Sunday 2 April 2023

பக்கத்தின் பக்கம் - சாருநிவேதிதா .3

பக்கத்தின் பக்கம் கற்சுறா
சாரு நிவேதிதாவின் பாரிஸ் பயணம் குறித்து நான் எழுதும் மூன்றாவது பதிவு இது. தன்னுடைய பாரீஸ் பயணம் குறித்து இவன் தனது கோணல் பக்கங்களில் மிக நீண்ட பதிவாக அதனை எழுதியிருந்தாலும், அவன் குறித்த எனது கருத்தினை முதலாவது பதிவாக நான் எழுதியவுடன் விரைவாகவே என்னைக் குறித்த பக்கங்களை அதிலிருந்து நீக்கிவிட்டிருந்தான் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். இவன் குறித்த பதிவை முதன் முறையாக நான் எழுதிய போது தொடர் பதிவுகளை நான் அவ்வப்போது எங்கேயேனும் எழுதுவேன் என்றே குறிப்பிட்டிருந்தேன். அதில் நம்மவரிடம் இருந்த கமாரா ஒன்றை எவ்வாறு திருட நினைத்தான் எனவும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கெனக் கொடுத்துவிட்ட பொருட்களையும் பணத்தையும் எவ்வாறு கையகப்படுத்தினான் எனவும் சொல்லியிருந்தேன். . இந்தப் பதிவில் பிரான்சின் ஒறதூர் என்ற கிராமத்திற்கு அவனை அழைத்துச் சென்ற கதையை எழுதுகிறேன். இது எனக்குச் சாத்தியமாகும் மூன்றாவது இடம். உண்மையில் இந்தக் கதையை எழுதும் போது மிகுந்த வெட்கத்துடனேயே நான் எழுதிக் கொள்கிறேன் என்பதனைச் சொல்லிக் கொள்கிறேன். இப்போதுள்ள நிலையில் இந்த விடயங்களை நீங்கள் வாசிக்கும் போது என்மீதும் எனது நண்பர்கள் மீதும் உங்களுக்கு அதிக கோபம் தோன்றுவதும், இவை எங்களுக்குத் தேவையான சம்பவம் எனவும் இவ்வாறு தமிழ்நாட்டுக்காரர்களுடன் சவகாசம் வைத்துத் திரிந்ததற்கு இதற்குமேல் இன்னும் வேணும் என்று தோன்றுவதும் சாத்தியமானதே. ஆனால் நமது நிலை அப்படியல்ல. நாம் எழுதத் தொடங்கிய காலங்களில் - அந்தத் 90இன் இறுதிக் காலங்களில் ஈழத்திலிருந்து எமக்கு எந்தத் தொடர்புகளும் இல்லை. எங்கள் குடும்பங்களினூடான தொடர்பும் அறுந்தறுந்து தொங்கிய தொடர்பாகவே இருந்த காலங்கள் அவை. யுத்தம் பல்வேறு நிலைகளில் ஈழத்தைச் சூழந்திருந்த காலங்கள் அவை. அப்பொழுது எக்ஸில் சஞ்சிகையை நாங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தோம். புலம்பெயர் சூழலிலும் சரி அதனைப் புகலிடம் எனச் சொல்லும் சூழலிலும் சரி எக்ஸில் சஞ்சிகையில் பலர் எழுதத் தயங்கிய காலமாக இருந்தது அது. அந்தக் காலத்தில் எமக்குக் கிடைத்த தொடர்புகள் மிக அதிகமாகத் தமிழ்நாட்டிலிருந்துதான் கிடைத்தது. எக்ஸில் சஞ்சிகைகள் சிலவற்றை நாம் தமிழ் நாட்டில் கூட அச்சிட்டோம். நமது புகலிடச் சூழலில் அச்சகத் தொடர்புகளை வைத்திருந்தவர்களது அடவாடித்தனங்களை விட எமக்குத் தமிழ்நாட்டின் தொடர்பு இலகுவானதாக இருந்தது. ஆனால் அவற்றை அங்கே அச்சிடும் தொடர்ச்சியை தொடர்ந்து செய்யமுடியாத கதை வேறு ஒரு கதை. அவை தனியாக எழுதப்பட வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து அ.