Monday 2 May 2022

என்.கே. ரகுநாதம் நிகழ்வு - ரொரண்டோ




 





தொடக்கவுரை

கற்சுறா


என்.கே. ரகுநாதம் நிகழ்வு

ரொரண்டோ


நமது  சமூகத்தின் சாதிய நஞ்சூற்றை அடியோடு களைந்தெறிய தன்னெழுச்சியாய் எழுதத் தொடங்கிய என். கே. .ஆர். அவர்களது முழுத் தொகுப்பான என்.கே. ரகுநாதம் என்கின்ற நூல் குறித்த கலந்துரையாடலில் அதே அக்கறையுடன் கலந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வணக்கங்கள்.



இந்த நிகழ்வு தனியே என். கே. ரகுநாதம் என்ற முழுத் தொகுப்பினைக் குறித்த அறிமுக  நிகழ்வாக இல்லாது இந்த சமூகத்திற்கு ரகுதாதத்தின் வாழ்வு பற்றிய கரிசனையாக இடம் பெற வேண்டும் என்பதே நோக்கம். அதுவே நம்மை அடுத் கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு கருவியாகவும் இருக்கும் என எண்ணுகிறேன்.


அதன்படி அனைவரும் ஒத்துழைத்து இந்த நிகழ்வை நல்லபடிஒரு உரையாடலாக நடத்தி முடித்து வைக்க வேண்டும் எனவும் அனைவரிம் கேட்டுக் கெள்கிறேன்.


இந்தத் தொகுப்பினை நான் தொகுத்து வெளிக்கொண்டு வந்தேன் என்ற ஒரு காரணத்தைத் தவிர இந்தத்  தொகுதி குறித்து ஆரம்ப உரையை நிகழ்த்த எனக்கு எந்த விசேட தகுதியுமில்லை என நான் முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.


எங்களுடைய  மற்றது என்ற செயற்பாட்டு அமைப்பும் தமிழகத்தில் செயற்படும் பதிப்பகமான கருப்புப் பிரதிகளும் இணைந்து இந்தத் தொகுப்பினை வெளிக் கொண்டு வந்திருக்கிறோம்.இந்தத் தொகுப்பினைக் கொண்டு  வருவதற்கு நாம் நீண்ட காலம் செலவழித்தோம். அது கொரோனாவின் உச்ச கெடுபிடிக்  காலம் என்பதினால் எமக்கு அந்த நிலை ஏற்பட்டது. காத்திருந்த காலத்திற்கும் ஏற்றாற்போல் மிக நேர்த்தியாக இந்தத் தொகுப்பு வெளிக் கொண்டு வந்ததில் - நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும்படி உருவாக்கியதில்- என்னுடன் இணைந்து பணியாற்றிய ஜெபாவிற்கும் கருப்புப் பிரதிகள் அமுதாவிற்கும் நீலகண்டகண்டனுக்கும் மிகப்பெரிய  நன்றிகளை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

 


சாதியற்ற சமூகத்தை நோக்கிய எனது அக்கறையின் நிமித்தம் நகர நினைக்கும்  செயற் திட்டத்தில் நான் கண்டடைந்த ஒரு வரலாற்றுப் பதிவாகவே இதன் பிரதிகள் என் கைக்கு எட்டியது. அவரை மிகச் சில காலம் நான் பின் தொடர்ந்ததில் ஏற்பட்ட வரவு இது. நான் அவரை நெருங்கிய காலத்தில் அவர் தனது எழுத்தை மட்டுமல்ல தனது பேச்சையும் குறைத்திருந்தார்.

 

என்.கே. ரகுநாதன் அவர்கள் வாழும் காலத்தில் வெளிவந்திருக்க வேண்டிய தொகுப்பு இது. அவர் இல்லாக் காலத்தில் சாத்தியமாகி முடிவுறுவது என்பது மிகவும் துயரமானது.  என்பதனையும் சொல்லிக் கொண்டு

 

எனது ஆரம்ப உரையைத் தொடங்குகிறேன்.

 


 

 

 

*****

 


தனது அன்றாட வாழ்வின் அத்தனை அசைவுகளையும் சாதிய அசைவுகளாகவே அசைந்து கடத்தியபடி இருக்கும் நமது சமூகம்-  ஏறக்குறை ஒரு அரைநூற்றாண்டு காலம் கொடிய  யுத்ததற்குள் வாழ்ந்து கொள்ள நேர்ந்தது. அந்த வாழ்காலத்தில் எத்தனையோ கொடூர இடப் பெயர்வுகளைச் சந்தித்தது. இடம் பெயர்ந்த பொழுதுகளிலெல்லாம் - அகதியாய் நின்ற பொழுதுகளில் எல்லாம் சாதிய மனநிலையினைக் கடந்து இருந்ததாக ஒரு அனுபவப் பகிர்வும் இல்லை.  


