Friday 8 February 2019

"round up" -கற்சுறா


சாக்கடைக்குள் விழுந்து போகாதே என்று யார் சொன்னாலும் நான் சாக்கடையை எட்டிப்பார்த்த கணத்தில் கால் இடறிவிழுந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
 உண்மையும் அதுதான்.
 
இங்கே சனியன் –மூதேசி- முட்டாள்- வெருளி- மூளை கழண்டவன்- கழிசடை- வருத்தக்காரன்- றீற்மெண்ட் எழுத்தாளன்- என்ற எந்த சொற்பிரையோகத்தையும் நான் பாவித்துக் கொள்ளவில்லை.

வாசிப்பவர்கள் யாராவது  இடையிடையே அப்படி இருந்தால் தான் வாசிப்போம் என்று அடம்பிடித்தால் நீங்களே அதனை உசசரித்து வாசித்துக் கொள்ளவும்.

அண்மையில் ஈழத்தின் கவிஞர்களது பட்டியல் குறித்த எதிர்வினையாக ஜெயமோகன் அவர்கள் வீடியோவில் கூறியிருந்த கருத்துக்களை முழுமையாகக் கேட்டதின் பின் எழுதத் தோன்றிய பதிவே இது. நமது நண்பர்கள் தனியே ஜெயமோகன் கூறியிருந்த கருத்தான ஒரு நகரத்தில் இவ்வளவு கவிஞர்கள் இருந்தால் கிருமிநாசினி அடித்துக் கொல்ல வேண்டும். அங்கே பெண்களின் பாதுகாப்பிற்கு  என்ன உத்தரவாதம்” என்பது போல் பேசியதற்கு அதிகமாகக் கோபப்பட்டிருந்தார்கள். அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் பேசிய அரசியல்தான் ஜெயமோகனது அரசியல் என்பதனை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது ஜெயமோகனது அரசியல் மட்டுமல்ல. மிக அதிகமான தமிழகத்து இலக்கியவாதிகளது சிந்தனை  மற்றும் அரசியல் அதுதான்.  அதுதான் என்பதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? எதை வைத்து அளந்து கொள்வது?  நம்மில் பலருக்கு அது ஒரு நகைச்சுவைக் கதை. இலக்கியம் எப்பொழுதும் நகைச்சுவையை அனுமதித்தே இருக்கிறது என மதிப்பீடு வழங்குகிறார்கள். நல்ல மதியுரைஞர்கள். ஒருவன் செய்கிற முட்டாள் தனத்திற்கு புத்திசாலித்தனமான விளக்கம் கொடுப்பவர்கள் வாழ்ந்த  பூமிதானே நம்முடையது.

ஈழம் குறித்த அல்லது ஈழ இலக்கிம் குறித்த ஏன் ஈழ அரசியல் குறித்த அவர்களது புரிதல் அல்லது புரிதலுக்கான ஏற்பாடு, அதனை முன் நகர்த்தும் செயற்பாடு எதுவாக இருக்கின்றது என்பதனை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஈழம் குறித்து அவர்கள் சொல்ல விழையும் மிக முட்டாள்தனமான கருத்துக்களையும் “அவர்கள் சொல்வதால்” சரியாக இருக்குமோ என நம்மில் அதிகமானோர் நம்பிவிடத் தயாராக இருக்கிறார்கள். அதனை அவர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஈழப் போராட்டமாயினும் சரி ஈழ இலக்கியமாயினும் சரி, ,ஈழச் சினிமா ஆயினும் சரி தலையில் ஏறியிருந்து நமக்கு அவர்கள் கதை சொல்ல முனைகிறார்கள். இது எப்படி நான் சார்ந்த சூழலில் நடைபெற்றிருக்கிறது அதனை எப்படி நான் தகர்க்க முற்பட்டிருக்கிறேன் என்பதனைச் சொல்வதினூடாக விளங்கிக் கொள்ள முனைகிறேன்.

முதலில் ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடும் தொகைக் கவிஞர்கள் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் நிரம்பி வழிகிறார்கள். இந்தமாதிரி நிரம்பி வழியும் தம்மைக் கவிஞர்கள் என அடையாளப்படுத்துவோர் யாரையும் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் நாம் கவிஞராக ஏற்பதில்லை. இந்த வகைக் கவிஞர்களை யாரும் கிருமிநாசினி அடித்தும் கொல்லமுடியாது. அவை கிருமிநாசினிகளை விடவும் மோசமான நச்சுத் தன்மையுடையவை.

