Saturday 1 April 2023

தொட்டால் தீட்டு- கைவிடப்பட்ட கவிதைகள் குறித்த கதை.

 “தொட்டால் தீட்டு”








கற்சுறா 


சாதிய மனோபவத்தில் மட்டுமே காலத்தைக் கழித்து வரும் சமூகம் தன் வாழ் காலத்தில் எவ்வாறு வாழ்ந்து முடிக்க முனைகிறதோ அவ்வாறே  அது தன் சீர் கெட்ட மனதை தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் சுமத்த முனைகிறது. 


அதனையே இலக்கியப் பரப்பிலும் செயற்படுத்த முனைகிறது.  அதன் வழி நின்று தான் சார்ந்து இயங்கும், தன்நலன் கருதும் இலக்கியங்களையும்  இலக்கியக்காரர்களையும் மட்டுமே அடையாளம் கொள்ள முனைகிறது.  இந்த அடையாளங்களை விலத்தி ஓடும் இலக்கியங்களையும் இலக்கியக்காரர்களையும் எனது அறிவுக்குட்பட்டு பதிவு செய்தலே இந்த எழுத்து. இங்கே நான் கட்டித்தழுவமுனையும் ஈழத்து எழுத்தாளர்கள் குறித்து எழுதும் பதிவே இது. இதன் தொடக்கத்தில் நமது சூழலில் நாம் பேச வேண்டிய கவிதைகள் அதன் தர்க்கங்கள் குறித்து எழுத முனைகிறேன். இந்த எழுத்துக்கள் ஏன் நமது பெரும்பரப்பில் பேசப்படுவதில்லை. ஒரு உரையாடலுக்காக் கூட அவை ஏன் கவனம் கொள்ளப்படுவதில்லை என்று நாம் பேசியாக வேண்டும். நமது பெரும்பரப்பு என்பது எந்த நிலைப்பாடுள்ளது என்பதனை நாம் தொடர்ந்து பேசுவதினூடாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.  நாம் தொட்டால் நமக்குத் தீட்டு வந்து விடும் என்ற ஆதிக்க மனநிலை கொண்ட எழுத்து அறிதல் முறையை இலக்கியச் சூழலிருந்து காடாத்தவே இந்த எழுத்தின் தொடக்கம்.


 உரையாடல்களால் மட்டுமே அதன் சாத்தியம் நிகழும் 

அந்த உரையாடலை எங்களுக்குள் வளர்த்துக் கொள்வோம்.

முரண்படுவோம்.


உரையாடல் நிகழவேண்டும் எனச் சொல்லிக் கொண்டு “தொட்டால் தீட்டு” என  சமூகம் கொண்டலையும் சாதிய மனநிலையிலிருந்து நாம் இலக்கியத்தையும் அணுக வேண்டாம்.


தொடக்கத்தில் ஈழக்கவிதைகளில் கவனம் கொள்ளப்படாத கவிதைத் தளம் பற்றிப் பேசத் தொடங்குகிறேன்.




இங்கே எழுதப்படுவது கவிதைக்கான வரை வரம்பு குறித்தானதல்ல. சொல்லப்பட்ட கவிதையின் தர்க்கங்களுக்குள்ளும் நின்று பேசும் விடயமுமல்ல. சீரான நடைபாதையில்  நடந்து செல்லப்பட முன்வைக்கப்பட்ட  சந்தர்ப்பத்தில் நடைக்கு அழைக்கப்படாக் கவிதைகள் குறித்து சிலவற்றைப் பேச வேண்டும்.


போடுதடிகளின் கவிதை அடையாளத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் கவிதைகள் எப்பொழுதும்  எம்மைப் பேரானந்தம் கொள்ள வைப்பவைகள்தான்.. வாசிப்பின் இதத்திலிருந்து மட்டுமல்ல அவை  இந்த சமூகத்தைச் சுட்டி நிற்கும் தர்க்கங்கிளிலும் எம்மைப் பேருவகை கொள்ளச் செய்கிறது.


1.

கனமழை பெருத்து ஓய்கிறது.

காற்று புயலாய் வீசுகிறது.

சக்கரங்களை உருட்டத் தொடங்கும் சிறார்களின் சிரிப்பொலி.


இன்னொரு பெருமழை.சோவெனப்பெய்ய

வீட்டிற்குள் நுழைகிறார்கள் சிறுவர்கள்.



2.