மார்க்கஸ்- சாரு நிவேதிதா- லெனாகுமார்- விக்கிரமாதித்தயன்- கைலாஷ் சிவன்-ஜமாலன் போன்ற பலர் எக்ஸிலில் எழுதினார்கள். ஈழ யுத்தத்தின் மீதான தொடர் எதிர்க் குரலை அன்றைய பொழுதில் வெளிப்படுத்தி வந்த இதழ்களில் எக்ஸிலும் ஒன்றாக இருந்தது அதனோடு இணைந்து வேலை செய்த பலர் தமது பெயர்களைக் கூட வெளியிட வேண்டாம் எனச் சொல்லி எம்முடன் இணைந்திருந்த காலம் அது. அந்தக் காலத்தில் வெளிப்படையாக நுழைந்தவன் தான் சாரு என்ற அயோக்கியன். இவன் எங்களுக்கு ஏற்படுத்திய அவமானத்தை நான் வெளிப்படையாகச் சொல்லாது விட்டால் நான் தெரிந்தும் தவறு செய்தவனாவேன். இவனிடம் ஏமாந்த கதை எனக்கு வெட்கமெனினும் அதனைச் சொல்லாது விட்டால் அவமானம். அதனால் தான் இதனை எழுதுகிறேனேயொழிய சொல்வதானால் எனக்கு அவமானம் ஏதுமில்லை. அதனைச் சொல்வதனால் எனக்கு அவமானம் எனினும் அப்படிப்பட்ட அவமானமும் எனக்குப் பொருட்டில்லை. இனி அந்த ஓறதூர் கிராமத்திற்குச் சென்ற கதைக்கு வருகிறேன்.
ஒறதூர் என்ற கிராமம் பாரீசிலிருந்து ஏறத்தாழ 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். 1945 ம் 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் உள்ள ஓறதூர்-சுர்-கிளேன் கிராமம், போரிடாத பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 643 பொதுமக்கள் ஜெர்மன் நாசிகளால் படுகொலை செய்யப்பட்டபோது அழிக்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.. போருக்குப் பிறகு அருகில் ஒரு புதிய கிராமம் கட்டப்பட்டது. பழைய கிராமத்தின் இடிபாடுகளை நிரந்தர நினைவுச்சின்னமாகவும் அருங்காட்சியகமாகவும் இன்றுவரை பிரெஞ்சு அரசு பாதுகாத்து வருகிறது. இன்றுள்ள வசதியில் அதுகுறித்து கூகிளில் தேடினால் அதிக விடயங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அன்றைய காலம் அப்படியல்ல. எங்கள் நாடு யுத்தத்தால் சூழ்ந்திருந்தது என்பதனாலும் இதேபோன்ற படுகொலைகளை நித்தமும் எதிர் கொண்டிருந்ததாலும் இந்த ஒறதூர் கிராமத்தின் அடையாளம் எமக்குள் ஒரு உருக்குதலைத் தந்தது. இவ்வாறான ஒரு கூட்டுப்படுகொலையை கந்தன் கருணையிலும் காத்தான் குடியிலும் புலிகள் நிகழ்த்தியிருந்ததும் அதற்கும் மேலாய் ஊர் ஊராய் ஒழித்தழித்த இலங்கை அரசினது காவு கொள்ளல்கள் எண்ணிக்கையற்றது. அவற்றின் உதாரணங்களாய் பாவற்குளம் செட்டிகுளம் கிராமங்கள் அப்போது இவ்வாறான உரத்த யுத்த சாட்சியங்களோடு காட்சியளித்தவை. ஆனால் அதுபோன்ற பலவற்றின் சாட்சியங்களை நாமே பாதுகாக்கத் தவறினோம். நினைவலைகளில் கூட ஒளித்துவைக்கத் தவறினோம். இவ்வாறு பாதுகாக்கத் தவறிய குற்றத்தை மறந்து இன்று அந்தவகைக் குற்றங்களுக்கு என்ன ஆதரம் இருக்கிறது என இன்று எம்மை நாமே கேள்வி கேட்கிறோம். இதுதான் அபத்தம். ஆனால் இந்த ஒறதூர் கிராமம் ஜெர்மனிய பாசிசத்திற்கான உன்னத சாட்சி. இந்த சாட்சியை நேரடியாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சாருவை அழைத்துப் போனேன். தமிழகத்தில் இருந்து வந்த ஒரு”உன்னத” எழுத்தாளனுக்கு அதன் நேரடி உணர்வைத் தெரியப்படுத்தவேண்டும் என்பது நம் நண்பர்களது விருப்பமாகவும் இருந்தது. பாரீசில் “லூவ்ர் மியூஸியம்” “நோர்த் டாம் சேர்ச்” “ஈபிள்ரவர்” என்று மிக முக்கிய வரலாற்றுத் தளங்களை