Sunday 8 May 2022

சாதியத்தின் சயன நிலை- தர்சன்

 

சாதியத்தின் சயன நிலை


தர்சன்













‘என். கே. ரகுநாதம்’ என்ற இந்த தொகுப்பு ரகுநாதாதனின் வாழ்பனுபங்களை கதைகளிலும், கடிதங்களிலும் பதிவு செய்கிறது. இத்தொகுப்பு விரித்துக்காட்டும் சித்திரங்கள் கடந்தகாலம் எவ்வாறு அமைந்திருந்து என்பதை அறிய உதவுகிறது. அத்தோடு நிகழ்காலத்தை விளங்கிகொள்ளவும் வழியமைத்துத் தருகிறது.


சாதியம் வகுத்த எல்லைகளுக்கு நின்று, அது நிர்ப்பந்தித்த, அனுமதித்த தொழில்களை மாத்திரமே செய்து வாழும் மட்டும் சாதியமைப்பில் அதிகாரங்களைக் கொண்டிருப்பர்வர்களுக்கு எந்தப் பிரச்சனையுமிருக்காது.  ஏனெனில், அது அவர்களின் நலன் சார்ந்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 


சாதிய ஒழுங்கு இருக்கும் மட்டும், அதிகாரமற்ற, அதிகாரம் குறைந்த சமூகத்தவரின் உழைப்புச் சுரண்டலிலும் இன்னல்களிலும் பலனாக அதிகாரமிக்க சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு கிடக்கும் சலுகைகள் நிறைந்த வாழ்வுக்கு எந்தப்பிரச்சனும் ஏற்படப்போவதில்லை.. 


ஆனால், சாதியமைப்பில் தீண்டாமையை எதிர்கொண்டவர், மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சாதியம் கட்டமைத்த எல்லைகளை மீறி, எட்டக்கூடாத உயரங்களை எட்ட முற்படும்போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில், இது சாதியத்தைத் தகர்ப்பதற்கான முன்னகர்வு.


ஆண்டாண்டு காலம் சாதியத்தால் ஆதயங்களைப் பெற்றவர்கள், இந்த முன்னகர்வை இலகுவில் இலேசாக்கிவிடமாட்டார்கள்.


இருப்பினும் அவர்கள்போட்ட தடைகளைத் தாண்டி வராத்துப்பளைக் கிராமத்தில் தீண்டாமையை எதிர்கொண்ட நளவர் சமூகத்திலிருந்து இரண்டு தோழர்கள் ஆசிரியர்கள் ஆகிறார்கள். அதிலொருவர் கவிஞர் பசுபதி. இரண்டாமவர் எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். 


இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும்  ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ என்ற தன் வரலாற்றுச் சித்திரம் இக்கதையைச் சொல்கிறது.


இச் சுய வரலாற்றுச் சித்திரத்தை முவைத்தே என் கருத்துக்களை முவைக்க விழைகிறேன்.


***


‘சாதி ஓழிய வேண்டுமா?‘ என்று கேட்டால், எனக்குத் தெரிந்த அனேகமானோர் ‘ஓம் ஒழியத்தான் வேண்டும்’ என்று சொல்வார்கள்.


‘இப்பெல்லாம் பெருசா சாதியில்லை…’ என்ற இழுக்கும் குரல்களையும் கேட்டிருக்கிறேன்.


‘ஐயா..., ராசா..., உன்னைமாதிரி ஆக்கள் பேசமாலிருந்தாலே காணும். கொஞ்சக் காலத்திலை சாதியெல்லாம் காணாமாற் போய்விடும்’ என்று சொல்பவர்களும் உண்டு.


குறைந்தபட்சம் இவர்களின் கருத்துக்களில் எல்லாம் இருக்கும் பொதுவான விடயம் என்னவெனில் சாதியத்தின் இருப்பை அவை அங்கீகரிப்பதுதான்.


ஆனால், ‘சாதியத்தை எவ்வாறு ஒழிப்பது?’ எனும்போதுதான், கருத்துவேறுபாடுகள் ஏற்படுகின்றன. முரண்பாடுகள் முட்களாக குத்துகின்றன.


சாதியத்தை தனியே தீண்டாமையாகவும், பாகுபாடு பார்ப்பதாகவுமே அனேகர் விளங்கி வைத்திருக்கிறார்கள்.