தற்செயலாகத் தான் முறைத்துப் பார்த்தது போது

சற்று நேரத்தில்

செயற்கையாகப் புன்னகைத்தனர்

என்னவோ யோசினையில்

கைகள் முட்டி விட்டதாக

தொட்டுக்கொண்டனர்

இரு குவளைகளுக்கான நீர் கொதித்துவிட்டது

மேசையில்

அவர்களுக்கு நடுவில்

வெறுந்தேநீர் ஆவிவிட்டபடி

இப்போது

அமைதியாக நிறைவேறியது ஒப்பந்தம்

கசப்பின்றி அருந்த

அவரவருக்கான சீனியை அவரவர் போடட்டும்.

3.

தன் தோள்களை உயர்த்தியும்

 கிளைகளை அசைத்தும்

 இலைகளால் நகைத்தும்

 உடல் மொழியால்

 தன் பேச்சுக்கு மெருகூட்டியது

 மரம்

நாட்கள் கழிய

 கிளைகளும் நுனிகளில் முகையும்

 அரும்பும் துளிரும் விரியத் தொடங்கின

 என்னுள்.

4.

நுளம்புகளுடன்  கைகுலுக்கி கதைக்கதான் ஆசை.

அதற்குள் செத்துவிடுகிறார்கள்

ஒரு தடி எடுத்து அடித்ததில்லை

மற்றவர் இரத்தத்தினை உறிஞ்சிக்

குடிப்பது தவறு

ஒரு கைலாகு கொடுத்து

கதைக்கலாமென்றால்

அதற்குள் இறந்துவிடுகிறார்கள்

 

 

 

என்றவாறாகப் பரவலாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்  இந்தவகைத் தமிழக் கவிதை வரிகள் என்ன வகை தர்க்கத்தை நமக்குள் விதைக்கின்றன. இவற்றால் நமக்குள் என்ன உரையாடல்   நிகழும்?  இந்த வகை வரிகளுக்குள் இருந்து உருக்கொள்ளக் கூடிய விதை எது? என்று கேட்டால் எதுவுமில்லை. இப்படித்தான் இழவெடுத்தலைகிறது ஈழத்துக் கவிதைச் சூழல். இதற்குள் பரீட்சாத்தக் கவிதைகள் என்றும் மற்றவருடைய கவிதைகளை மீளத் திருத்தி எழுதுதல் என்றும் கவிதைக்கான போஸ்ட் மோர்ட்டம் என்றும் இன்னொருபக்கம் கவிதைக்கு வைத்தியம் பார்க்கிறார்கள்.

 

ஆனால் இவற்றையெல்லாந்தான் நாம்  தற்காலக் கவிதைகள் எனவும் இதனை எழுதுபவர்களைக் கவிஞர்கள் எனவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சமூகத்தை தன் முன்னால் நிறுத்தி அதனை எதிர்கொண்டு உளல வைக்கும் தர்க்கம் கொண்ட கவிதைகளை அதனை எழுதிவிடும் கவிஞர்களை  இந்தப் “புதிர்க்”  கவிதைச்  சமூகத்தினரால் புரிந்து கொள்ளளவே முடிவதில்லை. இந்த வகைப் புதிர்கவிதைத் தொகுப்பாளர்களால் தொகுக்கப்படும்  கவிதைப் பரப்பிற்குள், எதிர் கொண்டுழலும்  கவிதைகள் தெரிவு கொள்ளப்படுவதில்லை.  இந்த வகைப் புதிர்க்கவிதைச் சமூகத்தினரால் மொழி பெயர்ப்பிற்குள்ளாகும் கவிதைகளுக்குள்ளும் உளல வைக்கும் கவிஞர்களின் கவிதைகள் அடங்குவதில்லை. அப்படி அடங்கினாலும் இவை ஒரு அடையாளத்திற்கானதாக இருக்குமேயல்லாமல் அந்தக் கவிஞர்களின் தர்க்கம் கொண்ட கவிதைகளை அவர்களால் விளங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. மொழி பெயர்க்கவும் முடிவதில்லை. அதனைத் தமது தொகுப்பிற்குள் கொண்டு நகர்த்தவும் முடிவதில்லை.  