நாம் காட்டி வந்தாலும் பாரீசின் புறபிராந்தியங்களின் வரலாறுகளை ஓர் அனுபவத்திகாகவேனும் இவர்களுக்கு அறியச் செய்ய வேண்டும் என்ற விருப்பு நமக்கிருந்தது. அதன் நிமித்தமே சாருவை அங்கே அழைத்துச் செல்வதற்குத் திட்டமிட்டேன். என்னிடம் நீண்ட தூரம் பயணம் செய்வதற்குரிய வாகனம் இருந்தாலும் எனக்கு நீண்ட தூரப் பயணம் செய்த அனுபவம் இல்லாததால் என்னால் தனியே கூட்டிச் செல்ல முடியாதிருந்தது. ஒறதூர் கிராமம் பாரீசிலிருந்து ஏறத்தாழ 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமம். குறைந்தது 5 மணிநேரமாவது வாகனம் ஓட்ட வேண்டும். எனக்கு அந்த அனுபவம் அப்போது இல்லை. நாம் அனைவரும் “தங்கம்” என்று அழைக்கும் சுந்தரலிங்கம் அவர்களை ஓட்டியாக வரும்படி கேட்ட போது மிகுந்த விருப்புடன் சம்மதித்தார். ஒரு சமூக அக்கறையாளனாகவும் செயற்பாட்டாளனாகவும் சினிமா நாடக நடிகனாகவும் தொடர்ந்து இயங்கும் அவர் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு “உன்னத” எழுத்தாளனுக்கு பிரான்சின் வரலாறை அறிந்து கொள்ள வைக்க எடுக்கும் முயற்சிக்கு தான் செய்யும் கடமை என்பதாக நினைத்து உடனேயே சம்மதித்தார். அதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டு மூவருமாகப் புறப்பட்டோம். மற்றய நண்பர்கள் எம்முடன் இணயமுடியாதபடி அவர்கள் வேலை இருந்தது. அக்காலத்தில்தான் நீண்ட காலம் செய்த வேலையிலிருந்து என்னை நீக்கியிருந்தார்கள். அதனால் எனக்கு அது சாத்தியமாகியது. அந்த வேலை நீக்கத்தால் நான் பெரும் பணக் கஸ்டத்திற்கு உள்ளாகியருந்த காலம் அது. இருந்தாலும் சாருவுக்கு இதனை அறியச் செய்வதில் இருந்த அக்கறை அந்தக் கஸ்டத்தைப் பொருட்படுத்தவில்லை. ஒறதூர் கிராமத்திற்குச் சென்று வர எடுக்கும் பெற்றோல் மற்றும் உணவுக்கான பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு நாங்கள் வெளிக்கிட்டோம். போகும் வழியெங்கும் கவிஞர் இன்குலாப்பின் பாடல்களைக் கேட்படியே பயணம் செய்து கொண்டு பிரான்சில் அகதிகளாக வாழ்வதின் அவலம் குறித்துப் பேசியபடியே சென்றோம். அதனை சாரு கேட்டானோ இல்லையோ தெரியாது. நீங்கள் எவ்வளவோ கஸ்டப்படுகிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டில பிணங்களுடன் புணர்வு செய்ய இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். இறந்த சில்க் ஸ்மிதாவுடன் எத்தனை பேர் புணர்ந்தார்கள் தெரியுமா உங்களுக்கு? என்று தமிழ் நாட்டு இளைஞர்கள் குறித்து வசைபாடியபடியே வந்தான். தனக்குத் தமிழ் நாட்டில் வாழப் பிடிக்கவில்லை என்றான். ஒரு எழுத்தாளன் நிம்மதியாய் வாழக்கூடிய நாடு அது இல்லை என்றான். நாம் கிட்டத்தட்டப் பாதித் தூரத்தைக் கடந்திருந்தோம். ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் நிறுத்தி பெற்றோல் நிரப்பிக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் விரும்பி உண்ணும் உணவான “ French baguette sandwich” இல் மூன்று சான்ட்விச்சை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துக் கொண்டு மீளப்பயணித்தோம். நானும் தங்கமும் சான்ட்விச்சை உண்ணத் தொடங்கியிருந்தோம் சாரு அதனைத் தொடவேயில்லை. சாப்பிடுங்க எனச் சொன்னதும் சாண்ட்விச்சைத் தூக்கியெறிந்து இந்தக் கறுமத்தையெல்லாம் என்னால் திங்க முடியாது என்றான். இங்கே புரியாணி பரோட்டா எல்லாம் வாங்க முடியாது சாரு இது ஒரு அற்புதமான உணவு. பிரெஞ்சுக்காரர்கள் ஒருநாளும் வெறுத்துக் கொள்ளாத சாப்பாட்டு வகை இது. முதலில் இதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு எறியுங்கள் என்றேன். அவன் மசியவில்லை. விழுந்த இடத்திலிருந்து சான்ட்விச்சை எடுக்கவும் இல்லை. அவன் “திங்கவும்” இல்லை. நாம் அது குறித்து அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திவிட்டோம். நாம் ஒறதூருக்குள் நுழைந்து கொண்டிருந்தோம். மிகுந்த சிரமத்துடன் எங்கள் பின்னால் நடந்து கொண்டிருந்தான் சாரு. தன்னால் இவ்வளவு தூரம் நடக்கமுடியாது எனப் புறுபுறுத்தபடி வந்து கொண்டிருந்தான். அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் “சைலன்ஸ் பிளீஸ்” என வாசகம் எழுதப்பட்டடிருந்தது. அதனை அவனுக்குச் சுட்டிக்காட்டினேன். அதன் பின் அவன் வாயைப் பொத்திக் கொண்டு வந்தான். இடிந்த கட்டடங்களும் அதற்குள் மாண்டுபோன மக்களின் வாழ்வு உபகரணங்களும் என கைவிடப்பட்ட தடயங்களுக்குள்ளால் நாங்கள் நடந்தபடி இருந்தோம். எந்த வீட்டில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள், எந்த இடத்தில் உணவகம் இருந்தது என்ற அடையாளங்களை மட்டும் இடிந்து போகாத ஒரு சுவரில் குறிப்பிட்டிருந்தார்கள். முடியுமானவரை எனது கமராவைக் கொண்டு அவனைப் படம் பிடித்தேன். அவனுக்கு எந்தவித ஈர்ப்பும் அந்த இடங்கள் குறித்து இருக்கவில்லை. வெறும் சலிப்போடே அவற்றை அவன் கவனித்தான். முடியுமானவரை அவற்றைச் சுற்றிக்காட்டியபின் நாம் பாரீஸ் திரும்ப முடிவெடுத்தோம். மீண்டும் ஏறத்தாள 500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் காரை நிறுத்திப் பெற்றோல் நிரப்பிக் கொண்டு பெருந்தெருவில் இறக்கினோம். உண்மையில் அந்தப் பயணத்திற்காக நாம் அறுதியட்டு வைத்திருந்த செலவை நாம் தாண்டியிருந்தோம். பரீசை நெருங்கும் தருவாயில் எம்மிடம் கையிலிருந்த பணம் முற்றாகத் தீர்ந்திருந்தது. இறுதியாக நாம் செல்லும் பெருந்தெருவினைக் கடப்பதற்குப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. எம்மிடம் அதற்குரிய தொகை இருக்கவில்லை. அவசர வேதைவைக்காக உதவும் எனக் கையில் வைக்கச் சொல்லி எப்போதோ சாருவிற்கு கொடுத்த பணத்தை அவன் வைத்திருந்தான். “அதனைத் தாருங்கள் பாரீஸ் வந்ததும் திரும்பத் தருகிறோம்” எனச் சொல்லிக் கேட்டோம். முதலில் மறுத்தான். பின்னர் வேறு வழியின்றி எம்மைத் திட்டடியபடி “இப்படியாகுமென்றால் நான் இதற்கு வந்திருக்க மாட்டேன்” என்றான். அவனது பணத்தை எமக்காகத் திரும்பக் கேட்கவில்லை. அவனுக்கு நாம் கொடுத்து வைத்திருந்த பணத்தையே கேட்டோம். அதனையும் திரும்பத் தருகிறோம் என்று சொல்லியே கேட்டோம். ஆனால் அந்த