சிலவேளை ஈழத்தில் கிருமிநாசினி அடிக்கும் போது செத்துப் போனாலும் தமிழகத்தில் அது சாத்தியமில்லை. அங்கே நாம் கிருமி நாசினி அடித்துக் கொல்ல நினைக்கும் போது எழுதியவரை விட வேறு ஒருவர் இறந்துவிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது.  ஏனெனில் அங்கே அதிகமாக பெயர் சொல்லக்கூடிய எழுத்துக்களை வேறு யாரே ஒருவர் எழுதிக்கொடுத்ததாகத்தானே வரலாறு இருக்கிறது. அண்மையில் மாலதி மைத்திரியின் கவிதைகளை நானே எழுதிக் கொடுத்தேன் என பிரேதன் சொன்னதும். “ஸீரோ டிகிரி” நாவலை ரமேஸ்- பிறேம் எழுதிக் கொடுத்ததாகவும் தான் வரலாறு சொல்கிறது? அப்போ மாலதி மைத்திர்க்கு  அடிக்கும் மருந்தில் ரமேஸ் கொல்லப்படும் அபாயமும் சாருவுக்கு அடிக்கும் மருந்தில் பிரேமும் ரமேசும் கொல்லப்படும் அபாயமும் நிகழ வாய்ப்பிருக்குது அல்லவா?

அதை விடுத்து ஜே. ஜே. சில குறிப்புக்கள் நாவலை தான் தனியாக எழுதவில்லை பலருடன் சேர்ந்து எழுதியதாக சுந்தரராமசாமி சென்னதாகவும் அதில் முக்கியமானவர் க்ரியா ராமகிருஸ்ணன் என்பதாகவும் ஒரு உளறல் இருக்குதா இல்லையா? அப்படி எனில் உங்க தேசத்தில் என்னதான் எலக்கிய எழவு நடக்கிறது? அது குறித்து ஏன் வாய் தொறக்கமாட்டேள்?

 சரி அத விடுமோய்,

“ அபி, பிரம்மராஜன், பிரேதா மூவரும் என்கவிதைகளை இமிட்டேட் செய்கிறார்கள். பாதிப்பு, இமிட்டேசன், காப்பி இவை மூன்றும் வேறு வேறான விசயங்கள். பாதிப்புத் தவிர்க்க முடியாதது. காப்பி என்பது இலக்கியத் திருட்டு. வேறொருவன் படைப்பை அப்படியே அல்லது கொஞ்சம் வேலைப்பாடு பண்ணி மாற்றி தன் பெயரில் போட்டுக் கொள்ளும் வேலை. இமிட்டேசன் செய்கிறவரிடம்  பாதிக்கப்படுகிறவரின் சுத்தமான அணுகுமுறையான  வழிமொழியும் பண்பு இராது.  வேண்டுமென்றே மூலகர்த்தாவின் வெளியீட்டியக்கத்தைப் போலி பண்ணிவிட்டு தம்மைச் சுயம் என்று பிறரை நினைக்க வைப்பவர் இவர்.” (லயம்-14 )என்கிறார் பிரேமிள். இதனை ப்  போலி என்கிறார். இதுக்கு என்னோய் பதில்? உங்க ஆத்தில இருக்கின்ற எழுத்தாளர்கள் என்ன யோக்கிய சிகாமணிகள் என்று சொல்லுமோய்?

இப்படி நாம்மூரிலும் இருக்கிறார்கள்தான். அவர்களை நான் எந்தக் காலத்திலும கவிஞர்கள் என்று அழைத்ததில்லை. சேரனைப்பார்த்து கவிதை எழுதியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஒரு கவிஞராக நாம் சேரனைப் பார்த்து வியந்தோம் பின் தொடர்ந்தோம். எமக்கு எட்டிய தூரத்தில் இருந்தார் அவர்.

“மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை. ஆனால் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை வெறுக்கிறோம்” என்ற செழியனது கவிதை, போராட்ட சூழலில் அதி உன்னதம் நிறைந்தது. இன்றைக்கும் எஜமானர்கள் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக அந்த இரண்டு வரிகளையும் வீசிக் கொண்டுதானே இருக்கிறோம். ஆனால் செழியனையும் சேரனையும் நாம் தலையில் தூக்கி வைத்து ஆடவில்லை. அந்தக் கவிஞர்களையும் நேரெதிர் நின்று எம்மவர்களால் விவாதிக்க முடிந்தது. சேரனை ப் பார்த்து “ நீங்கள் ஏன் ஒரு கவிதை எழுதக் கூடாது?” என சேனனால் கேட்கமுடிந்ததற்கு இலக்கியம் சார்ந்த விமர்சனக் கதையாடல் இருந்ததாகவே நான் பார்க்கிறேன்.(பார்க்க: நாட்டாமை. வெள்ளிவிழா இலக்கியச் சந்திப்பு வெளியீடு. தொடர்பு ரஃபேல்)

இவை எல்லாவற்றையும் விட உங்கள் தமிழகத்துக் காரர்கள்-( இது ஒரு ஊர்ச்சண்டை போல் தொடர்வதற்கு மன்னிக்க வேண்டும். உங்கள் தமிழகத்துக் காரர்கள் என திரும்பத்திரும்ப நான் எழுத வேண்டியிருக்கிறது. ஏனெனில் உங்கள் ஊரை தமிழ்க் கவிதைகள் குறித்து அப்படித்தான் உரைக்கிறது. இது ஒரு ஊர்ச்சண்டையகத் தொடர்வதில் எனக்கு விருப்பமே. அதற்கு அதிகம் பழக்கப்பட்டவன் நான்.)- ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்  தொகுப்பு: அ. மங்கை. மற்றும் புலம்பெயர்தோர் கவிதைகள்- தொகுப்பு ப.திருநாவுக்கரசு. இவற்றை நீங்கள் வாசித்ததுண்டா? அவை ஏன் வெளியிடப்பட்டன என்றாவது உங்களுக்குத் தெரியுமா? கிருமி நாசினி அடித்துக் கொன்றுவிடக்கூடிய கவிதைகளை ஏன் அவர்கள் தொகுத்தார்கள் என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? ஏன் இவற்றைத் தமிழ் நாட்டில் வெளியிடுகிறாய் என்றாவது இதுவரை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் கேட்கமாட்டீர்கள். நான் கேட்டேன். புலம்பெயர்ந்தோர் கவிதைகள் வெளியிட்ட ப. திருநாவுக்கரசிற்கு நான் எனது மற்றது இதழில் பதில் எழுதினேன். அதில் எனது கவிதையையும் சேர்த்திருந்தார். யாரைக் கேட்டுத் தொகுத்தாய் எனக் கேட்டிருந்தேன். தமிழகத்து அரசியல் சூழலிற்கு என்ன கவிதை காட்டப்பட வேண்டுமோ ஈழத்தவர்கள் பற்றி என்ன கதை சொல்லப்பட்டால் தாம் பணம் சம்பாதிக்க முடியுமோ அதற்குரிய கவிதைகளைச் சேர்த்துத் தொகுத்து “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” தொகுத்திருந்தார் அவர். அதனை மறுத்து எங்களை வைத்து வியாபாரம் செய்யாதே என அப்போதே எழுதினேன். அதன் முன்னுரையில் “ இதன் பின்னர் ஈழச்சிறுகதைகளையும் தொகுக்க இருப்பதாகக்” குறிப்பிட்டிருந்தார். “ அப்படியேதும் செய்ய நினைத்தாய்…

“ பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கன்னு

எதாவது துரோகம் பண்ண நினைச்சே

 தேவடியா நாயே

ஆளை வைச்சுத் தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரத

பதிலெழுதவும்”

என சங்கராபரணியிலிருந்த மைத்திரியின் கவிதையுடன் முடித்திருந்தேன்.

அப்ப , யாருக்குத் தெரியும் அதுவும் பிரேதன் எழுதியது என்று.

இது ஒன்று. அதுக்குப் பிறகு “பெயல் மணக்கும் பொழுது” அதையாவது பார்த்தீர்களா? உங்களுக்கு அது குறித்த கரிசனை கிடையாதுதானே. அது ஈழத்துப் பெண் கவிஞர்கள் தொகுப்பு. அதில்  நான் உட்பட பல  ஆண்களது கவிதைகள் இருக்கிறது. அது எப்படி நடந்த தவறு? என்று இன்றும் பதில் இல்லை. வெறும் பணம். பணத்திற்காக எதை வேண்டும் என்றாறும் வியபாரம் ஆக்கும் சமூகத்திடம் இலக்கிய நேர்மை பற்றி நாம் எதிர்பார்ப்பது தவறு.

 இப்ப உங்களையே எடுத்துக் கொள்ளுங்கோவன். அ. முத்துலிங்கத்திடம் கை நீட்டி விருதும் காசும் வாங்கிய ஒரே ஒரு சந்தர்ப்பத்துக்காக நீங்கள் எவ்வளவுக்கு உங்களையே கேவலப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளனாக ஒரு இலக்கிய விவாதக்காரனாக முத்துலிங்கத்தை நாம் கணக்கிலே எடுப்பதில்லை. அவர் கொடுக்கத் தொடங்கிய இயல் விருது குறித்து ஆரம்பம் முதல் கேள்வியும் நையாண்டியும் செய்த வண்ணமே இருக்கிறோம்.( பார்க்க: அறிதுயில்)  இயல் விருதை யார் கொடுக்கிறார்கள் என முதல் இரண்டு வருடம் மறைத்து வந்த முத்துலிங்கம்  ரொரண்டோ பல்கலைக்கழகம் கொடுப்பதாக புலுடா விட்டு வந்தார். பின் செல்வா கனகநாயகம் அவர்கள் இறந்து போன பின் தான் இது சொந்தத் தயாரிப்பு என காட்ட வேண்டி வந்தது. இதனைக் கையேந்தி வந்து வாங்கிய குற்றத்திற்காக நீங்களும் கிடந்து மாரடிக்க வேண்டிக்கிடக்கிறது. அவரை நீங்கள் எழுத்தாளராகப் பட்டியலிட்ட பின்புதான் நாம் விளங்கிக் கொண்டோம் என்பதாக உங்கள் பிதற்றல் வேறு.. ஐயோ… முத்து லிங்கத்தை ஒரு இலக்கிய எழவு என்று தான் நாம் அடையாளமிடுகிறோம் மற்றப்படி உங்களைப்போல் மாறிமாறி காவடி எடுப்பதில்லை நாம். காசுக்காக தம்மை ஒருபொழுதும் விற்காதவர்கள் தான் ஈழத்து எழுத்தாளர்கள் பலர்.

 இதில் நாங்கள் முட்டாள்கள் என்றும் எங்களுக்குப் பட்டியல் போட முடியாதவர்கள் என்றும் நீங்கள் பட்டியல் போட்டு அடையாளப்படுத்திய பின்னர் தான் நாம் அவர்களைக் கண்டு கொண்டோம் என்றும். சொந்தமாக எழுதத் தெரியாதவர்கள் திரும்ப உங்களைப் பார்த்துத் தான் எழுதுகிறோம் என்றும் சொல்வது மனப்பிறழ்வுதானே. நாங்கள் எழுதி வருவதையும், ஈழ இலக்கிய எதிர்க்கதையாடல்களையும் நீங்கள் வாசிக்காததின் வருத்தமாகத்தானே இது இருக்க வேண்டும்.

 சோபா சக்தியை எங்களுக்கு நீங்கள் தான் பட்டியல் போட்டுக் காட்டியதாகச் சொல்கிறீர்கள். மிக வேடிக்கையான வார்த்தை. எங்களுக்குள் சோபா சக்தி எழுதிக் கொண்டிருந்த காலங்களில் நாம் மிக அருகிருந்து உன்னிப்பாகக் கவனித்ததில் எம்மைப பிரமிக்க வைத்தவர். அவரது காய்தல் கதை, எலிவேட்டை கதை என்று இலக்கியத்தில் விளையாட்டை நிகழ்த்தியவர். அவர் பிற்காலங்களில் தமிழகத்து ஆசாமிகளுக்கு சித்து விளையாட்டுக் காட்டி பேரெடுக்க வெளிக்கிடும் போது அவரைக் கட்டுடைத்து எழுத வேண்டியிருந்தது. நாம் அவரைத் தமிழகத்துக்காக எழுதுகிறார். தமிழகத்துக்காக தன்னைத் தொலைக்கிறார் என்று நாம் அடையாளம் இட்ட பிற்காலத்தில் தான் நீங்கள் அவரைக் கண்டு கொள்ள  நேர்கிறது. அவர்  உங்களுக்கு உங்களுக்கு விளங்குற மாதிரி கதை சொல்ல நேர்கிறது. நீங்கள் அவரைக் கொண்டாட நேர்கிறது. அவரது கடைசி நாவலான BOX கதைப் புத்தகம் கூட உங்களுக்காக அவர் எழுதியது என்றுதான் நாம் சொல்கிறோம். அவரிடம் மிக அதிகமான கெட்டித்தனங்கள் இருக்கிறது. இலக்கியத்தில் அவர் ஒரு போராளி என நாம் சொல்லக் கூடியவர் தமிழகத்தில் உள்ள உங்களைப்  போன்ற வியாபாரிகளுக்கு தனது வித்தையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.

