Sunday 3 March 2019

கருணா - அனுபவம்:1


 

"...ஆனால் கைவிடப்பட்ட காலத்தில் ஒரு சிற்றிலக்கியச் சூழலுக்கு அனைத்துமாக இருந்தவர்களில் ஒருவர் கருணா."

கற்சுறா

 

நேற்று 2மார்ச்2019 அன்று  தெருவைப் பனி மறைத்த நாளில் உன்னைக் கைவிட்டு விட்டு வந்தோம்.  பெட்டிக்குள் கிடத்தி உன்னை அடைத்து வைத்த கோலம் நேற்று மட்டுமானதல்ல.  யார் வீட்டு வேலிக்குள்ளும் புகுந்து விடாதபடி அடைத்து வைத்த மட்டையை நீ கழற்றி எறிந்திருக்க வேண்டுமல்லவா?




 


 எமக்கு ஒரு ஓவியனாகவும் வடிவமைப்பாளனாகவும் கருணா 1999ம் ஆண்டில் அறிமுகமானார். “எக்ஸில்” என்ற சஞ்சிகையை பாரீசில் நடத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அதன் வடிவமைப்பாளராக லண்டனில் வசிக்கும் ஓவியர் கிருஷ்ணராசா இருந்ததார். நான்காவது இதழுடன் நமது ஆசிரியர் குழுவுக்குள் ஏற்பட்ட கசப்பான முரண்பாடுகளால் குழுவிலிருந்த மற்றய சில நண்பர்களை வெளியேற்றிவிட்டு ஜெபா, விஜி, எம். ஆர். ஸ்ராலின், நான் ஆகிய நான்கு பேரும்  சேர்ந்து தனித்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டது.  ஒரு இதழ் வடிவமைப்புக் குறித்த ஒருவித புரிதலுமற்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த எங்களுக்கு  சக்கரவர்த்தி மூலம் கருணா அறிமுகமாகினார். எங்களுக்கு “எக்ஸில்”என்ற எழுத்து வடிவமைப்பையும் எழுத்தாளர்களது பெயர்களையும் முன்னட்டை ஓவியங்களையும் வெளிவரும் படைப்புக்களுக்கான ஓவியங்களையும் வரைந்து தந்தார். கருணாவின் அறிமுகம் கிடைத்த பின்னர் எக்ஸிலின் வடிவமைப்பில்  மாற்றம் வந்தது.  இன்னமும் பார்த்து ரசித்துக் கொள்ளக் கூடிய வகையில்  “எக்ஸில்” என்ற அந்த எழுத்தமைப்பு தனித்துவமாக இருக்கிறது.ஏற்கனவேயிருந்த “எக்ஸில்”  என்ற வடிவத்தினை நாம் மிகுந்த சிரமப்பட்டுப் பயன்படுத்திக் கொண்டிருந்ததை கொண்டிருந்ததை 4,5,6 வது இதழ்களில் கண்டு கொள்ள முடியும்.
 
 
 
 
 
 
 
 




7வது எக்ஸில் இதழிலிருந்து எமக்கு அந்தச் சிரமம் இல்லாது போனது. அதன் பின்னர் இதழின் இறுதிவரை அவரது அட்டை வடிவமைப்பின் செயற்பாடு இருந்தது.


 

பின்னர் கனடாவில்  கருணாவை நான் சந்தித்த பின் அவருக்கும் எனக்குமாக அடிக்கடி நிகழும் உறவும் பிரிவும் எழுதி முடிக்கப்பட வேண்டியது. (அதனை நான் தொடர் பகுதிகளில் எழுதுகிறேன்.) ரொரண்டோவில் இருந்து நானும் ஜெபாவும் சேர்ந்து “மற்றது”என்றொரு சிற்றிதழைத் தொடங்கினோம். அதனது  முன்- பின் அட்டைகளுக்கான ஓவியங்களை வரைந்து தந்தவர் கருணா. நாங்கள் ஒரு சஞ்சிகை தொடங்க இருக்கிறோம் அதற்கு பெயர்  “தகர்த்தல்”  எனச் சொல்லியிருந்தோம். அதற்கான ஒரு வடிவமைப்பை அழகாகச் செய்து அனுப்பிருந்தார். அது எக்ஸிலை ஞாபகப்படுத்துவது போலிருந்தது.
 