அயோக்கியன் அதற்கு எங்களைத் திட்டினான். தனக்கு இந்த ஒறதூரையே பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றான். நானும் தங்கமும் ஆளையாள் முழித்துப்பார்த்தபடி திண்டாடினோம். உண்மையில் எம்மை நினைத்து இன்றுவரை வெட்கப்படுகிறோம். இந்த வகை முட்டாள்களாக நாம் இருந்திருக்கிறோம் என்பது இன்றுவரை உறுத்துகிறது. ஆனால் இந்த அயோக்கியனை இன்னொரு உலகம் இன்றும் எழுத்தாளனாகக் கொண்டாடுகிறது. சமூகத்தின் அத்தனை விழுமியங்களையும் மனங்கொண்டறிந்து அதற்குள்ளாகத் தன் அறிவினூடாகப் பயணித்து எதிர் கொள்ளும் எழுத்துக்களைத் தருபவர்களையே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வாழ்வில் இந்த வகைத் தற்குறிகள் நம்மை வந்தடையும் போது அல்லது காண நேரும் போது எழும் ஏமாற்றம் சொற்களில் சொல்ல முடியாதவை.
சாருநிவேதிதாவின் பாரீஸ் பயணத்தில் நான் கட்டறிந்த அசிங்கங்கள் ஏராளம். ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடிய எந்தத் தார்மீகக் கரிசனையும் அவனிடம் இருந்ததில்லை. அண்மையில் நோர்த்தடாம் தேவாலயம் எரிந்தபோது அவன் அவலக்குரலெடுத்து தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தான். அழகிய பாரீசின் தேவாலயம் எரிந்தது என்று. அந்த அழகிய பாரீசின் அதிகமான இடங்களை நானே அவனுக்குச் சுற்றிக் காட்டினேன். அந்தப் பொழுதுகளிலெல்லாம் நாங்கள் பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல. புலம்பெயர் வாழ்வின் எந்த அர்த்தங்களையும் அவனால் ஒருபொழுதிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் ஒரு பெரிய ஆன்மா. அதற்கு அடிமைச் சேவகம் செய்ய வேண்டியவர்கள் நீங்கள் என்பதாகவே அவனது ஒவ்வொரு செயற்பாடுகளும் இருந்தன.ஆனால் தற்குறியாகத் தமிழ் நாட்டில் எந்த அவலத்தைச் சொல்லித் தன்னை முன்நிறுத்த முடியுமோ அதனை மட்டுமே அவன் எழுதிக் கொண்டிருந்தான். அதற்காக அவன் பணமும் பெற்றான். என்வீட்டில் நடந்த சம்பவம் ஒன்றையே அவன் கதையாக எழுதி அதனையும் தவறாக எழுதி குழுதம் இதழிற்கு அனுப்பிப் பணமும் பெற்றான்.(குழுதம் கதை குறித்த பதிவினை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.) இவனைப் பின்பற்றும் இந்த அயோக்கியத் தனத்தைப் பின்பற்றும் பலர் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். ஈழத்திலும் இருக்கிறார்கள் புலம் பெயர் தேசத்திலும் இருக்கிறார்கள் நாங்கள் முன்பு இருந்ததைப் போல். என்ன வேடிக்கை என்றால் இந்த சமூகம் தங்களை இன்னும் நம்புகிறது என இந்த அயோக்கியன்கள் நம்புகிறார்கள். அப்படி ஒருபொழுதிலும் நிகழ்ந்ததில்லை. தற்குறிகளை இந்த சமூகம் ஒவ்வொரு பொழுதிலும் தூக்கி வெளியிலே போட்டுவிடுகிறது. அவமானப்படுத்திவிடுகிறது. தற்குறிகளை இந்த சமூகம் ஒருபொழுதிலும் கையில் ஏந்தி நிற்பதில்லை. அது இந்தத் தற்குறிகளுக்குத்தான் தெரிவதில்லை. நன்றி அபத்தம் சஞ்சிகை ஜனவரி இதழ் http://www.thayagam.com/wp-content/uploads/2023/01/Apaththam-first-issue-1.pdf

No comments:

Post a Comment