இந்த சமூகம் இடம்பெயர்ந்த போது கூட  தனிப்பிரிவாய்த்தான் இடம் பெயர்ந்தமர்ந்தது. உடையிழந்து உணவிழந்து மரணத்தின் பிடியில் அது உயிரிழக்க நேர்ந்த போதும்  சாதியை இழக்கமுடியாதிருந்த காலத்தை நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.


ஈழவிடுதலை என்பது சாதியற்ற சமூகமாகவே விடுதலையாகும் என்ற கற்பனை தகர்ந்து போனதற்கு வரலாற்றில் அதிகமான சந்தர்ப்பங்களை உதாரணங்களாகக் காட்டிவிடமுடியும். 


1998ம் ஆண்டு யாழ் வட்டுக் கோட்டையில் இடம் பெற்ற சாதிக் கொடுமையினை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். 1995ம் வருடம் வடபகுதியில் இடம்பெற்ற மக்களது பெரும் இடப் பெயர்வின் பின் நிகழ்ந்த கொடூரம் அது. தாழ்த்தப்பட்ட மக்கள் என அடையாளம் இடப்பட்டவர்களின் மைதானம் சாதி வெறியர்களால் உழப்பட்டு தென்னைமரங்களும் வாழைமரங்களும் நட்டு மைதானத்தைச் சிதைத்ததோடல்லாது ஒரு வாசிகசாலையையும் அவர்களுக்குச் சொந்தமான பிரேத வண்டியையும் தீக்கிரையாக்கினர். 





இதன் பின்னர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் இதே போன்ற  வன்முறைகள் நடைபெற்று வந்ததும் இப்பொழுது மீண்டும் வட்டுக் கோட்டையில் அதே உக்கிரத்துடன் சாதி வெறியர்கள் ஆட்டம் ஆடியதையும் நீங்கள் விளங்கிக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


நமது ஊர்கள் எப்பொழுதும் போலவே இன்றும் சாதியால் அறவே பிரிந்து போயிருக்கிறது என்பதனை ஊர்களின் நடுவே ஓடும் வெறிச்சோடிய ஒழுங்கைகள் வெளிக்காட்டி விடுவதனை நீங்கள் உணருவீர்கள் என்றே நம்புகிறேன்.


எந்தத் தெருவில் குழந்தைகள் விளையாடாதோ அந்தத் தெரு சாதியால் பிரிந்திருக்கிறது என்பது அப்பட்டமாக வெளிக்காட்டிவிடும் சங்கதியையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.


இதனை விளங்கிக் கொள்வதற்கு நமக்கு ஒன்றும் பெரிய பூதக்கண்ணாடி தேவையில்லை.


இன்று வடபகுதியில் மட்டும் நம் கண்முன்னால் உள்ள ஆலயங்களில் 102 ஆலயங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாடு மறுக்கப்பட்ட ஆலயங்களாக இருக்கின்றன என்று ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டபோதும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற அடைமொழிகளுடன் உலாவரும் எங்களிற்கு இன்றுவரை  செய்ய ஒன்றுமேயில்லாதிருப்பது என்பது மிகவும் வேதனையானது.


ஆனால் நாம் சமூகச் செயற்பாட்டாளர்களாகவும் சமூகமாற்றத்திற்கான பெரும் இலக்கியவாதிகளாகவும் சமூகத்தில் உலாவந்தபடி இவை எதையுமே உணர மனமற்று உள்ளார மிகக்  கேவலமான தமிழ்த் தேசிய மனநிலையைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறோம்.  


சாதிய நஞ்சின் ஒரு சிறு பொறியையும் தக்க தருணத்தில் தமது எழுத்துக்களுக்கூடாக  அடையாளப்படுத்தியபடி நகர்ந்த  பல எழுத்தளர்களைக் கொண்டு நகர்ந்ததே நமது ஈழத்தமிழ் இலக்கியச் சூழல். ஆனால் இன்று அப்படியொன்று இல்லை என்பதாக அது பெரிய இடைவெளியைக் கொண்டு நகர்ந்தபடி இருக்கிறது என்பது வேதனையானது.


முன்னெப்போதையும் விட எந்தளவிலும் சிறு மாறுபாடு கூட அற்ற வகையிலும்- ஏன் அதையும் விட - முன்னேறி மிக நுண்ணிய அளவிலும் சாதிய நஞ்சைக் கொண்டியங்கும் சமூகத்தின் காலப் பதிவுகளை நாம் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுக் கடந்து விடுவதோடல்லாது சாதியற்ற சமூகமாக நமது சமூகத்தை உருமாற்றுவதற்குரிய எந்த  ஒரு திடமான வேலைத்திட்டமுமற்று இருப்பது மிகவும் கவலைதரும் விடயமாகும். 


இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம் அனைவரது மூளைக்குள்ளும் உறைந்து குந்தியிருக்கும்  தமிழ்த் தேசியம் என்ற மிகப் பெரும் விடமேயாகும். உள்ளார ஒரு கொடிய விடத்தை உறைய வைத்தபடி இன்னொரு கொடிய விடத்தை அகற்றுதல் எப்படிச் சாத்தியம்? என்று உங்களை நோக்கிக் கேட்கிறேன்.


இன்றுள்ள அடையாளப்படி ஒற்றைத் தமிழ்த்தேசியம் பேசியபடி ஒரே தளத்தில் சாதிய விடுதலையும் பேசும் அல்லது அக்கறை கொள்ளும் ஒருவரை எவ்வாறு புரிந்து கொள்வது?  அதன் உண்மைத் தன்மையை எவ்வாறு கணக்கிட்டுக் கொள்வது? என்று நாம் உரையாட வேண்டிய தேவை நம்முன்னுள்ளது என எண்ணுகிறேன்.


 ஈழவிடுதலை என்பது பொதுவாக வெளிப்படையாகச்  சாதியற்ற சமத்துவ நோக்கம் கொண்டது எனப் பரப்புரை செய்யப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததொரு உண்மை. 


ஆனால் அதுகுறித்த திறந்த உரையாடலை நாம் நிகழ்த்த விருப்பமற்று இருக்கிறோம்.  தெரிந்த உண்மையைக் கூட நாம் பேசுவதைத் தவிர்க்கிறோம். இந்தச் சீரழிவு நிலை நமது சமூகத்தை நல்லதொரு இடத்திற்கு ஒருபொழுதும் அழைத்துச் செல்லாது.


ஈழவிடுதலை குறித்துப் பேசும் அனைவரும் ஈழத்தில் நடைபெறும் சாதிய வன்மங்களுக்கெதிராக வெளிப்படையாக தமது எதிர்ப்புக்களைத் தெரிவிக்கமுடியாதிருப்பதுடன் அதற்கெதிரான எந்தத் திட்டமிட்ட செயற்பாடுகளையும் கைக்கொள்ள முடியாதிருப்பதற்குள் தேசியம் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் சாதிய மனோபாவமே. அது மிகக் கொடியதொரு வியாதி. தேசிய விடுதலையை ஒரு கையிலும் மறுகையில் சாதிய வன்மத்தையும் தூக்கியலையும் சமூகத்தில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பது முக்கியம்.


சாதியம் பற்றிய சரியான புரிதலைப் பேசமுற்படும் போது ஒற்றைத் தமிழ் என்ற  பாசாங்குக் குரலின் உண்மை புலப்பட்டுவிடும். அந்தப் புலப்படும் உண்மையை மறைத்து தேசவிடுதலை  தேசவிடுதலை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வதில் எங்களுக்குள் இருக்கும் ஒரு கொடிய துவேச மனநிலையை மறைத்துவிட முனைகிறோம். இதுவும் இன்னொரு வடிவ சாதிய மனோபாவமே. ஆனால் அந்தவகைச் சாதிய மனோபாவத்தினை மறைக்க தேச விடுதலையை முன்நிறுத்திப் பேசி அதற்குப் பொன் முலாம் பூசுகிறோம்.


தனது கிராமத்தில்  ஒன்றாகப் படிப்பவரையும் தனது சமூகத்தில் ஒன்றாக வாழ்பவரையும் தன்னுடைய மொழியைப் பேசுபவரையும் பாடசாலைக்கு வராதே என்றும் நல்ல ஆடையை உடுத்தாதே என்றும் கோயிலுக்குள் நுழைந்து கடவுளை வழிபடாதே என்றும் தான் வாழும் தெருவால் போகாதே என்றும் சொல்லி-  மீறுபவர் மீது வாளால் வெட்டியும் அவர்கள் வீடுகளை நெருப்பிட்டுக் கொழுத்தியும் பள்ளிக்குச் செல்லும் சிறார்களது புத்தகங்களைப் பறித்து நெருப்பிலிட்டும் வருபவர்கள் ஈழவிடுதலை கோரி நிற்கிறார்கள் என்றால் அந்த ஈழவிடுதலை யாருக்கானது என்று நாங்கள் கேள்வி கேட்பதில் என்ன பிழை? 


