Sunday, 9 March 2025

மேன்முறையீடு;










- கற்சுறா-

மேன்முறையீடு;



உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்? என அருண்மொழிவர்மன் அவர்கள் மீண்டும் என்னிடம் கேட்ட மேன்முறையீட்டிற்கான விளக்கம்.



அருண்மொழிவர்மன் அவர்கள் மீது நான் கவனம் கொள்ளும் அவசியம் ஏன் என்பதனை நான்  ஏற்கனவே சொல்லியிருந்தாலும், மீண்டும் ஒருதடவை விரிவாகச்  இங்கே சொல்லிப் போகிறேன்.

ஒரு புத்திசாதுரியமான உரையாடல்களை முன்வைப்பதாகக் காட்டிக்கொளும் அருண்மொழிவர்மன் அவர்களது சொற்கள்,  இந்த சமூகத்தில்  ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் பொய்யான கருத்தியல்களுக்கு காரியமுலாம் பூசமுனைகின்றன என நான் அவதானிக்கும் விடயங்களில்  அவரை நான் இடையூறு செய்யவும் தயங்குவதில்லை. அவ்வாறான இடங்களில் நான் மற்றவர்களைப்போல்  பாரா முகமாகவும்  இருப்பதில்லை. என்னால் முடிந்தவரை நான் அவற்றைக் கோடிடுகிறேன்.

ஒரு கொடிய யுத்தத்தின் பின்னால் எழும் அத்தனை செயற்பாடுகளும் நமது சமூகத்தை ஏதோ ஒரு வழியில் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என நம்புகிறேன்.  அது ஒரு சமூகச் செயற்பாடாக இருந்தாலும், ஒரு உரையாடற் களமாக இருந்தாலும் இனியாவது எம்மிடம் ஒரு கறாரான நேர்மை இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவ்வாறு இல்லாமற்போகும் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டி உரையாடுதலும் அவ்வாறு முடியாது போகுமிடத்து அதனைச் சுட்டிக்காட்டியபின் விலகிப்போவதுமே சரியானதாக இருக்கும். 

எவர் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும்  பாராமுகமாக இருந்து என்னுடைய கருத்தையும்  என்னுடைய இலக்கியத்தையும் என்னுடைய சமூகச் செயற்பாட்டையும் மற்றவர்கள் புகழ்ந்தோதவேண்டுமென நினைத்து வாழும் ஒரு தற்குறி மனநிலை என்னிடம்  ஒருபோதும் இருந்ததில்லை.  அதற்கு நான் தலை வணங்கியதுமில்லை. என்னுடைய கருத்துத் தளத்தில்  என்னுடைய அறிவின் தரத்தில் என்முன்னால் தவறு என நான் காணும் இடங்களை நோக்கி நான் கேள்வி கேட்டுத்தான் போகிறேன். குறைந்த பட்சம் அதற்குரியவர்கள் பதில் சொல்லாது கடந்து போனாலும் நான் அதனை அடையாளம் காட்டிச் செல்லவேண்டும் என நினைப்பது ஏனென்றால், “நானும் அம்மாதிரியான செயற்பாடுகளிற்கு உடந்தையானவன் இல்லை” என்பதற்காகவே அன்றி உங்களது அடையாளத்தை அழிப்பதற்காகவோ அல்லது  சமூகத்தில் உங்கள் பாத்திரத்தைக் கொலை செய்வதற்காவோ இல்லை என்பதனை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

 நீங்களும் உங்களைப்  போன்றவர்களும் செய்யும் செயல்களால்,  உங்கள் எழுத்துக்களால்,  எமது சமூகம் கடந்தகாலத்தில் எவ்வாறான அழிவுகளைச் சந்தித்தது என்று எழுதியதுபோல், அடையாளம் காட்டியது போல், இப்போதும் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டுகிறேன். ஆதலினால்   நான் எனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்துவிடுகிறேன். அதனைப் பொறுத்துக் கொள்வது உங்களுக்குக் கொஞ்சம் சிரமமான காரியந்தான்.

அந்தவகையில்  என் அறிவுக்கெட்டிய தளத்தில் ஈழத் தமிழ்த் தேசியத்தை முன்வைத்து உரையாடல் நடக்கும் தளங்களில் எனது கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருந்துவிடுகிறது. கற்பனைகளில் உதிர்த்த புராணக் கதைகளைப் போலவோ, அல்லது எங்கேயோ ஒரு தூரதேசத்தில் நடந்த ரஷ்யப் புரட்சிக் கதைகள் போலவோ, கீயூபப் புரட்சிக் கதைகள் போலவோ, நம்மால் உணரவே முடியாத சாண்டினிஸ்டாப் புதல்விகளின் கதைகள் போல் இருந்ததில்லை எமது ஈழக் கதைகள். உங்களைப் போல் நானும்  கண்ணெதிரே பட்டுணர்ந்த “பாவக் கதைகள்” அவை.  

தமிழீழம் என்பதோ அல்லது ஈழத்தமிழ்த் தேசியம் என்பதோ  ஒரு “பொய்யான கட்டுக்கதை” என்பதனை நான் இப்பொழுதும் பரிபூரணமாக நம்புபவன். கிடைத்த நாற்பது வருடகாலத்தில் அது தன்னை தர்க்க ரீதியாகவோ அல்லது மனிதாபிமான ரீதியாகவோ வளர்த்துக் கொள்ளவேயில்லை. மானிட முன்னேற்றத்தை அழித்து  அது என்னவகையான  அட்டூழியம் செய்தும் தன்னை ஒரு முக்கிய பொருளாக அடையாளம் காட்டும் பணியையே தொடர்ந்தும்  செய்தது. இன்றும் செய்ய முனைகிறது. இன்றும் கூட கடந்த கால அனுபவத்தை வைத்து தன்னை மாற்றத்திற்குள்ளாக்கவில்லை. ஏற்கனவே அவ்வாறு செய்யப்பட்ட அந்தப் பணிக்கு “பங்கம்” விளைந்து விடாதபடியான ஆய்வுகள் செய்யப் பல புதுப்புது ஆய்வாளர்கள் யுத்தத்தின் புதல்வர்களால் தோற்றுவிக்கப்பட்டார்கள். அந்த வகையின் தொடர்ச்சியாக இன்று அருண்மொழிவர்மன் அவர்களும் எனக்குத் தெரிவதால் மட்டுமே நான் அவரை இடையூறு செய்கிறேன். மற்றப்படி அவரைக் கரித்துக் கொட்டுவதற்கு எனக்கும் அவருக்கும் என்ன உறவுப்பகையா? கொடுக்கல்வாங்கல் பகையா? எதுவுமேயில்லை.

அவர் ஈழ அரசியலையோ, அல்லது  கடந்தகால விடுதலைப் போராட்டம் என்றழைக்கப்பட்ட கதையாடலையோ  அவர் ஒரு பகுத்தறிவுச்சிந்தனையுடன் அணுகவில்லை. தனியே ஒரு தேசிய மனநிலை கொண்டலையும் ஒரு அசல் யாழ்ப்பாணியின் சிந்தனையோடே ஒன்றியதுதான் அவரது நிலைப்பாடும் என்பதால் மட்டுமே அவரை இடைமறிக்க வேண்டியிருக்கிறது.அவரின் நிலைப்பாட்டை இந்த சமூகத்தின் முன் வெளிக்காட்டவேண்டியிருக்கிறது.

ஆனால் அவரோ தனது பாத்திரத்தை நான் கொலை செய்கிறேன் என்பதாகவும் தன்னை நடத்தைப் படுகொலை செய்வதாகவும்  நான் ஒரு ஆய்வு இல்லாத கதை சொல்லும் ஒருவர் எனவும்  சொல்லிக் கொண்டிருக்கிறார். அருண்மொழிவர்மன் அவர்களைப் பார்த்து நான் பரிகசிக்கத்தான் முடியும். அல்லது “செய்வதையும் செய்துவிட்டுத் திருட்டுமுளி முளிக்கிறாய்” என்று கவுண்டமணி பாணியில் திட்டிப்  பேசத்தான் முடியும்.

பலதடவைகள் அவரை நோக்கி நான்  கேள்வி எழுப்பும் தருணங்களைப் பார்த்தும் பார்க்காது போகமுனையும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்துதான் இருக்கின்றது. ஆனாலும் சமூக ஊடக வலையமைப்பின் தாக்கம் ஒரு இடத்தில் அவரைப் பேச வைக்கும்.  அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னை நோக்கி…

“உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்?” என்பார்.

அவரை நோக்கி நான் எழுப்பும் கேள்விகளைப் பற்றித் தெரியாதைப் போல் எப்போதும் புதிதாகக் கேட்பார். இதனை அவர் ஒரு தந்திரம் என்று நினைக்கிறார். தான்  இவ்வாறு புதிதாகக் கேட்பதால் அந்தக் கேள்விகள் செயலிழந்து விடும் என நம்புகிறார்.  அதனாலேயே அவரை நோக்கித் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டிய ஒரு நிலை தோன்றுகிறது.

அவரின் இந்த வகையான அணுகுமுறையை “புதியசொல்” செயற்பாடுகளிலும் “விதைக் குழுமச்” செயற்பாடுகளிலும் மற்றும்  “நூலகம்” செயற்பாட்டு நிலைகளிலும் தாங்களும்  அனுபவப்பட்டதாகப் பலர் சொல்லியதைக்  கேள்விப்பட்டிருக்கிறேன். அதையெல்லாம் எக்காலத்திலும்   நான் பொருட்படுத்தவேயில்லை. அவற்றை அவர்கள்தான் பொதுவெளியில் முன்வைக்க வேண்டும். “புதிய சொல்” குழுமத்திற்குள் நடைபெற்ற பல்வேறு குழறுபடிகளை இறுதிக்காலத்திலாவது அருண்மொழிவர்மன் அவர்கள் பொது வெளியில் முன்வைத்திருந்ததை நான் வரவேற்றேன். அவரின் கருத்து நிலைக்கு நானும் அதரவளித்தேன்.  ஆனாலும் அவை வெளிப்படையாக இன்னும்  உரையாடப்படவேயில்லை. (நட்சத்திரன் செவ்விந்தியன் என அறியப்பட்ட அருண் அம்பலவாணர் அவர்கள் தான்  இதனைப் பொதுவெளியில் வெளியிட்ட பின்னரேதான் உசாராகி புதியசொல் குழுமத்தின் உள்ளரசியலைப்ற்றி அருண்மொழிவர்மன் அவர்கள் வாய்திறந்தார் என்கிறார். இந்தக் கருத்து நிலை குறித்தும் அருண்மொழவர்மன் அவர்கள் எங்காவது பதில் சொல்லுவார் என நினைக்கிறேன்)

இவையெல்லாம் போக இங்கே அவருடன் உரையாடவேண்டிய நிலை உருவானதன் தேவை என்னவென்றால்,

“இதேநேரம், இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது.  இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று.” 

என்று அவர் சொல்லியிருக்கும் கூற்றுப் பற்றியதானதுதாகத்தான் இருந்தது எனினும் அவரின் மற்றய எழுத்துக்களின் அணுகுமுறை பற்றிய மதிப்பீடும் இந்த உரையாடலுக்கு ஒரு காரணந்தான் என்பதனையும் மறுக்கவே முடியாது. அந்த மதிப்பீட்டின் வழி நின்றுதான்  இதனை ஒரு “புலிச்சொல்” என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். அது புலிச் சொல்லேதான்.

 இங்கே “பெரும்பான்மையான பொதுமக்கள்” என இவர் குறிப்பிடும் பொதுமக்கள் யார்? என்பதும் அவர்களிடம் நம்பிக்கை இழந்தது என அவர் அடையாளம் காட்டும் இடம் எது என்பதுவுந்தான் எனது கேள்வி. இலங்கையில் அப்படி இடதுசாரிக் கட்சிகளிலோ அல்லது இடதுசாரிகளிலோ மக்கள்ஒருபொழுதிலும்  நம்பிக்கை இழக்கவில்லை.  மக்களுக்காக பல்வேறு சமூகக் கரிசனையுள்ள போராட்டங்களை அவர்கள் நிகழ்த்தி மக்களின் ஆதரவைப் பெற்றுத்தனிருந்தார்கள்.  மக்கள் நம்பிக்கையுடன்தான் இருந்தார்கள். அதில் சிங்கள - தமிழ் இடதுசாரிகள் இணைந்து செயற்பட்ட காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால் அருண்மொழிவர்மனுக்குள் உள்ளேயுள்ள தமிழ்த் தேசிய மனம் அதிலும் புலித் தேசியமனம் எதையும் எல்லை தாண்டிப் பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை.   எவ்வாறு அவர் ஒரவர் அனைத்து உரையாடலுக்குள்ளும் தமிழ்த் தேசிய மனநிலையை ஒழித்து வைத்திருந்து கதை சொல்ல முனைகிறாரோ அதே போன்றுதான் ஆரம்பகால விடுதலைப் போராட்ட சிந்தனைகளில் அனைத்து மக்களினதும் சமூகநீதிக்கான போராட்டம் என்ற கதையை மறைத்து சிங்களத்திற்கெதிரான, சிங்கள அரசியல் அதிகாரத்திற்கெதிரான போராட்டமாக மட்டும்  குறுக்கப்பட்டது. அதன் வெறிதான் சிங்களக் குழந்தைகளையும் சிங்களப் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றுவிடத் தமிழ் மனம் விரும்பியது. அல்லது விரும்ப வைக்கப்பட்டது.  கென்பார்ம் டொடர் பார்ம் கொலைகள் நடந்தேறியபோது மக்கள் என்ன மனநிலையிலிருநடதார்கள் என்பது அருண்மொழிவர்மன் போன்றவர்களால் அறியவே முடியாது. அதற்குள் இடதுசாரி மனநிலையை எப்படித்தான் விளங்குவார்கள்?

இந்தமனநிலை வெளிப்பாடு குறித்ததுதான்’ எனக்கும் அவருக்குமான முரண்பாடு.

இதுகுறித்துக் கேள்வி எழுப்பியதும்  இது ஒரு முழுமையான கட்டுரை அல்ல இது ஒருவருக்கான பதிலில் சொல்லப்பட்ட விடயம் என்று அந்தக் கருத்தின் மீதான கவனத்தைக் மதிப்புக் குறைத்துச் சொல்வதால் இந்தக் கருத்தின் அர்த்தம் மாறுபடப் போவதில்லை.