அதன்பின் “மற்றது” என அதற்குப்  பெயர் மாற்றினோம். (அது ஏன் எனப் பின்னர் எழுதுகிறேன்.) ஒரு மூன்றாவது நான்காவது எட்டாவது பார்வை கொண்டஒரு மறுபார்வையின் அர்த்தம் இது என நமது எண்ணத்தைத் தெரிவித்த போது  அதற்கான ஓவியம் வரைந்து தந்தார்.  முன் அட்டையினதை “அச்சம்” என்றும் பின்னட்டையினதைக் “ கோடுகளில் இருத்தல்” எனவும் அவற்றிற்குத் தலைப்பிட்டார். இவை இரண்டும் அவரது ஓவியங்களில் மிக முக்கிய இடத்தை வகிப்பதாக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
 

அண்மையில் “ழகரம்” இதழில் வந்த எனது “chemical இம் Balance சிறுகதைக்கு  வரைந்த ஓவியம் தான் கீழே உள்ளது. இதற்கு "Russian Roulette"என்று பெயரிட்டிருந்தார். நமது போர்ச் சூழல் என்பதில்  C.T.B. இற்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பஸ்ஸிலிருந்து கடத்தப்பட்டவர்களும் பஸ்ஸிற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களும்  பஸ்ஸிற்குள் பயணம் செய்த பலவகைப்பட்ட துப்பாக்கிகளும் என்று நமது போர்ச் சூழலில் பஸ்ஸிற்கு முக்கிய இடமிருக்கிறது. பஸ் நிறுத்தத்திலிருந்து தொடங்கும் கதை அது. அதற்கு வரைந்த ஓவியம் இதுதான்.
 
 

சிற்றிலக்கிச் சூழலில் மிக அதிகமான சஞ்சிகைகளுக்கும் நூல்களிற்கும் அவர் உருவாக்கிய அட்டைப்பட  ஓவியங்கள் அதிக கவனம் பெறுவன. அவருக்குள்ளும் அது மானசீகமான ஒரு விருப்பை ஏற்படுத்தியிருக்கும் அளவுக்கு முக்கிய தாக்கத்தைச் செலுத்துவன. புலம்பெயர் சூழலில் அது கனடாவானாலும் சரி ஐரோப்பா ஆனாலும் சரி பல சிறுசஞ்சிகைகளுடன் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றிய காலங்கள்  உண்டு அவை தனித்துப் பேசப்பட வேண்டியவை. ஒரு வடிவமைப்பாளனாக எத்தனையோ வணிகச் செயற்பாடுகளுக்கு  அவர்  வடிவமைப்புக்களைச் செய்த போதும் சிற்றிலக்கியச் சூழலில்தான்  கருணாவால் மிகச் சுதந்திரமாகச் செயற்பட முடிந்தது. தன்னுடைய ஆழ்மனதின் சீண்டல்களை சிற்றிதழ்களின் மூலம் பொது வெளிக்குள் சொல்ல முடிந்தது. யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மிகத்தீவிரமாக வடிவமைப்புக்களைச் செய்து கொண்டிருந்தவர் என எமக்குத் தெரியும். அதையும் தாண்டி அந்த யுத்த சூழலை எதிர்த்து விடுதலைப்புலிகளது  ஆதிக்கத்தை மறுத்து எழுதிக் கொண்டிருந்த எனக்கும் சக்கரவர்த்தி போன்றவர்களுக்கும் அவர் மானசீகமாக வடிவமைப்பைச் செய்து கொண்டிருந்தார். இது எப்படி நடந்தது? கருணாவின்  இறுதி வணக்க நிகழ்வில் “ முழக்கம்” பத்திரிகை  ஆசிரியர் திரு  உரையாற்றியது  உண்மையாய் இருந்தது. அந்த உண்மையைக் கண்டு கொள்ள அதிக அவகாசம் தேவைப்பட்டது. கருணாவை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கிறது.
கருணா “ஆசீர்வாதம்” என்ற மதம் சார்ந்த  பத்திரிகையை வடிவமைத்த காலத்தில் அவருடன் சண்டையிட்டு 2வருடங்கள் அவருடன் எவ்விதத் தொடர்புமற்று இருந்திருக்கிறேன். இந்தப் பொதுச் சூழலிலிருந்து சிற்றிதழ்கள் வேறுபட்டவை. அதற்குள்தான் கருணாவால் அதிக சுதந்திரத்துடன் நடமாட முடிந்தது. (அதற்குள் இருந்த கருணாவின் வேறுபட்ட பலவீனங்கள் குறித்தும் நாம் பேசமுடியும். பேசவும் வேண்டும்.)