ஆனால் அதனை முழுமையாகத் தெரிந்து கொண்டும் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தொடர்ந்தும் செயற்படுபவர்கள் ஒரு பொழுதிலும் தங்களிற்குள் கூட வெட்கப்பட்டதில்லை. ஏனெனில் அவர்கள் அதனைத் தெரிந்தே செய்கிறார்கள்.


போராட வெளிக்கிட்ட இயக்கங்களையும் போராளிகளையும் கூட சாதியாகப் பிரித்து அடையாளப்படுத்தி வெளிக்காட்டியவர்கள்  சாதிவெறி கொண்ட தேச விடுதலையின் முதல் அபிமானிகளே. அதுமட்டுமல்லாது அப்படி அடையாளம் காட்டியவர்களையே அது துரோகியாக்கியது. துரோகச் செயலுக்கு முழுதும் முதலுமாக அவர்கள் தான் உரித்தானவர்கள் எனக் காட்டியவர்களும். கொல்லத் தூண்டியவர்களும். கொன்றவர்களும்  இந்தத் தேசாபிமானிகளே. இவ்வாறு . கொன்றதன் பின்னிருக்கும்  நியாயம்என்பதும்  சாதியவெறியின் இன்னொரு அடையாளமாகியது.


அதற்குமப்பால் ஈழவிடுதலைப் போராட்டத்தில் செயற்பட்ட இயக்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புப் பதவிகளில் அதிகமாகத்  தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களையே வன்முறைச் செயற்பாடுகளுக்காகவும் மரண தண்டனைச் செயற்பாடுகளிற்காகவும் நியமித்தார்கள்.அதன்மூலமாக சமூகத்தில் நிகழும் சாதியத்தின்  முரண்பட்ட உறவினை தொடர்ந்து வலுப்படுத்தி தமது இருப்பைக் குலையாது மேம்படுத்தினார்கள் என்ற பிற்போக்கு அரசியலை நீங்கள் மதிப்பிடத் தவறக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான உதாரணங்களை ஈழத்தின் ஒவ்வொரு ஊர்களின் கதைகளிலும் நீங்கள் சேகரித்து விடமுடியும்.


இந்தத் தொடர்  வரலாறில் நாம் தவறவிட்ட முக்கியமான இடம் இது.  நாம் கட்டாயம் கவனத்திற்குள்ளாக்கவேண்டிய இடம் இது. எனக் கூறி



தோழர் என்.கே. ஆர் அவர்கள் தான் கடந்து வந்த பாதையில் அவர் முரண்பட்டதும் உடன் பட்டதுமாக தன்னுடைய கரிசனையின் நிமித்தம் மிகப் பெரிய எழுத்தியக்கத்தை நம்முன் வைத்து விட்டுப் போயிருக்கிறார்.        

காதல் கதைகளில்- ஒரு அசிரியருக்கும் மாணவனுக்குமான கதைகளில் ஆசிரியருக்கும் அதிபருக்குமான கதைகளில் - அல்லது கூட எழுத்தியக்கத்தில் எழுதிக் கொண்டிருந்த சக எழுத்தாளர்களது வாழ்வில்  எவ்வாறு சாதிய நஞ்சூறியிருந்தது என்றும்  நாம் கண்ட புரட்சியாளர்களது பொய்வேசத்தில் சாதியம் பாதுகாக்கப்பட்டது என்றும்   தன்னால் முடிந்தளவு ஒரு பெரும் பதிவை நிகழ்த்திவிட்டிருக்கிறார். அந்த இடம் இன்று பெரும் வெற்றிடமாகவே இருப்பதாக ஒரு அனுமானம் என்னுடையது. இன்றுள்ள பலரில்  இத்தகை கரிசனையின் நிமித்தம் அக்கறை கொண்டு எழுதுபவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அற்த வெற்றிடம் உள்ளது.


எனக்கூறி எனது ஆரம்ப உரையை முடிக்கிறேன்.


அவர் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் மற்றும் அவர் பலருக்கு எழுதிய கடிதங்கள் பலர் அவருக்கு எழுதிய கடிதங்கள் அவர் பற்றிய குறிப்புக்கள் அவர் மீதான விமர்சனப்பார்வைகள். பிறர் மீது அவர் வைத்த விமர்சனங்கள் அவர் 1969இல் எழுதிய  கந்தன் கருணை என்ற நாடக மூலப்பிரதி அவரது புகைப்படங்கள் என்பவற்றை அடங்கிய தொகுப்பு இது. இந்தத் தொகுப்பினை பல தளத்திலும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற அக்கறையோடு மிகவும் விமர்சனபூர்வமாக இந்தப்பிரதிகள் அணுகப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 



நன்றி.












No comments:

Post a Comment