அப்படியென்றால், தீண்டாமையையும், சாதி ரீதியாக சக மனிதரைப் பாகுபாடு பார்ப்பதையும் இன்றே ஒழித்திவிட்டால், நாளையே சாதியம் அழிந்துவிடுமா?


‘அழிந்துவிடலாம்’ என்று  நினைப்பவர்களுக்கு, ‘இல்லை, அழிந்துவிடாது’ என்பதே என் பதில். 


தீண்டாமையும் பாகுபாடு பார்ப்பதும் சாதியமயமாக்கப்பட்ட சமூக ஒழுங்கை நிலை நாட்டும் கருவிகளே. இந்தச் சமூக அமைப்பின் பிரதான நோக்கம், சாதிரீதியாக அதிகாரங்களைக் கொண்டவர்களை தொடர்ந்தும் சமூகத்தின் ஆதிக்க நிலைகளில் வைத்திருப்பதுவும், அவர்களின் வாழ்வை சௌகரிகமாக்குவதுமே. இந்த நோக்கங்களை அடைவதற்கே, தீண்டாமையும், பாகுபாடு பார்ப்பதும் சமூகக் கருவிகளாக கையாளப்படுகின்றன.


திடீரென்று  சாதிரீதியாக பாகுபாடும் பார்ப்பது, தீண்டாமையும் காணாமல் போனவுடன், அதிகாரமிக்க சாதியப் பின்னணியைக் கொண்டவர்களின் சமூக நிலைகள் மாறிவிடப்போவதில்லை. அவர்கள் அதே ஆதிக்க  நிலையில்தான் தொடரப்போகிறார்கள். 


காலாகாலாமாகச் சாதிய வாதத்தால் சமூக்கதில் உயர்த்தப்பட்டவர்கள் வெளிப்படையான தீண்டாமையும், பாகுபாடும் ஒழிந்த ஒரே நாளில் ‘பொதாரென்று’ வேறொரு தளத்திற்கு வீழ்ந்து சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுடன் சம நிலையை அடைந்துவிடமாட்டார்கள்.


அவர்கள் தொடர்ந்தும் அதிகாரமிகுந்த, பொருளீட்டும் வெளிகளிலெல்லாம் ஆதிக்கநிலையிலையே தொடர்வார்கள். அது, அறிவியல் வெளியாகவிருக்காலாம், வணிக வெளியாகவிருக்கலாம், ஆட்சி அதிகாரவியல் வெளியாவிருக்கலாம், புகழையும் பொருளையும் ஈட்டித்தரும் கலை வெளியாகக்கூட இருக்கலாம். இவ்வாறான எந்தச் சமூக வெளியாவிருந்தாலும் அவர்களின் ஆதிக்க நிலை தொடரத்தான் செய்யும்.


தீண்டமையினது தீவிரமும், சாதியபாகுபாட்டின் உக்கிரமும் குறைந்ததாக நீங்கள் கருதும் எந்த சூழலையாவது உதாரணமாக எடுத்துப் பார்க்கலாம். எந்த எந்த சாதியப் பின்னணியைக் கொண்டோர், எந்த விகிதத்தில் மேற் குறிப்பிட்ட வெளிகளிலெல்லாம் இடம்பிடித்திருக்கிறார்கள் என்று.


நிச்சயமாக, விகிதாசாரத்தின் அடிபடையில் பார்க்கும்போது சாதிய அதிகாரமிக்க சமூகங்களிலிருந்து வந்தவர்கள் தமது சாதியைச் சேர்ந்தவர்களின் தொகையை விட கூடுதலான அளவிலையே மேற்குறிப்பிட்ட வெளிகளிலும் சரி அரச நிறுவனங்களிலும் சரி இடம் பிடித்திருப்பார்கள்.


கனக்க ஒன்றும் யோசிக்கத் தேவையைல்லை. தற்போதிய கனடிய பாராளுமன்றத்தின் எம்.பிக்களை எடுத்துக்கொள்ளுங்கள். சாதியமயமாக்கப்பட்ட சமூகங்களிலிருந்து தெரிவாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சாதியப் பின்னணியைப் பாருங்கள். அனைவரும் ஆதிக்க சாதிய அல்லது அதிகாரமிக்க சாதியப் பின்னணிகளைக் கொண்டவர்களே. அவர்கள் சீக்கிய சமூகத்திலிருந்து தெரிவாயிருந்தாலும் அதுதான் நிலமை. தமிழ் சமூகத்திலிருந்து தெரிவாயிருந்தாலும் அதுதான் நிலமை.


இவ்வாறன நிலமைகள் ஒன்றும் விபத்தாக ஏற்படுவதில்லை. மாறாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சாதிய சமூக அமைப்புக்களின் விளைவுகளே இவைகள்..


சாதியவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சமூக நிலைகள் தொடரும்வரை, வெளிப்படியான தீண்டாமையும், பாகுபாடுகளும் குறைந்தாலும் சரி ஒழிந்தாலும் சரி சாதியம் எம்மத்தியில் நிலைத்திருந்து சத்தமில்லாமற் சயனங்கொள்ளும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 


ஆகவே, சாதியத்தை ஒழிப்பதென்பது தனியே தீண்டாமையையும் பாகுபாட்டையையும் ஒழிப்பது மாத்திரமல்ல. இவற்றிற்கு அப்பாலும் சென்று

சாதிமயமாக்கப்பட்ட  சமூகங்களின் மொழிகள், கலைகள், கல்விக்கூடங்கள், ஆட்சி அதிகார நிறுவனங்கள் போன்ற ஒவ்வொரு கூறுகளிலிருந்தும் சாதியத்தின் பண்புகளை நீக்குவதும், சாதியத்தால் ஏற்படுத்தபட்ட மோசமான சமூகப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதுமாகும். 


இவற்றையெல்லாம் செய்வதற்கு, நாம் முதலிலே சாதியம் எமது சமூக அங்கங்கள் ஒவ்வென்றிலும் எவ்வாறு இயங்கிவருகிறது அவற்றின் பண்புகள் யாவை என்பவற்றைக் அடையளங்காணக் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு சாதியமயமாக்கப்பட்ட சமூகங்களின் வரலாறுகளையும், தலித் மக்களின் வாழ்க்கை அனுபங்களையும் படிப்பது அத்தியாவசியமாகிறது.


ஈழத்தைப் பின்னணியாககொண்ட தலித் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் வரலாறுகளையும் படிக்க முனையுமொருவருக்கு முன்னால், எழுத்துவடிவில் சில பிரதிகளே உள்ளன. கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய அந்தச் சில பிரதிகளில்  ‘ஒரு பனைஞ்சோலைக் கிரமாத்தின் எழுச்சி’ என்ற என்.கே. ரகுநாதன் அவர்களின் சுயவரலாற்றுச் சித்திரமும் ஒன்று.


இச் சுய வரலாற்றுச் சித்திரத்தில் ரகுநாதன் ‘ரவீந்திரன்’ என்ற பாத்திரத்திற்கூடாக தன்னுடைய வாழ்பனுவங்களைப் பதிவு செய்கிறார்.  அவரது தங்கை பாக்கியத்தின் கல்வி முயற்சிகளைப் பற்றியும் அதற்கு ஏற்படுத்தப்படும் தடையைப்பற்றியும் குறிப்பிடுகிறார்.  தாய் வள்ளியம்மை அவரது சொந்த வளர்ச்சியிலும் அவரது சமூக வேலைகளுக்கு அளித்த பங்களிப்புகளையும் பற்றியும் விரிவாகப் எழுதிச் செல்கிறார். அவரை மாக்ஸிம் கார்கியின் ‘தாய்’ நாவலில் இடம்பெறும் பெலகேயாவிற்கு (Pelageya Nilovna Vlasova) ஒப்பிடுகிறார். பிரதியில் அந்த நெகிழ்வான தருணம் இவ்வாறு அமைகிறது:


“..கார்க்கியின் பெலகேயாவுக்கு மகன் பாவெல் உழைத்துக் கொடுத்தான். பெலகேயாவுக்கு கஷ்டப்பட்டு எழுத படிக்கவும் தெரிந்திருந்திருந்தது. இந்த வள்ளி பெலகேயாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால், அங்குவரும் தோழர்கள் தனது சாதி மக்களின் விடிவுக்காக ஏதோ பணி செய்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் மூடல் பெட்டி இழைத்தும், கடன் வாங்கியும் அவர்களை உபசரிக்கிறாள். பிற்காலத்தில் ரவி இந்த பெலகேயாவை நினைத்துப் பெருமிதமடந்தான்.“


இவ்வாறு அவரது தாய் சமூக வேலைகளுக்கு ஆற்றிய பங்களிப்பை மாத்திரமல்ல, பன்றித்தலைச்சியிலும் மாவிட்டபுரத்திலும் இடம்பெற்ற ஆலயத் திறப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண்போராளி செல்லகிளியின் பங்களிப்பை ஆவணப்படுத்துகிறார். 


இப்படியான பல அரிய தகவல்களை இப்பிரதியூடாக தந்திருக்கும் ரகுநாதன், அவர் முகங்கொடுத்த சாதியத்தின் வடிவங்களையும் நுட்பமாகப் பதிவு செய்யத் தவறவில்லை.


அவர் பதிவு செய்த சாதிய வடிவங்களில் மூன்றை எடுத்து, அவை எவ்வாறு தொடர்ந்தும் சமூகத்தில் இயங்குகின்றன. அவை எவ்வாறு சாதியத்தால் ஏற்படுத்தபடும் சமூக விளைவுகளான ஏற்றத் தாழ்வுகளைத் தொடர்ந்தும் பேண உதவுகின்றன என்று பார்ப்போம்.



முதலாவதாக, சமூகத் தொடர்பிற்கும் சாதியத்திற்குமிருக்கும் தொடர்பைப் பற்றிப் பார்ப்போம். 


சாதியத்தின் தடைகளைத் தாண்டி தமிழ் மொழியிலே படித்து எஸ். எஸ். ஸி சித்தியடைந்த பின்பும் வேலையெடுக்க முடியாத சூழல் ரவிக்கு ஏற்படுகிறது. அதனை இவ்வாறு சொல்கிறார்.


“தமிழில் எஸ். எஸ். ஸி சித்தியடைந்தவர்கள் எந்த அரசாங்க உத்தியோகத்திற்கும் போக முடியாது. ஆங்கிலம் இல்லாமல் தனியார் கம்பனிகன்களிலும் வேலை செய்ய முடியாது. அரச நிறுவனங்களிலும் சரி, தனியார் நிறுவனங்களிலும் சரி சிற்றூழியராக - பியோனாக - வேலை செய்யலாம். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு யார் அந்த வேலையைக் கொடுப்பார்கள்? அங்கெல்லாம் வேலை செய்கிற உயர்சாதி மக்கள், தங்கள் சாதியிலேயே தமிழ் மூலம் படித்தவர்களை அவ்வேலைகளுக்குப் போட்டு விடுவார்கள்! “


இறுதியில் வருகின்ற வரிகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். இங்கு சாதியத்தால் உயர்த்தப்பட்டவர்கள் தமது சமூகத் தொடர்புகளூடாக சொந்தச் சாதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கிறார். அதன் மூலம் தமது சமூக நிலைகளைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். இங்கே சமூகத்தொடர்பென்பது சாதியத்தைப் பேணுகின்ற கருவியாக தொழிற்படுகிறது.


வெளிப்படையான சாதிய மனம்படைத்தவர்கள்தான் இப்படி சாதியத்தை தூக்கி நிறுத்துவார்கள்.  தற்காலத்தில் வாழும் முற்போக்கு மனம்படைத்தோர் சாதியைப்பார்த்து வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். 


சரி, நீங்கள் ‘சாதிய மனத்துடன்’ வாய்ப்புக்களைக் பெற்றுக் கொடுக்கப்போவதில்லையென்று வைத்துகொள்வோம். ஆனால், உங்கள் நண்பர்களுக்கு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பீர்கள்  அல்லவா?


அவ்வாறாயின், உங்கள் நண்பர்களின் சாதியப் பின்னணியை யோசித்து பாருங்கள்.  சமூகத்தில் நிலவும் சாதிகளின் விகிதாசரத் தொகை உங்களின் நண்பர்களின் சாதிய விகிதாசாரத்தொகைப் பிரதிபலிக்குமா? அல்லது அதிகாரமிக்க சாதியப் பின்னணியைக் கொண்டவர்களே உங்களது நண்பர்கள் தொகையில் கூடுதலானவர்களாக அமைந்திருகிறார்களா?


அதிகாரமிக்க சாதிப்பின்ணியைக் கொண்டவர்களே தொகையில் கூடுதாலாக உங்கள் நண்பர்களாகவிருந்தால், நீங்கள் என்ன மனங்கொண்டு வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தாலும், சாதியத்தால் வாய்ப்புகளும் வசதிகளும் பெற்றவர்களுக்கே மீண்டு வாய்ப்புக்கள் கூடுதலாகப் போய்ச் சேரும். இவ்வாறு நிகழும்போது, சாதியத்தால் உருவாக்கப்பட்ட சமூக விளைவுகள் தொடர்ந்தும் பேணப்பட்டு வரும். சமூகத் தொடர்பு என்னும் சமூகக் கூறு சாதியத்தின் சமூக விளைவுகளைத் தொடர்ந்தும் பேணப்படுவதற்கு இவ்வாறானா வழிகளில்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவுகிறது.



இரண்டாவதாக இப்பிரதி வெளிக்கொண்டுவரும் சித்திரங்களில் ஒன்று எவ்வாறு சாதியக் கலாச்சாரங்கள் தலித் உடல்களுக்கு ஊடகவே நடைமுறைப்படுத்தபடுகின்றன என்பது.


ரகுநாதன் நட்புடன் பழகும் நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபர் சிவப்பிரகாசத்தின் வீட்டில் நிகழ்ந்த சம்பவமொன்றை இவ்வாறு விபரிக்கிறார்.


“ஒருநாள் அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருக்க, வல்லி, கள் இறக்கி முடித்து வெளியே செல்லப் புறப்பட்டான். டாக்டர் உடனே ரவியிடம் ‘வல்லிக்குத் தேத் தண்ணிப் போட்டுக் குடு ரவி!’ என்று சொன்னார். ரவி எழுந்து அடுப்பையண்டிப் போனான். வல்லியை நிற்கும்படி கை காட்டி விட்டுத் தேனீர் தயாரித்தான். அடுப்பில் தண்ணீர் சுட்டுகொண்டிருந்தது. ஒருபாத்திரத்தில் தேனீர் தயாரித்து, அதை ஒரு கிளாஸில் ஊற்றி அவனிடம் கொடுக்கப் போக, அவன் வேலியில் கொளுவிகிடந்த பேணியை எடுத்துகொண்டு வந்து ரவியிடம் நீட்டினான். ரவி வெதும்பிப் போய் பேணியில் தேனீரை ஊற்ற அவன் குடிக்கத் தொடங்கினான். ஒரு நளவன் இன்னொரு நளவனுக்கு பேணியில் தேத்தண்ணி ஊற்றிக் கொடுத்த இந்தச் சம்பவம் காலம் முழுவது ரவியின் நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்கிறது.


இந்த டாக்டர் சிவப்பிரகாசம் உளவியல் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். தென்னாசியாவிலே உளவியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது அறிவு ஜீவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.” [பக் 514]


‘இரட்டைக் குவளை’ என்ற  சாதியக் கலாச்சரத்தை ஒரு தலித்தே இங்கே நடமுறைப்படுத்துகிறார். சாதியக் கலாச்சாரத்துக்குள் அகப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் அதை நடைமுறைப்படுத்தும் கருவிகளாக எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்பதற்கு இந்தச சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.


இப்பிரதிக்கு அப்பால் இன்னுமொரு உதாரணத்தையும் பார்க்கலாம். 


ஈழத்தைப் பின்புலமாகக் கொண்டவர்கள் மத்தியில் ‘அரிச்சந்திர மயான காண்டம்’  என்றாலே கலைஞர் வி.வி. வைரமுத்துவின் பெயர் ஞாபத்திற்கு வந்துவிடும். அந்தளவிற்கு அந்த இசை நாடகத்தின் அரங்கேற்றுகைகளுக்காக தனது உழைப்பையும் கலையாற்றலையும் வழங்கியவர் வி.வி. வைரமுத்து. ஆனால், சாதியச் சிந்தனை நிறைந்திருக்கும் இந்த நாடகத்தை மேடையேற்ற உதவியதினூடாக அவரும் சாதியக் கலாச்சாரத்தைப் பரப்பும் கருவியாக்கப்பட்டிருக்கிறார், கருவியாகியாகியிருக்கிறார்.


இந்த இடத்தில் ஒன்றை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ‘அரிச்சந்திர மயான காண்டம்’ என்ற நாடகத்தில் ‘புலையன்’ என்ற சொல் வருவதால் மாத்திரமே அது சாதியச் சிந்தனையைக் கொண்ட பிரதியல்ல. அந்தப் பிரதி சொல்லும் கதையின் அடிப்படையிலிருந்து முழுவதுமே சாதியச் சிந்தனையால் விரவியிருக்கிறது.





2019ஆம் ஆண்டு ரொறொன்ரோ பெரும்பாகத்தில் நடபெற்ற அரங்கியல் விழாவில்,  ‘ஊழிற்பெருவலி’ என்ற பெயரில் ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகம் மேடையேற்றப்பட்டது. அதன்பின் சமூக வலைத்தளங்களில் எழுந்த சில விமர்சனங்கள் பிரதியில் இடம்பெற்ற ‘புலையன்’ என்ற சொல்லைச் சுட்டியகாட்டயதாலோ என்னவோ, பலரும் ‘புலையன்’ என்ற சொல்லின் பாவனை மாத்திரமே அந்த நாடகத்திற்கு சாதியச் சாயத்தை அளிக்கிறது என்று விளங்கிவைத்திருப்பதாகத் தென்படுகிறது.  ஆகவேதான், பிரதியின் அடிப்படையே சாதியச் சிந்தனையால் கட்டமைக்கப்படிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.


யோசித்திப் பாருங்கள். 


சத்திரிய சாதியைச் சேர்ந்த அரசனின் வீழ்ச்சியென்பது ஒரு ‘புலையருக்கும்’ அடிமையாயிருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. பிரதியில் ஒரு பிராமணருக்கு அடிமையாயிருப்பது பெரும் வீழ்ச்சியல்ல.  சாதியத்தால் ஒடுப்பட்டவரின் சமூத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடிமையாய் இருப்பதுவே பெரும் வீழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்த் மோசமான சாதியச் சிந்தனையைப் பரப்புவதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வி. வி. வைரமுத்தே கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார், பயன்பட்டிருகிறார்.


சாதியக் கலாச்சாரத்தில் தான் கருவியாக பயன்படுத்தப்பட்டதை நினைத்து ரகுநாதன் மனம் நொந்திருக்கிறார். ஆனால், வி. வி. வைரமுத்து அவர்கள் தனது வாழ் நாளில் அதனை அறிந்திருந்தாரோ தெரியவில்லை.


‘ஒரு பனைஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ என்ற இந்தப் பிரதியிலிருந்து  மூன்றாவதாக நான் கதைக்க விரும்பு விடயம் சாதியத்தால் உயர்த்தப்பட்டவர்களின் அதிகாரங்கள், சலுகைகள் பற்றியது.


சாதியத்தால் ஒடுப்பட்ட மக்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் பதியப்படும்போதே ஒடுக்குமுறை ஆரம்பிப்பதை நாம் அறிந்திருப்போம். ரகுநாதனுக்கும் அது நிகழ்ந்திருக்கிறது. ‘இராசன்’ என்று அவரது பெற்றோர் கொடுத்த பெயரை விடுத்து, ‘கணவதி’ என்று தான் விரும்பிய பெயரை ஆதிக்க சாதியப் பதிவளார் பதிவிடுகிறார்.


இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம், சாதியல் ஒடுக்கப்பட்டவர்கள் என்ன பெயரை வைக்க வேண்டும் என்ற முடிவை அவரே எடுக்கிறார். அதாவது, சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை ஆதிக் சாதியைச் சேர்ந்தோர் தமது கையில் வைத்திருப்பது, அவர் பதிவாளராயிருந்ததால்தான் அந்த அதிகாரம் அவர் கையிலிருந்ததாக நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அந்த காலத்தில் அவர் பதிவாளர் ஆக முடிந்ததே அவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராய் இருந்ததால்தான் எனபதை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.


சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் எங்கே வாழ வேண்டும், எப்படித் தண்ணீர் குடிக்க வேண்டும், எவ்வாறு உடை அணியவேண்டும் என்று காலாகாலமாக ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களுகான முடிவுகளை எடுத்தார்கள்.


அவ்வாறே, இப்போது இங்கே (ரொறொன்ரோ பெரும்பாகத்தில்)  பொதுவெளியில் சாதியத்தால் ஒடுப்பட்ட மக்கள் தாம் வளர்த்தெடுத்த பறைக் கலை ஆற்றுகைகளில் ஈடுபடாமாலிருக்க, சாதியத்தால் ஆதாயம் பெற்ற அதிகாரமிக்க சாதிப் பின்னணியைக் கொண்டோர் பறைக் கலை ஆற்றுகைகளில் ஈடுபடுகிறார்கள். அதாவது, சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் கலையை எங்கே, எவ்வாறு, எந்த நோக்கங்களுக்க உபயோகிப்பது என்ற முடிவை இவர்களே எடுக்கிறார்.  இது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, கலை சம்மந்தமாக முடிவுகளை ஆதிக்க சாதியப் பின்னணியைக் கொண்டவர்களே எடுக்கின்ற சாதியப் பண்பின் வெளிப்பாடு. 


எப்படி ரகுநாதன் அவர்களுக்கு என்ன பெயரை வைப்பதென்று ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர் முடிவெடுத்தாரோ, அதேபோற்தான் எங்கே, எவ்வாறு, எந்த நோக்கங்களுக்காக  பறைக் கலையில் ஈடுபடுவது என்ற முடிவுகளை அதிகாரமிக்க சாதியப்பின்னணியைக் கொண்டோர் எடுக்கிறார்கள்.

சாதிய ஒடுகுமுறையை புதியவழிகளில் அறிந்தோ அறியாமலோ நிலை நிறுத்துகிறார்கள்.


ரொறொன்ரோ பெரும்பாகத்திலே அதிகாரமிக்க சாதியப் பின்னணியைக் கொண்டோர் ‘பறைக் கலையில்’ ஈடுபடும்போது அவர்கள் முற்போக்காளர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு  பேரும் புகழுமே போய்ச் சேருகிறது. அவமானமும், தீண்டாமையும், வன்முறையும் அல்ல என்பதை நாம் மனதில் வைத்த்திருக்க வேண்டும்.  


ஒடுக்கப்பட்ட மக்கள் காலங்கலமாக தமது வாழ்கைச்செலவில் வளர்த்தெடுத்த கலையை அதிகாரமிக்க சாதியப் பின்னணியைக் கொண்டோர் கையிலெடுத்து தமது சமூக, கலாச்சார  மூலதனங்களைப் பெருக்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையை மீண்டும் வேறுவடிவில் பிரயோகிப்பாதாகும்.


சாதியத்தின் பிரதானமான நோக்கமே செழிப்பான வாழ்பனுவங்களை அதிகாராமிக்க சாதியப் பின்னணியைக் கொண்டோர் பெறுவதற்கான சமூகச்சூழலை ஒடுக்கப்படோரின் வாழ்க்கைச் செலவில் செய்து கொடுப்பதுதான். அதற்காக அது காலத்திற்கு காலம் தனது வடிவங்களை மாற்றிவருகிறது. ரகுநாதனின் காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்த சில வடிவங்கள் இப்போது முற்போக்கு முகம் தரித்து உலவுகின்றன. ஆனால், அவற்றின் அடிப்படைப் பண்புகள் மாறுவதில்லை. ஆகவே, சாதியத்தின் ஒடுக்குமுறை வடிவங்களை அறிந்து, அவற்றின் அடிப்படைப் பண்புகளை படித்து அவை தற்காலத்தில் எவ்வாறெல்லாம் வெளிப்படுகின்றன என்பதை நாம் அடையாளங்காணக் கற்றுகொண்டால்தான், அவற்றை எவ்வாறு சமூக கூறுகளிலிருந்து நீக்கலாம் என்ற வாழிகளைத் நாம் தேடமுடியும். அதற்கு, ‘ஒரு பனைஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’  என்ற சுயவரலாற்றுச் சித்திரத்தைக் கொண்ட ‘என். கே. ரகுநாதம்’ என்ற தொகுப்பை முழுமையாக வாசிப்பது அத்தியாவசியமானது.



*ஏப்பில் 30ம் திகதி ரொறொன்ரோவில் நடைபெற்ற என்.கே. ரகுநாதம் தொகுப்பின் மீதான நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் திருத்தங்களுடனான வடிவம். தெளிவிற்காக மேலும் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.









No comments:

Post a Comment