அதனை விட இந்தக் கவிஞர்களை அவர்களால் அடையாளம் கொண்டு நெருங்கவும் முடிவதில்லை. கவிதை பற்றி உணர்பவர்களால் மட்டுமே இவர்களின் கவிதைக்காலை அன்றாடம்  கட்டித்தழுவ முடிகிறது. இதற்கான ஒரே காரணம் கவிதை குறித்த அறிதல் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. அவர்கள் கொண்டியங்கும் அறவு கெட்ட அரசியல் கருத்துக்களுமேதான் காரணமாக இருந்து விடுகிறது. ஒரு கவிதை குறித்த பார்வை என்பது அது புலமையோடு மட்டும் கணக்கிட்டுக் கொண்டுவிட முடியாது. 

இந்த வகைப்பாட்டுப் புரிதலோடு இன்று பெருகியெழும் கவிதைத் தொகுதிகளின் வெளியீடுகளும் ஏற்கனவே வெளிவந்திருக்கின்ற எண்ணற்ற கவிதைத் தொகுதிகளும் குறித்து நாம் மலைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதனால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. நமக்குள் எழுந்திருந்த எத்தனையோ கவிஞர்கள் கவிதைத் தொழிலை மறந்து வேறு தொழிலுக்குப் போய்விட்டார்கள். பணத்தை மட்டும் குறிபார்த்து இயங்கும் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் யார் எதை எழுதிக் கொடுத்தாலும் “தமிழ்ப்பரப்பில்  முக்கிய கவிதைகள்” என்றவாறாக அதற்கு ஒரு வியாக்கியானம் எழுதிப் பதிப்பிட்டு விடுவதால் அவை நமக்குள் எவ்வித தர்க்கங்களையும் ஏற்படுத்திவிடுவதில்லை. அவை இந்த சமூகத்திற்குள் நிலைத்து நிற்பதும் இல்லை.

இந்த வகைத் தமிழ்ப்பரப்பின் முக்கிய கவிதைகளின் பரப்பிலிருந்து நான் கவனம் கொள்ளும் ஒரு கவிஞராக, அண்மைய காலத்தின் பெரு அதிர்வுகளையும் காலாவதியாகாத கவனக் குவிப்போடு கவிதையைக் குலைத்து விடும் மனப்பான்மையோடு வர்த்தைகளை நகர்த்தும் கவிஞராய் இந்த இடத்தில்  மைக்கேலை அடையாளப்படுத்துகிறேன்.

Jeyaruban Mike Philip என்ற பெயரில்  எழுதிவரும் மைக்கேலுக்கு மிக நீண்ட இலக்கியத் தொடர்ச்சியும்   ஈழப்போராட்டப்  வாழ்வு முறையும் உண்டு. அவை வேறு இடத்தில் பேச வேண்டியவை. ஆனால் அந்த மைக்கேலை எழுத்துக் கூடாக மட்டும்  நெருங்கியவன் என்ற அடிப்படையில் அவரது எழுத்து முறை எமக்குள் என்ன தர்க்கத்தை விளைவிக்கக் கூடியவை என்பதனையும் அவை எவ்வாறு கவனம் கொள்ளப்படுகிறது என்பதனையும் சொல்லும் இடமே இது.(மைக்கேலின் படங்களில் அவருடைய எழுத்தின் அடையாளத்தை முன்வைத்து அணுகும் போது எனக்குப் பிடித்த பார்வை இது என்பதால் இந்தப் படத்தைப் பதிவு செய்கிறேன்.)





 

அண்மையில் மைக்கேல் எழுதிய இரண்டு பதிவுகள் குறித்துப் பேசுவதன் மூலம் இந்தப் பதிவினைத்  தொடங்குகிறேன்.

 

  1. ஒரு அனுபவப் பகிர்வு.

*******************

உங்களுக்குத் தெரியும், நான் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறுபவன்.

கடந்த மூன்று வருடங்களாக கோவிட் வைரஸ் உக்கிரமமாக இருந்தபோதும், நான் கோவிட் நோயாளிகளுக்கு உணவு கொண்டுபோயிருந்தேன். வைரஸ் என்னைத் தாக்கவில்லை. மிகவும் பாதுகாப்பான வலயத்தில் உலவியதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட, எனக்கு herd immunity இருப்பதாக நான் நம்பியிருந்த பொய்த்துணிச்சலும் காரணமாக இருக்கலாம்.(இருக்கலாம்!).

***

கடந்தவாரம் ஏதோவொரு பிறள்நடவடிக்கையால் என்னைக் கோவிட் பீடித்துவிட்டது.

காய்ச்சல், வயிற்றாலடி, மூட்டுநோவு என இரண்டுநாள் துன்பமாக இருந்தது.

