Sunday 4 March 2018

"கனடா வாழ் முதியவர்கள்"

"கனடா வாழ் முதியவர்கள்"
பகுபதம் நிகழ்வு.




இன்றைய நிகழ்வில் கனடா வாழ் தமிழர்கள் குறித்த அக்கறையுடன் மிகமுக்கியமாக நான் நினைக்கும் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டதால் இதனை எழுதியே ஆகவேண்டும் என நினைக்கிறேன்.

ஒன்று இங்குள்ள வைத்தியர்களது கரிசனம் குறித்தது. முதியவர்கள் தமது சுகவீனம் குறித்து வைத்தியர்களால் ஏமாற்றப்படுவது. இது பொதுவாக நீங்கள் அறிந்த உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடும் போது நீங்கள் அறிந்து கொண்ட விடையமானாலும் அங்கு கலந்து கொண்ட பலர் தமது அனுபவங்களை ஒருபொது வெளியில்சொல்லும் போது அது மிக முக்கியம் வாய்ந்ததாகிறது.

குறிப்பாக இங்குள்ள முதியவர்கள் அதிகமாக தமிழ் வைத்தியர்களை நம்பியே இருக்கிறார்கள். அந்த வைத்தியர்களும் இவர்களை(தமிழர்களை) நம்பித்தான் இருக்கிறார்கள் ஆனால் இந்த முதியவர்களது நம்பிக்கையை உருக்குலைப்பது ஆரோக்கமானதல்ல என்பதனை இந்த வைத்தியர்களுக்கு யார் சொல்வது? பணம் சம்பாதிப்பதற்கு இந்த நாட்டில் அதிகமான தளங்கள் இருக்கும் போது வைத்தியர்கள் இந்த ஏமாற்றுத் தனத்தால் இவர்களை அலைக்கழிப்பது. அவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்துவது அவர்களை நிர்க்கதியாக்குவது சரியான முறையல்ல.

கனடிய சட்டதிட்டங்களுக்கமையவே அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஏமாற்ற வசதியாக இருக்கும் சட்டங்களின் ஓட்டைகளை அவர்கள் அறியாதவர்கள். அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி தற்போது தமக்கு இருக்கின்ற வருத்தங்கள் உண்மையா என்று அறிய தமது குடும்ப வைத்தியர்களை விடவும் வேறு இரண்டு வைத்தியர்களிடம் சென்று உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது என்றால் இது யாருடைய தவறு?

இது கனடிய தமிழ் டாக்குத்தர் மாருக்கு வந்த சாபக்கேடு. ஆனால் இந்த டாக்குத்தர் மார் தான் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியம் தமிழ் மானம் தமிழர்களது அபிமானம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இந்த முதியவர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். இவர்களிடம் இருந்து அவர்களது பணத்தை மட்டும் உறுஞ்சி தமது உழைப்பை மட்டும் சிந்திக்கும் டாக்குத்தர்மார்கள் இவர்களை அடையாளம் காணவேண்டும்.


இது குறித்து பகுபதம் இன்னொரு நிகழ்வு இந்த டாக்குத்தர் மாரையும் அழைப்பு விடுத்துச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முதியவர்கள் ஒவ்வொரு உரையாடலிலும் நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிச் சொல்லித்தான் உரையாடினார்கள். அடுத்தமுறை பெயரைச் சொல்ல வைக்க வேண்டும். அந்தப் பெயருக்குரியவர்களையும் நேரடியாகக் கொண்டு வரவேண்டும். அது பகுபதத்தின் பொறுப்பாகக் கருதுகிறேன்.

அடுத்து பார்வதி கந்தசாமியின் உரை. அவர் தமிழ்ப் பெண்களது உளவதையும் உடல் வதையும் குறித்து மிகுந்த அக்கறை கொள்பவர். தமிழ்க் குடும்பங்களில் பிள்ளைகளால் முறைகேடற்று நடாத்தப்படும் முதியவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார். நான் அவரை 2002ம் ஆண்டளவில் ஒரு நேர்காணல் செய்தேன் அதில் தகப்பனால் பேரனால் பாலியல் வதைக்குள்ளாகும் தமிழ்க் குழந்தைகள் குறித்து பேசியவர். தமிழ்ச் சமூகம் தன்னுடைய இனமானம் காக்க எதையும் செய்யத் தயாரானது என்பதனை உணர்ந்து கொண்டேன். இது கனடாவிற்கு மட்டும் உரித்ததானதல்ல. அனைத்து புலம் பெயர்ந்த சமூகத்திற்கும் பொதுவானது.



பகுபதம் இன்று எடுத்த வீடியோப் பதிவினையும் அதன் பின் கருத்துச் சொன்ன முதியவர்களது விவாதத்தையும் பொது வெளியில் பகிரவேண்டும் எனக் கோருகிறேன். அதை விடவும் முதியவர்களுக்கு வசதியாக இடம் ஒழுங்கு செய்து நேரம் ஒழுங்கு செய்து மீண்டும் உரையாடப்படவேண்டிய விடையம் என்று கருதுகிறேன். இதில் பகுபதம் கவனம் கொள்ள வேண்டும்

பகுபதத்தின் சமூக அக்கறை குறித்து மிகுந்த சந்தோசம்


ற்சுறா

No comments:

Post a Comment