ஈழத்தில் இடதுசாரிச் சிந்தனையுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த அத்தனை செயற்பாடுகளும் எவ்வாறு துப்பாக்கி முனையில் செயலிழக்கப்பண்ணப்பட்டது என்பதனை அனைவரும் நன்கு அறிவார்கள். அதுதான் வரலாறு.

ஆனால் தேசிய இனப்பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்ட காலங்களில் தொடங்கப்பட்ட  அதுகுறித்த விவாதங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை  என்பது எவ்கையில் சரியானது? தேசிய இனப்பிரச்சனையின் சிக்கல்கள் குறித்த விவாதங்கள் அவர்கள் தமது கட்சிக்குள் செய்துதான் இருந்தார்கள் என அறிந்திருக்கிறேன். அதன் பின் தோன்றிய ஆயுதப் போராட்டம் மற்றும் அதன்   விளைவுகள் பற்றி அவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

அதே இடதுசாரிகளில் சிலர் பின்நாட்களில் உங்களைப் போலவே ஆயுதப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியத்தையும் ஏன் புலித் தேசியத்தையும் கூட ஆதரித்து நின்றார்கள் என்ற கருத்துக்களை இந்த உரையாடல்களின் போது பல நண்பர்கள் ஆதாரத்துடன் நினைவூட்டிச் சென்றிருக்கிறார்கள். அதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

மேலும், அருண்மொழிவர்மன் அவர்கள் இப்படியான கருத்துக்களை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கி நான் கேள்விகளை எழுப்புவதன் காரணம், நமது சூழலில் ஏற்கனவே ஆய்வுகள் ஆராட்சிகள் மற்றும் புலனாய்வுகள் என எழுதியவர்களது கருத்தினதும் இருப்பினதும்  கேள்வி எனக்குள் இருக்கிறது.  அதனை அடையாளம் காட்டி நின்ற எழுத்துத் துறையின்  போலித்தனம் குறித்த கவனம் எனக்குள் இருக்கிறது. அது இந்த சமூகத்திற்கு ஏற்படுத்திய தாக்கம் பற்றிய புரிதல் எனக்குள்ளது. அதனாலேயே இன்று அவரை நோக்கி நான் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறேன். ஒருபக்கம் சுயமரியாதை சமூகநீதி பற்றிப் பேசமுனையும் அவர் இன்னொருபக்கம் அதற்கெதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் இவரது சிந்தனையை ஒரு பகுத்தறிவுச் சிந்தனையில்லை என்கிறேன்.

அதனடிப்படையிலேயேதான் 


கடந்த காலத்தில் அவர் தொடர்ந்தும் அடையாளம் காட்டும்  இரண்டு பூக்கள் கவிதை குறித்து அம்பலப்படுத்தினேன்.  இந்த மோசமான ஒரு கவிதையையும் புதுவை இரத்தினதுரையின் இன்னொரு கவிதையையும் மே 18 க்கு ஒருதடவையும் நவம்பர் 27இல் ஒருதடவையுமாக கடந்த சிலகாலமாகத் தொடர்ந்தும் பதிவிட்டுக் கொண்டே வந்திருக்கிறார். இன்றும் வருகிறார். அவரால் இந்த சமூகத்திற்குள் அதன் தாக்கத்தைப் பரிந்து கொள்ள முடியாதே இருக்கிறது. அதனால்த்தான் அவரைப் பகுத்தறிவற்றவர் என்கிறேன்.

முக்கியமாக  சமூகநீதி பற்றியோ அல்லது ஒரு அதன் தேடலில், பகுத்தறிவுடன் ஈழப் போராட்டம் குறித்து அக்கறை கொள்ளும் ஒருவரால் இந்தவகைக் குறிப்பிட்ட காலத்தை மட்டும் ஒருபொழுதிலும் அடையாளமிடவே முடியாது என்பது என்னுடைய கணிப்பு.  ஆனால் அருண்மொழிவர்மன் அவர்கள் திட்டமிட்டே அதனைத் தொடர்ந்து செய்து வருகிறார். இதுகுறித்து அபத்தம் இதழிலும் எனது முகநூலிலும் நீண்ட காலத்தின் முன்பே வெளிப்படுத்தியிருக்கிறேன். அப்போது இந்தமாதிரியான அவரது  மனநிலையைக் “கார்த்திகைப் பூ மனநிலை” என அடையாளம் காட்டியிருக்கிறேன். ஆனால் அதுகுறித்துக் கருத்துச் சொல்லாதிருப்பதற்கான காரணமாக இவையெல்லாம் “அவதூறு” என்ற ஒற்றைச் சொல்லோடு மிக இலகுவாகக் கடந்து விடுகிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டும். இன்றைய மட்டை கட்டிய புத்திசாலிகளுக்கு  “அவதூறு”  என்ற அந்தச் சொல் மிக வசதியானதும்  இலாபகரமானதும்.

இங்கே குறிப்பிட்டுக் காட்டிய  அவரின் சொல்லாடல்களின் விம்பத்தை  நான் எழுதிய போதும் வழமைபோன்று அவதூறு எனத்தான் அவர் கடந்து சென்றிருப்பார்.  அந்த முகநூல் பதிவின் கீழே வெளியிடப்பட்ட தொடர் பின்னூட்டங்களே  அவரைப் பதில் எழுதத் தூண்டியது. ஆனாலும் அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சந்தேகங்களுக்கான பதிலை அவர்  சொல்லவேயில்லை. அங்கே அவர் எழுதியிருந்த சிலவற்றை நான் இங்கே கோடிடுகிறேன்.

  1. “முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம் அதற்கு முயற்சி செய்வதும் பின்னர் எதிர்வினையாற்றுவதும் முக்கியமானது.  அவப்பேறாக நண்பர் கற்சுறாவுக்கு இந்த நடைமுறை சாத்தியமாவதில்லை.”

என்று என்னுடனான கடைசி உரையாடலில் சொல்கிறார் அருண்மொழிவர்மன். 

அவருடை  இந்தமாதிரியான எழுத்துக்களில் மட்டுமல்ல  மொழித்தேசியம், இனத் தேசியம். ஈழவிடுதலை, இன அழிப்பு, தமிழ்மரபு, மரபுத்திங்கள், மே 18, யூலை 23, கார்த்திகை 27 என மட்டும்  இன்றுவரை அடையாளம் காட்டிக் கொண்டிருப்போர் மீது நான் முன்முடிவுகளுடனேயே அவதானம் கொள்கிறேன். இந்தமாதிரியான அடையாளங்களில் என்னுடைய முடிவுகள் முன்முடிவுகள்தான். அதில் மாற்றமேயில்லை. ஆனால் அந்த முன்முடிவு எழுத்துக்கள் உங்களுக்குத் திரிவு படுத்தல்கள் எனத்தான் விளங்கிக் கொள்ள முடியுமாயின் நான் என்னுடைய பழைய கட்டுரைகளை எடுத்து வாசியுங்கள் என்றுதான் சொல்லடியும்.அதனைத்தாண்டி என்ன சொல்லமுடியும்?  

மரபுத்திங்கள் என்று அடையாளம் காட்டி ரொரண்டோவில்  மறை 40 டிகிரிக் குளிரில் வெள்ளை வேட்டியுடனும் வெறுங்காலுடனும் பொங்கல் பானையுடன் இன்று ஸ்னோவிற்குள் நிற்பவர்கள் எல்லாம் 2009க்கு முன் எங்கு நின்றார்கள்? புலிகளின் பொங்கு தமிழில் சிவப்பு- மஞ்சள் ஆடையுடன்  பொங்கிக் கொண்டிருந்தார்கள்.  அதே அவர்கள் வந்து, இன்று தமிழரின் மரபு. தைமாசம் உழவரின் மாதம் என்றும்  உழவர் என்றால் தமிழர்கள் என்றும் சொன்னால் அதனை நம்பி நாமும் பின்னால் போக வேண்டுமா? இது இன்னொரு நாசத்திற்குக் கொண்டுபோய்விடாதா? 

மண்டையிலுள்ள கொண்டையை மறைக்க வேண்டாமா நீங்கள்?

அதனால்த்தான் அருண்மொழிவர்மனுடைய சொற்களை “புலிச் சொல்” என்று நான் சொன்னேன்.  இப்பொழுதும் அப்படியேதான் நான் சொல்கிறேன். அவருடைய சொற்கள் அதிகமானவை புலிச் சொற்கள். அதனால்த்தான் அவரை அதிகம் நான் உற்று நோக்குகிறேன்.

நான் ஒன்றை இங்கே மிகக் கவனமாகப் பதிவு செய்கிறேன். ஈழவிடுதலையின் கதைகளில் விடுதலை உணர்வோடு ஆரம்பிக்கப்பட்ட காலங்கள் தொடக்கம் கொலைக்கலாச்சாரம் தொடங்கிவிட்டது. மக்களின் விடுதலையென நம்பிச் சென்ற எத்தனையோ பிள்ளைகள் வீட்டிற்குத் திரும்பவேயில்லை. ஏன் திரும்பவில்லை என்பதற்குள் பல்லாயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. பல்லாயிரம் கதைகள் இருக்கின்றன. பல்லாயிரம் அடையாளங்கள் இருக்கின்றன.  ஆனால் அந்தப் பிள்ளைகளைப் பெற்றதாய்களுக்கு கண்ணீர் விடவும் அழுவதற்கும் ஒரு காரணம் மட்டுந்தான் உள்ளது. பெற்றதாயாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் நீங்களோ பல பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீருக்கு அர்த்தம் இல்லாமல் செய்து கொண்டு வருகிறீர்கள். அவர்களை அழுவதற்குக் கூட  இடமற்றதாக்குகிறீர்கள். ஆனால் நீங்களோ இரண்டு பூக்களுடன் வந்து அவர்களுக்கும் இடம் கொடுக்கிறோம் என்கிறீர்கள். இது உன்னதமான ஒரு அயோக்கியத்தனம். 

புலிமனதின் வரையறை என்னவாக இருக்குமென்று அனைவருக்கும் தொியும். அவர்கள் தங்களை மட்டும் மாவீரர்கள் என்றும் தங்களால் கொல்லப்பட்டவர்களைத் துரோகிகள் என்றுந்தான் சொல்வார்கள். ஆனால் சமூகநீதி பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு அதே புலிமனதோடு கிறீஸ்பூதங்களாய் இருப்பவர்கள் இதனைச் செய்யமுனையும் போது நான் கோபடைகிறேன். அதனால் உங்களை எனக்குக் கிடைத்த கெட்ட வார்த்தைகளால் திட்டுவதைத் தவிர எனக்கு வேறு போக்கிடமில்லை.

நான் உங்களை நோக்கி முட்டாள் என்கிறேன். அயோக்கியர்கள் என்கிறேன். உண்மைதான். கல்வியறிவோடும் படிப்பறிவோடும் “முட்டாள்” என்பதனை அடையாளம் கண்டீர்கள் என்றால் அர்த்தம் கொண்டீர்கள் என்றால்  உங்களை விடவும் நானே முட்டாள்.  எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் முட்டாள்கள் எனப் பேசுவது கல்வியறிவு பற்றியதல்ல. பகுத்தறிவு பற்றியது.

ஒரு சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காடும் மேடும் அலையும் போதும்-  போரிலிருந்து காப்பாற்ற தன்னுடைய குழந்தைகளை மாதக் கணக்கில் காட்டில் ஒழித்துவைத்துப் பரன் கட்டிப்  படுக்கவைத்த கதைகளைக் கேட்ட பிறகும்- அதையும் மீறி அவர்களை நித்திரைப் பாயில் பிடித்துக் கொண்டு போய்க் கொல்லக் கொடுத்தபின்னும் “யுத்தம் என்றால் இழப்பு வரத்தான் செய்யும்” என்று கருத்தியல் கதை சொல்பவனை முட்டாள் என்று சொல்லாது வேறு என்ன கெட்டவார்த்தை சொல்லித் திட்டமுடியும் என்று சொல்லுங்கள். நான் அவ்வாறே சொல்கிறேன். தன்னுடைய  உறவுகளையெல்லாம் தற்காத்துக் கொண்டு அடுத்தவனின் பிள்ளைகளைப் பலிகொடுத்து ஈழம் எடுக்க நினைத்தவனை எந்த வசைச் சொல்லைக் கொண்டு திட்டுவது?

 அதனையும் விடக் கேவலமானது, முள்ளிவாய்க்காலில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்லி புலிகளின் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுக்கு ஒரு தடவையும் புலிகளால் அடையாளம் காட்டிய மாவீரர் தினத்திற்கு ஒரு தடவையும் அஞ்சலிக் கவிதை செய்பவர்களை நாம் எப்படித்தான் முட்டாள்கள் என்று திட்டாதிருப்பது?

கீழேயுள்ளது அரண்மொழிவர்மன் அவர்கள் குறித்து நான் அபத்தம் இதழில் எழுதியது.

—-



இந்தப் பதகழிப்பில்  எல்லோருக்கும் நல்லவனாக நடிக்க அடுத்த ஒரு அயோக்கிய இலக்கியக் கூட்டம் வெளிக்கிட்டிருக்கிறது. துரோகிக்கும் ஒரு பூ. தியாகிக்கும் ஒரு பூ என்று இரண்டு பூக்களை ஏந்தியவாறு வருடத்திற்கு இரண்டு முறை அலைகிறது. ஒன்று புலிகளின் மாவீரர் தினத்திற்கும் மற்றது புலிகள் மக்களை அழித்து தாங்களும் அழிந்த மே மாதத்திற்கும்.




இந்தக் கவிதையை எழுதியவர், ஈழ இலக்கிச் சூழலில் பலரும் “கவிஞர்” என அடையாளம் சொல்லும்  சித்தாந்தன். ஆனால் இந்தக் கவிதையை அவருக்கும் மேலால்  காலாகாலமும்  தொடர்ந்து காவுபவர் எழுத்தாளர் அருண்மொழிவர்மன். இவர்கள் தாங்கள் கடந்து வந்த அழுகிய புலித் தேசியக் காய்ச்சலில் இருந்து இன்னும் அறுபட முடியாது தொங்குபவர்கள்.அசோக் அண்ணனின் பாசையில் சொன்னால் புலிகளின் தொங்கு தசைகள். அதற்கும் வாலாட்ட வேண்டும் மற்றப்பக்கமும் தலையாட்ட வேண்டும் என்ற வில்லங்கத்தில் கொண்டலையத் துடிக்கும் விலாங்குக் கவிதை இது. இந்தக் கவிதை சொல்ல வரும் விடயம், அதனைத் திரும்பத் திரும்பப் பதிவிட்டு அதற்கான நிலை நிறுத்தலைக்  கோர நினைக்கும் மனப்பான்மை இந்த சமூகத்தை இன்னும் குழிதோண்டிப் புதைக்கச் செய்பவை. இதற்கும் நிலாந்தன் தினமும் கொட்டிக் கொண்டிருக்கும் நஞ்சிற்கும் எள்ளளவும் வித்தியாசமில்லை. அன்று காசி ஆனந்தன்  எழுதிய “களை” எடுக்கும் கவிதைக்கும் இதற்கும் இயல்பில் மாற்றம் இல்லை. இது நவீனமடைந்த நச்சுச் செயல். NEO காசியின் வளர்ச்சி.

என்று வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். 


“காலமும் மொழியும் ஆட்களுந்தான் வேறு. ஆனால் கதை ஒன்றுதான். ஒரே சிந்தனைதான். நவீனமடைந்த நச்சு. இந்தச் சிந்தனையைத்தான்  அறுந்தழிய வேண்டும் என்கிறேன் நான்”.


என்று கடந்தவருடம் அபத்தம் இதழில் எழுதியிருந்தேன். இவ்வாறு எழுதிக் காட்டிய பிறகும் நான் எங்கே முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மட்டும் அஞ்சலி செய்கிறேன். நான் எங்கே அப்படிச் சொன்னேன் என்று புதிதாகக்  கேட்பதைப் போல் ஒரு கேள்வி கேட்பார். அதுதான் அவருடைய தந்திரமே. மற்றவர்களைக் களைப்படைய வைப்பது.


இந்தக் கவிதையை நீங்கள் அனைவரும் கொஞ்சம் வாசியுங்கள். இதன் வரிகளில் இருக்கும்  அயோக்கியத்தன வார்த்தைகளை உற்று நோக்கங்கள்.

அது என்ன நினைவு கூர முடியாதவர்கள்? அவர்கள் இந்த சமூகத்தில் யார்? அவ்வாறு யார் அடையாளம் கொள்வது? அது என்ன மனநிலை? சரி அப்படித்தானென்றாலும், உங்களுக்கு ஏன் இரண்டு பூ? ஒரு பூவை நீங்கள் ஏன் இரண்டு பேருக்கும் பொதுவாக வைக்க முடியவில்லை? அப்போ நீங்கள் யார்?  சூத்திரனுக்கு கடமை செய்யவோ மணம் முடிக்கவோ உரிமையில்லை என்கிறான் பார்ப்பான். உங்களுடைய சிந்தனைக்கும்  பார்ப்பானுடைய சிந்தனைக்கும்  என்ன வித்தியாசம்?

தமிழ்ச் சூழலில் துரோகி எனக் கட்டமைக்கப்பட்ட விம்பத்தைக் கட்டுடைத்து எதிர் கொள்ளத் தயங்குபவன் எவ்வாறு பகுத்தறிவாளனாக இருக்க முடியும். இவ்வாறு  உள்ளே வைத்திருக்கும் புலியின் நஞ்சிற்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?

என்றுதான் கேட்கிறேன்.

‘ நான் நம்பியிருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள், நான் நம்பியிருந்த கருத்துகள் ஏமாற்றிவிட்டன, அதனால் அருண்மொழிவர்மனுடன் உரையாடுகின்றேன் என்று சொல்லி அவருடன் நான் உரையாடவரவில்லை. மாறாக கடந்தகாலத்தில் அழுகிய தமிழ்த் தேசியமனநிலையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்களைப் போல் எழுதவரும் இன்னொரு தலைமுறை என்றுணர்வதால் மட்டுமே அருண்மொழிவர்மனை நோக்கிக் கேள்வி கேட்கிறேன். இதனைப் போன்ற மாயக் கதைக் கண்ணன்கள் பலரை இந்த சமூகத்திற்குள் அடையாளம் கண்டிருக்கிறேன். அடையாளம் காட்டியிருக்கிறேன். அதேபோன்றதொரு மாயக்கண்ணன்கள்  இனியும் நமக்கு வேண்டாம் என்பதால் மட்டுந்தான் அவரை அடையாளம் காட்டிச்  செல்கிறேன். மற்றப்படி எனக்கும் அவருக்கும் எந்தக் கரைச்சலும் இல்லை.

இந்த வகையான  முறைப்பாடுகள் தாண்டி அவர் ஒரு நல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தேசிய மனநிலையிலிருந்து எழுதிய கட்டுரை ஒன்றையும் நீங்கள் வாசியுங்கள். 

அதுதான்  அவரின் “பண்பாட்டுப் படையெடுப்பு”  என்ற கட்டுரை. அந்தக் கட்டுரையில் வரும் சில வார்த்தைகளை இங்கே  உதாரணமாகக் காட்டுகிறேன். 


“தொடர்ச்சியாக பண்பாடு சார்ந்த அம்சங்கள் மாறிச் செல்லும்போது உணவுப் பழக்கவழக்கம் மாறாது நீண்டகாலம் இருக்கக்கூடியது என்பதாக ஒரு கருத்து இருக்கின்றது.  ஆனால் நாளாந்த வாழ்வின் உதாரணங்களின் அடிப்படையில் குறுகியகாலத்தில் ஈழத்தவர்களின் உணவுப்பழக்கங்களில் இடம்பெற்ற மாற்றங்களைப் பார்ப்போம்.  ஈழத்திலும் சரி, கனடாவிலும் சரி திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகள், சிற்றுண்டிகள் என்பவற்றில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்கொண்டால், வழமையாக இருந்த உணவுகள் மாறி சடுதியாக பனீர் மசாலா, பட்டர் சிக்கன், நாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களும் சிற்றுண்டிகளுமே பிரதானமாகப் பரிமாறப்படுகின்றன.  உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள், சிற்றுண்டிகளிலும் அவற்றின் தயாரிப்பு முறையிலும் தென்னிந்திய வட இந்திய முறைகளே திடீரென்று பரவலடைந்துள்ளன.  கனடாவில் இந்தப் போக்கினை தெளிவாக இனங்காணக் கூடியதாக இருக்கின்றது.  நீண்டகாலமாக மக்கள் மத்தியில் நிலைத்த பெயரைக் கொண்ட கனடிய உணவகம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சமையல் கலைஞர் ஒருவரிடம் பயிற்சிபெற்ற சமையல் கலைஞர்களை வைத்து அந்தத் தென்னிந்திய சமையல் கலைஞர் வழங்கிய உணவு தயாரிப்பு முறைகளின்படி (Recipe)  தமது உணவுகள் தயாரிக்கப்படுவதாக விளம்பரம் செய்தது நல்லதோர் உதாரணம்.  

அந்தப் பிரபலத்தை வைத்துத் தமக்கு விளம்பரமாக்க குறித்த உணவகம் நினைக்கின்றது.  இந்தச் செயற்பாடுகளினூடக சமகாலத்தில் உணவுப் பண்பாடு மாற்றமடைகின்றது. 

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை குழந்தைகளும் சிறுவர்களும் தென்னிந்தியத் தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்பவற்றின் ஊடாகவே தமிழ்மொழியுடன் பரிச்சயம் அடைகின்றார்கள் என்றபோதும் அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வதையே தமது பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களாகக் கருதிக்கொள்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையே.”  

என்கிறார்

பார்க்க:https://arunmozhivarman.com/2021/10/19/20211019/#more-3046

முதலில் இவர் குறிப்பிடும் ரொரண்டோவிலிருக்கும் அந்தப் பிரபலமான கடையின் பெயர்ப்பலகையில்,  மிக அண்மைக்காலம் வரை என்ன வகையான வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதனை இங்குள்ள  பலரும் அறிவார்கள்.(2009 இன் பின் அது நீக்கப்பட்டிருக்கிறது) அருண்மொழிவர்மனும் நிச்சயம் அறிந்திருப்பார்.

“மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்” என்பதுதான் அந்த வார்த்தைகள்.

ஏன் இந்த வார்த்தைகள் அந்தப் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன என்பதனை எந்த ஆய்வாளர்களும் ஆராயவில்லை.  இவருக்கும் அதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. 

 ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் மிக அதிகமாக பத்திரிகை நடத்தியவர்கள், வானொலி தொலைக்காட்சி நடத்தியவர்கள் தொடக்கம் வீடுகள் விற்பவர்கள், சாப்பாட்டுக் கடைகள் வைத்திருப்பவர்கள் வரை ஈழயுத்தத்தின் புதல்வர்கள்தான்.  இதில் யாருக்கும் எந்த வெட்கமும் இல்லை. அதனை வழி நடத்தியவர்களும் அவர்களே! இன்றும் அதனைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 “ தேசியக் கொத்து” என்பதை மட்டுமல்ல ஒரு உணவுப் பொருளுக்கு “மிதி வெடி” எனப் பெயர் வைக்கும் அளவில் நாங்கள் யுத்தத்திற்குள் அனைத்தையும் உள்வாங்கியிருந்தோம். தமிழ்த் தேசிய வெறித்தனத்தோடு மாண்டவீரர் கனவு பலிக்கும் என எழுதிக் கொண்டு மிதிவெடியும் தேசியக் கொத்துரொட்டியும் விற்பதில் நண்பன் அருண்மொழிவர்மனுக்கச் சிக்கல் இல்லை.  கொத்து ரொட்டி விற்கும் இடத்தில் பட்டர்ச் சிக்கன் விற்பதுதான் படையெடுப்பாகிறது. கொத்து ரொட்டி என்ன தமிழர்களின் உணவா? 

இலங்கையில் கொத்து ரொட்டி அறிமுகமாகிய காலங்களில் அது மாட்டுக் கொத்தாகத்தான் இருந்தது. இன்றும் இலங்கையில் அதிகமான ஊர்களில் மாட்டுக் கொத்துத்தான் முக்கியமானது. அது எப்படி மட்டன் கொத்தாகிப் பிரபலமானது? அந்த மாற்றத்திற்குள் ஒழிந்திருப்பது என்ன? என்ற தேடல் அவரிடம் இல்லாமல் இல்லை. அவருக்கு அது நன்றாகத்  தெரியும். ஆனாலும் அந்தத் தேடலை  முந்தி நிற்பது அவரின் தமிழ்த் தேசிய வெறி.

யாழ்ப்பாணத்தில் என்றால் தனித்தமிழ்ச் சமூகம் மட்டுந்தான்(அதற்குள் இருக்கும்  எத்தனையோ பிரிவுகளிலும் ஊர் வித்தியாசங்களிலும் எத்தனையோ வகையான உணவுப்பழக்கங்கள் இருக்கின்றன) இலங்கையில் என்றால் பிரதேசங்களுக்கும் இனங்களுக்குமிடையில் உணவுகளும் சமைக்கும் முறைகளும் வித்தியாசப்பட்டுத்தானிருக்கின்றன. அவற்றுக்கிடையில் கலப்புகள் நடந்து கொண்டுதானிருக்கிறது. அவர் சொல்வதனைப் போல் அது நீண்டகால மாற்றத்தில் நிகழலாம். ஆனால் கனடா  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேசிய உணவுகள் மரபுவழி உணவுகள் அல்லது பாரம்பரிய உணவுகள்  என்ற படிமம் செல்லவே செல்லாது. உணவுகளில் தேசியம் பேசிக் கொண்டிருக்கவும் முடியாது. இது பல சமூகங்கள் இணைந்து வாழும் பிரதேசங்கள்.

இங்கே வாழும் தமிழர்களின் வீட்டைச் சுற்றித் தமிழர்கள் மட்டும் இருக்கமாட்டார்கள். பல்வேறு நாட்டவர்கள் பல்வேறு மொழியினைப் பேசுபவர்கள் பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் சேர்ந்து வாழும் பிரதேசங்கள் இவை. கிடுகு வேலிச் சமூகமல்ல இங்கேயிருப்பது. இங்கேயொரு கொண்டாட்டம் நிகழ்ந்தால் அதில் பல்வேறு சமூகத்தினர் பங்குபற்றும் நிகழ்வாக இருக்கும். அதிலும் தமிழர்களின் பிள்ளைகள் எத்தனையோ வேற்று சமூகத்தவரைத் திருமணம் செய்து வாழத்தொடங்கி இரண்டு தலைமுறைகளுக்கு மேல் கடந்து விட்டது. இங்கே ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் கட்டாயம்  மாட்டிறச்சி இருக்க வேண்டும் என்ற நிலை தோன்றியிருக்கிறது. மாட்டிறச்சியே வாழ்காலத்தில் உண்டிராத குடும்பங்களில் அவற்றை  விரும்பியுண்ணும் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களில் யாருக்கேனும் நம்முடைய பண்பாட்டிலும் பழக்கவழக்கத்திலும் மாடு சாப்பிடுவதில்லை என்றும், சாதிக்கும் மாட்டிறச்சிக்கும்  சம்பந்தம் இருக்கிறதென்றால் “ FUCK YOU” என்று சொல்லிவிட்டுக் கடந்து செல்லுகிறார்கள். அதன் சாத்தியத்தை நாம் முன்நிறுத்த வேண்டும்.  தலைமுறையின் மாற்றத்தை ஆதரித்துச் செல்ல வேண்டும். ஆனால் வாழ்நாளில் மாமிசமே உண்ணாத ஒருவருக்கு எங்கள் கொண்டாட்டங்களில்  உணவே இல்லை என்று சொல்லும்படியாக நாம் உணவைப் பரிமாற முடியுமா? அவர்களையும் அனுசரித்துத் தான் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். 

அதனையும் விட நம்முடைய சமூகம் இந்தியா, இத்தாலி, கிறீக் ரெஸ்ரோரண்டுகளை வழிநடத்திக் கொண்டிருப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களால் நடத்தப்படும்  கொண்டாட்டங்களின் உணவுப்பரிமாற்றத்தில் பெரும் மிகப்பெரிய அதிர்வே உண்டாகும். உடனேயே நமது பண்பாடு அழிந்து விட்டது. இன்னொரு நாட்டிலிலருந்து எங்களுக்குள் பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கிறது என்று முனகினால். கிடுகு வேலியைச் சுற்றிக் கட்டிவிட்டு நடுவில் படுத்துத் தூங்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஆய்வு செய்ய வேண்டுமென்பதற்காக  இப்படி முறைகேடாக தலைகீழ் மாறி மூளையை விடக் கூடாது. மற்றவர்களை மடையர்கள் என நினைக்கக் கூடாது. ரொரண்டோவில் இருந்து கொண்டு மரபுரிமை, தேசவழமை, பாரம்பரியம், பண்பாடு என்று பேசிக் கொள்பவனை எப்படிப் பகுத்தறிவுடன் பேசுகிறான் என்று விளங்குவது. மிகப் பெரிய மூடத்தனமின்றி இது வேறென்ன?

மக்டொனால்ட் என்ன எங்கள் முப்பாட்டன் பண்படுத்திய உணவா? எங்கள் கொண்டாட்டங்களில் கிறீக் உணவு வைக்கிறோம். பிரெஞ்ச் சலாட் வைக்கிறோம் என்றால் இதிலென்னபண்பாட்டுப் படையெடுப்பு?கனடாவில் நடக்கும் கொண்டாட்டங்களில் என்னுடைய மூதாதையாின் உணவு என்று நான் பினாட்டும் புளுக்கொடியலுமா வைக்க முடியும்? 

இப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால்  நீங்கள் கட்டிக் காத்த உங்கள் பிள்ளைகளும் ஒருநாள்  உங்களைக் கைவிட்டுப் போகும். அதனை எண்ணியாவது கொஞசம் மாறுங்கள். தரித்திரத்தைக் கைவிடுங்கள்.

தமிழரின் பாரம்பரியம்.  தமிழரின் அடையாளம்.  தமிழரின் பண்பாடு.

இதெல்லாம் பித்தலாட்டக்காரன் சொல்லும் வார்த்தைகள்.

ஈழத்தில் அல்லது தமிழ் நாட்டில் இருப்பவர் இந்தக் கதையைச் சொன்னால்கூட கொஞ்சம்  பரவாயில்லை. பல்வேறு இனக்குழுமங்கள் வாழும் நாட்டில் வந்திருந்து கொண்டு தனித்தமிழ்த் துவேசம் கொள்ளும் அருண்மொழிவர்மன் போன்றவர்கள் சிந்திக்கும் திறன் மிக மிக மோசமானது.

 மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் மாவீரம் குளிக்கும் என்று சொல்லி  இடியப்பமும் கொத்து ரொட்டியும் விற்கமுடியுமா? அதற்கும் இதற்கும் என்னடா சம்பந்தம். ஆனால் சம்பந்தமேயில்லாது பேசும் அருண்மொழிவர்மன் அவர்கள் செவ் தாமுவின் பிரியாணி செய்முறையை கனடிய உணவகம் ஒன்று பின்பற்றுவதும் அதனைத் தனது உணவுச் செய்முறையாக  அறிவிப்புச் செய்வதும் அடையாளம் காட்டப்பட்ட உணவுத் திறனின் வெளிப்பாடு. ஆனால் மாண்ட வீரர் கனவு பலிக்கும் கழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும் என்பதற்கும் உணவுப்பழக்கத்திற்கும் என்னடா ஒற்றுமை? இதனைக் கேட்க அவரால் முடியாது ஏனெனில் அவர் புலிமனம் கொண்டவர்.. அது மட்டும். அது மட்டும். அது மட்டுமேதான். அது தாண்டி அவரிடம் வேறு இல்லை. 

இலங்கை இந்தியா போன்று கனடாவில் வாழும் சமூகத்திற்குள் மெல்ல மெல்ல உணவுப்பழக்கம் மாறாது. இங்கேயுள்ள பல்வேறு சமூகத்துடன் உறவும் நெருக்கமும் கூடுதலும் உள்ள சமூகமாகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் பட்டர்சிக்கனும் பன்னீர் மசாலாவும் உணவப்பழக்கங்களில் எப்படிச் சேர்ந்து விடுகிறது என்று கணக்கிடுவதல்ல பகுத்தறிவு. இந்த உணவுச் சேர்மதியில்  பண்டியின் கால்களும் பண்டியின் கொட்டைகளும் பண்டியின் நாக்குகளும் கோழியின்விரல்களும்,கோழியின் நகங்களும் ஏன் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதற்குள் ஒரு சமூகநீதியின் தர்க்கம் ஒழிந்திருக்கிறது. அதனைத் தேடுவதுதான் பகுத்தறிவு. ஏன் ஒரு சில இன உணவுகள் சேர்க்கப்பட்டு மற்றயவை தவிர்க்கப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்வி. கனடாவில் வந்திருந்து சுத்தத் தமிழ் இன அடையாளம் தேடுபவனை எதைக் கொண்டு துரத்துவது? இதுவரைகாலமும் தூய்மை பார்த்தது போதாதா? இன்னும் இன்னுமா?

முட்டாள்கள்.

”திருமண விழாவிற்கு முன்னர் பஜன் பாடல், மெஹந்தி அணிதல் ஆகியன இப்போது புலம்பெயர் நாடுகளில் ”புதிய தமிழ்ப் பண்பாடுகள்” ஆகிவிட்டன.”

இவை தமிழ்ப்பண்பாடுகள் என்று எங்கேனும் அதனைச் செய்பவர்கள் சொல்வதில்லை. திருமணத்தின் முன்னர் நடக்கும் மணமகன் நடத்தும் பச்சலர் பார்ட்டி என்ன தமிழர் பண்பாடா? அதன் மற்றயபக்கம்  மணமகளுடன் இணைந்து நண்பர்கள் நடத்தும் “  ப்பிறைடில் பார்ட்டி” பற்றி அறிந்தால் உங்களைப் போனடறவர்கள் ஏங்கிச் சாகத்தான் முடியும். தமிழர் பண்பாட்டில் இதுவெல்லாம் ஒருபொழுதிலும் வரவே வராது. சமூகக் கலப்பில்த்தான் இவை சாத்தியமானது. சமூகக் கலப்பினை எனதறிவில் இன்று உயிருடன் பெரியார் இருந்திருந்தால் ஆதரித்துத்தான் நின்றிருப்பார்ர் . உங்களைப் போல சமூகநீதி ஒரு புறமும் சாதி நீதி இனநீதி ஒருபுறமுமாக யோசித்திருக்கவேமாட்டார். 

சரி கலியாணம் முடிஞ்சுது. அதன்பின் பிறக்கும் பிள்ளை என்ன பிள்ளை என்று கண்டுபிடிக்கும் “GENDER REVEAL” என்ற பார்ட்டிஒன்றிருக்கிறது தெரியுமா? அது என்ன தமிழர் பண்பாடா? என்ன மயித்திற்கு இதெல்லாம் தமிழர் பண்பாடாக இருக்க வேண்டும்? இங்கே  தமிழர்கள் என்ன தமிழர்களையே திருமணம் பண்ணுகிறார்களா? அல்லது தமிழர்களொடு மட்டும் சேர்ந்து வாழ்கிறார்களா? அப்படிச் செய்ய வேண்டும் என்பது எனன கட்டாய உங்கள் வழமைச்சட்டமா? தமிழர்களுக்குத் தமிழர்கள்தான் நண்பர்களாகத் தோழமைகளாக இருக்க வேண்டுமா? ஒரு பல்காலாச்சார நாட்டில் நீண்டகாலமாக சில உணவுப்பழக்கங்கள் மட்டும் ஏன் எம்மத்தியில் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற கேள்வியே நீதியானது.  ஏனெனில் நண்பர்களாக இருப்பதற்கும் அவர்களை கடும்ப நண்பர்கள் என ஒத்துக் கொள்வதற்கும் நமது சமூகத்தில் இன்னும் இடமில்லை.  அதனால் ஆபிரிக்க உணவுகள் போன்ற பல நமது சமூகத்திற்குள் உள்நுழையவில்லை. விரைவில அது மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஆனால் இவ்வாறு கலப்பு சமூகமாக மாறும் முதல் நிலையைக் கூட கலாச்சாரப் பண்பாட்டுப் படைபெயடுப்பு தமிழர் பண்பாடு என்றெல்லாம் அதி புத்திசாலித்தனமாகப் பிதற்றக் கூடாது. அது முட்டாள்த்தனமாகவே கருதப்படும்.

அப்படி தமிழர் பண்பாடு அது அனைத்திலும் புதுமையானது என்று கருதுவதை நிறுத்திக்  காவோலையைச் சுற்றிக் கட்டி நடுவில் குந்தியிருபதே மேல்.

பகுத்தறிவு பேசமுனையக் கூடாது.

இரண்டில் ஒன்றைத்தானே பேசவேண்டும். இரண்டையும் தற்குறித்னமாகப் பேசுவது புத்திசாலித்தனமுமாகாது.

மேற்கொண்டு பேசுவோம்.


Monday, 3 March 2025

“சிராம்பு”

“சிராம்பு” கற்சுறா
51வது இலக்கியச் சந்திப்பு குறித்தும் அங்கே வெளியிடப்பட்ட இமிழ் என்ற சிறுகதைத் தொகுப்புக் குறித்தும் மேலும் இருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இருவரும் பலரும் அறிந்து கொண்ட இருவர்களே!

ஒருவர் நோர்வேயில் வாழும் என்.சரவணன் மற்றயவர் தமிழ்நாட்டில் வாழும் பேராசிரியர். அ.ராமசாமி. சரவணனுடைய “புகலிட இலக்கிய சந்திப்பு : இருப்பின் இரகசியம்” என்ற கட்டுரை “நமது மலையகம்” என்ற அவரது இணையத் தளத்திலும் அ.ராமசாமி அவர்களது “இமிழ் சிறுகதைகள் உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள்” என்ற கட்டுரை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “நீலம்” என்கிற கலை இலக்கிய அரசியல் இணையத் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டியவர்கள் அங்கே சென்று முழுமையான கட்டுரையைக் கவனியுங்கள். 51வது இலக்கியச் சந்திப்பு நிகழ்வு குறித்தும் அங்கே வெளியிடப்ட்ட இமிழ் தொகுப்புக் குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் எதையுமே கவனியாததுபோல் எழுதப்பட்டதோடு மட்டுமல்லாது அந்தத் தொகுப்புக் கொண்டுவரப்பட்டவிதம் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்கிய நெருக்கடியை மெல்லக் கழுவிவிடும்படியாகவும் எழுதப்பட்டிருக்கின்றன இந்தக் கட்டுரைகள் என்பதனை இலகுவில் யாரும் அடையாளம் காணமுடியும். 


சரவணன் அவர்கள் இந்தக் கட்டுரையை எதற்காக எழுதினார்? இலக்கியச் சந்திப்பு எங்கெல்லாம் நடைபெற்றது என்ற விளக்கத்துடன், தான் முதலில் கலந்து கொண்ட ஸ்ருட்காட் இலக்கியச் சந்திப்பு என்பதை எழுதி அடையாளம் காட்டியதுடன் இலக்கியச் சந்திப்பபுச் செயற்பாடு எவ்வாறானது என்றவாறாகச் சொல்லிச் செல்லும் போது “இம்முறை பாரிசில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் குழப்புவதற்காகவே சிலர் கலந்து கொண்டிருந்தனர். இல்லாத சாதியப் பிரச்சினையை ஊதிப்பெருப்பிக்கிறார்கள் என்பதே அவர்களின் சாரம்சம். ஒருவர் கருத்து கூறி, அடுத்தடுத்து கருத்து கூறுபவர்களுக்கு வழிவிட்டு தமது அடுத்த கருத்தை வரிசையில் தெரிவிப்பதற்குப் பதிலாக; கூட்ட ஒழுங்கை மீறி அவர்கள் தொடர்ச்சியாக குறுக்கிட்டுக் கொண்டிருந்ததை கட்டுபடுத்த இயலாமல் போனதைத் தொடர்ந்து அங்கே சர்ச்சை எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பரஸ்பரம் உடன்படாத கருத்தாக இருந்த போதும் அவர்களுக்கு அங்கே கருத்தைக் கூறும் உரிமையை இலக்கிய சந்திப்பு மறுக்காது. ஆனால் அவர்கள் அந்த உரிமை துஷ்பிரயோகம் செய்வதற்காகவே வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனநாயக ஒழுங்குக்கு கட்டுப்பட முடியாத, அராஜக பாணியிலான அணுகுமுறையாளர்களாக அங்கே இருந்தார்கள். எனவே கலந்துனர்கள் அவர்களின் கருத்து சுதந்திரத்தை அல்ல அவர்களின் அற மீறலை எதிர்த்து கூட்டத்தை கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானார்கள். ஆனால் இலக்கிய சந்திப்பின் முடிவில் இந்த சம்பவம் இலக்கிய சந்திப்பின் அராஜகமாக வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.”
என்கிறார். 

இதுதான் அவருடைய கட்டுரையின் மையப் புள்ளி. மற்றும்படியான தகவல்கள் எல்லாமே அவ்வப்போதைய காலங்களிலர் இலக்கியச்சந்திப்புக் குறித்து பலரும் சொல்லி வந்த விடயங்கள்தான். அதன் செயற்பாட்டுவிதம்- ஒரு சந்திப்பிலிருந்து இன்னொரு சந்திப்புக் கைமாறும் விதம்- அங்கே இதுவரை பேசப்பட்ட விடயங்கள்- அது கைக்கொண்டு நகரும் ஜனநாயகத் தன்மை என்று பலர் அடையாளம் காட்டிய விடயங்களைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அத்தனை விடயங்களையும் அவ்வப்போதான காலங்களில் சிலர் தமது தற்குறித்தனத்திற்குள் இழுத்துச் சிதைத்துக் கொண்டதில் பலர் அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். சிலர் ஒதுக்கப்பட்டார்கள் என்ற கதையை ஒரு விபரிப்பாகத்தன்னும் சொல்லிவிட அவரால் முடியவில்லை. இன்று சாதியில்லை என்று சொல்லி இலக்கியச் சந்திப்பிற்குள் வந்தவர்களைப் போல் யுத்தகாலத்தில் புலிகள் செய்வதெல்லாம் சமூகத்திற்குத் தீங்கானதேயில்லை என்றுதான் சொல்லிவந்தார்கள். அதற்கெதிராகப் பல இலக்கியச் சந்திப்புக்கள் தர்க்கரீதியில் செயற்பட்டு அவர்களை எதிர் கொண்டிருந்தது. நான் ஏற்கனவே பல இடத்தில் சொல்லி அடையாளம் காட்டிய 1992ம் ஆண்டின் பாரீஸ் இலக்கியச் சந்திப்பு அந்த வகைமாதிரிகளில் ஒன்று. ஆக இன்று சாதியப்பிரச்சனையே இல்லையென்று சொல்பவர்கள் சமூகத்தில் ஏராளம் பேர் இருக்கிறார்கள். அதனையும் விட சாதி என்பது பிரச்சனையேயில்லை . அது சமூகத்திற்குத் தேவையான ஒன்று. காட்டாயம் சாதி தேவை என்று சொல்பவர்களும் சமூகத்தில் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இன்னொருபுறம் சாதியில்லை. சாதியில்லை என்றுசொல்லிக் கொண்டு தன்னுடைய இலக்கியத்திலும் அரசியலிலும் மூச்சுக்கு முன்நூறு தடவை பேசிவரும் நமது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாதிப் புத்தியைக் காட்டிவிட்டான் என்று சாதி பேசிவரும் நிலையும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இலக்கியத்திலும் எழுத்திலும் சாதி அடையாளத்தை மிகக் கவனமாகக் கையாளும் சாதி மான்களையும் கொண்டுதான் இந்த சமூகம் இருக்கிறது. குழப்பவாதிகள் என்பவர்கள் எப்பொழுதும் எல்லாவடிவிலும் நுழைவார்கள். அது தனியே 51வது இலக்கியச் சந்திப்பில் மட்டும் நிகழ்ந்ததல்ல. நானறிய1992இலேயே நடந்தது. ஆனால் 51வது இலக்கியச் சந்திப்பின் செயற்பாடு அந்தக் குழப்பவாதிகளால் மட்டும் நாசமாகவில்லை. அதன் செயற்பாட்டாளர்களாலேயே முதலில் நாசமாகியது. அது 50வது இலக்கியச் சந்திப்பின் நடைமுறை குறித்த அவர்களது மவுனத்தினோடே தொடங்கியது. இதுகுறித்தெல்லாம் என். சரவணன் மவுனம் காப்பதும் கதை மாற்றுவதும் நல்லதொரு செயற்பாடல்ல. இதைவிட இன்னும் ஒரு தடைதாண்டி அவர் எழுதுகிறார், “சகல விதமான பன்முகப்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்குமான ஜனநாயகக் களமாகவும் பேணப்படும் இலக்கிய சந்திப்பின் மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்கள் அதை ஒட்டு மொத்த இலக்கிய சந்திப்பின் மீதும் வைக்கும் போது; அவ்வாறு வைப்பதே ஒரு சுத்த அபத்தம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. இவ்வாறு விமர்சிப்பவர்களில் சிலர் ஏற்கெனவே இலக்கிய சந்திப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் இலக்கிய சந்திப்பின் மரபையும், இயல்பையும் அறிந்தவர்கள் என்பது தான் வேடிக்கை. எவரெவரெல்லாம் இலக்கிய சந்திப்புடன் தொடர்பறுந்து போனார்களோ அவர்கள் வசதியாக இத்தகைய விமர்சனங்களை வைப்பதன் உள்நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. தனி நபர்கள் மீது வைக்க வேண்டிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் இல்லாத “அமைப்பின்” மீது வைப்பது பகுத்தறிவற்ற அபத்தமே. ஒரு முன்மாதிரியான சுதந்திர கருத்துக் களமாக தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலக்கிய சந்திப்பை பாதுகாப்பதும், பேணுவதும் தமிழ் சமுதாயத்தின் கடமையாகும்.” என்கிறார். 50வதும் 51வதும் இலக்கியச் சந்திப்பின் செயற்பாட்டு நடைமுறை குறித்து விமர்சனங்களை முன்வைப்பது எப்படி ஒட்டுமொத்த இலக்கியச் சந்திப்பின் மீதான விமர்சனமாகும்? ஏற்கனவே இலக்கியச்சந்திப்புடன் தொடர்பிலிருந்தவர்கள் இலக்கியச் சந்திப்பின் இயல்பை அறிந்தவர்கள் 50மற்றும் 51வது இலக்கியச் சந்திப்பின் தற்குறித்தனத்தை அடையாளம் காட்டி நின்றால் அது எப்படி வேடிக்கையாகிறது இவருக்கு? இலக்கியச் சந்திப்புடன் தொடர்பறுந்து போனவர்கள் வசதியாக விமர்சனம் வைக்கிறார்கள் என்று விசனம் கொள்ளும் என். சரவணன் என்கிற இந்தப் பயல், யாருக்கு ஏன் தொடர்பறுந்தது என்றாவது சொல்ல வேண்டாமா? அவ்வாறு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பகுத்தறிவற்ற அபத்தம் என்று சொல்லும் அவர் அது எங்கே முன்வைக்கப்பட்டது என்ற பதிவை இடுவதுடன்,எப்படி அது பகுத்தறிவான அபத்தமாக இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டாமா? என். சரவணனின் உளறலுக்கும் ஒரு அளவிருக்க வேண்டாமா? இலக்கியச்சந்திப்பின் மீது யார் என்ன விமர்சனம் வைத்திருக்கிறார்கள் என்று கோடு காட்டி அதற்கான எதிர்வினையை ஆற்றுவதுதானே சரியானது. நீங்கள் சொல்வதுபோல் இலக்கியச் சந்திப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் சொல்லுகின்ற பகுத்தறிவற்ற அபத்தமுடையோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். நோர்வேயில் நடத்தமுடியாது என்றுசொன்னதுடன் அதுகுறித்த எந்தவொரு உரையாடலையும் செய்ய மறுத்து தனியாக அனைலைதீவில் 50 இலக்கியச் சந்திப்பினை நடத்திய தமயந்தியும் அப்படித்தான் சொல்கிறார். பொது அடையாளத்துடன் கூட்டு உழைப்பாக இருக்க வேண்டிய இலக்கியச் சந்திப்பு மலரைத் தன்னுடைய தனித்த முடிவோடும் தன்னுடைய தடித்தனத்தோடும் கொண்டுவந்து காட்டி நின்ற சோபாசக்தியும் இலக்கியச் சந்திப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறார். ஆக, இலக்கியச் சந்திப்பின் இன்றை நிலைதான் என்ன? இன்று இருக்கும் இலக்கியச் சந்திப்பின் நிலை குறித்துத் தேவையான ஒரு தீரமான உரையாடலைத் தவிர்த்து - மடை மாற்றிக் கதை சொல்ல வந்த தேவை குறித்து அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது. சரவணனின் இந்தக் கட்டுரை ஒன்றும் ஆபத்தானதில்லை என்று நினைத்துக் கடந்து போக முடியாதுள்ளது.கையில் சிராம்பு ஒன்றுதானே ஏறியது. அது ஒன்றும் செய்யது என்று கவலையீனமாகக் கடந்து போகக் கூடாது என்றே நினைக்கிறேன். சிராம்பு ஒரு சிறிய வலியை மட்டும் தருவதில்லை. அடுத்தது, தமிழநாட்டிலிருந்து பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் நீலம் இதழில் எழுதுகிறார்.
என்கிறார். நம்மத்தியில் உருப்பெற்ற புகலிட இலக்கியம் - புலம்பெயர்ந்த இலக்கியம் என்ற வகைமாதிரிகளுக்கு இடையிலான வேறுபாட்டு உரையாடல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரால் அதனையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டினதும் அடையளம் காட்டலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. புலம்பெயர்ந்த இலக்கியம் என்பதனை புலம்பெயர்தோரின் எனக் குறுக்கிப் பார்க்கும் நிலை இருக்கிறது. என்கிறார். இதில் என்ன குறுகிப் பார்க்கும் நிலை? என்ன குழப்பம் இவருக்கு? புலம்பெயர்ந்தவர்களது இலக்கியந்தானே புலம்பெயர் இலக்கியம். இங்கே புகலிட இலக்கியம் என ஒரு வகை மாதிரியை அடையாளம் காட்டப்பட்டது. அவை இரண்டும் வேறு வேறு என்று சொல்லப்பட்டது. அது ஒரு பெரு உரையாடல். அந்த உரையாடலின் பெறுமதியைப் பேராசிரியரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கட்டுரையின் தொடக்கமே அவருக்குச் சறுக்கிவிட்டது.
பேராசிரியரின் இந்த வகைக் கூற்றுக்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது இமிழ் என்ற சிறுகதைத் தொகுப்பின் வெளியிடுதலுக்கான எதிர்க் கருத்துக்களே. ஆனாலும் பேராசிரியர் அதற்கான விளக்கங்களை எந்த இடத்திலும் சொல்லாது. இமிழ் சிறுகதைகள் உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள் என்கிறார். ஆனால் அது எப்படி என்று எந்த ஒரு இடத்திலும் அவர் சொல்லவேயில்லை. கிட்டத்தட்ட ஈழத்திலிருந்து கருணாகரன் அவர்கள் எழுதும் ஒரு எழுத்தைப் போன்றே பேராசிரியரும் எழுதிவிட முனைந்துள்ளார். தமிழ்நாட்டில் கருணாகரன் இல்லாத இடத்தை ஏன் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் நிரப்ப வேண்டும்? அதற்கு வேறு ஆட்கள் இல்லையா? என்கிறார். இறுதிவரை எப்படி உலக இலக்கியத்திற்குள் நுழைகிறது எனச் சொல்லவேயில்லை. இப்படியொரு சிராம்பை ஈழத் தமிழிலக்கியத்திற்குள் செருகிவிட பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் முயன்றிருக்கவே கூடாது. இந்தமாதிரியான எழுத்துக்களுக்குப் பின்னால் வெளிப்படையாக எதுவும் இருந்துவிடாது என்றுதான் நம்பிக் கொண்டிருப்பார்கள் பலர் . ஆனால் உள்ளே சிராம்பேறி சிதள் கட்டி ஏர்ப்பாக்கும் எழுத்துக்கள் இவை. மன்னிக்க வேண்டும் எங்களுக்கு ஒரு கருணாகரன் போதும் பேராசிரியரே! கல்விப்புல வாசிப்பு என்ற அடையாளப்படுத்தலுக்கூடாகவே எப்பொழுதும் தான் அனைத்தையும் பார்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அ.ராமசாமி அவர்கள், எப்பொழுதும் ஒரு அடிப்படையான கருத்துரைப்பை மேற்கொண்டு அதனை ஒரு அடையாளமாகக் காட்ட முனைகிறார். தமிழ்நாட்டில் தொகுக்கப்பட்ட தொகை நூல்களில் எவ்வித மரபும் பின்பற்றப்படாமல் தொகுப்பாசிரியர்களின் மனச்சாயலோடு மட்டும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்றதுதான் இமிழும் என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ஈழப்படைப்புக்களைத் தொகுக்கிறோம் என்ற பெயரில் ப. திருநாவுக்கரசு அவர்கள் தொகுத்த புலம்பெயர் கவிதைகள் என்ற தொகுப்புக்குறித்தும் அ.மங்கை அவர்கள் தொகுத்த பெண்கள் கவிதைகளான “பெயல்மணக்கும் பொழுது” என்பது குறித்தும் பலதடவைகள் எழுதியாகிவிட்டது. இரண்டுமே எவ்வித பொறுப்புணர்வும் இல்லாது கவிதையின் தேவை குறித்தோ அல்லது அந்தக் காலத்தின் அரசியல் குறித்தோ வெளிப்படையாகப் பேசாத தன்முனைப்புச் சார்ந்த தொகுப்புக்கள் அவை. அங்கே ப.திருநாவுக்கரசு அவர்களும் அ.மங்கை அவர்களுக்கும் இருந்த மட்டமான அறிவும் தேடலுமே அவற்றை வெளிப்படுத்தி நின்றன. இங்கே இமிழும் அப்படியானதொன்றாகத்தான் அடையாளம் கொள்கிறது. இது தனியே சோபாசக்தியினதும் அவர் வளர்க்கும் செம்மறிகளதும் செயற்பாட்டுக்கு உட்பட்ட அறிவுடன் மட்டும் வெளிவந்ததே.. ஆனால் உலக இலக்கியத்திற்குள் நுழைய முனையும் கதைகள் என்று அ. ராமசாமி அவர்களைக் கொண்டு சொல்லவைக்கப்பட்டிருக்கிறது. இதனை இன்றைய ஈழ- புலம்பெயர் சிறுகதைகள் என அடையாம் காட்டுவது பற்றித்தான் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கருப்புப்பிரதிகள் என்ற பதிப்பகம் பேசும் அரசியலுக்கு ஒப்ப சோபாசக்தி தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அடையாளம் காட்டத் தொகுக்கப்பட்ட தொகுப்பு மட்டுமே இது. இதற்கு அப்பால் பேச வேறு எதுவுமில்லை. தமிழ்நாட்டில் எம். கண்ணனது இமிழ் குறித்த உரைக்குள் விழுந்த இடிக்கு மஞ்சள் எண்ணை தடவ அ. ராமசாமி அவர்களைப் பாியாரியாக்கியிருக்கிறார்கள். அதனைவிட இந்தக் கட்டுரையில் வேறெதுவுமில்லை.