அவர் எப்படி தமிழகத்துக் காரர்களுக்காக தன்னைத் தொலைக்கிறார் என்று 2003ம் ஆண்டு எக்ஸிலில் “கணக்குத் தீர்ப்பு” என்று ஒரு கட்டுரையை அவரது தேசத் துரோகி சிறுகதைத் தொகுப்புக் குறித்து எழுதியிருந்தேன். தமிழகத்துக் காரர்களுக்கு விளங்கிக் கொள்ள அவர் கதை சொல்லவும் அவர்களுக்காகச் சமரசம் செய்யவும் தயாராகிவிட்டதனைக் குறிப்பிட்டு நம்முடன் இருந்த கணக்கைத் தீர்த்துக் கட்டுரை எழுதினேன். நீங்கள் அதன் பிறகு எங்களுக்கு சோபாவை நான்தான் அடையாளப்படுத்தினேன் என்பது என்ன வினோதம்? இங்கே யார் முட்டாள்?( பார்க்க 2003 எக்ஸில்-13)

இதை மாதிரியான கோமாளிச் செயலைத்தான் அரசியலில் சீமான் செய்து கொண்டிருக்கிறார்.  இயக்குனர் ராம் ஈழத்தைப் பற்றிப் படம் எடுக்கப்  போகிறேன் என 2010இல் அறிவித்தார். போன வருடம் பிறேம் ஈழம் பற்றி நாவல் எழுதப் போகிறேன் என்றார். இருவருக்கும் “ உங்களுக்குத் தெரியாததைச் சொய்யாதீர்கள்” என எழுதியிருந்தேன். காலம் செல்வம் அண்ணையும் நோயல்  நடேசனும் அனோஜன் பாலகிருஸ்ணனும் அ. முத்துலிங்கமும் காட்டுவதல்ல ஈழம். அதையும் தாண்டி அது வேறு ஒரு சாமான். இவர்களை நம்பி வார்த்தைகளை வெளியிடுவதில் நீங்கள் இனியாவது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிய வேண்டும் “காலம்” பத்திரிகையில் என்ன வரப் போகிறது என்பதே செல்வம் அவர்களுக்குத் தெரியாது. அதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். முன்பு காலச்சுவட்டுக்கு வந்து போடாது விட் ட கட்டுரைகளைச் சேர்த்து வெளிநாட்டில் உள்ளவர்கள் எழுதுவதையும் சேர்த்து வருவதுதான் காலமாக வந்தது. இப்போது காலச்சுவடு மாறி அது உயிர்மையாக இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இவர்களைப்  போன்றவர்களை வைத்துக் கொண்டு ஈழ இலக்கியத்தை -அரசியலை – எங்களை அளவிடுவதை நீங்கள் கைவிட வேண்டும்.

 இவர்கள் விருது தருகிறார்கள் என்று இனித் தயவு செய்து அங்கிருந்து பிளேன் ஏறி இங்கு வராதீர்கள். கறுப்புக் கொடி காட்டுவதும் ஹர்த்தால் செய்வதும் தான் எங்களுக்குத் தெரிந்தது என நினைத்து ஏமாந்து விடாதீர்கள். இனிப் பீவாளி தோய்த்து அடிப்போம். விருது கொடுப்பவனுக்கும் அடிப்போம் வாங்குபவனுக்கும் அடிப்போம். நீங்கள் வந்து வாங்காது விட உங்களது விருதை மூன்றாம் கை முழங்கையால் இங்கிருந்து வாங்குபவனுக்கும் அடிப்போம். சீமான் பேசுகிற புத்தி பேதலிச்ச கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிற உங்களது ஊர்க்கரர்கள் போல் அல்ல நாங்கள் என்பதையாவது நீங்கள் யோசிக்க வேண்டும். முதலில் ஈழத்தை வாசியுங்கள். பிதற்றலை நிறுத்துங்கள். உங்கள் சினிமாக்காரன் கவுண்டமணி சொன்னதையாவது கொஞ்சம் கேளுங்கள். “ உனக்குத் தெரியாதல்லா… தெரியாததை ஏண்டா நாயே பேசுறாய்?” என்பதுதான் அது.

அது சரி தமிழகத்துக் கவிதைப் போக்கு ஈழத்துக் கவிதைப் போக்குக்  குறித்து நான் எதையும் சொல்லவில்லை என…

அதுகுறித்தும் கொஞ்சம் பேசத்தானே வேண்டும்.

பேசுவோம்

கற்சுறா

No comments:

Post a Comment