஒரு தளம். அதில் அவர் ஒரு இடத்தை அடைவது அவரோடு இருந்த நண்பர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. ரெஸ்ரோரண்டுகளில் கோப்பை கழுவியும் அலுவலகங்களில் தூசுதட்டியும் கழித்த வாழ்விலிருந்து விடுபடும் தருணம் உன்னதமானதுதானே. கான் திரைப்படவிழாவில்(Cannes Film Festival) அவரைக்கண்டபோது நண்பர்களுடன் இணைந்து நான் அடைந்த சந்தோசம் அளவில்லாதது. அந்த சினிமாத் தொழில் அவருக்கு தொடர்ந்தும் கைகொடுக்க வேண்டும் என்பதுவே இன்றும் எனது விருப்பம். புகலிடச் சூழல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது சொர்க்க பூமியுமல்ல. அதிலிருந்து ஒவ்வொருவரும் தமது திறமையின் அடிப்படையில் வெளியேறுவது என்பது தேவையானதே. அவருக்குக் கிடைக்கும் சினிமாவின் வாய்ப்புக்கள் சார்ந்து அறியும் போது நான் ஒவ்வொருதடவையும் சந்தோசம் கொள்கிறேன். சிலவேளை அந்தப்பக்கம் எனது அறிவின்மை காரணமாகவும் நான் அதனைச் செய்து கொண்டிருக்கலாம். அதன் உண்மைப் பக்கங்களை நான் அறியும் போது இதே மனநிலை தோன்றிவிடவும் கூடும். ஆனால் இலக்கியத்தில் செய்யும் அவருடைய நடிப்புச்சார்ந்து நான் மிகவும் எரிச்சலடைகிறேன். கோபம் கொள்கிறேன். இலக்கியத்தில் ஒரு ஜெயமோகனைப்போல் ஒரு சாருநிவேதிதா போல் இன்னும் ஒருபடி மேலேபோய் கருத்தியலாக அ. மார்க்சைப் போல் அவர் திட்டமிடலுக்குள் இருக்கிறார். அவரை ஒரு நல்ல கதை சொல்லி என்றுதான் பலர் சொல்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் ஆரம்பத்தில் நம்பினோம். ஆனால் உண்மை அதுவல்ல. இன்னொரு தளத்தில் “கதை சொல்லி” என்ற பெயருக்கான அர்த்தத்தை நாம் பூரணமாக விளங்கிக் கொண்டால் அதுவே உண்மையானதாக இருக்குமோ என்றும் மாற்றி யோசிக்க வேண்டிவரும். “கதை சொல்லி” என்றும், கதையைச் சொல்பவர் என்றும் அதன் அர்த்தங்களை உடைத்து மொழியைச் சிதைத்துப் பார்க்கும் போது அவர் நல்லதொரு கதை சொல்லியாகவே இருப்பார். கிட்டத்தட்ட நாலைந்து சம்பவங்களைக் கோர்த்துக் கதை சொல்பவர். ஒற்றை அடையாளமாகச் சொல்லின், அவர் ஒரு “கோர்த்துக் கட்டி” அவ்வளவுதான். கதை சொல்லி என்ற அடையாளத்தை விட அவருக்குக் “கோர்த்துகட்டி” என்ற சொல்லே மிகப் பொருத்தம் என்றே நினைக்கிறேன். அவர் கதைகளுக்குள் வாழ்பவர் அல்ல. கதைகளின் அலகுகளை வியாபித்துச் செல்பவரும் அல்ல. எந்தக் கதைகளும் எந்தச் சம்பவங்களும் அவரை இடைஞ்சல் செய்து, துருத்தி நிற்பவையும் அல்ல. அந்த இடைஞ்சல்களை தன்மனவோட்டத்தில் நுழைத்து அதற்கான வியாக்கியானங்களை சமூகத்தில் பரவச் செய்பவருமல்ல. மானசீகமான அணுகுமுறையுடன் நிவர்த்தி செய்யக் கூடியதும் பொதுப் புத்தியை மெல்லிதாகவேனும் கழற்றி ஒழித்துவைத்துவிடும் எந்த உரையாடல்களும் அவரது தற்காலக் கதைகளுக்குள் நிகழ்பவை அல்ல. மிகத் திட்டமிட்டு தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விரும்பும் வார்த்தைகளை எழுதி அவர்களுக்குள் தன்னை அடையாளம் காட்ட முனைபவர் என்பதற்குமேல் அவரது கதைகளில் எதுவும் இருந்துவிடாது என்பது அறிந்த கதைதான். என்மனதறிந்து நமது சூழலில், அவ்வாறான ஒரு நிலையை தன்னுடைய வார்த்தைகளுப் பின்னாலும் நம்மைத் தூங்கவிடாது இடையூறு செய்தபடி இருக்கும் எழுத்து ஒன்று க.கலாமோகனுடையது. மற்றது ஜெயரூபன் மைக்கேலினுடையது. தன்முனைப்பற்ற எழுத்துக்கள் அவை. இவர்களின் எழுத்துக்களுக்குள் யாரும் ஒருபொழுதும் எழுதியவர்களை அறியமுடிவதில்லை. அங்கே பிரதியாளனுக்கான வேலை இருப்பதில்லை. அவனை யார் என்று அடையாளம் தேடிக் கொண்டிருப்பதுமில்லை யாரும். அவர்களது எழுத்துக்களில் வரும் பாத்திரங்கள் மனங்களை இடையூறு செய்யும். வாசகனின் நிம்மதியைக் குலைக்கும். ஆனால் இன்றைய சோபாசக்தியின் எழுத்துக்கள் அவ்வாறானதல்ல. அவருக்குத் தமிழ் நாட்டவர்களது முட்டாள்த்தனமான அங்கீகாரம் மட்டும் போதுமானது. அதற்கு எந்தச் சரக்கையும் விற்பனையாக்க அவர் தயங்குவதில்லை. அவருக்கு வியாபாரம் செய்ய அதி மகோன்னத “கருப்புப்’ பிரதிகள்” எதற்கும் தயார் நிலையில் இருக்கிறது. ஆக, அங்கே ஒரு ஆத்மார்த்தமான இலக்கியக்காரனுக்கு வேலையில்லை. அதற்குள் கதை சொல்லிக்கு என்ன வேலை? “கோர்த்துக்கட்டி” க்குத் தான் வேலை! அவரை ஒரு கோர்த்துக் கட்டியாக உரு மாற்றியதற்கு ஒரு பாதிப் பொறுப்பு கருப்புப்பிரதிகள் என்ற பதிப்பகத்திற்குந்தான். இந்தக் கருப்புப் பிரதிகள் என்ற பதிப்பகமனமும் தன்முனைப்பு என்ற சோபாசகத்தியின் கோர்த்துக்கட்டி மனமும் என்று இணைந்த இரட்டை நிலையை அறிந்து கொண்டுதான் கருங்குயில் என்ற அவரது தொகுப்பின் முதலாவது கதையை வாசிக்கத் தொங்குகிறேன். “கருங்குயில்” என்ற தொகுப்பினை வாசிக்கத் தொடங்கு முன் ஒரு “கோர்த்துகட்டி” சொல்லும் கதைகளுக்குள் என்ன தார்ப்பரியம் இருந்து விடப் போகிறது என்ற மனநிலையில்தான் இந்தக் கதைகளையும் வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு இலக்கியத் தேடலுக்கான ஒரு விகாசிப்பில் இதனை நான் வாசிக்கத் தொடங்கவில்லை. தமிழ் நாட்டு முட்டாள் வாசகனுக்கு எந்தப் “பூ”வை எந்தக் காதில் சுற்றியிருக்கிறார் சோபாசக்தி என்ற விபரம் அறியவே வாசிக்கத் தொடங்குகிறேன் என்பதனைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். மெய்யுணர்வு. இது வெளிப்படையாக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்த, அவர்களால் தியாக தீபம் என்று அழைக்கப்படும் திலீபன் அவர்கள் சார்ந்த கதை. அவரின் அடையாளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு எழுத்தமைப்பு. இலக்கியத்தில் இது ஒரு சிறுகதை என்றே அடையாளம் காட்டப்படுகிறது. இந்தக் கதை குறித்த ஒரு சிறு உரையாடல் அ. ராமசாமி அவர்களுடனான அபத்தம் உரையாடலில் ஜோர்ஜ் குருசேவ் அவர்களால் முன்வைக்கப்பட்டது. திலீபனின் ஊரான உரும்பிராயிலேயே ஜோர்ஜ் அவர்களும் வாழ்ந்ததாலும், திலீபனைச் சிறுவயதிலிருந்தே தெரிந்ததாலும் அந்தக் கதையில் வரும் அம்மன் கோயிலின் அமைப்பிடம் சார்ந்து அந்தக் கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். வரலாற்றிற்கும் புனைவிற்குமான வெளி குறித்த ஒரு இடைஞ்சல் பற்றியதான கரிசனைதான் அதுவே. ஆனால் உரும்பிராயிலோ அல்லது ஊரெழுவிலோ ஏன் யாழ்ப்பாணத்தின் வேறு பகுதிகளிலேயே வாழாத ஒருவருக்கு திலீபன் பற்றிய வாசிப்பு இந்தக் கதையில் என்னவாக இருக்கிறது? என்றும், இலங்கையிலே வாழாது இன்று தமிழ்நாட்டில் வாழ்ந்து ஈழம்பற்றிய கதைகளை மட்டும் கேட்டு வாழும் ஒரு இலக்கியக்காரனுக்கும் தமிழ் நாட்டுத் தேசிய வெறி கொண்டவனுக்கும் கதையில் எதைத் தேடமுடியும் என்பதும் இந்தக்கதை குறித்த முக்கிய உரையாடற்புள்ளி என்று நினைக்கிறேன். அதனை விடவும் திலீபன் பற்றியே அறியாத ஒரு இலக்கிய வாசகனுக்கு இந்தக் கதையில் இருக்கும் உன்னத கரு என்ன என்பதுவும் நமது உரையாடற் புள்ளியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புனைவின் அதீததம் என்பது சோபாசக்தியின் கதைகளில் எங்கே நிகழ்கிறது? என்று தேடும் ஒரு உரையாடலைத்தான் நான் உரையாட நினைப்பது? பெரும்பான்மையான ஈழத்தமிழ்ச்சமூகத்தால் மட்டுமல்ல ஈழம் பற்றிய கனவோடும் தமிழ் என்ற ஒற்றை அடையாளம் பற்றிய கனவோடும் அலையும் தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஒருவருக்குள் புகுத்தப்பட்ட திலீபன் பற்றிய அதீத புனைவுகளுடன் உருவாக்கப்பட்ட விம்பத்திற்கு ஒரு இடையூறும் நிகழ்ந்துவிடாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு பிரதியே மெய்யுணர்வு. இங்கே ஒரு புனைகதை என்று அடையாளம் காட்ட நமக்கு இருக்கும் வெளிப்படையான ஆகக் குறைந்த ஒரு தரவு, ஏற்கனவே பொதுச் சூழலிற்குள் கட்டமைக்கப்பட்ட தியாக தீபம் என்ற அடையாளம் குலைக்கப்பட்டு “தண்ணியைக் குடி சுண்ணியைக் குடி” என்று திலீபன் என்ற விம்பம் சொல்லும் இடம் மட்டுமே. இன்று சமூகத்தின் அமைதிக்கானதும் அகிம்சைக்கானதுமாகக் காட்டப்படும் திலீபன் என்ற சொல் இந்த வார்த்தைகளைக் கூட அனுமதிக்கப் போவதில்லை. ஆனால் சோபாசக்தி, திலீபனின் இயல்பு எனக் கருதிச் சொல்லும் இந்தச் சொற்களும் கூட புனைவுகளால் நிரப்பப்படும். இவர் தனது முதல் நாவலான கொரில்லாவிருந்து “கொண்டு பரப்பும்” ஒரு செயலைத் தொடர்ந்தும் தன் புனைவுகளினூடாகக் காவிச் செல்கிறார். திலீபனின் பாடசாலை நண்பன் என்ற ஒருவனது பாத்திரத்தின் கதைக்குள்ளால் திலீபனைத் தமிழ்நாட்டில் செப்பனிடுகிறார். திலீபன் என்ற ஈழவரலாற்றுப் பாத்திரத்திற்கு இருக்கும் உண்மையான கதைகளை மறக்கடித்து புனைவு என்ற பெயரில் உண்மை அடையாளத்தைத் திரித்துவிடும் உன்னத வேலையைத் தன்னுடைய எழுத்துக்களில் நிகழ்த்துகிறார். இதேபோன்றதொரு இன்னொரு புனைவாகத்தான் இந்தகதைத் தொகுப்பின் தலைப்பினைக் கொண்ட “கருங்குயில்” என்ற கதைக்கும் நடந்து விடுகிறது. கருங்குயில் அண்மையில் பப்லோ நெருடா என்ற சிலி நாட்டுக் கவிஞனின் இலங்கைக் காதலி குறித்த விடயங்கள் பேசுபொருளாகியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதுகுறித்து சிங்களத் திரைப்படம் ஒன்றும் அண்மையில் வெளியாகியிருந்த பின்னால் அவர் குறித்த சர்ச்சை இன்னும் பெரிதாக உருமாறியிருந்தது. உலகப் புகழ் பெற்று உன்னத தளத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்- மாகா கவிஞன் என்று அடையாளம் இடப்பட்டிருக்கும் ஒருவர் மீது முன்வைக்கப்பட்ட ஒரு பாலியல் விமர்சனமாக அத்திரைப்படம் அடையாளம் காணப்பட்டது. அதனைத் தக்கபடி தன் கைக்குள் அகப்படுத்திய சோபாசக்தி அவர்கள் அதற்கு ஒரு புனைகதையைச் செதுக்கினார். இந்தக் கதையை யாரும் வாசிக்கத் தொடங்கும் போது ஒரிரு வரிகளிலேயே இது பப்லோ நெருடாவின் இலங்கைக் காதலி பற்றிய கதைதான் என்று அனுமானித்துவிடலாம். அதனை அறிவதற்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஏற்கனவே சமூகத்தின் மனம் பொதுவாக எண்ணியிருந்த நிலையும் அதுதான். நமது சமூகத்தில் பழம் பெரும் எழுத்தாளர்கள்- கவிஞர்கள்- கலைஞர்கள்- என்று அடையாளம் கொண்டவர்களின் கதையும் இதுபோன்றதுதான். எழுத்தாளர் கவிஞர் என்ற அடையாளங்கள் எல்லாம் தமக்கு ஒரு “வீற்றோப் பவர்” என்ற கணக்கில் தங்களையும் பப்லோ நெருடாவாக நினைக்குமளவிற்குத்தானே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது. இதற்குள் தமிழ் நாடென்ன? ஈழமென்ன? புகலிடமென்ன? ஆக இந்தக் கதையில் ஏற்கனவே சமூகத்தில் உரையாடப்பட்ட விடயங்களைத் தாண்டி ஒரு பேசு பொருளைக் கண்டடைய முடியாது. ஒரு சம்பவத்தை மட்டும் அடையாளம் காட்டி அதனைப் போன்ற மற்றய சம்பவங்களின் கோர்வையைக் கொண்டுவந்து பிரதியிட்டு ஒன்றின் பின் ஒன்றாகக் கோர்த்துகட்டும் ஒரு வேலைதான் அவருடைய அதிகமான கதை சொல்லும் பாணி. பாலியல் இச்சைகளின் மோசமான வடிவங்கள் எப்படியிருக்கும் என்பது அனைவரும் அறிந்து கொள்ள முடிந்த வடிவங்கள்தான். அந்த வடிவங்களுக்கு மேலும் கீழுமாக வர்ண சாயங்கள் பூசிக் கொண்டு செல்லக் கூடிய வார்த்தைகளைக் கோர்ப்பதில் அவருக்குச் சிக்கலில்லை. அவருடைய வாசகர்களுக்கும் அது பழக்கப்பட்ட ஒன்று என்ற படியால் அவரது கதைகளுக்கும் கதைகளின் வார்த்தைகளுக்கும் புரிதலில் குழப்பங்கள் ஏற்படுவதில்லை. இந்தக் கதையில் என்ன வர்ணனைகளை அவர் விபரித்துச் சொல்லியிருந்தாலும் இந்தக் கதை முடியும் போது,”பப்லோ நெருடா நினைவுக்குறிப்புக்கள்” என்ற நானூறு பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலில் ஒரு பக்கத்தைச் சம்பங்கிக்காக ஒதுக்கியிருக்கிறான். என்று சொல்லி முடிக்கிறார். பப்லோ நெருடாவின் சுயசரிதை நூலின் ஒருபக்க கதையை வைத்துத் தன்னுடைய கதையில் 19பக்கக் கதையை அவர் சுற்றிச் சுழன்றடித்துக் கோர்த்துக் கட்டி எழுதுவதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? இந்தத் தமிழ் நாட்டின் இலக்கிய வெற்று வெளியினை நன்றாகப் புரிந்து கொண்ட ஒரு தற்குறியாளன் தன்னை முன்நிறுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஒரு பிரதிதான் இது என்பதனைத் தவிர வேறு என்ன இருக்கிறது. ஆக, சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் தன்கைக் கொண்டு அதனை ஒரு சுழற்சி முறையில் கதை பண்ணுபவருக்குப் பெயர் எழுத்தாளர் அல்ல. ஆறாங்குழி இது இலங்கை வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத ஒரு புரட்சிகர இயக்கமாக தன்னை அடையாளம் காட்டிய ஜே.வி.பி. என்ற இயக்கத்தின் தலைவர் ரோஹணவிஜயவீர அவர்களது அடையாளத்தை முகப்பாகக் கொண்டு புனையப்பட்ட எழுத்து. 1989 காலத்தில் அதன் தலைவர் உட்டபடப் பல ஜே.வி.பியினரை பிரேமதாச அரசாங்கம் கொன்றொழித்தது. இது நடந்தது 1989 அக்டோபர் நவம்பர் மாத காலப்பகுதி. இந்த அழிப்பின் கதைகளில் “உடுகப்பொல” என்ற டி.ஐ.ஜி இன் பெயரை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சித்திரவதைக்கும் கொலைக்கும் பெயர்போன உடுகம்பொலவின் கதைகள் அந்தக் காலத்திலேயே ஊருக்குள் விசிறத் தொடங்கியிருந்தன. இலங்கை பூராவும் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் உடுகம்பொல என்ற சொல் ஒரு அச்சமூட்டும் சொல்லாகவே யிருந்தது. அந்த நேரங்களில்அதன் மீதான உண்மைக்குச் சாட்சியமாக தெருவோரம் கிடந்து எரிந்த பிணங்களும் களனி ஆற்றில் மிதந்த பிணங்களும் சாட்சியாக இருந்தன. ஆனால் அந்தக் கொடூர வாழ்வின் அடையாளங்களைத் தன்வசதிக்கேற்றாற்போல் புனைவின் பெயரில் கொண்டுவந்து தருகிறார் சோபாசக்தி. வரலாறான சம்பவங்களையும் வதந்திகளாக வந்த சம்பவங்களையும் கொண்டு, தமிழ் நாட்டவர்களுக்கு புதிய கதை ஒன்றைச் சொல்லித் திகிலூட்டுகிறார். இலங்கையின் வாழ்வும் அரசியலும் பற்றிய எந்த அனுபவமோ அறிவோ இல்லாத முட்டாள்களுக்கு ஈழத்தின் கதை- புலம்பெயர் கதை என்று சொல்லி ஒன்றைக் காட்ட முனைகிறார் சோபா சக்தி. ஓ இதுதானா அது என்பதுபோல் தமிழ் நாட்டின் சாதாரண வாசகர்கள் தொடக்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை புல்லரித்து நிற்கிறார்கள். என்ன கொடுமை என்றால், இந்தத் தமிழ் நாட்டவர்கள் எங்களுக்கே “இதுதான் அது” என்று சோபாசக்தி காட்டிய கதையை திரும்ப எங்களுக்கே சொல்லிக் காட்டுவதுதான் அதிசிறந்த கொடுமை. வரலாற்றிற்கும் புனைவிற்குமான இடைவெளியைக் கூட சோபாசகத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. புனைவு என்ற பெயரில் வரலாறு போல கோர்த்துக் கட்டும் ஒரு செயலைத்தான் அ. முத்துலிங்கம் அவர்களும் சோபாசக்தி போல் ஒருமுறை செய்துகாட்டி மாட்டிக் கொண்டார். ஆனால் சோபாசக்தியோ இதனைத்தான் அவரது கதைகளில் தொடர்ந்து செய்கிறார். சோபாசக்தியால் எழுதப்பட்ட “யாப்பாணச் சாமி” என்ற சிறுகதையை வாசிக்கும் ஈழத்தவர்களுக்கு அவர் தன்னுடைய கதைகளில் செய்கின்ற அயோக்கியத் தனத்தினை விளங்கிக் கொள்ள முடியும். அது முழுக்க முழுக்க “தன்னைக் கவனியாத “FUNNY BOY” திரைப்படக் குழு குறித்த எரிச்சலில் எழுதப்பட்ட கதை. ஆனால் அதனை தமிழ் நாட்டு வாசகர்களால் விளங்கிக் கொள்ளவே முடியாது. ஆனால் தமிழ் நாட்டு விமர்சகளுக்கும் ஈழம் மற்றும் புகலிடச் சூழலுடன் தொடர்பிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் அங்கிருக்கும் இலக்கியப் பேராசிரியர்களுக்கும் கட்டாயம் விளங்க வேண்டும். இதன் பின்னாலுள்ள நஞ்சை நீங்கள் அறிந்து கொள்ளாது விட்டால், இலக்கியத்தின் பக்கமிருந்து நீங்கள் எதனையும் ஒருபொழுதிலும் விளங்கிக் கொள்ளப் போவதேயில்லை. வர்ணகலா இந்தக்கதை புலம்பெயர் சூழலிலும் பண்பாடு எனச் சொல்லிக் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்படும் அடையாளங்கள், சடங்குகள் என்பவற்றைச் சொல்லி அதற்குள் சாதி ஒழிந்திருக்கும் இடத்தைக் காட்டும் கதை. கதை தொடங்கும் போதே கதையின் முடிவை நான் சொல்லப் போவதில்லை நீங்களே ஊகியுங்கள் என்று சொல்லப்படுகிறது. கதையின் முடிவிலும் அப்படித்தான் சொல்லப்படுகிறது. பாரீசில் வாழும் ஒரு நளவர் சமூகப் பெண் வட்டுக் கோட்டையில் வைத்துக் கொல்லப்படுவது பற்றிய கதை இது. இதில் சோபாசக்தி அவர்கள் “வட்டுக் கோட்டை” என்ற ஊரை அடையாளமாகத் தேர்ந்தெடுத்தது அண்மையில்சாதிச் சண்டைக்குள் பொதுவெளியில் பேசப்பட்ட பிரபலமான ஊர் என்ற அடிப்படையில் மட்டுந்தானே ஒழிய வேறு இல்லை. இல்லேயேல் தமிழ் நாட்டுக்கு இந்தக் கதையை அவர் கொண்டு செல்ல மிகப் பெருந் தடை இருக்கும். வெளிப்படையாக ஆணவக் கொலைகள் நடைபெறும் மண்ணுக்கு, ஈழத்தின் சாதியக் கொடூரத்தை வெளிக்காட்ட அவருக்குக் கிடைத்த சாக்கு( கோணிப்பை) இது. ஈழத்தமிழ்ச்சூழல் பூராவும் சாதிய அடையாளங்களுடன்தான் வாழ்கிறது. சாதிய முரண்பாடுகளும் சண்டைகளும் அந்த மண்ணெங்கும் பரவித்தான் கிடக்கிறது. வடக்கைப் போல் அல்லாது சாதியமுரண் குறைந்த சமூகம் கிழக்கு சமூகம் என்று அடையாளம் கொள்ள முடிந்தாலும் அங்கேயும் சாதிவெறிபிடித்தலையும் புரட்சியாளர்களைக் கூட நான் அறிவேன். அப்படித்தான் நமது சமூகம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதையை புனைவாக நடத்தி- கோர்த்துக் கட்டி- தன்னுடைய மற்றயகதைகள் போல் இழுத்துச் செல்ல சோபாசக்தியால் முடியாது போகிறது. தான் எங்கேயாவது ஒரு இடத்திலாவது மாட்டுப்படுவேன் என்ற ஐயத்தை அவர் கதை சொல்லிப் போகும் விதத்திலிருந்து தொடர்ந்து நீங்கள் கண்டு போக முடியும். அவரது வழமையான எழுத்துக்கள் போல வெறும் சம்பவங்களின் கோர்வைகள்தான் இங்கேயும் படர்ந்திருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் தமது குடும்பங்களில் நிகழும் சடங்குகளை எப்படி நடத்துகிறார்கள் என்றுதானே நாம் அன்றாடம் அறிகிறோம். அவர்களின் வீடியோக்களிலிருந்து நாம் பார்க்கிறோம். அதனை வரிசையாக அடுக்குவதில் என்ன புனைவு உருவாகிறது. மற்றவருடைய சாமத்தியவீட்டுச் சடங்கு எப்படி நடக்கிறது என்று அறியமுற்படுபவருக்குத் தரும் அடையாளத் தகவல்களாக அவற்றின் விரிவு இருக்கிறதோடல்லாது தமிழ்நாட்டு வாசகர்கள் தமது வாயைப் பிளந்து நின்று வாசிக்கச் செய்யும் எழுத்தாக மட்டும் இது இருக்கிறது. அதற்காகவே திட்டமிட்டு எழுதப்படும் எழுத்து அவருடையது என்பதனை இந்தக் கதையும் தொட்டு நிற்கிறது. மற்றப்படி இதன் பின்னால் ஒரு திறந்த வெளியை புனைவுத்தளத்தில் உருவாக்கிவிட முடியாத வெறும் வெற்று அரட்டல். இந்தக் கதையை ஒரு சமூக உரையாடலாகக் கூட நடத்திச் செல்லத் தேவையற்று ஒரு அட்டவணைபோல் பதியப்படுகிறது. தமிழ் நாட்டவருக்கும் சோபாசக்திக்கும் இதுவொரு புலம்பெயர் சிறுகதை. மற்றப்படி இதில் ஒரு மயிரும் இல்லை. தமிழ் நாட்டவருக்குக் காதில் பூ சுற்றிய வெற்று அரட்டல். ஆனால் தன்னுடைய வழமையான யுத்த அடையாளங்களுடன் விபரிக்க முடியாது போய் முடிவு சொல்லப் பயந்த கதை இது. One Way தன்னுடைய தகப்பனான யேசுதாசன் அவர்களை நிவூட்டும் கதை. தகப்பனுடைய ஊர் ஆட்டகாசம் பற்றிப் புனைவுகளோடு, பல்வேறு தடவைகளில் வேறு வேறு முறையாக எங்களுக்குப் பகிடிக்கதையாச் சொல்லி வந்த கதையின் இன்னுமொரு மாதிரி வடிவந்தான் இது. புனைவு என்ற வடிவத்துள் அந்தக் கதையின் அளப்பரிய உண்மைகளைத் தவிர்த்து ஒரு புனைவாக இது எப்படியிருக்கிறது எனக் கேட்டால், புத்தகத்தில் இந்த ஒரு கதை மட்டும் புனைவிற்கான ஒரு உரையாடற் தளத்தை அங்கங்கே கொண்டு உருவாக்கியிருக்கிறது. ஆனாலும் இந்தக் கதையும் அகதிகளின் பாரிஸ் வாழ்வு குறித்துத் தமிழ் நாட்டவர்களுக்குக் கதை சொல்லும்படியாகத்தான் பல்வேறு இடங்கள் நினைவூட்டிச் செல்கிறது. ஈழத்தின் வாசகர்கள் இந்தக் கதையில் கூட எதையும் புதிதாக அறியவும் உள்ளார உரையாடவும் எதுவுமில்லாத கதை. ஒவ்வொரு புகலிட அகதியும் அன்றாடம் வாழும் வாழ்வை வெறும் சம்பவங்களாகத் தமிழ்நாட்டவர்களுக்கு விபரிக்க முடிந்த கதைதான் இதுவும். இன்று சோபாசக்தியால் தமிழ் நாட்டு வாசகர்களது மனநிலைக்குக் கதை சொல்லும் விதம் தாண்டி ஒரு கதையை அவரால் வேறுமாதிரி எழுத முடியாது இருப்பதனை யாரும் விளங்கிக் கொள்ளவேயில்லை. ஆனால் அவருக்கு அது நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனை மூடி மறைக்க அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் பல்வேறு விதமானவை. 6. பல்லிராஜா இந்தக் கதையை நான் வாசிக்கத் தொடங்குமுன்னர் அவரது யாப்பாணச்சாமி என்ற கதையின் வடிவத்தில் அல்லிராஜா சுபாஸ்கரன் என்ற லைக்கா நிறுவனக் காரரை வைத்துச் சொல்ப்பட்ட கதை என்றுதான் நானும் நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன். அப்படித்தான் இருக்கக் கூடும் என்று பலர் எனக்கு முன்னர் அறிவுறுத்தியும் இருந்தார்கள். அப்படிச் செய்யக் கூடியவர் என்பது நமக்கு எற்கனவே தெரிந்த கதைதான். அவருடைய ஊரில் தாழ்த்தப்பட்டவர்களது பெயர்களை தன்னுடைய கதைகளில் எப்படிப் பாவித்தார் என்று ஜோர்ஜ் குருசேவ் அவர்களும் ஒருமுறை அபத்தம் இதழில் குறிப்பிட்டிருந்தார். அப்படியான ஒரு எண்ணத்தில்தான் நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் கதை அவ்வாறு இல்லை. அது முழுக்க முழுக்க சிங்கள பவுத்த மேலாதிக்கத்தின் வடிவமாகத் தமிழ்ப்பகுதிகளில் புத்தர் சிலை நிறுவும் சம்பவங்கள் பற்றியது.