“கருங்குயில்”

“கருங்குயில்” தமிழ்நாட்டு அரசியல்வாதி போலவும் ஈழத்து இயக்கக்காரன் போலவும் இலக்கியத்தைக் கையாள முனையும் சோபாசக்தி… கற்சுறா
சோபாசக்தியினது இந்தச் சிறுகதைத் தொகுப்பினை நான் வாசிக்கத் தொடங்கும் போது, அவருடைய “கொரில்லா” (அடையாளம் வெளியீடு)நாவலையோ அல்லது அவரது தேசத் துரோகி (கருப்புப் பிரதிகள் வெளியீடு )என்ற சிறுகதைத் தொகுப்பினையோ வாசிக்கத் தொடங்கும் போது இருந்த மனநிலை எனக்கு இருக்கவில்லை. அவரை அருகிருந்து அறிந்தவன் என்ற அடிப்படையில் அவருடைய திறமைகளையும் அதற்கான உழைப்பினையும் அறிந்து கொள்ள முடிந்த போதிலும், “கொரில்லா” என்ற அவருடைய முதல் நாவல் என்னைக் கவர்ந்ததில்லை. அதன் செய்நேர்த்தி பற்றிப் பலர் வியாபித்திருந்தாலும் அதற்குள் ஒரு சிறிய “நஞ்சு” ஒன்று, வார்த்தைகள் எங்கிலும் இழையோடிக் கொண்டேயிருந்தது. அதனால்த் தான் அதனை ஒரு “ஹேராம்” திரைப்படத்தினை ஒத்த கருத்தியல் என்று அப்போதே சொன்னேன். அந்தக் காலத்தில் ஹேராம் ஒரு பேசு பொருளாயிருந்ததினை வைத்து அப்படிச் சொன்னேன். இன்று வேறு வேறு வடிவங்களுக்கும் ஒப்பிடலாம். அனால் அதனை இன்னொருதடவை வாசிக்கும் எண்ணம் எனக்கில்லை. அதன் பின் “தேசத்துரோகி” என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்த காலத்தில் அவர் தமிழ் நாட்டில் அறியப்பட்ட ஒரு ஈழ எழுத்தாளராக இருந்தார்.அதற்காகவே, அவ்வாறு அறியப்படவும், தமிழ் நாட்டவர்கள் ஈழம் சார்ந்து ஏற்கனவே விரும்புகின்ற விடயங்களையும், புகலிடம் சார்ந்து புல்லரிக்கின்ற விடயங்களையும் சொல்லி எழுதிவிடும் போக்கு அவரிடம் குடிகொள்ளத் தொடங்கிக் கனகாலமாக இருந்தது. அவரது தேசத்துரோகி என்று தொகுத்த சிறுகதைகளில் இருந்தவையில் பின்பாதிக்காக எழுதப்பட்டு சேர்க்கப்பட்ட கதைகள் அவைதான் என்பதனைச் சொல்லி, அவருடனான ஒரு “கணக்குத் தீர்ப்பு” ஒன்றினை 2003 காலத்தில் எழுதியிருக்கிறேன்(எக்ஸில் 2003). அதில் காணப்பட்ட பெரும்பாலான கதைகள் போல ஒன்றை எழுதியும் காட்டி அதனை விமர்சித்திருந்தேன். தமிழ்நாட்டிலிருக்கும் பல ஏமாளிகளுக்கும் கோமாளிகளுக்கும் கம்பு சுத்திக் காட்டிய கதைகள் அவை. இன்று இந்தக் “கருங்குயில்” என்ற கதைத் தொகுப்பினை வாசிக்கும் போது, முன்னரான அவரது இரண்டு நூல்களை வாசிக்கத் தொடங்குமுன் இருந்த எண்ணம் என் மனதிற்குள் இருந்ததேயில்லை. ஒரு இலக்கியத் தேடலுக்கான தெரிவாகவும், அதற்குள் நம் காலத்தின் இருளும் ஒளியும் கலந்த சனத்தின் கதைகளை ஒரு புள்ளியிலேனும் கண்டடையும் நோக்குடனும் அவருடைய இந்தக் கருங்குயிலின் தொகுப்புக் கதைகளில் நான் எந்த வார்த்தைகளையும் தேடவில்லை. இந்தக் கதைத் தொகுப்புக் குறித்து வாசிக்கத் தொடங்குமுன் எனக்குள் ஒரு முடிவு இருந்தது. அந்த முடிவிற்கு இந்தத் தொகுப்பு எந்தளவில் ஒத்துச் செல்கிறது என்ற வாசிப்பு மட்டுமே அதுவாக இருந்தது. இன்றைய சோபாசக்தி என்ற எழுத்தாளரின் செயற்பாடுகளில் நான் அக்கறை கொள்ளும் இடம் அதுதான். ஒரு தமிழ் நாட்டு அரசியல்வாதி போல், ஒரு தமிழீழ இயக்கக்காரனைப் போல் என்ன அநியாயமும் செய்து தன்னை ஒரு இலக்கியப் பிதாவாகக் கொண்டாடி நிறுவ சோபாசக்தி செய்து வரும் கூத்துக்களைக் கடந்தகாலமாக நான் நன்றாக உணர்ந்து வருகிறேன். ஆரம்பத்தில் இந்தமாதிரியாக, அவர் வந்தடைந்த வழிக்குத் தெரியாமல் நாமும் ஒருவகையில் காரணமாயிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி எனக்கிருக்கிறது. என்னோடிருந்த மற்றய நண்பர்களுக்கும் அவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களால் வெளிப்படையாக அவைகுறித்துப் பேச முடியாத நிலை இருக்கும். ஆனால் நான் அந்தக் காலங்கள் குறித்து வெட்கப்படவில்லை. அவற்றை வெளிப்படையாகப் பேசவேண்டும் என நினைக்கிறேன். அந்தப் பேச்சும் ஒரு பொறுப்புக் கூறலின் வெளிப்பாடுதான். ஒரு தற்குறியாளன், தன்மீது மோகம் கொண்டு அலையும் ஒரு எழுத்தாளன் என்பவனிடம் எந்த சமூகப் பெறுப்பும் பெறுமதியும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. ஒரு இயக்கக்காரனுக்குத் தன்னுடைய இயக்கத்திற்காகக் குண்டு ஒன்றை வைக்கத் துணிச்சல் இருப்பதுபோல், ஒரு அரசியல்வாதிக்குத் தன்னுடைய கதிரைக்காக ஒருவரைக் கொலை செய்யவும் தயங்காத மனநிலை இருப்பதுபோல் நீண்ட காலமாக தன்னுடைய இலக்கிய இருப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துடிக்கும் ஒரு தற்குறியாக மாறியிருக்கிறார் சோபாசக்தி என்ற அவதானம் எனக்கிருக்கிறது. இவ்வாறான மனநிலையிலிருந்தே இந்தக் “கருங்குயில்” என்ற தொகுப்பினை நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னுடைய மிக நெருங்கிய நண்பரும் என்னுடனும் எனது நண்பர்களுடனும் இணைந்து பலவேலைகளைச் செய்து வருபவர் என்ற ஒரு ஆதரவு நிலையிலிருந்தே அவரின் பல எழுத்துக்ளை வாசிக்கத் தொடங்கியவன். ஆனால் அவை எனக்கு ஏமாற்றம் அளித்தன. வாசிக்கும் போது இருக்கும் அந்த சுவாரிசியத் தகவலுக்குள் சிறிய சிறிய நஞ்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருந்தது. இலக்கியத்தின் பக்கம் இருந்து செயற்படும் ஒரு கதை சொல்லிக்கு இருக்க வேண்டிய தர்மம் அங்கே சிதைந்திருந்தது. ஆனாலும் அவரை என்னுடைய நண்பராகவே நான் அணுகினேன். அக்காலத்தில் அவருடன் முரண்பட்ட அல்லது கொடுமுரண்பட்ட பல பல சந்தர்ப்பங்கள் உண்டு. அவருடைய எழுத்து மீது நான் வைத்த முரண்களை விட அவரது நடைமுறை பற்றியும் அதிகம் முரண்பட்டிருக்கிறேன். ( அவைபற்றி இன்னொரு இடத்தில் பேசலாம். இங்கே அது அவசியமில்லாதவை. ) ஆனால் அவை அவரைத் தொலைத்துவிடும் அளவிற்கு இருந்ததில்லை என அப்பொழுது நினைத்திருந்தேன். ஆனால் இன்றைய எனது மனநிலை அதுவல்ல. மெல்ல ஊறிய நஞ்சை இனியும் பரவ விடமுடியாது என்ற நிலை இன்று எனக்குள் தோன்றியிருக்கிறது. இந்த முரண் எல்லாம் தாண்டி அவர் சினிமாவிற்குள் அறியப்பட்டபோது நான் அடைந்த சந்தோசம் அளவற்றது. சினிமா என்பது வியாபாரம்- பணம் சார்ந்த ஒரு தளம். அதில் அவர் ஒரு இடத்தை அடைவது அவரோடு இருந்த நண்பர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. ரெஸ்ரோரண்டுகளில் கோப்பை கழுவியும் அலுவலகங்களில் தூசுதட்டியும் கழித்த வாழ்விலிருந்து விடுபடும் தருணம் உன்னதமானதுதானே. கான் திரைப்படவிழாவில்(Cannes Film Festival) அவரைக்கண்டபோது நண்பர்களுடன் இணைந்து நான் அடைந்த சந்தோசம் அளவில்லாதது. அந்த சினிமாத் தொழில் அவருக்கு தொடர்ந்தும் கைகொடுக்க வேண்டும் என்பதுவே இன்றும் எனது விருப்பம். புகலிடச் சூழல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது சொர்க்க பூமியுமல்ல. அதிலிருந்து ஒவ்வொருவரும் தமது திறமையின் அடிப்படையில் வெளியேறுவது என்பது தேவையானதே. அவருக்குக் கிடைக்கும் சினிமாவின் வாய்ப்புக்கள் சார்ந்து அறியும் போது நான் ஒவ்வொருதடவையும் சந்தோசம் கொள்கிறேன். சிலவேளை அந்தப்பக்கம் எனது அறிவின்மை காரணமாகவும் நான் அதனைச் செய்து கொண்டிருக்கலாம். அதன் உண்மைப் பக்கங்களை நான் அறியும் போது இதே மனநிலை தோன்றிவிடவும் கூடும். ஆனால் இலக்கியத்தில் செய்யும் அவருடைய நடிப்புச்சார்ந்து நான் மிகவும் எரிச்சலடைகிறேன். கோபம் கொள்கிறேன். இலக்கியத்தில் ஒரு ஜெயமோகனைப்போல் ஒரு சாருநிவேதிதா போல் இன்னும் ஒருபடி மேலேபோய் கருத்தியலாக அ. மார்க்சைப் போல் அவர் திட்டமிடலுக்குள் இருக்கிறார். அவரை ஒரு நல்ல கதை சொல்லி என்றுதான் பலர் சொல்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் ஆரம்பத்தில் நம்பினோம். ஆனால் உண்மை அதுவல்ல. இன்னொரு தளத்தில் “கதை சொல்லி” என்ற பெயருக்கான அர்த்தத்தை நாம் பூரணமாக விளங்கிக் கொண்டால் அதுவே உண்மையானதாக இருக்குமோ என்றும் மாற்றி யோசிக்க வேண்டிவரும். “கதை சொல்லி” என்றும், கதையைச் சொல்பவர் என்றும் அதன் அர்த்தங்களை உடைத்து மொழியைச் சிதைத்துப் பார்க்கும் போது அவர் நல்லதொரு கதை சொல்லியாகவே இருப்பார். கிட்டத்தட்ட நாலைந்து சம்பவங்களைக் கோர்த்துக் கதை சொல்பவர். ஒற்றை அடையாளமாகச் சொல்லின், அவர் ஒரு “கோர்த்துக் கட்டி” அவ்வளவுதான். கதை சொல்லி என்ற அடையாளத்தை விட அவருக்குக் “கோர்த்துகட்டி” என்ற சொல்லே மிகப் பொருத்தம் என்றே நினைக்கிறேன். அவர் கதைகளுக்குள் வாழ்பவர் அல்ல. கதைகளின் அலகுகளை வியாபித்துச் செல்பவரும் அல்ல. எந்தக் கதைகளும் எந்தச் சம்பவங்களும் அவரை இடைஞ்சல் செய்து, துருத்தி நிற்பவையும் அல்ல. அந்த இடைஞ்சல்களை தன்மனவோட்டத்தில் நுழைத்து அதற்கான வியாக்கியானங்களை சமூகத்தில் பரவச் செய்பவருமல்ல. மானசீகமான அணுகுமுறையுடன் நிவர்த்தி செய்யக் கூடியதும் பொதுப் புத்தியை மெல்லிதாகவேனும் கழற்றி ஒழித்துவைத்துவிடும் எந்த உரையாடல்களும் அவரது தற்காலக் கதைகளுக்குள் நிகழ்பவை அல்ல. மிகத் திட்டமிட்டு தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விரும்பும் வார்த்தைகளை எழுதி அவர்களுக்குள் தன்னை அடையாளம் காட்ட முனைபவர் என்பதற்குமேல் அவரது கதைகளில் எதுவும் இருந்துவிடாது என்பது அறிந்த கதைதான். என்மனதறிந்து நமது சூழலில், அவ்வாறான ஒரு நிலையை தன்னுடைய வார்த்தைகளுப் பின்னாலும் நம்மைத் தூங்கவிடாது இடையூறு செய்தபடி இருக்கும் எழுத்து ஒன்று க.கலாமோகனுடையது. மற்றது ஜெயரூபன் மைக்கேலினுடையது. தன்முனைப்பற்ற எழுத்துக்கள் அவை. இவர்களின் எழுத்துக்களுக்குள் யாரும் ஒருபொழுதும் எழுதியவர்களை அறியமுடிவதில்லை. அங்கே பிரதியாளனுக்கான வேலை இருப்பதில்லை. அவனை யார் என்று அடையாளம் தேடிக் கொண்டிருப்பதுமில்லை யாரும். அவர்களது எழுத்துக்களில் வரும் பாத்திரங்கள் மனங்களை இடையூறு செய்யும். வாசகனின் நிம்மதியைக் குலைக்கும். ஆனால் இன்றைய சோபாசக்தியின் எழுத்துக்கள் அவ்வாறானதல்ல. அவருக்குத் தமிழ் நாட்டவர்களது முட்டாள்த்தனமான அங்கீகாரம் மட்டும் போதுமானது. அதற்கு எந்தச் சரக்கையும் விற்பனையாக்க அவர் தயங்குவதில்லை. அவருக்கு வியாபாரம் செய்ய அதி மகோன்னத “கருப்புப்’ பிரதிகள்” எதற்கும் தயார் நிலையில் இருக்கிறது. ஆக, அங்கே ஒரு ஆத்மார்த்தமான இலக்கியக்காரனுக்கு வேலையில்லை. அதற்குள் கதை சொல்லிக்கு என்ன வேலை? “கோர்த்துக்கட்டி” க்குத் தான் வேலை! அவரை ஒரு கோர்த்துக் கட்டியாக உரு மாற்றியதற்கு ஒரு பாதிப் பொறுப்பு கருப்புப்பிரதிகள் என்ற பதிப்பகத்திற்குந்தான். இந்தக் கருப்புப் பிரதிகள் என்ற பதிப்பகமனமும் தன்முனைப்பு என்ற சோபாசகத்தியின் கோர்த்துக்கட்டி மனமும் என்று இணைந்த இரட்டை நிலையை அறிந்து கொண்டுதான் கருங்குயில் என்ற அவரது தொகுப்பின் முதலாவது கதையை வாசிக்கத் தொங்குகிறேன். “கருங்குயில்” என்ற தொகுப்பினை வாசிக்கத் தொடங்கு முன் ஒரு “கோர்த்துகட்டி” சொல்லும் கதைகளுக்குள் என்ன தார்ப்பரியம் இருந்து விடப் போகிறது என்ற மனநிலையில்தான் இந்தக் கதைகளையும் வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு இலக்கியத் தேடலுக்கான ஒரு விகாசிப்பில் இதனை நான் வாசிக்கத் தொடங்கவில்லை. தமிழ் நாட்டு முட்டாள் வாசகனுக்கு எந்தப் “பூ”வை எந்தக் காதில் சுற்றியிருக்கிறார் சோபாசக்தி என்ற விபரம் அறியவே வாசிக்கத் தொடங்குகிறேன் என்பதனைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். மெய்யுணர்வு. இது வெளிப்படையாக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்த, அவர்களால் தியாக தீபம் என்று அழைக்கப்படும் திலீபன் அவர்கள் சார்ந்த கதை. அவரின் அடையாளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு எழுத்தமைப்பு. இலக்கியத்தில் இது ஒரு சிறுகதை என்றே அடையாளம் காட்டப்படுகிறது. இந்தக் கதை குறித்த ஒரு சிறு உரையாடல் அ. ராமசாமி அவர்களுடனான அபத்தம் உரையாடலில் ஜோர்ஜ் குருசேவ் அவர்களால் முன்வைக்கப்பட்டது. திலீபனின் ஊரான உரும்பிராயிலேயே ஜோர்ஜ் அவர்களும் வாழ்ந்ததாலும், திலீபனைச் சிறுவயதிலிருந்தே தெரிந்ததாலும் அந்தக் கதையில் வரும் அம்மன் கோயிலின் அமைப்பிடம் சார்ந்து அந்தக் கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். வரலாற்றிற்கும் புனைவிற்குமான வெளி குறித்த ஒரு இடைஞ்சல் பற்றியதான கரிசனைதான் அதுவே. ஆனால் உரும்பிராயிலோ அல்லது ஊரெழுவிலோ ஏன் யாழ்ப்பாணத்தின் வேறு பகுதிகளிலேயே வாழாத ஒருவருக்கு திலீபன் பற்றிய வாசிப்பு இந்தக் கதையில் என்னவாக இருக்கிறது? என்றும், இலங்கையிலே வாழாது இன்று தமிழ்நாட்டில் வாழ்ந்து ஈழம்பற்றிய கதைகளை மட்டும் கேட்டு வாழும் ஒரு இலக்கியக்காரனுக்கும் தமிழ் நாட்டுத் தேசிய வெறி கொண்டவனுக்கும் கதையில் எதைத் தேடமுடியும் என்பதும் இந்தக்கதை குறித்த முக்கிய உரையாடற்புள்ளி என்று நினைக்கிறேன். அதனை விடவும் திலீபன் பற்றியே அறியாத ஒரு இலக்கிய வாசகனுக்கு இந்தக் கதையில் இருக்கும் உன்னத கரு என்ன என்பதுவும் நமது உரையாடற் புள்ளியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புனைவின் அதீததம் என்பது சோபாசக்தியின் கதைகளில் எங்கே நிகழ்கிறது? என்று தேடும் ஒரு உரையாடலைத்தான் நான் உரையாட நினைப்பது? பெரும்பான்மையான ஈழத்தமிழ்ச்சமூகத்தால் மட்டுமல்ல ஈழம் பற்றிய கனவோடும் தமிழ் என்ற ஒற்றை அடையாளம் பற்றிய கனவோடும் அலையும் தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஒருவருக்குள் புகுத்தப்பட்ட திலீபன் பற்றிய அதீத புனைவுகளுடன் உருவாக்கப்பட்ட விம்பத்திற்கு ஒரு இடையூறும் நிகழ்ந்துவிடாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு பிரதியே மெய்யுணர்வு. இங்கே ஒரு புனைகதை என்று அடையாளம் காட்ட நமக்கு இருக்கும் வெளிப்படையான ஆகக் குறைந்த ஒரு தரவு, ஏற்கனவே பொதுச் சூழலிற்குள் கட்டமைக்கப்பட்ட தியாக தீபம் என்ற அடையாளம் குலைக்கப்பட்டு “தண்ணியைக் குடி சுண்ணியைக் குடி” என்று திலீபன் என்ற விம்பம் சொல்லும் இடம் மட்டுமே. இன்று சமூகத்தின் அமைதிக்கானதும் அகிம்சைக்கானதுமாகக் காட்டப்படும் திலீபன் என்ற சொல் இந்த வார்த்தைகளைக் கூட அனுமதிக்கப் போவதில்லை. ஆனால் சோபாசக்தி, திலீபனின் இயல்பு எனக் கருதிச் சொல்லும் இந்தச் சொற்களும் கூட புனைவுகளால் நிரப்பப்படும். இவர் தனது முதல் நாவலான கொரில்லாவிருந்து “கொண்டு பரப்பும்” ஒரு செயலைத் தொடர்ந்தும் தன் புனைவுகளினூடாகக் காவிச் செல்கிறார். திலீபனின் பாடசாலை நண்பன் என்ற ஒருவனது பாத்திரத்தின் கதைக்குள்ளால் திலீபனைத் தமிழ்நாட்டில் செப்பனிடுகிறார். திலீபன் என்ற ஈழவரலாற்றுப் பாத்திரத்திற்கு இருக்கும் உண்மையான கதைகளை மறக்கடித்து புனைவு என்ற பெயரில் உண்மை அடையாளத்தைத் திரித்துவிடும் உன்னத வேலையைத் தன்னுடைய எழுத்துக்களில் நிகழ்த்துகிறார். இதேபோன்றதொரு இன்னொரு புனைவாகத்தான் இந்தகதைத் தொகுப்பின் தலைப்பினைக் கொண்ட “கருங்குயில்” என்ற கதைக்கும் நடந்து விடுகிறது. கருங்குயில் அண்மையில் பப்லோ நெருடா என்ற சிலி நாட்டுக் கவிஞனின் இலங்கைக் காதலி குறித்த விடயங்கள் பேசுபொருளாகியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதுகுறித்து சிங்களத் திரைப்படம் ஒன்றும் அண்மையில் வெளியாகியிருந்த பின்னால் அவர் குறித்த சர்ச்சை இன்னும் பெரிதாக உருமாறியிருந்தது. உலகப் புகழ் பெற்று உன்னத தளத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்- மாகா கவிஞன் என்று அடையாளம் இடப்பட்டிருக்கும் ஒருவர் மீது முன்வைக்கப்பட்ட ஒரு பாலியல் விமர்சனமாக அத்திரைப்படம் அடையாளம் காணப்பட்டது. அதனைத் தக்கபடி தன் கைக்குள் அகப்படுத்திய சோபாசக்தி அவர்கள் அதற்கு ஒரு புனைகதையைச் செதுக்கினார். இந்தக் கதையை யாரும் வாசிக்கத் தொடங்கும் போது ஒரிரு வரிகளிலேயே இது பப்லோ நெருடாவின் இலங்கைக் காதலி பற்றிய கதைதான் என்று அனுமானித்துவிடலாம். அதனை அறிவதற்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஏற்கனவே சமூகத்தின் மனம் பொதுவாக எண்ணியிருந்த நிலையும் அதுதான். நமது சமூகத்தில் பழம் பெரும் எழுத்தாளர்கள்- கவிஞர்கள்- கலைஞர்கள்- என்று அடையாளம் கொண்டவர்களின் கதையும் இதுபோன்றதுதான். எழுத்தாளர் கவிஞர் என்ற அடையாளங்கள் எல்லாம் தமக்கு ஒரு “வீற்றோப் பவர்” என்ற கணக்கில் தங்களையும் பப்லோ நெருடாவாக நினைக்குமளவிற்குத்தானே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது. இதற்குள் தமிழ் நாடென்ன? ஈழமென்ன? புகலிடமென்ன? ஆக இந்தக் கதையில் ஏற்கனவே சமூகத்தில் உரையாடப்பட்ட விடயங்களைத் தாண்டி ஒரு பேசு பொருளைக் கண்டடைய முடியாது. ஒரு சம்பவத்தை மட்டும் அடையாளம் காட்டி அதனைப் போன்ற மற்றய சம்பவங்களின் கோர்வையைக் கொண்டுவந்து பிரதியிட்டு ஒன்றின் பின் ஒன்றாகக் கோர்த்துகட்டும் ஒரு வேலைதான் அவருடைய அதிகமான கதை சொல்லும் பாணி. பாலியல் இச்சைகளின் மோசமான வடிவங்கள் எப்படியிருக்கும் என்பது அனைவரும் அறிந்து கொள்ள முடிந்த வடிவங்கள்தான். அந்த வடிவங்களுக்கு மேலும் கீழுமாக வர்ண சாயங்கள் பூசிக் கொண்டு செல்லக் கூடிய வார்த்தைகளைக் கோர்ப்பதில் அவருக்குச் சிக்கலில்லை. அவருடைய வாசகர்களுக்கும் அது பழக்கப்பட்ட ஒன்று என்ற படியால் அவரது கதைகளுக்கும் கதைகளின் வார்த்தைகளுக்கும் புரிதலில் குழப்பங்கள் ஏற்படுவதில்லை. இந்தக் கதையில் என்ன வர்ணனைகளை அவர் விபரித்துச் சொல்லியிருந்தாலும் இந்தக் கதை முடியும் போது,”பப்லோ நெருடா நினைவுக்குறிப்புக்கள்” என்ற நானூறு பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலில் ஒரு பக்கத்தைச் சம்பங்கிக்காக ஒதுக்கியிருக்கிறான். என்று சொல்லி முடிக்கிறார். பப்லோ நெருடாவின் சுயசரிதை நூலின் ஒருபக்க கதையை வைத்துத் தன்னுடைய கதையில் 19பக்கக் கதையை அவர் சுற்றிச் சுழன்றடித்துக் கோர்த்துக் கட்டி எழுதுவதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? இந்தத் தமிழ் நாட்டின் இலக்கிய வெற்று வெளியினை நன்றாகப் புரிந்து கொண்ட ஒரு தற்குறியாளன் தன்னை முன்நிறுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஒரு பிரதிதான் இது என்பதனைத் தவிர வேறு என்ன இருக்கிறது. ஆக, சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் தன்கைக் கொண்டு அதனை ஒரு சுழற்சி முறையில் கதை பண்ணுபவருக்குப் பெயர் எழுத்தாளர் அல்ல. ஆறாங்குழி இது இலங்கை வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத ஒரு புரட்சிகர இயக்கமாக தன்னை அடையாளம் காட்டிய ஜே.வி.பி. என்ற இயக்கத்தின் தலைவர் ரோஹணவிஜயவீர அவர்களது அடையாளத்தை முகப்பாகக் கொண்டு புனையப்பட்ட எழுத்து. 1989 காலத்தில் அதன் தலைவர் உட்டபடப் பல ஜே.வி.பியினரை பிரேமதாச அரசாங்கம் கொன்றொழித்தது. இது நடந்தது 1989 அக்டோபர் நவம்பர் மாத காலப்பகுதி. இந்த அழிப்பின் கதைகளில் “உடுகப்பொல” என்ற டி.ஐ.ஜி இன் பெயரை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சித்திரவதைக்கும் கொலைக்கும் பெயர்போன உடுகம்பொலவின் கதைகள் அந்தக் காலத்திலேயே ஊருக்குள் விசிறத் தொடங்கியிருந்தன. இலங்கை பூராவும் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் உடுகம்பொல என்ற சொல் ஒரு அச்சமூட்டும் சொல்லாகவே யிருந்தது. அந்த நேரங்களில்அதன் மீதான உண்மைக்குச் சாட்சியமாக தெருவோரம் கிடந்து எரிந்த பிணங்களும் களனி ஆற்றில் மிதந்த பிணங்களும் சாட்சியாக இருந்தன. ஆனால் அந்தக் கொடூர வாழ்வின் அடையாளங்களைத் தன்வசதிக்கேற்றாற்போல் புனைவின் பெயரில் கொண்டுவந்து தருகிறார் சோபாசக்தி. வரலாறான சம்பவங்களையும் வதந்திகளாக வந்த சம்பவங்களையும் கொண்டு, தமிழ் நாட்டவர்களுக்கு புதிய கதை ஒன்றைச் சொல்லித் திகிலூட்டுகிறார். இலங்கையின் வாழ்வும் அரசியலும் பற்றிய எந்த அனுபவமோ அறிவோ இல்லாத முட்டாள்களுக்கு ஈழத்தின் கதை- புலம்பெயர் கதை என்று சொல்லி ஒன்றைக் காட்ட முனைகிறார் சோபா சக்தி. ஓ இதுதானா அது என்பதுபோல் தமிழ் நாட்டின் சாதாரண வாசகர்கள் தொடக்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை புல்லரித்து நிற்கிறார்கள். என்ன கொடுமை என்றால், இந்தத் தமிழ் நாட்டவர்கள் எங்களுக்கே “இதுதான் அது” என்று சோபாசக்தி காட்டிய கதையை திரும்ப எங்களுக்கே சொல்லிக் காட்டுவதுதான் அதிசிறந்த கொடுமை. வரலாற்றிற்கும் புனைவிற்குமான இடைவெளியைக் கூட சோபாசகத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. புனைவு என்ற பெயரில் வரலாறு போல கோர்த்துக் கட்டும் ஒரு செயலைத்தான் அ. முத்துலிங்கம் அவர்களும் சோபாசக்தி போல் ஒருமுறை செய்துகாட்டி மாட்டிக் கொண்டார். ஆனால் சோபாசக்தியோ இதனைத்தான் அவரது கதைகளில் தொடர்ந்து செய்கிறார். சோபாசக்தியால் எழுதப்பட்ட “யாப்பாணச் சாமி” என்ற சிறுகதையை வாசிக்கும் ஈழத்தவர்களுக்கு அவர் தன்னுடைய கதைகளில் செய்கின்ற அயோக்கியத் தனத்தினை விளங்கிக் கொள்ள முடியும். அது முழுக்க முழுக்க “தன்னைக் கவனியாத “FUNNY BOY” திரைப்படக் குழு குறித்த எரிச்சலில் எழுதப்பட்ட கதை. ஆனால் அதனை தமிழ் நாட்டு வாசகர்களால் விளங்கிக் கொள்ளவே முடியாது. ஆனால் தமிழ் நாட்டு விமர்சகளுக்கும் ஈழம் மற்றும் புகலிடச் சூழலுடன் தொடர்பிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் அங்கிருக்கும் இலக்கியப் பேராசிரியர்களுக்கும் கட்டாயம் விளங்க வேண்டும். இதன் பின்னாலுள்ள நஞ்சை நீங்கள் அறிந்து கொள்ளாது விட்டால், இலக்கியத்தின் பக்கமிருந்து நீங்கள் எதனையும் ஒருபொழுதிலும் விளங்கிக் கொள்ளப் போவதேயில்லை. வர்ணகலா இந்தக்கதை புலம்பெயர் சூழலிலும் பண்பாடு எனச் சொல்லிக் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்படும் அடையாளங்கள், சடங்குகள் என்பவற்றைச் சொல்லி அதற்குள் சாதி ஒழிந்திருக்கும் இடத்தைக் காட்டும் கதை. கதை தொடங்கும் போதே கதையின் முடிவை நான் சொல்லப் போவதில்லை நீங்களே ஊகியுங்கள் என்று சொல்லப்படுகிறது. கதையின் முடிவிலும் அப்படித்தான் சொல்லப்படுகிறது. பாரீசில் வாழும் ஒரு நளவர் சமூகப் பெண் வட்டுக் கோட்டையில் வைத்துக் கொல்லப்படுவது பற்றிய கதை இது. இதில் சோபாசக்தி அவர்கள் “வட்டுக் கோட்டை” என்ற ஊரை அடையாளமாகத் தேர்ந்தெடுத்தது அண்மையில்சாதிச் சண்டைக்குள் பொதுவெளியில் பேசப்பட்ட பிரபலமான ஊர் என்ற அடிப்படையில் மட்டுந்தானே ஒழிய வேறு இல்லை. இல்லேயேல் தமிழ் நாட்டுக்கு இந்தக் கதையை அவர் கொண்டு செல்ல மிகப் பெருந் தடை இருக்கும். வெளிப்படையாக ஆணவக் கொலைகள் நடைபெறும் மண்ணுக்கு, ஈழத்தின் சாதியக் கொடூரத்தை வெளிக்காட்ட அவருக்குக் கிடைத்த சாக்கு( கோணிப்பை) இது. ஈழத்தமிழ்ச்சூழல் பூராவும் சாதிய அடையாளங்களுடன்தான் வாழ்கிறது. சாதிய முரண்பாடுகளும் சண்டைகளும் அந்த மண்ணெங்கும் பரவித்தான் கிடக்கிறது. வடக்கைப் போல் அல்லாது சாதியமுரண் குறைந்த சமூகம் கிழக்கு சமூகம் என்று அடையாளம் கொள்ள முடிந்தாலும் அங்கேயும் சாதிவெறிபிடித்தலையும் புரட்சியாளர்களைக் கூட நான் அறிவேன். அப்படித்தான் நமது சமூகம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதையை புனைவாக நடத்தி- கோர்த்துக் கட்டி- தன்னுடைய மற்றயகதைகள் போல் இழுத்துச் செல்ல சோபாசக்தியால் முடியாது போகிறது. தான் எங்கேயாவது ஒரு இடத்திலாவது மாட்டுப்படுவேன் என்ற ஐயத்தை அவர் கதை சொல்லிப் போகும் விதத்திலிருந்து தொடர்ந்து நீங்கள் கண்டு போக முடியும். அவரது வழமையான எழுத்துக்கள் போல வெறும் சம்பவங்களின் கோர்வைகள்தான் இங்கேயும் படர்ந்திருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் தமது குடும்பங்களில் நிகழும் சடங்குகளை எப்படி நடத்துகிறார்கள் என்றுதானே நாம் அன்றாடம் அறிகிறோம். அவர்களின் வீடியோக்களிலிருந்து நாம் பார்க்கிறோம். அதனை வரிசையாக அடுக்குவதில் என்ன புனைவு உருவாகிறது. மற்றவருடைய சாமத்தியவீட்டுச் சடங்கு எப்படி நடக்கிறது என்று அறியமுற்படுபவருக்குத் தரும் அடையாளத் தகவல்களாக அவற்றின் விரிவு இருக்கிறதோடல்லாது தமிழ்நாட்டு வாசகர்கள் தமது வாயைப் பிளந்து நின்று வாசிக்கச் செய்யும் எழுத்தாக மட்டும் இது இருக்கிறது. அதற்காகவே திட்டமிட்டு எழுதப்படும் எழுத்து அவருடையது என்பதனை இந்தக் கதையும் தொட்டு நிற்கிறது. மற்றப்படி இதன் பின்னால் ஒரு திறந்த வெளியை புனைவுத்தளத்தில் உருவாக்கிவிட முடியாத வெறும் வெற்று அரட்டல். இந்தக் கதையை ஒரு சமூக உரையாடலாகக் கூட நடத்திச் செல்லத் தேவையற்று ஒரு அட்டவணைபோல் பதியப்படுகிறது. தமிழ் நாட்டவருக்கும் சோபாசக்திக்கும் இதுவொரு புலம்பெயர் சிறுகதை. மற்றப்படி இதில் ஒரு மயிரும் இல்லை. தமிழ் நாட்டவருக்குக் காதில் பூ சுற்றிய வெற்று அரட்டல். ஆனால் தன்னுடைய வழமையான யுத்த அடையாளங்களுடன் விபரிக்க முடியாது போய் முடிவு சொல்லப் பயந்த கதை இது. One Way தன்னுடைய தகப்பனான யேசுதாசன் அவர்களை நிவூட்டும் கதை. தகப்பனுடைய ஊர் ஆட்டகாசம் பற்றிப் புனைவுகளோடு, பல்வேறு தடவைகளில் வேறு வேறு முறையாக எங்களுக்குப் பகிடிக்கதையாச் சொல்லி வந்த கதையின் இன்னுமொரு மாதிரி வடிவந்தான் இது. புனைவு என்ற வடிவத்துள் அந்தக் கதையின் அளப்பரிய உண்மைகளைத் தவிர்த்து ஒரு புனைவாக இது எப்படியிருக்கிறது எனக் கேட்டால், புத்தகத்தில் இந்த ஒரு கதை மட்டும் புனைவிற்கான ஒரு உரையாடற் தளத்தை அங்கங்கே கொண்டு உருவாக்கியிருக்கிறது. ஆனாலும் இந்தக் கதையும் அகதிகளின் பாரிஸ் வாழ்வு குறித்துத் தமிழ் நாட்டவர்களுக்குக் கதை சொல்லும்படியாகத்தான் பல்வேறு இடங்கள் நினைவூட்டிச் செல்கிறது. ஈழத்தின் வாசகர்கள் இந்தக் கதையில் கூட எதையும் புதிதாக அறியவும் உள்ளார உரையாடவும் எதுவுமில்லாத கதை. ஒவ்வொரு புகலிட அகதியும் அன்றாடம் வாழும் வாழ்வை வெறும் சம்பவங்களாகத் தமிழ்நாட்டவர்களுக்கு விபரிக்க முடிந்த கதைதான் இதுவும். இன்று சோபாசக்தியால் தமிழ் நாட்டு வாசகர்களது மனநிலைக்குக் கதை சொல்லும் விதம் தாண்டி ஒரு கதையை அவரால் வேறுமாதிரி எழுத முடியாது இருப்பதனை யாரும் விளங்கிக் கொள்ளவேயில்லை. ஆனால் அவருக்கு அது நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனை மூடி மறைக்க அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் பல்வேறு விதமானவை. 6. பல்லிராஜா இந்தக் கதையை நான் வாசிக்கத் தொடங்குமுன்னர் அவரது யாப்பாணச்சாமி என்ற கதையின் வடிவத்தில் அல்லிராஜா சுபாஸ்கரன் என்ற லைக்கா நிறுவனக் காரரை வைத்துச் சொல்ப்பட்ட கதை என்றுதான் நானும் நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன். அப்படித்தான் இருக்கக் கூடும் என்று பலர் எனக்கு முன்னர் அறிவுறுத்தியும் இருந்தார்கள். அப்படிச் செய்யக் கூடியவர் என்பது நமக்கு எற்கனவே தெரிந்த கதைதான். அவருடைய ஊரில் தாழ்த்தப்பட்டவர்களது பெயர்களை தன்னுடைய கதைகளில் எப்படிப் பாவித்தார் என்று ஜோர்ஜ் குருசேவ் அவர்களும் ஒருமுறை அபத்தம் இதழில் குறிப்பிட்டிருந்தார். அப்படியான ஒரு எண்ணத்தில்தான் நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் கதை அவ்வாறு இல்லை. அது முழுக்க முழுக்க சிங்கள பவுத்த மேலாதிக்கத்தின் வடிவமாகத் தமிழ்ப்பகுதிகளில் புத்தர் சிலை நிறுவும் சம்பவங்கள் பற்றியது.பவுத்த தேரர்கள் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதையும் அதன் பின்னால் இன்றுவரை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரச நிர்வாகத்தின் சீர்கேடுகளையும் வரிசையாக அடுக்கிச் சொல்லும் சம்பவங்களின் கோர்வையாகக் கதை எழுதப்படுகிறது. இதனையும் ஒரு புனைவு என்ற தளத்தில் வைத்துப் புல்லரித்துப் போகிறார்கள் பலர். என்ன கொடுமை என்றால் இவரைப் போல ஒரு எழுத்தினை எழுதினால் தமிழ் நாட்டவர்களால் தாமும் போற்றப்படுவோம் என்ற ஆசையில் பலர் இவரைப் போல் எழுதத் தொடங்குகிறார்கள். சோபாசக்தி கூட அப்படியான ஒருநிலை வருவதனையேதான் விரும்புகிறார். அதற்காகச் சில செம்மறிகளை அவரே உருவாக்குகிறார். அதனைப் புறக்கணித்து தன்னியல்பாய் எழுதுபவர்களை என்ன பாடுபட்டேனும் ஒழித்து ஓரங்கட்ட முனைகிறார். அதற்காகப் பல்வேறு வழிகளைக் கையாள்கிறார். தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதியைப் போல், ஈழத்தில் ஒரு இயக்கக்காரனைப் போல் அவர் இலக்கியத்தில் செயற்பட முனைகிறார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியாது. அந்தச் சிந்தனையை என்கையாலேயே கிள்ளி வெளியே எறிய வேண்டும் என்று நான் எண்ணியிருக்கிறேன். அதனை வைத்து பணம்பண்ணமுனையும் வெளியீட்டாளர்களையும் சமூகத்தின் ஒரு சிறந்த பதிப்பகம் என்று நாம் வரையறுப்பதில்லை. காலச்சுவட்டை எப்படி நாம் அணுகினோமோ அதன் தரத்திற்கு இன்று கருப்புப் பிரதிகளும் இறங்கியிருக்கிறது. மொத்தத்தில் இன்றைய தமிழ்நாட்டவர்களுக்கு அடிப்படையில் அறம் என்பது இருப்பதில்லை. ஆனால் நாட்கணக்கில் அறம் பற்றிப் பேசுவார்கள். மாற்றுக் கருத்தும் கருத்து முரண்பாட்டையும் வாரி அணைப்பதாகப் படம் காட்டுவார்கள். பணம்- புகழ் தாண்டி அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாத நிலை இன்று தோன்றியிருப்பது அபத்தம். சோபாசக்தி அவர்கள் தன்னை ஒரு கதைசொல்லி என நகரும் வார்த்தைகள் எங்கும் சம்பவங்களின் நகர்வே. அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக் கோர்த்துக்கட்டி அதனைப் புனைவு என்கிறார்.புனைவுக்கு இங்கே என்ன வேலை இருக்கமுடிகிறது?. தமிழ்நாட்டிலிருக்கிற விடுபேயன்கள் வாயைப் பிளந்து நின்று கேட்பார்கள், வாசிப்பார்கள் என்ற ஒரேயொரு அதீத நம்பிக்கையில் எழுதப்படும் வார்த்தைகள்தான் இவையே அன்றி, ஆழ்மனதிலிருந்து வருகின்ற இலக்கிய விகாசிப்பு அல்ல இவை. அங்கே இருக்கிறவன் தொன்மங்களை வைத்துக் கதை சொல்கிறார் சோபா என்று எங்களிடம் வந்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்.இங்கே இவனுக்கோ தனக்கான கதையைச் சொல்லத் திண்டாட வேண்டியிருக்கிறது. இந்த இழுபறிகளில் எதையாவது தேடியெடுத்து ஒவ்வொரு கதைகளிலும் தமிழ் நாட்டவனின் மண்டையைக் கழுவுகிறார் சோபாசக்தி. இவ்வாறு கதைகளை அவர் எழுதிச் செல்வதும் மற்றவர்களை அவரைப்போல் எழுதச் செய்வதுமாக ஒரு இலக்கிய அடையாளத்தைக் காட்டி நிற்கும் அயோக்கியத் தனத்தை நாம் புரியத் தொடங்கினாலே போதும். மிகுதி பின்னர் பார்க்கலாம்.

மேன்முறையீடு;

- கற்சுறா- மேன்முறையீடு; உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்? என அருண்மொழிவர்மன் அவர்கள் மீண்டும் என்னிடம்...