சிற்றிதழ்கள் என்னவகையான கருத்துருவாக்கத்தைக் கொண்டலைபவை. அவை பொதுச் சூழலில் இருந்து எவ்வாறு வேறுபட்டவை என்ற  அறிதலுடன் அவர் இணைந்து தனது செயற்பாட்டை நிகழ்த்தியிருந்த காலங்கள் உண்டு. அவை குறித்து எல்லாம் சிற்றிதழாளர்கள் விரிவாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். அப்போது சமூகம் குறித்திருந்த கருணாவின் அக்கறைபற்றி நாம் பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ள முடியும். அண்மையில் அவர் உரையாடல் சஞ்சிகைக்கு வரைந்த ஓவியமும் அதன் அட்டை வடிவமைப்பும் மிக முக்கியமானது.
 

நாம் கருணாவுடன் தொடர்பு கொண்டிருந்த  ஆரம்ப காலங்கள் தனித்த யுத்த காலங்கள்  யுத்தம் ஈழத்தில் மட்டுமல்ல  புலம்பெயர் தேசங்களிலும் அதே ரவுடித்தனத்துடன் அரங்கேறிக் கொண்டிருந்த காலங்கள். யாரும் யாருடனும் நம்பிக்கை கொண்டு நெருங்கமுடியாதிருந்த சூழல் அது. ஈழத்திலிருந்தவர்களுடன் தொடர்பில்லை. இந்தியாவில் ஏற்படுத்தியிருந்த தொடர்புகளும் அப்போதிருந்த தொலைபேசி அழைப்புக்கள் போல் அறுந்தறுந்து கேட்பவை. அந்தச் சூழலில் நமக்கருகில் சிறந்த வடிவமைப்பாளர்களாக இருந்தவர்கள் கருணாவும் கிருஷ்ணராசாவும் தான்.  இவர்கள் ஒருபுறம் ஓவியர்களாக இருந்தார்கள். அதே நேரம் மார்க் மாஸ்டரின் மாணவர்களாக இருந்தார்கள். அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். இலக்கியத்திற்கு மிக நெருங்கியிருந்தார்கள். ஒரு சிறுகதையை அல்லது ஒரு கவிதையை வாசித்து அதற்கு எதிர்வினையை ஆற்றிவிடும் ஒரு அக்கறை அவர்களிடம் இருந்தது. அது நமக்கு இலகுவாக இருந்தது.இப்போது நம்மிடத்தில் ஆயிரம் ஓவியர்கள் தோன்றியிருக்கலாம்  வடிவமைப்பாளர்கள்  தோன்றியிருக்கலாம் ஆனால் கைவிடப்பட்ட காலத்தில் ஒரு சிற்றிலக்கியச் சூழலுக்கு அனைத்துமாக இருந்தவர்களில் ஒருவர் கருணா.
ஆனால் நாம் அவர்கள் மீது ஒரு எதிர்வினை ஆற்றிவிட்டால் நம்மைக் கெட்டவார்த்தையால் திட்டிவிட கிருஷ்ணராசாவல் முடிந்தது. ஆனால் கருணாவுக்கு உடனடியாக நம்முடன் அனைத்துத் தொடர்பையும் துண்டித்து  விட முடிந்தது. அதற்குப்பின் நாம் தொடர்பைக் கொண்டு வர சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படியொரு நிலையில் தான் கருணாவுக்கும் எனக்குமான இறுதிக்காலம் இருந்தது.

என்னை மன்னித்துக் கொள் கருணா….
படங்கள் "ஸ்கேன்" செய்து கொள்ள முடியாததால் புகைப்படமாக எடுத்துப் பாவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment