2 இரண்டு:
கற்சுறா
கடந்த இரண்டு
மாதங்களாக ஜெயமோகன் அவர்களின் ஒரு வீடியோ உரையிலிருந்து ஈழத்துக் கவிதைகள் ஈழ இலக்கிய
வழித்தடங்கள் குறித்த பதிவுகளுக்காக அதிகம் கோபப்பட்டு எதிர்ப்பினைத் தொடர்ந்து தெரிவித்தபடி இருக்கிறோம். அந்த வகையில் நமது கருத்துக்கள் மற்றும் அவை குறித்து வந்த மறுவினைகள்
பற்றி தொடர்ந்து உரையாடியபடி இருக்கிறோம். அப்படியான தொடரில் இடையில் எழுதப்படும் ஒரு
குறிப்பே இது. இதனை நீங்கள் ஜெயமோகன் அவர்களுக்காக கோடு ஏறி நிற்கும் கருணாகரனுக்கும்
அனோஜன் பாலகிருஸ்ணனுக்குமான ஒரு பதில் என நினைத்தாலும் பரவாயில்லை.
பல்லவி
நமக்கு
மத்தியில் தற்போது தோன்றியிருக்கும் குட்டி ஜெயமோகன்கள் தமது பிதா உதிர்த்த வார்த்தைகளுக்கான
ஞானம் தேடி நாலாறுபுறமும் அலைந்தபடி இருக்கிறார்கள். அவர்களும் அதற்காக தமது பிதா உதிர்த்த
வார்த்தைகளையே தொடர்ந்தும் உதிர்த்துக் கொண்டு
திரிகிறார்கள். நமக்கோ அவை அயர்ச்சி ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கிலித் தொடர் போல பிதாவின்
கைபிடித்து அவுஸ்ரேலியா பாரீஸ் லண்டன் கனடா என்று குட்டி மோகன்கள் சூழ்ந்து வலம் வந்து
கொண்டிருக்கிறார்கள். மவுனமாகவும் பெரிய அலப்பறையாகவும் கேட்கும் அந்தத் தொடர் இரைச்சல்
எங்களைத் தொந்தரவு பண்ணியபடிதான் இருக்கிறது.
அந்தத் தொந்தரவில் இருந்து விடுபட நாமும் மறுத்தான்
எழுதித்தான் ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
அனுபல்லவி
குட்டி
மோகன்களது இறுதிவாதமாக ஈழ இலக்கியத்தின் அழகியல்
– அரசியல் பார்வையை முன் கொண்டு வந்தாலும் தமது பிதாவைப் போல் எழுதத் தெரியாதவர்கள்.
ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு கதை கூட எழுத முடியாதவர்கள். தமது பிதாவைப் போல் பட்டியல்
போட முடியாதவர்கள். தமது எழுத்தாளர்களில் தரமானவர்களை அடையாளம் காணத் தெரியாதவர்கள்.
தமது பிதா அடையாளம் இட்ட பின்புதான் அவர்கள் கொண்டு திரிகிறார்கள் என்றவாறான வார்த்தைகளையே
முன்வைக்கும் ஒருபுறம், தவறைச் சுட்டிக்காட்ட பண்பான எழுத்து வேண்டும். தமிழகத்திற்கும்
ஈழத்திற்கும் காலாகாலமாக உறவிருக்கிறது. ஈழத்திலிருந்து போன அனைத்து வகையினரையும் தக்கபடி
மதித்து வரவேற்றார்கள் அவர்கள். அவர்களை மானங்கெடப் பேசக்கூடாது என்பதாக இன்னொருபுறம்
கட்டளையிடுகிறார்கள். அது குறித்து நாம் ஏற்கனவே எழுதிவிட்டதாயினும் திரும்பவும் ஒருமுறை சரணம் பாடிச் சொல்ல வேண்டியேயுள்ளது.
சரணம்
இது
குறித்து எழுதும் போது எனது வாழ்வு முறைக் காலங்களில் இருந்தே எழுதுகிறேன். ஈழம் என்பது தேசமல்ல. அது கதைகளால் கட்டப்ட்டது
எனச் சொல்லிவருகிறேன். அது கடந்த நாற்பது வருடங்களாக ஒரு பின்னிய யுத்தத்திற்குள் கிடந்தது. வாழ்வியலை எழுதுதல் என்பது ஈழத்தில் யுத்தத்தை எழுதுதலாகவே
இருந்தது. யுத்தத்தைப் போராட்டம் என்று நம்பியிருந்த
காலங்களில் எழுந்த இலக்கியப் பிரதிகளில் ஆயுதங்களும் ஆயுதத்தின் நுனியில் பூக்களும்
பூத்திருந்ததை நான் வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றிய பிரதிகள் அதிகமாகப் பல்கலைக்
கழகத்திலிருந்து தோன்றியிருந்தன. அவையே அந்தக்காலத்தின் இலக்கியப் பிரதிகளது அந்தஸ்தைப்
பெற்றன. இன்னொருபக்கம் சாதிய அடக்குமுறைக்குள் இருந்து வெளித் தோன்றிய பிரதிகள் போராட்டத்தில்
தோன்றி முன்துருத்தி நின்ற ஆயுதத்திற்குள் மெல்ல மறைக்கப்பட்டன. இலக்கியச் சூழல் என்பதும்
போருக்குள்தான் இருந்தது.
அந்தப்
போருக்குள் இருந்தும் பலர் எழுதத் தொடங்கினார்கள். “ எனது ஜப்பானியத் தோழி ஆரி மக்ஸமோட்டோவை அணைத்து
முத்தமிட்டுக் கொண்டிருந்தபோதுதான் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் குண்டு வெடித்தது.”
என்று வ.ஐ. ச. ஜெயபாலன் எழுதியிருந்த வார்த்தைகளைக் கடந்துதான் போரின் காலத்தை நீங்கள்
அறிய முடியும். அதற்குள் இருந்துதான் செல்வி, சிவரமணி, போன்றவர்கள் எழுதத் தொடங்குகிறார்கள்.
இங்கே செல்விக்கும் சிவரமணிக்குமே எழுத்தின் தார்ப்பரியத்தில் வேறுபாடு உண்டு. செல்வி
நாடகத்துறையைத் தன்னுடைய வாழ்வாக்குகிறார். சிவரமணி கவிதையில் வாழ்கிறார். ஆனால் எழுதிய
கவிதை ஒன்றுக்காக புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார் செல்வி. தன்னுடைய கவிதைகளைக்
கொழுத்திவிட்டு தானும் கொழுத்தி மரணித்துப்
போகிறார் சிவரமணி. இந்தக் கதைக்குள்ளாக
நுழைந்துதான் நீங்கள் அந்தக் காலத்தின் கவிதைகளை விளங்கிக் கொள்ளமுடியும். கவிதைகளின்
அரசியலை விளங்கிக் கொள்ள முடியும்.
ஏறத்தாழ
20 வருடங்களின் முன்பு இளவாலை விஜேந்திரனது
“நிறமற்றுப்போன கனவுகள்” கவிதைத் தொகுப்பினை விமர்சித்து நான் பேசிய போது. இளவாலை
விஜேந்திரனை ஒரு கவிஞராக என்னால் அடையாளப்படுத்தமுடியாது எனவும் அவருடைய கவிதைகள் சேரனுடைய
கவிதைகளைப் போல் எழுதப்பட்டவை. சேரனது கவிதைகளைப் போலப் பார்த்து எழுதப்பட்ட மாதிரியானது. ஒரு போலிக் கவிதை என்று குறிப்பிட்டேன்.
ஈழத்துச்
சூழலில் கவிதை எழுதுவதும் கவிதைத் தொகுதிகள் வெளிவருவதும் மிக வேகமாக நடந்து வரும்
செயற்பாடாக போய்விட்டது என்றும் இங்கே கவிதை எழுதுவது என்பது மிக இலகுவான முயற்சியாக
இனங்காணப்பட்டுள்ளது. ஏனெனில் எல்லோரும் தமக்கு பிடித்தமான தமக்கு முன்னிருக்கிறவர்களைப்
பார்த்து எழுதிவிடும் நிலைதான் அதற்குக் காரணம் என்று சொல்லியிருந்தேன். அந்தத் தொகுப்பில்
இருக்கிற 55 கவிதைகளில் தேசத்தை இழந்து விட்டு, இருக்கிற இடத்தையும் ஏற்றுக் கொள்ளாது
தத்தளிக்கிற கவிதைகளாகவே அநேகமானவை இருக்கின்றன. இத்தன்மை ஒரு எல்லைக்கு அப்புறம் வாசிப்பில்
அலுப்பை உண்டு பண்ணுகிறது. என்று சொல்லியிருந்தேன்.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு
முன் எழுதிய கட்டுரை என்ற படியால் இன்று எடுத்து அந்த உரையைப் பார்க்க எனக்கே அலுப்பை
உண்டு பண்ணுகிறது. ஆனாலும் உங்கள் பிதா இன்று
வந்து புதிதாகச் சொல்வது போல் அல்ல அது. நாம் எமக்குள்ளேயே நிரகரிப்புக்களையும் உடன்பாடுகளையும்
உருவாக்கியிருக்கிறோம். உங்கள் பிதா சொல்வது போலான அரசியல் கூச்சல்கள் என்பவற்றை நாங்களே
ஒருபோதும் அருகில் வைத்து வாழ்ந்ததில்லை. அவற்றைத் தேடித் தேடி தமிழகத்தில் பலர் பதிப்பித்தபோதும்
அந்தப் பதிப்புக்களையும் நாம் நிராகரித்து நகைத்திருக்கிறோம்.
இளவாலை
விஜேந்திரனைப் போல்தான் கனடாவில் வாழ்ந்த திருமாவளவன் அவர்களையும் ஒரு கவிஞராக என்னால் அடையாளப்படுத்த முடிவதில்லை.
பல நிகழ்வுகளில் இதனைத் தெரிவித்திருக்கிறேன். அவர் கட்டுக்கட்டாக எழுதி மூன்று தொகுப்புக்களை
வெளியிட்டபோதும் அவை பிரியோசனமற்றவை. காலத்தால் நிலைக்காதவை எனச் சொல்லியிருக்கிறேன்.
திருமாவளவன் அவர்களுக்கும் நேரடியாக அதனைச் சொல்லியுள்ளேன். திருமாவளவன் தொடர்ந்து
பனியையும் தனது வேலைத் தளத்தையும் விட்டுப் பிரிந்திருக்கிற வீட்டையும் பற்றி எழுதிக்
கொண்டிருந்தார். புலம்பெயர் கவிதை என்று தமிழ்நாட்டுக்காரர் தன்னைக் கொண்டாட எதை எழுத
வேண்டுமோ அதனை எழுதிக் கொண்டிருந்தவர் அவர். திருமாவளவனைப் போல் பலர் எழுதினார்கள்.
இன்றையசூழலில் எழுதப்படும் கவிதைகளில் எழுதியவரது பெயரை நீக்கிவிட்டால் யார் எழுதியது
எனச் சொல்ல முடியாது போய்விடும் சூழல்தானே இருக்கிறது எனச் சொல்லியுள்ளேன். ஆனால் திருமாவளவனோ
அந்த எழுத்து முறையையும் தாண்டி கவிஞர் சேரனைப் போல் குறுந்தாடி வைத்து கன்னத்தில்
கைவைத்து புகைப்படம் எடுத்து பிரசுரித்த ஒரு இலக்கியப் போலி என்று கிடைத்த இடமெல்லாம் எள்ளி நகையாடியிருக்கிறேன்.
இன்று
அவர் மரணித்துவிட்டார். மரணத்தின் பின் ஒருவரைக் கடவுளாக்குவதுமாதிரியான சனாதன வேலையை
நான் செய்ய மாட்டேன். அவர் உயிருடன் இருக்கும் போது எவ்வாறான கருத்தை முன்வைத்தேனோ
அதனைத்தான் இப்போதும் முன்வைக்கிறேன். அவர் நிகழ்த்தியிருந்த ஒரு கவிதா நிகழ்வினை ஒரே
மாதிரியான ஆடை அணிந்து ஒரே மாதிரியான முக பாவனையுடன் ஒரேமாதிரியான ஒலி நயத்துடன் கவிதா
நிகழ்வை நிகழ்த்தியிருந்தார்கள். அது சரவணபவான் ஹோட்டல் தொழிலாளர்கள் போல் இருப்பதனை
எனக்கு ஞாபகப்படுத்துகிறது என எழுதியிருந்தேன்.
அப்படித்தான் நமது தமிழ்க் கவிதைச் சூழலின் நிகழ்வுகள் பொதுவாக அரங்கேறுகின்றன.
கவிதையின் வரிகளை இரண்டுதடவை வாசிக்கும் நிலையினை
யார்தான் வாசித்துக் காட்டினார்களோ தெரியாது . ஏதாவது சில வார்த்தைகளை ஒருவித ஒலி நயத்துடன் வாசித்து விடுவதால் அது கவிதை
என நம்பிவிடும் சூழல் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்
நாட்டிலும் அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த வார்த்தைகளை இழுத்து இழுத்து இரண்டு தடவை வாசிப்பதால் தானோ என்னவோ அந்த ஓசையை தூரத்தில் இருந்து வருகின்ற
ஒரு இராணுவ வண்டியின் தொடர் இரைச்சலை ஒத்திருக்கிறது என நான் பதிவு செய்திருக்கிறேன்.
இந்த வகை நோய் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும்
முற்றிவிட்டுள்ள நோய்தான். இதற்கு மருந்தற்றுத்தான் போய்விட்டது.
அடுத்து
“மிஞ்சும் ஒரு கவிதை” என்று பசுவய்யா எனும் சுந்தரராமசாமி அவர்கள் தனது “107 கவிதைகள்” என்ற தொகுப்பின் பின் அட்டையில்
ஒரு கவிதை செய்து காட்டியிருப்பார். கண்மூடித்தனமாகப் பசுவய்யா என வாயைப் பிளந்து திரிபவர்களுக்கு
அது ஒரு பொருட்டாகவே இருக்காது. ஆனால் கவிதைத் தேடல் உள்ளவனுக்கு உடனடியாக அந்த “மந்திர” வித்தை புரிந்து கொண்டு விடும். கவிஞன் (தான்)என்பவன் ஒரு புதிர் என்பதாக போலியாக
கவிதை ஒன்றைச் செய்து காட்டியிருந்தார். அது ஒரு முட்டாள்தனமான விளங்கப்படுத்தல். அதிலும் அந்தப் பசுவய்யா அவர்கள் தொகுப்பின் முன்னுரையாக எழுதிய உரையினை வாசிக்கும்
ஒருவர் அதில் கவிதைக்கு செய்யப்பட்ட பட்டுக் குஞ்சம் குறித்து கோபப்படாமல் இருக்கமுடியாது.
தனது கவிதைகளுக்கு எப்படி குறிகளை அகற்றினேன். ஆச்சரியக்குறியை மட்டும் அகற்றமுடியாது
போனது என்றபடி அந்த உரை போகும். இந்தமாதிரியான கவிதைப் பித்தலாட்டங்கள் குறித்து
20வருடங்களுக்கு முன்பே எழுதியவர்கள் நாங்கள்.(
பார்க்க :எக்ஸில்- 7, May 1999)

இன்னொன்று,
2004 இல் “மற்றது” இதழின் தலையங்கத்தில்
“வன்முறை
அரசியலைக் காவி நிற்கிறது ஈழத்து இலக்கியம்.
இந்தியப்
பார்ப்பனீய அரசியலுடன் மெல்ல மெல்லக் கைகோர்க்கிறது புலம்பெயர் இலக்கியம்.
எழுதப்படும்
வரலாறுகளோ எழுதப்படுவோரது வாரலாறுகளாக மட்டும் நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வார்த்தைகள்
எங்கிலும் மிக நுணுக்கமாய்ப் புதைந்து கிடக்கிறது யாழ்ப்பாண மையவாதம்.
அதன்
தொடரோட்டமாய் புகலிடத்திலும் கொண்டோடப்படுகிறது சமயமும் சாதியமும்.
என்று
எழுதியிருந்தோம்.
இவை
எல்லாம் நான் சார்ந்து இயங்கிய செயற்பாடுகளின் தரவுகள். இதைத் தாண்டி ஈழத்திலிருந்தும்
மற்றய புலம்பெயர் சூழலில் இருந்தும் எழுதப்பட்ட குரல்களை நாம் திரட்டி எடுத்தால் இன்னும்
எத்தனை மடங்கு வரும்.
இப்படி
ஈழத்திலிருந்து அல்லது புலம்பெயர் சூழலிலிருந்து எழுதப்பட்ட எதையும் வாசிக்காது. ஈழம் பற்றிய தேடல் இல்லாது, தன்னைத்
தொழுது இருப்பவர்கள் யாரைத் தனக்கு ஜாடை காட்டுகிறார்களோ அதை மட்டும் வாசித்து அவர்களை
மட்டுமே தரமானது என அடையாளப்படுத்துவதற்கு எதற்கு
உங்கள் பிதா? அதனை நீங்களே செய்யலாமே.
உதாரணமாக
நீங்களே விதந்தோதுகிற உங்கள் பிதாவால் எழுதப்பட்ட
“மறுபக்கத்தின் குரல்” என்ற கட்டுரை காலம் இதழில் பிரசுரமாகியிருந்தது. அதில்
“அனார்,
ஆழியாள், பஹீமா ஜகான் ஆகியோரை ஈழக்கவிதையின் முக்கியமான குரல்களாக நான் அடையாளம் காண்கிறேன் என்கிறார். இச்சொற்களின் கவித்துவம் அளிக்கும் புத்துணர்ச்சியும்
ஒளிவிடும் துயரமும் கவிதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை என்னுள் மீண்டும் புதிப்பித்தன”
என்கிறார். இந்த மூன்று பெண் கவிஞர்களின் பொதுக் கூறுகளாக போரையும் இடம் பெயர்தலையும்
கூறுகிறார்.
அந்தக்
கூறு கெட்ட உங்கள் பிதாவிற்கு நீங்கள் சொல்ல வேண்டியது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போரும் இடம்
பெயர்தலும் தான் ஈழத்தின் அதிக கவிதைகளில் அதுவும் ஆண்கவிஞர்கள் பெண் கவிஞர்கள் என்ற
பேதமின்றி இடம் பிடித்தன. ஆனாலும் போருக்குள் பேசிய கதைகளும் இடம்பெயர்தலுக்குள் மாறிய
கதைகளும் சிலரை வேறு திசையில் கொண்டு போய் வைத்தது. பலரை ஒரு திசையில் தள்ளியது.
அரசியல்
கூச்சல்கள் ஒலிக்கும் ஈழத்தின் திண்ணைகளுக்கப்பாலிருந்து மவுனம் கனத்த விம்மல்கள் போல
வீணையதிர்வுகள் போல அனாரினதும் ஆழியாழினதும் பஹீமாஜகானினதும் கவிதைகளைக் குறிப்பிடுகிறார். பாருங்கள், கவிதைகளை
அடையாளப்படுத்தும் திறனாய்வை. இது உங்கள் பிதவாவுக்குத் தேவையான ஆய்வா? இதனை ஒரு கட்டுரையாக
ஒரு ஆய்வாக நீங்கள் கொண்டு அலையலாமா? நீங்கள் அதனை எங்களுக்கும் முன்மொழியலாமா?நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் சகோதரங்களே!. உங்கள் பிதா
என்பதற்காக எம்மையும் அவருக்குத் தொண்டூழியம் செய்யவேண்டும் என நீங்கள் நிர்ப்பந்திப்பதனை
இனியாவது கைவிட வேண்டும்.
இன்னுமொரு
"காலம்" இதழில் சேரனது கவிதைகள் குறித்து உங்கள் பிதாவால் வழங்கப்பட்ட உரை இது.
“சேரனின்
கவிதைகளை தமிழில் எழுதப்பட்ட புரட்சிக் கவிதைகளாக நான் காண்கிறேன். இன்னும் குறிப்பான
வார்த்தைகளில் சொல்வதானால் பாரதிக்குப் பின் தமிழில் தீவிரமான புரட்சிக் கவிதைகளை எழுதியவராக
சேரனை அடையாளப்படுத்த விரும்புகிறேன்-அவரது அனைத்துப் பலவீனங்களுடனும்.(ஜெயமோகன் ,
காலம்-31)
இங்கே
எழுதப்பட்ட அனைத்துப்பக்கங்களிலும் அவர் புரட்சி என அடையாளப்படுத்துவது இனவிடுதலை குறித்தது
மட்டுமாயிருக்கிறது. இவர் ஈழத்தில் பரவியிருந்த சாதீயப் புரட்சி குறித்தும் வர்க்கப்பபுரட்சி
குறித்தும் எழுதிய கவிதைகளையோ கவிஞர்களையோ யாரும் அவருக்கு அடையாளம் காட்டவில்லை. சுபத்திரன்
பற்றியோ அல்லது சாருமதி பற்றியோ அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. குட்டி மோகன்களுக்கும்
அதனைத் தெரிவிக்கும் வக்கும் இல்லை.வழியும் இல்லை. உண்மையில்
எப்படி மறுபக்கத்தின் குரல் என்ற கட்டுரையில் அந்த மூவரை விடவும் வேறு யாரையும் அறிந்திராத
போக்கில் எழுதினாரோ அப்படித்தான் எழுந்தமானமாக கருத்தைச் சொல்லிவிடுகிறார் இங்கும்.
அவர் எதை எழுதினாலும் பிரசுரிக்கவும் அதனை வாழ்வாகவும் வரலாறாகவும் கொண்டாடிவிடும்
நிலையில் கருணாகரன்கள் உலகெங்கும் இருப்பதாக அவர் நினைக்கிறார். அந்த நினைப்புத்தான் அவருக்கு அண்மையில் அந்த மேடைப்பேச்சையும் பேச வைத்தது.
இதில்
ஜெயமோகனுக்கான வழக்கில் அவருக்காக கருத்துச்
சொல்ல முன்வந்தவர்களில் அதிகம் இரக்கம் கொள்ள கீழிறங்கி சேவகம் செய்யும் மனநிலையில்
மன்றாடுபவர் கருணாகரன் ஒருவரே. ஈழ இலக்கியத்தின் அரியண்டம் அவர். அவ்வாறான நிலையை கருணாகரன்
அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்தும் எடுக்கிறார்.
அதனையே தனது முன்வரைபாக வரைபவர். அவர் ஜெயமோகனுக்காக எழுதிய பக்கம் பக்கமான மன்றாட்டத்தின்
ஒரு இடத்தில்
“ஜெயமோகன் தெரிவித்த கருத்துகளிலும் வார்த்தைப் பிரயோகங்களிலும் தவறுண்டு என்பதை அவரே பின்னர் உணர்ந்திருக்கக்கூடும். அல்லது அதை நாம் அவருக்கு சொல்லும் முறையினால் உணர்த்தியிருக்கலாம். இலக்கியத்தினதும் விமர்சனத்தினதும் பண்பும் பணியும் அதுதான். அது கூச்சலிட்டு எதையும் நிறுவ முயற்சிப்பதில்லை. பகைமை கொண்டு எதிர்ப்பதல்ல. அப்படிக் கூச்சலை அது பலமான ஆயுதம் என்று நம்பினால் அது பலவீனத்தின் வெளிப்பாடேயாகும். முட்டாள்தனத்தின் அடையாளமே.”
என்கிறார்.
ஒரு அயோக்கியத்தனமான கருத்தினை மறுதலிக்க இன்னொரு முட்டாள்தனத்தை பயன்படுத்துகிறோம் என்று கடந்து போங்கள் கருணாகரன். இவ்வளவு ஆழத்திற்கு இறங்கி நீங்கள் கை அலசத் தேவையேயில்லை. ஜெயமோகன் அவர்கள் பேசிய மேடைப் பேச்சின் அசிங்கத்தை விட பண்பும் இல்லாத பணியையும் தெரியாத அந்தப் பேச்சை விட நாம் பேசுவது ஒன்றும் தரக்குறைவானது அல்ல. ஜெயமோகன் உதிர்த்தால் தேவவாக்கு நாம் பேசினால் பண்பற்றது என நினைக்கும் உங்களது மனோபாவம் கெடுதியானது கருணாகரன்.
“சோபாசக்தி, குணா கவியழகன், தமிழ்நதி எனப் பலரையும் அதிகமாக அறிந்திருப்பதும் ஈழத்தையும் விட தமிழ்நாட்டில்தான். இவர்களுடைய எழுத்துகளுக்குக் கூடுதலான மதிப்பளித்திருப்பதும் தமிழ்நாட்டில்தான். அண்மையில் கூட தமிழ்நதிக்கு விகடன் விருது கிடைத்திருந்தது. விகடன் விருது ஒன்றும் பெரிய புக்கர் விருது இல்லைத்தான். ஆனால் பொதுக்கவனிப்பை உண்டாக்கவல்லது. இப்பொழுது புதிதாக எழுத வந்திருக்கும் சாதனாவை இனங்கண்டு சாரு நிவேதிதா சாதனாவின் கதைகளுக்கு முன்னுரை எழுதுகிறார்.”
என்கிறார்.
கருணாகரன்.
இதில் கருணாகரன்
குறிப்பிட்டவர்கள் யாரையும் அவர்கள் தாமாக
அறியவில்லை. இவர்கள்தான் தாமாக அங்கு சென்றவர்கள்.
அல்லது செல்ல வைக்கப்பட்டவர்கள். வருடாவருடம் தமிழ்நாட்டின் புத்தகச் சந்தைக்காக எழுதிக்
கொண்டு போய்ப் பதிப்பிக்கும் ஒரு இலக்கிய அரசியலைத் தான் நீங்கள் குறிப்பிடுபவர்கள்
செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது இலக்கிய எழுத்துக்களை இன்றுள்ள தமிழகத்துச் சூழலில்
நன்றாக விற்று விட முடியும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதையெல்லாம்
ஒரு அந்தஸ்து என்று கொண்டு வந்து முன்வைக்கும் உங்களை என்னத்தால் நாம் அடித்துத் துரத்துவது?
ஒரு கதை எழுதிவிட்டால்
தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் வெளிவந்தால் அதனை அந்தஸ்து என்று நினைப்பது ஒருவித மனநோய்.
10கவிதை எழுதிவிட்டால் அதனைத் தமிழ் நாட்டில் ஒரு பதிப்பகம் புத்தகமாக்கிவிடத் தயாராய்
இருக்கிறது.அடுத்த புத்தகச் சந்தையில் அதனை விற்றுவிடலாம் என்று நினைப்பதற்கு நீங்கள்
வேறு பெயர் சொல்லி அழைக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும் அண்மைக் காலமாக காலச்சுவடு
எத்தனை புலம்பெயர்ந்தவர்களது புத்தகத்தை வெளியிட்டது? ஈழத்திலிருந்து எத்தனை பேரது
புத்தகங்களை வெளியிட்டது? என கணக்குப்பாருங்கள். அவற்றின் தரங்களைக் கணக்குப் பாருங்கள்.
எழுதியவனுக்கும் தெரியாது தான் என்ன எழுதினேன் என்று பதிப்பித்தவனுக்கும் தெரியாது
என்ன பதிப்பித்தேன் என்று. இப்படியான ஒரு நோயிற்கு மீண்டும் சொல்கிறேன் நீங்கள் வேறு
பெயர் கொண்டு அழையுங்கள்.
இந்த மனநிலை
தவறானது என “பெயல் மணக்கும் பொழுது” கவிதைத் தொகுதியைக் வெளியிட்ட அ.மங்கைக்கும் அப்போதே
பதில் எழுதி “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” தொகுத்து வெளியிட்ட ப. திருநாவுக்கரசு அவர்களுக்கும்
நமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறோம். இது குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
அதனை விடவும்
காலாகாலமாக தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்கும் அரசியல் குறித்து நான் பேசிவருகிறேன்.
அண்மையில் “THEN THERE WERE NO WITNESSES” என்ற பெயரில் பா. அகிலனின் கவிதைகள் கீதா சுகுமாரனால்
மொழிபெயர்க்கப்பட்டு ரொரன்டோவில் வெளியிடப்பட்டது. அதேநாளில் வெளியிடப்பட்ட அவரது இன்னொரு நூலான “அம்மை” எனும் கவிதைத் தொகுதியில் இருக்கும் 50
கவிதைகளுக்கு 34 பக்கத்தில் கீதா சுகுமாரனால் விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில்
அகிலனுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய பலவீனம் இது. ஆனாலும் இதற்குள் இருக்கும் அரசியல் பெரிது.
இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட இலக்கிய அரசியற் செயற்பாடு. இதுதான் பொதுவாக மொழிபெயர்ப்பின்
அரசியலாக மாறுகிறது. இந்த வகைமுறையை நிராகரிப்பது
தேவையான ஒன்று. அதற்காகத்தான் பெயர்கப்படமுடியாத மொழி என நாம் ஒன்றை உருவாக்க
வேண்டிய தேவை இருப்பதனை ஒரு படைப்பாக எழுதினேன்.(மற்றது இதழ்- 2004) .
இன்று சோபாசக்தியின் படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட சோபாசக்தியே கொண்டலைவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இது ஒரு நிறுவனம் சார்ந்த இலக்கியச் செயற்பாடு. இதற்குள் சமூகம் சார்ந்த கலைஞனுக்கு வேலை இருக்காது.
இன்று சோபாசக்தியின் படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட சோபாசக்தியே கொண்டலைவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இது ஒரு நிறுவனம் சார்ந்த இலக்கியச் செயற்பாடு. இதற்குள் சமூகம் சார்ந்த கலைஞனுக்கு வேலை இருக்காது.
இறுதியாக,
உங்கள் பிதாவினது
வாசற்பக்கம் நாம் தலை வைத்துப் படுத்ததில்லை. அந்த மேடைப் பேச்சில் அவர் காறி உமிழ்ந்த
வார்த்தைகள் அநாகரிகமானவை என்று சொல்கிறோம். கிருமி நாசினி அடித்துக் கொல்ல வேண்டும் எனச் சொன்ன
அவரது அதி உன்னத நகைச் சுவை குறித்தது அல்ல அது. அதன் முன்னரும் அதன் பின்னரும் அவர்
பேசிய வார்த்தைகளை குட்டி மோகன்களான நீங்கள்
திரும்பவும் செவி மடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அறிவற்ற திமிர்தனம் கொண்ட
அந்த வார்த்தைகளுக்கான பதில் வார்த்தைகளை நாமும் தொடர்ந்து எழுதுகிறோம். இதற்குமேலும்
உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது போகும் என நாம் நினைக்கவில்லை. ஆகக் குறைந்தது இனிவருங்காலங்களிலாவது
உங்கள் பிதா ஈழம் குறித்து எதையாவது எழுதினால்
வாங்கி வாசித்துத் திருத்திக் கொடுங்கள். உங்களுக்கும் நேரம் மிச்சம் எங்களுக்கும்
நேரம் மிச்சம். பிதாவின் எழுத்தில் நீங்கள் கைவைப்பது ஒன்றும் தப்பான செயல் இல்லை.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் தானே.