மூன்றாவதுநாள், சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தைப் படிக்கக்கூடியதாக உடம்பு முன்னேறியிருந்தது.

****

இப்போது இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்றால், கோவிட்டின் பின்விளைவாக, எனக்கு ஞாபகம் தடுமாறுகிறது…. மூக்கில் இருந்து இரத்தச்சொட்டு வீழுகிறது… நீண்ட சுவாசமெடுக்கும்போது உடல் நடுங்குகிறது. ஜெயமோகனையும் படிக்கமுடியவில்லை. முகநூல் கவிதைகளைப் படிக்கும்போது, கண்களில் கண்ணீர் வருகிறது. நான் அவ்வளவுக்கு உணர்ச்சிகரமானவன் இல்லை என்றாலும், கோவிட் என்னைப் பலவீனன் ஆக்கிவிட்டது.

****

முடிந்தவரை கவனமாக இருங்கள் நண்பர்களே! இதுவொரு ஆட்கொல்லி நோய்.

(30 நவம்பர் 2022)

 

இந்தப் பதிவை அவர் எழுதியபின் அவரை நலம் விசாரித்தவர்களும் அவரைக் குணமடைய வேண்டும் எனச் சொன்னவர்களுமே அதிகம். இதற்குள் சொல்லப்பட்டிருக்கும் இலக்கிய அரசியற் கருத்து நிலையை அவர்கள் தெரிந்து கொள்ளவோ அல்லது அது குறித்து உரையாடவோ அவர்களால் முடியாதிருந்தது. இதுதான் இன்றைய அறிதல் நிலை. 

ஒரு ஆட்கொல்லி நோயிலிருப்பவருக்கு ஆபத்தான எழுத்துக்களாக அக்காலத்தில் படிக்கத் தடை செய்யப்பட வேண்டிய எழுத்துக்களின் நிலைய அவர்  சொல்ல வரும் காலம் மிக முக்கியமானது என நினைக்கிறேன்.

ஒரு அரசியல் நிலைப்பாடும் அது குறித்த காறார் புரிதலுமற்ற எழுத்துக்களினூடாக மட்டும்  அன்றாடம் அலைந்துழலும் நமக்கு தர்க்கம் “டபெக்”தைத்து விடுகின்றன.அவை உள் நுழைந்து எம்மை உருக்குலைய வைக்கின்றன. அந்த எழுத்துக்களின் காலை நாம் கட்டிப்பிடித்தபடியேதான் தினமும் கடக்கிறோம். அந்த வகையில் நான் மேற் சொன்ன பரம பிதாக்களின் வாய்ச் சொற்களில் நுழையாத பெயர் மைக்கேல். அவர் குறித்து நிற்கும் எழுத்துக்களை விரிவாக எனது அறிதலுக்குள்ளால் பேசுவதே பெரும்பணி. 

கனடா மொன்றியலில் வாழும் ஒரு ஈழத்து எழுத்தாளர். அவர் எழுதிய இன்னொரு பதிவு இது.

  1. stethoscope

*********************

எதிர்க்கவிதை எழுதக்கூடிய ஒரு வைத்தியனை நேற்று lift இல் கண்டேன்.

ஓய்வுபெறக்கூடிய வயது என்றாலும், அகன்ற மார்பும், பிடரிமயிர் கீழிருந்து சிலிர்த்து மேல்நோக்கியிருந்த சிங்கமயிருடனும்,நையாண்டிபேசும் கண்களுடன் எனைச் சந்தித்தார்.

***

நான் ஏழு மாடிகளிலிருந்து சாப்பாட்டு வண்டில்களைக் கீழே, கழுவுவதற்காக இழுத்துவரவேண்டும். ஏழாவது மாடியிலிலிருந்து ஆரம்பித்து, ஆறு,ஐந்து, நாலு, மூன்று என ஒவ்வொரு தளத்திலும் உணவு வண்டில்களைத்தேடிக்கொண்டு கீழே வருவேன்.

***

நான் வழமைமைபோல ஏழாவது மாடியிலிருந்து, கீழிறங்கும்போது, ஆறாவது மாடியியில்,கழுத்தில் தெதஸ்கோப்புடன் இந்தக்கிழவர் நுழைந்தார்.

“நானும் உன்னுடன் பயணிக்கலாமா” எனக்கேட்டுக்கொண்டு பதிலுக்குக் காத்திராமலேயே liftஇற்குள் நுழைந்து கொண்டார்.

****

“உள்ளே வாருங்கள் டாக்டர்” என வரவழைத்த பின், நான் ஒவ்வொரு மாடியிலும் தங்கிவரவேண்டியிருக்கும் என்பதை விளங்கப்படுத்தினேன்.

“நான் உனக்காகக்காத்திருப்பேன். எனக்கு அவசரமொன்றுமில்லை” என்றார்.

****

நான் ஒவ்வொரு மாடியிலும், உணவு வண்டில்களைத் தேடி இழுத்துக்கொண்டுவரும் வரைக்கும், lift இன் கதவுகளைத் திறந்துவைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருந்தார்.

நான்கு உணவுவண்டில்களைச் சேகரித்துக்கொண்டு தரைத்தளத்தில் நான் வெளியேறுவதற்கு முன்னர்தான் கவனித்தேன், டாக்டர் நிலக்கீழ் அறைக்குச் செல்வதற்கான பொத்தானை அழுத்தியிருந்தார். அங்குதான் mortuary இருக்கிறது.

****

“மிக்க நன்றி டாக்டர்! உங்களது நேரத்தை நான் விரயம் செய்துவிட்டேன். மன்னிக்கவும்” என்றேன்.

“Dude! எனக்கு ஒரு அவசரமுமில்லை. என்னுடைய patients ஏற்கனவே இறந்தவர்கள்தானே!” என்றார்.

(6 நவம்பர்2022)

 

மைக்கேலின் எழுத்தின் தர்க்கங்கள் குறித்து நாம் அதிகம் பேச வேண்டியிருக்கிறது. வாழ்வின் பெரும் வலிகளை தன்னுடைய வாழ்பனுபவத்தின் வழி மெல்லக் கடத்தி மொழியிற்குள்ளால் அதனைச் சீர் குலைத்து விடுவதில் வல்லவர் அவர். 

வயோதிபர் நிலையத்தில் உணவு பரிமாறும் தொழிலில் ஏற்படும் சிறு சிறு சம்பவங்களைச் சொல்வதாக உணரப்படும் கதைகளின் உள்நோக்கம் மிகப்பெரியது. மனித சமூகத்தின் துர்வாடையை லாவகமாக நுகரச் செய்யும் கதைகள் அவருடையவை.

எப்பொழுதும் தன்னுடைய கருத்தியலில் இருந்து மற்றவர்களால் கரைத்துவிட முடியாத அவர் இன்று வரை தனன்னுடைய எழுத்துக்களை தொகுத்துவிட விரும்பவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் எத்தனையோ சீரழிந்த கதைகளை அனுபவத்தினூடகக் கொண்டிருக்கும் மைக்கேல் தன்னுடைய எழுத்திற்குள்ளால் அதனை அவ்வப்போது எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து அவதானிப்பவர்கள் அதனை அவ்வப்போது  உணர்ந்து கொள்ள முடிந்தாலே பெரும் சிறப்பு.

ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. மிகக் கவனமாக இவ்வாறான எழுத்துக்கள் நாம் வாழும் சமூகத்தில் கவனம் கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. சிக்கலேதுமற்ற வாசிப்பு மனதிற்குள்  எந்தத் தர்க்கங்களையும் நிகழ்த்தாத கவிதைகள் எழுதுபவர்களைத்தான்  கவிஞர்கள் என அடையாளம் காட்டிக் கொண்டாடும் போலி மனநிலையை காலாவதியாக்க வேண்டும். இந்த சமூகத்தை தம்முடைய ஒற்றை விரலால் சுட்டி நிற்கும் எழுத்துக்களை இன்றுள்ள பலர் தொட்டுவிடவும் விரும்புவதில்லை. அவை  தமக்கும் தமது எழுத்திற்கும் எப்பொழுதும் பெரும் இடைஞ்சல் தரக் கூடியது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கவிதை குறித்து உரையாடத் தொடங்குவதாகச் சொல்லும் பல தளங்களில் இந்த உரையாடல் நிகழுவதில்லை. மைக்கேலின் எழுத்துக்களை தொடர்ந்து நாம் அணுக முற்படும் வேளை இன்னும் பல விடயங்களை மேற்கொண்டு பேச முடியும். தொடர்ந்து பேசுவோம்.


நன்றி அபத்தம் சஞ்சிகை ஜனவரி இதழ் http://www.thayagam.com/wp-content/uploads/2023/01/Apaththam-first-issue-1.pdf

No comments:

Post a Comment