பவுத்த தேரர்கள் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதையும் அதன் பின்னால் இன்றுவரை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரச நிர்வாகத்தின் சீர்கேடுகளையும் வரிசையாக அடுக்கிச் சொல்லும் சம்பவங்களின் கோர்வையாகக் கதை எழுதப்படுகிறது. இதனையும் ஒரு புனைவு என்ற தளத்தில் வைத்துப் புல்லரித்துப் போகிறார்கள் பலர். என்ன கொடுமை என்றால் இவரைப் போல ஒரு எழுத்தினை எழுதினால் தமிழ் நாட்டவர்களால் தாமும் போற்றப்படுவோம் என்ற ஆசையில் பலர் இவரைப் போல் எழுதத் தொடங்குகிறார்கள். சோபாசக்தி கூட அப்படியான ஒருநிலை வருவதனையேதான் விரும்புகிறார். அதற்காகச் சில செம்மறிகளை அவரே உருவாக்குகிறார். அதனைப் புறக்கணித்து தன்னியல்பாய் எழுதுபவர்களை என்ன பாடுபட்டேனும் ஒழித்து ஓரங்கட்ட முனைகிறார். அதற்காகப் பல்வேறு வழிகளைக் கையாள்கிறார். தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதியைப் போல், ஈழத்தில் ஒரு இயக்கக்காரனைப் போல் அவர் இலக்கியத்தில் செயற்பட முனைகிறார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியாது. அந்தச் சிந்தனையை என்கையாலேயே கிள்ளி வெளியே எறிய வேண்டும் என்று நான் எண்ணியிருக்கிறேன். அதனை வைத்து பணம்பண்ணமுனையும் வெளியீட்டாளர்களையும் சமூகத்தின் ஒரு சிறந்த பதிப்பகம் என்று நாம் வரையறுப்பதில்லை. காலச்சுவட்டை எப்படி நாம் அணுகினோமோ அதன் தரத்திற்கு இன்று கருப்புப் பிரதிகளும் இறங்கியிருக்கிறது. மொத்தத்தில் இன்றைய தமிழ்நாட்டவர்களுக்கு அடிப்படையில் அறம் என்பது இருப்பதில்லை. ஆனால் நாட்கணக்கில் அறம் பற்றிப் பேசுவார்கள். மாற்றுக் கருத்தும் கருத்து முரண்பாட்டையும் வாரி அணைப்பதாகப் படம் காட்டுவார்கள். பணம்- புகழ் தாண்டி அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாத நிலை இன்று தோன்றியிருப்பது அபத்தம். சோபாசக்தி அவர்கள் தன்னை ஒரு கதைசொல்லி என நகரும் வார்த்தைகள் எங்கும் சம்பவங்களின் நகர்வே. அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக் கோர்த்துக்கட்டி அதனைப் புனைவு என்கிறார்.புனைவுக்கு இங்கே என்ன வேலை இருக்கமுடிகிறது?. தமிழ்நாட்டிலிருக்கிற விடுபேயன்கள் வாயைப் பிளந்து நின்று கேட்பார்கள், வாசிப்பார்கள் என்ற ஒரேயொரு அதீத நம்பிக்கையில் எழுதப்படும் வார்த்தைகள்தான் இவையே அன்றி, ஆழ்மனதிலிருந்து வருகின்ற இலக்கிய விகாசிப்பு அல்ல இவை. அங்கே இருக்கிறவன் தொன்மங்களை வைத்துக் கதை சொல்கிறார் சோபா என்று எங்களிடம் வந்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்.இங்கே இவனுக்கோ தனக்கான கதையைச் சொல்லத் திண்டாட வேண்டியிருக்கிறது. இந்த இழுபறிகளில் எதையாவது தேடியெடுத்து ஒவ்வொரு கதைகளிலும் தமிழ் நாட்டவனின் மண்டையைக் கழுவுகிறார் சோபாசக்தி. இவ்வாறு கதைகளை அவர் எழுதிச் செல்வதும் மற்றவர்களை அவரைப்போல் எழுதச் செய்வதுமாக ஒரு இலக்கிய அடையாளத்தைக் காட்டி நிற்கும் அயோக்கியத் தனத்தை நாம் புரியத் தொடங்கினாலே போதும். மிகுதி பின்னர் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

மேன்முறையீடு;

- கற்சுறா- மேன்முறையீடு; உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்? என அருண்மொழிவர்மன் அவர்கள் மீண்டும் என்னிடம்...